Published:Updated:

முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி... முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா?

சி.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி

பங்குச் சந்தை முதலீட்டை அதிகரிக்க வேண்டும், புதிய முதலீட்டாளர்களைப் பாதுகாப்பாகச் சந்தைக்கு அழைத்து வரவேண்டும்... இதுமாதிரியான உயர்ந்த நோக்கங்களோடு பங்குச் சந்தைகள், முதலீட்டாளர் பாதுகாப்பு நிதியை (இன்வெஸ்டர் புரொட்டக்ஷன் ஃபண்ட்) ஏற்படுத்தியது செபி. ஆனால், இந்த நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா, இதன்மூலம் பங்குச் சந்தைக்குப் புதிய முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருக் கிறார்களா என்றால் மிகப் பெரிய கேள்விக்குறிதான்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மற்றும் வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்களுக்கு பங்குத் தரகர்கள் செய்யும் தவறுகளால் ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் இழப்பீடு கொடுக்க இந்த நிதி உருவாக்கப்பட்டது. மேலும், இந்த நிதி மூலம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு விழிப்பு உணர்வு கூட்டம் இந்தியா முழுக்க நடத்த வேண்டும் என்பதும் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

  முதலீட்டாளர் நிதி!

பங்குச் சந்தையில் முதலீடு மற்றும் வர்த்தகம் மேற்கொள்ளும் முதலீட்டாளர்களிடமிருந்து அவர்கள் முதலீடு மற்றும் வர்த்தக அளவுக்கேற்ப குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டு, இந்த நிதி உருவாக்கப்படுகிறது. இதேபோல், முதலீட்டாளர் களின் டீமேட் கணக்குகளைப் பராமரித்துவரும் என்.எஸ். டி.எல், சி.டி.எஸ்.எல் போன்றவை, அவற்றுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து வரும் கட்டணத்திலிருந்து இந்த முதலீட்டாளர் பாதுகாப்பு நிதியை உருவாக்குகின்றன. மத்திய அரசின் நிறுவன விவகாரத் துறையின் கீழ் முதலீட்டாளர் விழிப்பு உணர்வு மற்றும் பாதுகாப்பு நிதி (ஐ.இ.பி.எஃப்.) இருக்கிறது.

முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி... முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா?

இதுவும் முதலீட்டாளர் களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது. இந்த நிதி முதலீட்டாளர்களின் முகவரி மாற்றத்தால் கோரப்படாமல் கிடக்கும் டிவிடெண்ட் தொகை, முதலீட்டாளர் இறந்துவிட்ட நிலையில் கோரப்படாமல் கிடக்கும் டிவிடெண்ட் தொகை போன்றவை மூலம் உருவாகிறது.

செபி, பங்குச் சந்தைகள், என்.எஸ்.டி.எல்., சி.டி.எஸ்.எல்., ஐ.இ.பி.எஃப் வசம் இருக்கும் முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி எந்த அளவுக்குப் பயனுள்ளதாகப் பயன்படுத்தப் படுகிறது எனக் களமிறங்கி ஆராய்ந்தோம். நமக்குக் கிடைத் ததோ அதிர்ச்சி தகவல்கள்தான்.

அசத்தும் ஆயிரம் கோடி!

இன்றைய தேதியில் முதலீட்டாளர் பாதுகாப்பு நிதியின் கீழ் செபி மற்றும் பங்குச் சந்தைகளிடம் சுமார் 1,435 கோடி ரூபாய் இருக்கிறது. பொதுவாக, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.5 முதல் 10% வட்டி கிடைக்கும்.

இந்த நிதியை மொத்தமாக முதலீடு செய்து அதற்கு 9% வட்டி கிடைக்கிறது என்றாலும்கூட, ஆண்டுக்கு வட்டியாக மட்டும் சுமார் 130 கோடி கிடைக்கும். அதாவது, ஒரு மாதத்துக்கு சுமாராக 10 கோடி ரூபாய், ஒரு வாரத்துக்கு 2.5 கோடி, நாள் ஒன்றுக்கு 35 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதனை இந்தியாவின் நான்கு பகுதிகளுக்குப் பிரித்துச் செலவிட்டால், தென்னிந்தியாவுக்கு 9 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதில் தமிழ்நாட்டின் பங்காக நாள் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

இந்தத் தொகையைக் கொண்டு தமிழ்நாட்டில் தினசரி ஒரு முதலீட்டாளர் விழிப்பு உணர்வு கூட்டத்தைச் சாதாரணமாக நடத்த முடியும். ஆனால், அப்படியா நடக்கிறது? தமிழகம் முழுக்க ஓராண்டில் ஏறக்குறைய 50 முதலீட்டாளர் விழிப்பு உணர்வு கூட்டங்கள்கூட நடப்பதில்லை.

முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி... முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா?

நட்சத்திர ஹோட்டலில் கூட்டம்!

கடந்த ஆண்டு சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் முதலீட்டாளர் விழிப்பு உணர்வு கூட்டம் நடத்தப் பட்டது. இதில் மும்பையிலிருந்து சந்தை நிபுணர்கள் விமானத்தில் பறந்து வந்து பேசிவிட்டுப் போனார்கள். மொத்தம் 300 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். இவர்களில் சுமார் 250 பேர் பங்குச் சந்தை புரோக்கர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்கள். சல்லடை போட்டுத் தேடிப் பார்த்தால், உண்மையான முதலீட்டாளர்கள் 50 பேர் இருந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டத்துக்கான மொத்த செலவு 10 லட்சம் ரூபாய் என்கிறார்கள். அப்படி என்றால், ஒருவருக்கு சுமார் 3,330 ரூபாய் செலவிடப் பட்டிருக்கிறது.

இந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தை ஒரு கல்லூரி ஆடிட்டோரியத்திலோ அல்லது ஒரு ஏ.சி வசதி உள்ள கல்யாண மண்டபத்திலோ நடத்தியிருந்தால் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும். 10 லட்சம் ரூபாயைக் கொண்டு ஐந்து கூட்டங்கள் நடத்தி, குறைந்தது 1,500 முதலீட்டாளர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தி இருக்க முடியும். முதலீட்டாளர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் சாப்பாடு போடவேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்களுக்கு டீ, பிஸ்கட் கொடுத்தால்கூட போதும். எந்த முதலீட்டாளரும் சாப்பாட்டுக்கு என்று கூட்டத்துக்கு வருவதில்லை.

சில ஊர்களில் இந்த விழிப்பு உணர்வு கூட்டங்கள் பங்குச் சந்தை நடக்கும் நேரத்தில்கூட நடத்தப்படுகிறது. ஓர் ஊரில் முதலீட்டாளர் விழிப்பு உணர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கே நடத்த, மிகச் சில முதலீட்டாளர்களே வந்திருந்தார்களாம். கடைசியில் கூட்டத்துக்கு எண்ணிக்கை காட்ட வேண்டும் என்பதற்காக தெரிந்த, தெரியாதவர்களை யெல்லாம் அழைத்து உட்கார வைத்து, சாப்பாடுபோட்டு அனுப்பினார்களாம்!  

முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி... முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா?

சிக்கல்களுக்குத் தீர்வில்லை!

இதுபோன்று நடக்கும் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு கூட்டத்தில், முதலீட்டாளர்களின் பிரச்னை களுக்கு பெரும்பாலும் தீர்வு சொல்லப்படுவதில்லை. எந்த கேள்வியைக் கேட்டாலும் இந்தப் பிரச்னை எங்கள் துறையைச் சார்ந்ததில்லை என்பதே பதிலாக இருக்கிறது.

கடந்த ஆண்டு சென்னையின் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த செபியின் பங்குச் சந்தை விழிப்பு உணர்வு கூட்டத்தில் மூத்த குடிமகன் ஒருவர், ''இப்போதெல்லாம் பேலன்ஸ்ஷீட் வீட்டுக்கு அனுப்பப்படுவதில்லை. அது இருந்தால்தானே நிறுவனத்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள முடியும்'' எனக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய அதிகாரியிடம் கேட்டார். அதற்கு அவர், ''இந்தப் பிரச்னைக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது. இது நிறுவன விவகாரத் துறையைச் சார்ந்தது'' என்று சொல்லி தப்பித்துக்கொண்டார். இதுபோன்ற சூழலை இனியாவது தவிர்த்தால்தான் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.

நிபுணர்கள் மும்பை, டெல்லியில் இருந்து வருவதால், ''இப்போது நேரமில்லை. விமானத்துக்கு நேரமாகிறது' என்று கூட்ட அரங்கைவிட்டு வேகமாக வெளியேறி விடுகிறார்கள். இதைத் தவிர்க்க உள்ளூர் நிபுணர்களை அழைத்து வரலாம். அப்படி செய்யும்போது முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு முழுமையாகப் பதிலளிக்க முடியும் என்பதோடு, போக்குவரத்துக் கட்டணம், தங்கும் விடுதி கட்டணம் போன்றவை கணிசமாக மிச்சமாகும். இதைக்கொண்டு வேறு கூட்டங்கள் நடத்த முடியும்.

பங்குச் சந்தை முதலீட்டாளர் களுக்கு ஒளிவுமறைவற்ற முறையில் முதலீடு மற்றும் வர்த்தகத்தை அளிக்கவேண்டும் என்று சொல்லும் செபி மற்றும் பங்குச் சந்தைகள், இந்த முதலீட்டாளர் பாதுகாப்பு நிதியை வெளிப்படையாகக் காட்டாமல் இருக்கின்றன.

என்னதான் தீர்வு?

தற்போது நடக்கும் விழிப்பு உணர்வு கூட்டங்களுக்கு அதிகம் செலவு செய்யப்படுகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையில் முதலீட்டாளர்கள் வருவதில்லை என்பதால், பெரிதாகப் பயன் எதுவும் இல்லை.

இந்த நிலை மாறி, பிராந்திய மொழியில் பேசும் நிபுணர்களைக்கொண்டு, கல்லூரி  ஆடிட்டோரியங்களில் அல்லது நடுத்தர ஹோட்டல்களில் கூட்டம் நடத்தினால் அதிகம்பேர் பயனடைவார்கள். முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் இந்த நிதி சரியான பலனை தருகிறதா என்பதைக் கண்காணிக்க தனி ஓர் அமைப்பை உருவாக்குவது அவசியம்.

இனியாவது கைவசம் இருக்கும் முதலீட்டாளர் பாதுகாப்பு நிதியை பங்குச் சந்தை அமைப்புகள் பிரயோஜனமாகப் பயன்படுத்துகிறதா, பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு