Published:Updated:

ஜி.ஆர்.டி. - ஐம்பது ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரியம்!

இரா.ரூபாவதி படங்கள்: எம்.உசேன், சொ.பாலசுப்ரமணியன்.

பிரீமியம் ஸ்டோரி

500 சதுர அடி பரப்பளவில் ஆரம்பித்து, இன்று 25 கிளைகளுடன் வெற்றிகரமாகத் தனது 50-வது வருடத்தில் கால்வைத்துள்ளது ஜி.ஆர். தங்கமாளிகை நகைக் கடை. இந்த வளர்ச்சியை அந்த நிறுவனம் இப்போது குதூகலமாகக் கொண்டாடி வருகிறது. இந்தச் சமயத்தில், ஜி.ஆர்.டி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளாகக் கண்டுவந்த வளர்ச்சியை நம்முடன் பகிர்ந்துகொண்டனர் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களான ஜி.ஆர்.அனந்தபத்மநாபனும்,  ஜி.ஆர்.ராதாகிருஷ்ணனும். முதலில் பேச ஆரம்பித்தார் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன்.

''1964-ம் ஆண்டு எங்கள் தந்தை ஜி.ராஜேந்திரனால் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். அவருடைய தந்தை  இளம்வயதிலே இறந்துவிட்டதால், தாய்மாமன் வீட்டில் தங்கிப் படித்தார். படிக்கும் காலத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாமா கடையில் வேலை பார்த்துதான் படிப்பு செலவுகளைச் சமாளித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து முடித்தவுடனே எம்.சி.சி வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார். அதன்பின் அவரது மாமாவின் உதவியுடன் கடை ஆரம்பித்தார்.

அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அடுத்தடுத்த கிளைகளைத் துவங்க ஆரம்பித்தோம். சென்னைக்கு அடுத்தபடியாக எங்கள் முதல் கிளையைத் திருப்பதியில் ஆரம்பித்தோம். வெளிமாநிலங்களில் புதிய கிளை ஆரம்பிக்கும்போது அந்த ஊர் மக்களின் டிசைன், கலாசாரம், பாரம்பரியம், விருப்பம் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டுதான் கிளை ஆரம்பிப்போம். இதற்கு மட்டுமே  ஓராண்டுகாலம் செலவழிப்போம்'' என்றவர், 'சென்னையில் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக கிளை தொடங்குவதற்கான காரணத்தையும் எடுத்துச் சொன்னார்.

ஜி.ஆர்.டி. - ஐம்பது ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரியம்!

''இன்றைய சூழ்நிலையில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள்.  இதனால் அவர்களுக்குக் குறைவான நேரமே கிடைக்கிறது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போய் தங்கநகை வாங்க சிரமப்படுகிறார்கள். தங்கம் வாங்கவேண்டும் என நினைத்தவுடனே வாங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கவே சென்னையின் பல பகுதிகளிலும் நாங்கள் கிளைகளைத் திறந்தோம். இதனால் மெயின் கடைகளின் வியாபாரத்தில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

ஏனெனில், சின்னச் சின்ன நகைகள் வாங்க அருகிலுள்ள எங்கள் கடைக்கு செல்வார்கள். திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்க மெயின் கடைகளுக்கு வந்துவிடுவார்கள்'' என்று விளக்கம் அளித்தார் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன்.

''பிற தங்கநகைக் கடை களுடனான போட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?'' என  ஜி.ஆர்.அனந்தபத்மநாபனிடம்  கேட்டோம்.

''போட்டி இல்லாமல் தொழிலை சிறப்பாக நடத்த முடியாது. நாங்கள் இந்த அளவு வளர்ந்ததற்கு இந்தப் போட்டியும் ஒரு காரணம். மேலும், தரம், டிசைன் ஆகியவற்றில் நாங்கள் எப்போதுமே சமரசம் செய்துகொள்வதில்லை.

ஜி.ஆர்.டி. - ஐம்பது ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரியம்!

தவிர, தங்க நகைகள் விற்பனை செய்வது மட்டும் எங்களுடைய தொழில் இல்லை. நாங்கள் ஹோட்டல் தொழிலும் செய்து வருகிறோம். ஹோட்டல் பிசினஸில் வாடிக்கையாளரின் அனைத்துத் தேவைகளுக்கும் முதலாளி போகத் தேவையில்லை. வேலையாட்கள் மட்டுமே அனைத்து வேலை களையும் கவனித்துக்கொள்வார்கள்.

அதேபோல, நகைக் கடையையும் மாற்ற முடியுமா என யோசித்தோம். இப்போது அதை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டோம். இப்படி கார்ப்பரேட் தரத்துக்கு நகைக் கடைகளை மாற்றும்போது விற்பனை பணியாளர்களுக்குக்  குறைந்தபட்சம் ஆறுமாத காலம் பயிற்சி தருகிறோம். இதனால் அனைத்துக் கடைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு ஒரேமாதிரியான சேவை கிடைக் கிறது'' என்றவர், ஜி.ஆர்.டி.யின் வித்தியாசமான விளம்பரங்கள் உள்பட பல விஷயங்களைப் பேசினார்.

''எங்களது அனைத்து விளம்பரங்களும் ஒரு 'தீம்’-ஐ ஒட்டியே இருக்கும். அதாவது, திருமணம், வைரம், வெள்ளி, குழந்தைகளுக்கான நகைகள் என விதவிதமாக விளம்பரங்களை உருவாக்குகிறோம். இதற்கு  மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.

எங்கள் கடைக்கு வரும் பெண்கள் தற்போது எந்தவிதமான உடை அணிகிறார்கள், அவர்களின் அன்றாட வேலை என்ன என்பதை வைத்தே தங்க நகை டிசைன் களையும், எடை குறைவான நகை களையும் செய்கிறோம்.

தங்க நகைகளைச் செய்வதற்கு ஒவ்வொரு ஊரிலும் திறமை யானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஓர் ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு வரமாட்டார்கள். எனவே, நாங்கள் அந்த ஊரிலே நகைகளைத் தயாரிக்கிறோம். இதில் விருப்பம் உள்ளவர்களுக்குப் பயிற்சி தருகிறோம்'' என்றார்.

ஜி.ஆர்.டி-ன் 50 ஆண்டுகால வரலாறு, உண்மையிலேயே அற்புதமான வரலாறுதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு