Published:Updated:

SME கைடுலைன்!

தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு... ச.ஸ்ரீராம்

பிரீமியம் ஸ்டோரி

எஸ்எம்இ-களுக்கு என்ன பிரச்னை?

நம் நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தியில் 'எஸ்எம்இ’ என அழைக்கப்படும் சிறு, குறு மற்று நடுத்தரத் தொழில்முனைவோர்களின் பங்கு மட்டுமே 40 சதவிகிதத்துக்கும் அதிகம். பொருளாதாரத்தின் மிகப் பெரிய உந்துசக்தியாக இருந்தாலும், இன்றைக்கு எஸ்.எம்.இ-கள் சந்திக்கும் பிரச்னைகள் ஒன்று இரண்டு அல்ல. மூலப் பொருட்களை வாங்குவதில் தொடங்கிப் பொருளை சந்தைப்படுத்துதல்வரை பலநிலைகளிலும் பல சவால்களைக் கடந்து வரவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள். எஸ்எம்இ-களுக்கு என்ன மாதிரியான பிரச்னைகள் உள்ளன என்பதை அறிய தமிழகத்தின் பல ஊர்களிலுள்ள சிறு தொழில் அமைப்பின் தலைவர்களுடன் பேசினோம். அவர்கள் சொன்ன தகவல்கள் இதோ...

SME கைடுலைன்!

''தொழில் கடனுக்கான வட்டிவிகிதம் அதிகம்!''

கே.கோபாலகிருஷ்ணன்
தலைவர், டான்ஸ்டியா,
சென்னை.

SME கைடுலைன்!

''தமிழக சிறு மற்றும் குறுந்தொழில் சங்கங்களின் தலைமைச் சங்கமாக டான்ஸ்டியா விளங்குகிறது. சிறு தொழில் செய்பவர்களின் மேம்பாட்டுக்காக இதுபோன்ற சங்கங்கள் எல்லா மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இன்று சிறுதொழில் செய்பவர்களுக்கு முக்கியமான பிரச்னை, தொழில்  கடனுக்கான வட்டிவிகிதம் அதிகமாக உள்ளதுதான். அதனைக் குறைத்தால் மட்டுமே சிறு தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை சமாளிக்க முடியும். மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் கட்ட முடியாமல்போன தொழில் முனைவோர்கள் சர்ஃபாஸி (ஷிகிஸிதிகிணிஷிமி) சட்டத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சிறுதொழில் முனைவோர் களுக்கு தலையாயப் பிரச்னையாக உள்ளது, வரி. தற்போது சேவை வரி வரம்பு  சிறுதொழில் செய்பவர்களுக்கு ரூ.10 லட்சமாக உள்ளது. இது உயர்த்தப்படாவிட்டால் அவர்கள் மேலும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். சிறுதொழில் செய்பவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் சதவிகிதத்தை அதிகரித்தால் மட்டுமே தொழில் முனைவோர் களது தொழில் நிலைத்து லாபம் பெற முடியும்''.

''மின்சாரத் தட்டுப்பாடுதான் பெரிய பிரச்னை!''

ஜெகதீசன்,
தலைவர், தமிழ்நாடு சேம்பர் ஆஃப் காமர்ஸ்,
மதுரை.

''மதுரையைச் சுற்றி நான்கு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்கள் உள்ளன. அதில் ஒன்று பெண்களுக்கான பிரேத்யேக இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டாக உள்ளது. மதுரையில் அதிகமாக கார்மென்ட்ஸ், ரப்பர், பிளாஸ்ட்டிக் ஆகியவைதான் தயாரிக்கப்படுகிறது.

மதுரையில் நாங்கள் முக்கியமாகச் சந்திக்கும் பிரச்னை என்னெவெனில் மின்தட்டுப்பாடுதான்.

இங்கு அதிகமாகச் செய்யப்படும் தொழில்கள் தொடர் செயல்முறையை அடிப்படையாகக் கொண்டவை. எதாவது ஒருநிலையில் மின்சாரம் தடைபட்டாலும் முழு உற்பத்தியும் பாதிக்கப்படும். ஜெனரேட்டர் வைத்து தொழிலை நடத்தினாலும் அதற்கான செலவுகள் அதிகரிக்கிறது.

SME கைடுலைன்!

பக்கத்து மாநிலங்களில் இந்தப் பிரச்னைகள் இல்லாததால் வேலைவாய்ப்புகளுக்காக அந்த மாநிலங்களைத்தேடி தொழிலாளர்கள் செல்ல தொடங்குவதால்

தொழிலாளர்கள் கிடைப்பதிலும் பிரச்னையாக உள்ளது.

தொழிலாளர்கள் சரிவர கிடைக்காததில் தொடங்கி, பொருள் விற்பனை வரை தொடர் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையை சரிசெய்ய தகுந்த நடவடிக்கைகள் இல்லையெனில் நிறுவனத்தை நடத்துவதே சிரமம்தான்.''

SME கைடுலைன்!

''மூலப்பொருட்களின் விலை ஏற்றம்!''

 

க.ராமலிங்கம்,
தலைவர், ஹோஸ்டியா, ஓசூர்

''சிறுதொழில் செய்பவர்களில் ஓசூரை பொறுத்தமட்டில் அதிகமாக ஆட்டோமொபைல் சார்ந்த தொழில்களில்தான் உள்ளனர். அதுதவிர, மற்றச் சிறுதொழில்களும் இயங்கி வருகின்றன. கொள்முதல் கொள்கைகள் சாதகமாக இல்லை. அதனால் பெரிய நிறுவனங்கள் சரியான விலைக்கும், சரியான அளவுக்கும் கொள்முதல்

செய்யாததால் சிறுதொழில்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதனை நெறிமுறைபடுத்தினால் இந்தத் தொழில்கள் வளரும்.

அதேபோல், மூலப்பொருட் களின் விலை என்பது நாளுக்கு நாள் மாறிவருகிறது. அது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருப்பது, சிறுதொழில்களின் லாபத்தைப் பாதிக்கும். ஒரு விலையில் வாங்கி பொருளை தயாரித்தால் அதன் விலை மாறும்போது மார்க்கெட்டில் பொருளுக்குச் சரியான விலையை நிர்ணயிக்க முடியாத சூழல் உருவாகிறது. இதனால் சந்தைப்படுத்துதலில் மற்ற மாநிலத்தாரோடு போட்டியிட முடியாத சூழல் உருவாகிறது. இதற்கு அரசுதான்  தீர்வுகாண வேண்டும்''.

படங்கள்:  பா.காளிமுத்து, பா.ஓவியா

ஸ்டார் SME

மணிமாறன், நிறுவனர், V.நாதன் சோப்,மதுரை

SME கைடுலைன்!

 ''தாவர எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் துணி துவைக்கும் சோப்பை நானும் எனது சகோதரர்களும் சேர்ந்து தயாரிக்கிறோம். ஆரம்பத்தில் நாங்கள் இந்த சோப்பை மார்க்கெட் செய்யும்போது மற்ற டிடெர்ஜென்ட் சோப்புகளில் வருவதுபோல் இந்த சோப்பில் நுரை வரவில்லையே! இது அழுக்கை நீக்குமா? என்று நினைத்தனர் மக்கள்.  இது முழுக்க முழுக்கத் தாவர எண்ணெய்யில் தயாரிக்கப்படும் சோப்பு; இதில் நுரை வராது. நன்கு அழுக்கை போக்கும் என்று சொல்லி பிரபலபடுத்தினோம்.  மக்கள் பயன்படுத்தத் தொடங்கியபின் எங்கள் தரத்தைப் புரிந்துகொண்டு வாங்கத் தொடங்கிவிட்டனர். தற்போது மாதத்துக்கு 50-60 டன் அளவுக்கு சோப்புகளை உற்பத்தி செய்து, மூன்று வெவ்வேறு அளவுகளில் விற்பனை செய்கிறோம்.

தற்போது தென்னக ரயில்வேயின் சில ஆர்டர்களையும், அதிக ஆர்டர்களை கேரளாவுக்கும் செய்து தருகிறோம். நாங்கள் லாபகரமாக இந்தத் தொழிலை செய்யக் காரணம், சரியான நேரத்தில் எங்கள் தயாரிப்பை டெலிவரி செய்வதும், தரமான பொருட்களைத் தொடர்ந்து வழங்குவதாலும்தான். ஒருமுறை தரம் சற்றுக் குறைந்தாலும் தொடர்ந்து வாங்குபவர்கள் வாங்கமாட்டார்கள்.

சரியான முறையில் வங்கிகளை அணுகுவதால் எங்களுக்கு நிதி கிடைப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. சரியான நேரத்தில் கடனை திருப்பித் தருவதால் வங்கிகளும் எங்களுக்கு உரிய நேரத்தில் கேட்கும் கடனை வழங்கிவிடுகின்றன. தமிழகத்திலும் எங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.''

படம்: பா.காளிமுத்து.

 கோவையில் அற்புதமான ஆரம்பம்!

 கொங்கு மண்டலத்தில் இருக்கும் சிறுதொழில் முனைவோர்கள்  சந்திக்கும் நிதிப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், அவர்களின் நிதித் தேவையை பூர்த்தி செய்வது குறித்தும் கோவை பி.எஸ்.ஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்டில் கடந்த 26-ம் தேதி அன்று நாணயம் விகடன், கார்ப்பரேட் கிளினிக் நிறுவனத்துடன் இணைந்து ஒரு கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்எம்இகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார் பிஎஸ்ஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்டின் இயக்குநர் டாக்டர். நந்தகோபால். 'தமிழகத்திலேயே கோவையில் தான் அதிக அளவில்  சிறுதொழில்முனைவோர்கள் உள்ளனர். அரசின் ஆதரவை மட்டுமே எதிர்பார்த்து நிற்காமல், தங்கள் சொந்த உழைப்பால் முன்னேறி, சாதனை படைத்தவர்கள். சிறுதொழில் முனைவோர்களுக்கு உள்ள நிதிப் பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கண்டடையும் நாணயம் விகடனின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது'' என்றார் நந்தகோபால்.

SME கைடுலைன்!

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார் கார்ப்பரேட் கிளினிக்கின் எம்.டி.யும் சி.இ.ஓ.வுமான பி.ராம கிருஷ்ணன். 'நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எஸ்.எம்.இ-ன் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது. இவர்களுக்குத்  திறமை  இருந்தாலும் தொழிலை மேம்படுத்தும் உத்திகள் குறித்த விழிப்பு உணர்வு குறைவாக உள்ளது.

சிறுதொழில் முனைவோர்கள்  தீர்வு காணாமல் திண்டாடுவது நிதிப் பிரச்னையில்தான். தொழில் ஆரம்பிக்க வங்கிக் கடன் கிடைக்காமல் இருப்பதில் தொடங்கி, வரி செலுத்துவது வரை பலவகையான நிதிப் பிரச்னைகளை சந்திக்கின்றனர். இந்த நிதிப் பிரச்னைகளுக்கு சரியான முடிவு கண்டால் மட்டுமே அவர்கள் தொழிலில் ஜெயிக்க முடியும்'' என்றார் ராமகிருஷ்ணன்.

''எஸ்.எம்.இ-கள் தங்களுடைய நிதிப் பிரச்னைகளுக்கு சரியான நிதி ஆலோசகர்களிடமும், வங்கி அதிகாரிகளிடமும் சென்று தீர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது பிரச்னை குறித்தமுன் அறிவுடன் அணுகினால்தான்  சரியான முடிவுகளை நீங்களே எடுக்க முடியும்!'' என்றார்.

SME கைடுலைன்!

ராமகிருஷ்ணன் பேசி முடித்தபின் கூட்டத்தில் கலந்துகொண்ட எஸ்எம்இகள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் விரிவான விளக்கம் அளித்தார். பெங்களூருவைச் சேர்ந்த சிறுதொழில்முனைவோரான ரமேஷ்பாபு, தான் புதிதாக கண்டுபிடித்து காப்புரிமை பெற்றிருக்கும் இயந்திரத்தைத் தயாரிக்க வங்கிக் கடன் பெறுவது எப்படி என்று கேட்டார்.

SME கைடுலைன்!

இதுமாதிரியான புதிய தொழில்நுட்ப இயந்திரங் களைத் தயாரிக்க வங்கிக் கடன் முதல் வெஞ்சர் ஃபண்ட் வரை பல்வேறு நிறுவனங்களை எப்படி அணுகலாம் என்பதை எடுத்துச் சொன்னார் ராமகிருஷ்ணன். கூட்டத்தில் கலந்துகொண்ட பல எஸ்எம்இக்கள் தங்களுக்கு போதிய அளவு தொழில் கடன் கிடைப்பது பெரும்பிரச்னையாக உள்ளதாகச் சொன்னார்கள்.

SME கைடுலைன்!

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எஸ்எம்இகள், ''ஃபைனான்ஸ் என்றாலே எங்களுக்கு வேப்பங்காய் என நினைத்து, அதைப்பற்றி தெரிந்துகொள்ளாமலே இருந்தோம். இனி ஃபைனான்ஸ் பற்றி தெரிந்துகொண்டால்தான் வெற்றிகரமாக தொழில் செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொண்டோம்'' என்றனர்.

படங்கள்:  ர.சதானந்த்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு