ஸ்பெஷல்
Published:Updated:

குஜராத் ஸ்டேட் ஃபெர்ட்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ்!

குஜராத் ஸ்டேட் ஃபெர்ட்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ்!

ந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி குஜராத் ஸ்டேட் ஃபெர்ட்டிலைசர்ஸ்  அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் (ஜி.எஸ்.எஃப்.சி.) என்னும் உர தயாரிப்பு நிறுவனத்தைத்தான்.

குஜராத் ஸ்டேட் ஃபெர்ட்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ்!

தொழில் எப்படி?

இந்தியா போன்ற பெரிய நாட்டில் விவசாயம் ஒரு அத்தியாவசிய விஷயமாக இருக்கிறது. விவசாயத்துக்குப் பெருமளவு உதவுவது உரங்கள். உரங்களின் அத்தியாவசியத் தேவை மற்றும் உபயோகம் கருதி உரங்களின் விற்பனை விலை அரசாங்கத்தின் நேரடியான கண்காணிப்பில் இருக்கிறது. உற்பத்தி விலையைவிட விற்பனை விலை குறைவாக இருக்கும்பட்சத்தில் அந்த

வித்தியாசத் தொகையை மானியமாக அரசு, உர உற்பத்தியாளர்களுக்கு வழங்கிவந்தது. சமீபகாலமாகச் சில குறிப்பிடத்தக்க மாறுதல்களை இந்த மானியம் வழங்குதல் முறையில் அரசாங்கம் செய்துகொண்டு வருகிறது. நியூட்ரியன்ட் பேஸ்டு சப்ஸிடி (ஊட்டச்சத்துக்குத் தகுந்த மானியமுறை) என்ற முறையில் சமீபகாலமாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது. (யூரியா மட்டும் இந்தப் புதிய மானியமுறையில் வராது). ஊட்டச்சத்துகள் மிகுந்த பல்வேறு உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் செழுமையைப் பேணிக்காக்க முடியும் என்ற எண்ணத்திலேயே இதுபோன்ற திட்டங்களை அரசாங்கம் கொண்டுவருகிறது. உணவு உற்பத்தி நாட்டின்அத்தியாவசியத் தேவை என்பதால், அரசாங்கம் இதில் முக்கியப் பங்கை எடுத்து வருகிறது.

உர உற்பத்திக்கான மானியம் என்பது தொடர்ந்து வழங்கப்படும்.  கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறலாமே தவிர, மானியம் என்பது அறவே இந்தத் தொழிலில் நீக்கப்பட்டுவிடும் என்று சொல்ல முடியாது. உணவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க உரங்களின் தேவையும் அதிகரிக்கும். ஊட்டச்சத்து மிகுந்த உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் முன்னணிக்கு வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது இந்தத் தொழிலில்.

கம்பெனி எப்படி?

குஜராத் ஸ்டேட் ஃபெர்ட்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ்!

1962-ம் ஆண்டு குஜராத் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் ஏறக்குறைய 38% பங்குகளை குஜராத் அரசாங்கம் தன்வசம் வைத்துள்ளது. ஜி.எஸ்.எஃப்.சி, உரங்கள் மற்றும் தொழிற்சாலை களுக்கான வேதிப்பொருட்கள் என்ற இரண்டு முக்கியமான பொருட்களை உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உரங்கள்தான் மூன்றில் இரண்டு பங்கு வருவாய்க்கு வழிவகுக்கிறது. உரத் தயாரிப்பில் டை-அமோனியம் பாஸ்பேட், அமோனியம் பாஸ்பேட் சல்பேட், யூரியா மற்றும் பலவகையான காம்ப்ளக்ஸ் உரங்களை ஜி.எஸ்.எஃப்.சி தயாரித்துவருகிறது.

தொழிற்சாலைகளுக்குத் தேவையான வேதிப்பொருட் களில் கேப்ரோலெக்டமைத் தயாரிப்பதில் ஜி.எஸ்.எஃப்.சி முன்னணியில் இருக்கிறது.  ஏறக்குறைய 70,000 மெட்ரிக் டன் அளவுக்குண்டான கேப்ரோலெக்டமை உற்பத்தி செய்கிறது ஜி.எஸ்.எஃப்.சி. இந்த கேப்ரோலெக்டம் விற்பனை விலை பென்சீனின் விலையைப் பொறுத்தே அமைகிறது. ஆனாலும், கேப்ரோலெக்டத்தின் மிகப் பெரிய தயாரிப்பாளராக இருப்பதால் ஜி.எஸ்.எஃப்.சி இந்தத் தொழிலில் கணிசமான லாபம் பார்க்க முடிகிறது.  

உரத் தயாரிப்பு நிறுவனங் களுக்கு மின் தேவை மிக அதிகம். காஸ் பேஸ்டு உற்பத்தித்திறனை ஜி.எஸ்.எஃப்.சி கொண்டிருந்தாலும் அதற்குத் தேவையான காஸ் கிடைப்பதில் தட்டுப்பாடுகள் இருப்பதால் மின் செலவு சற்று அதிகமாகவே சமீபகாலத்தில் இருந்துவருகிறது. இதைச் சமாளிக்க ஏறக்குறைய 150  மெகாவாட் அளவுக்கான  காற்றாலை உற்பத்தி வசதியைக் கொண்டிருக்கிறது ஜி.எஸ்.எஃப்.சி.

இந்த நிறுவனம் தற்சமயம் கொண்டிருக்கும் விரிவாக்க திட்டங்கள் முழுமையடைந்தால் மின் செலவு  இன்னமும் குறையும். மேலும், லிக்னைட்டைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் பாவ்நகர் எனர்ஜி என்ற நிறுவனத்தில் முதலீடுகளைச் செய்துள்ளது. இந்த நிறுவனத்திலிருந்தும் மின்சாரம் கிடைத்தால், இதன் மின் செலவு கணிசமாகக் குறையும்.

குஜராத் ஸ்டேட் ஃபெர்ட்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ்!

மேனேஜ்மென்ட் எப்படி?

ஜி.எஸ்.எஃப்.சி ஒரு குஜராத் அரசாங்கத்தின் நிறுவனமாகை யால் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படும் நபரே இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி யாக இருப்பார். தற்போதைய சேர்மன் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. இந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டரும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. நீண்டகால அனுபவமும், பல்வேறு துறை களில் செயல்பட்டவர்களாக இவர்கள் இருப்பதும் நிச்சயமாக ஜி.எஸ்.எஃப்.சி-க்கு பலனைத்தரும்.

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

ஜி.எஸ்.எஃப்.சி-யைப் பொறுத்தவரை, அதன் தயாரிப்பு களில் பெரும்பான்மைப் பொருளுக்கு விற்பனை விலை மற்றும் லாபம் என்பது மத்திய அரசின் கையில் இருக்கிறது. எனவே, இது ஒரு தொடர் ரிஸ்க்காகவே இருக்கலாம். அதேபோல், மானியங்களைத் தருவதில்  அரசாங்கம் காலதாமதங்களை நிகழ்த்தினால் நிச்சயமாக லாபம் பாதிக்கப்படும்.

குஜராத் ஸ்டேட் ஃபெர்ட்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ்!

தட்பவெப்ப சூழல்களில் ஏற்படும் கடுமையான மாறுதல்கள் (எல்நினோ போன்ற) விற்பனை அளவை பெரிய அளவில் பாதித்துவிடக்கூடும். ஜி.எஸ்.எஃப்.சி இருக்கும் இரண்டு தொழில்களான உரம் மற்றும் கேப்ரோலெக்டத்தில் மிகப்பெரும் நிறுவனமாக அது திகழ்வதால், போட்டியினால் ஏற்படும் பாதிப்பு குறைவே.  இந்த நிறுவனத்துக்கு பெரிய அளவில் கடன் இல்லை என்பதால் இதனால்வரும் பாதிப்புக் குறைவு.

என்னதான் பெரிய நிறுவனமாக இருந்தாலும் தொழிலின் பெரும்பகுதி அரசாங்க மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. எனவே, அரசியல் ரீதியான பாதிப்பு தொழிலில் பெருமளவுக்கு வந்துபோகும். ஆனாலும், அத்தியாவசியத் தொழிலில் இந்த நிறுவனம் இருப்பதாலேயே நாம் இந்த நிறுவனத்தை முதலீட்டுக்காகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இதனாலேயே இந்த நிறுவனத்தின் பங்குகளில் கடுமையான வீழ்ச்சிவரும்போது சிறிய அளவில் வாங்கி முதலீட்டாளர்கள் தங்களுடைய போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த நிறுவனத்தின் பங்குகள் சமீப காலத்தில் 52 வார விலை அளவில் மிகக் குறைந்த நிலையை எட்டி தற்போது சற்றே மேல்நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. எனவே, இந்தப் பங்கை முதலீட்டாளர்கள் தொடர்ந்து டிராக் செய்யலாம்.

தேர்தல் முடிவுகள் வெளிவரும் சூழ்நிலையில் ஏற்படும் வாலட்டைலிட்டியில் ஓர் அசாதாரணச் சூழ்நிலையில் மீண்டும் 52 வார குறைந்த விலையில் கிடைத்தால் இந்தப் பங்குகளை ஐந்து ஆண்டுகால முதலீட்டுக்காக முதலீட்டாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் வாங்கலாம்.

- நாணயம் ஸ்கேனர்.

(குறிப்பு: இந்தப் விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)