நம் நாட்டின் தொழில் உற்பத்தி நிலவரம், மொத்த விலை குறியீடு, சில்லறை விலைக் குறியீடு எனப் பல புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது அரசாங்கம். இப்படி வெளியிடப்படும் புள்ளிவிவரங்களை சில மாதங்களுக்குப்பின் பல மாற்றங்களைச் செய்து மீண்டும் வெளியிடுவதைக்கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்து, குழம்பிப் போயிருக்கிறார்கள்.
உதாரணமாக, 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி 3.2% என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விவரம் ஓராண்டு கழித்து 7% என மாற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல 2013, பிப்ரவரியில் வளர்ச்சி மைனஸ் 1.3% என அறிவிக்கப்பட்டு, பின்னர் 2.3% என மாற்றி அறிவிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு ஜனவரியில் 3.7 சதவிகிதமாக அறிவிக்கப்பட்ட வளர்ச்சி பின்பு 8.3 சதவிகிதமாக மாற்றி வெளியிடப்பட்டது.
அரசுத் துறைகள் வெளியிடும் புள்ளிவிவரங்கள் இப்படி மாறினால், எப்படி சரியான திட்டங்களைத் தீட்டமுடியும்? அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் ஏன் மாறுகிறது, இவை மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் டி.பி.கபாலியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''புள்ளிவிவரங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்றே சொல்லலாம். ஏனெனில் இவற்றின் அடிப்படையில்தான் பொருட்களின் விலை முதல் வட்டி விகிதம் வரை அனைத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த புள்ளிவிவரங்களில் தவறு ஏற்படுவதன்மூலம் இதை அடிப்படையாக வைத்து போடப்படும் பல திட்டங்களும் தவறாக சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்தத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும் வீணாகிறது. மக்களின் தேவையை அரசாங்கத்தால் சரியாகத் தெரிந்துகொள்ள முடியாமலும் போகிறது.

இந்த புள்ளிவிவரங்கள், மாதிரிகள் மூலமாகவே சேகரிக்கப்படுகிறது. அதாவது, நாட்டின் ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளது எனில், அதில் 100 தொழிற்சாலைகளில் தகவலைத் திரட்டி, அதை ஆய்வு செய்து, அதில் கிடைக்கும் தகவல்களை அனைத்துக்கும் பொதுவானதாக மாற்றி வெளியிடுகிறார்கள் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், புள்ளிவிவரங்கள் முதல் நிலை, இடைநிலை, இறுதிநிலை என மூன்று நிலைகளைக் கடந்து வரும்போது சிற்சில மாற்றங்களுக்கு உட்படுவது இயல்பானதே.
ஆனால், இந்த மாற்றம் என்பது 2.5-லிருந்து 2-ஆகவோ அல்லது 3-ஆக மாறினால், அது பெரிய தவறு அல்ல. ஆனால், 2.5-லிருந்து 7-ஆகவோ அல்லது மைனஸ் 3-ஆகவோ மாறினால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது? ஆனால், அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் இந்த நிலையில்தான் இருக்கிறது.
இந்த முக்கியமான புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் அமைப்பு (Central Statistical Organisation) மற்றும் தேசிய புள்ளியியல் அமைப்பு (National Sample Survey Organisation)சேகரிக்கும். வேறு

சில புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் வேலையை அவுட்சோர்ஸ் செய்துவிடுவார்கள். இதில்தான் தவறு நடக்க வாய்ப்புள்ளது. இந்த வேலையை செய்யும் நிறுவனங்கள், புள்ளிவிவரங்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளாமல் ஏனோதானோ என்று செய்துவிடுவதற்கு வாய்ப்புள்ளது. அதாவது, ஒரு இடத்தைக் குறித்த கள ஆய்வு செய்யாமலே, செய்துவிட்டதாக தகவல் தர வாய்ப்புண்டு.
புள்ளிவிவரங்கள் குறித்த தகவல்களைத் தருகிறவர்கள் தவறான தகவலை தருவதும் இன்னொரு முக்கிய காரணம். நிறுவனங்களின் உற்பத்தி, விற்பனை விவரங்களைச் சேகரிக்கும்போது அவர்கள் தகவலை தவறாகக் கொடுக்கலாம். அதனாலும் இந்த புள்ளிவிவரங்கள் தவறாகச் செல்ல வாய்ப்புண்டு.
இப்படி சேகரித்த தகவலை ஆய்வுசெய்து மாதிரி நிலையிலிருந்து ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் உற்பத்தி நிலை அல்லது விலைவாசி நிலையை கணிக்கும்போது மிகவும் துல்லியமாக புள்ளிவிவர உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், புள்ளிவிவர ஆய்வில் பல உத்திகள் உள்ளன. அடிப்படை தகவல் மற்றும் ஆய்வு நோக்கத்தின் அடிப்படை உத்தியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
வெளிநாடுகளில் தகவல் திரட்டுவதற்காக அரசு மற்றும் தனியார் ஏஜென்ஸிகள் உள்ளன. இந்த ஏஜென்ஸிகள் சேகரித்துத் தரும் புள்ளிவிவரங்களில்கூட சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், அது மிகப் பெரிய மாற்றமாக இருக்காது. அவர்களின் புள்ளிவிவரத் துறை நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்த வேலையைச் செய்வதால், சிறுதவறு ஏற்பட்டாலும் உடனே அதைத் திருத்திக் கொள்கிறார்கள். ஆனால், இந்தியாவில் புள்ளியியல் துறையின் வரலாறு ஐம்பது ஆண்டுகளுக்குள்தான். இந்தத் துறையில் பல முக்கிய மாற்றங்களை முதலில் கொண்டுவர வேண்டும்.
புள்ளியியல் துறையில் அடிப்படை வருடம் என்பது 2004-05-ஆக உள்ளது. ஆனால், இந்த பத்து வருடங்களில் இந்தியாவில் மிகப் பெரிய மாற்றங்கள் தொழில் துறையில் நடந்துள்ளது. உதாரணமாக, பத்து வருடத்துக்குமுன் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு சில கம்பெனிகள் மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது பல நூறு கம்பெனிகள் அங்கு உள்ளன. இந்தத் தகவல்களை அப்டேட் செய்ய அதிகாரிகள் தவறும்போது, அதன்மூலம் கிடைக்கும் தகவல்கள் மீண்டும் மாறவே வாய்ப்பு அதிகம்.

மேலும், புள்ளியியல் துறையில் இருக்கும் அதிகாரிகள் நேரடியாகக் கள ஆய்வு செய்யவேண்டும். அவுட்சோர்ஸிங் தந்து விட்டோம்; இனி அதுபற்றி கவலைபடத் தேவையில்லை என்று நினைக்கக்கூடாது. குறைந்தபட்சம், தகவல் திரட்டப்படும் மாவட்டத் தலைநகரங்களுக்காவது நேரடியாகச் செல்லவேண்டும். அப்போதுதான் உண்மையான நிலையைத் தெரிந்துகொள்ள முடியும்'' என்றார் டி.பி.கபாலி.

நாட்டின் தலைவிதியை இந்த புள்ளிவிவரங்கள் நிர்ணயம் செய்வதால், இதில் தவறு ஏற்படுவதை அரசாங்கம் அனுமதிக்கவே கூடாது.
படம்: எம்.உசேன்