Published:Updated:

அழகு அமைதி... காசாகும் வண்ண மீன்கள்..!

செ.கார்த்திகேயன் - ஞா.சுதாகர், ரெ.சு.வெங்கடேஷ், படங்கள்: அ.ஜெஃப்ரி தேவ், க.பாலாஜி.

 ஹாபிஸ்

வீடுகளில் மீன் வளர்ப்பது இன்றைக்கு முக்கியமான விஷயமாக மாறியிருக்கிறது. அழகுக்காக மட்டுமின்றி, அமைதிக்காகவும் மீன் வளர்க்கிறார்கள் பலர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருமானம் பார்த்து வரும் சிலரை நாம் சந்தித்தோம்.

கோவையைச் சேர்ந்த சிவராமன் பொழுதுபோக்காக மீன் வளர்க்க ஆரம்பிக்க, இன்று அதையே ஒரு  பிசினஸாக செய்து வருகிறார். 'எனக்கு 7-ம் வகுப்பு முதலே மீன் வளர்ப்பதில் ஆர்வம் வந்தது. அழகுக்காகவும், விளையாடுவதற்காகவும் மீன்கள் வளர்க்க ஆரம்பித்தேன். அப்போது மீன் ஒரு ஜோடி 2 ரூபாய்தான். இவ்வளவு அழகான மீன்கள் விலை குறைவாகக் கிடைத்ததால், நிறைய மீன்களை வளர்க்க ஆரம்பித்தேன். நண்பர்களும் மீன் வளர்ப்பார்கள். ஆனால், என் மீன்கள் மட்டும் கூடுதல் அழகுடனும் அதிக நாளும் வாழும். இந்த ஆர்வம் 10-ம் வகுப்பு படிக்கும் சமயத்தில் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. ஏற்கெனவே மீன் வளர்த்துவந்த நண்பர்கள்கூட என்னிடம்  அறிவுரை கேட்க ஆரம்பித்தார்கள். நானும் மீன் மட்டுமின்றி, பறவைகள், நாய்கள் என வளர்க்க ஆரம்பித்தேன். நாளடைவில் அதனோடு நெருங்கிப் பழகும் அளவுக்கு பரிச்சயம் உண்டானது.

அழகு அமைதி... காசாகும் வண்ண மீன்கள்..!

பிடித்ததைத் தொழிலாக மாற்றினேன்!

படித்து முடித்தபின் செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்தேன். அப்போது பல விஷயங்களை வியாபார ரீதியாகக் கற்றுக்கொண்டேன். என் நண்பர்கள், எனக்குத் தெரிந்தவர்கள் அனைவரும் நான் வளர்க்கும் மீன்களையே விலைக்குக் கேட்பார்கள். அப்போதுதான், ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பதைவிட, நன்கு பரிச்சயமான, பிடித்தமான மீன் வளர்ப்பையே ஏன் தொழிலாகச் செய்யக்கூடாது என யோசித்து அண்ணன் அனீஷ§டன் இணைந்து, சிறிய அளவில் 'பாவ்ஸ்-இன்-ஸ்கேல்ஸ்’ (Paws-N-scales) என்ற பெயரில் கடை ஒன்றை அமைத்து மீன்கள், மீன் தொட்டிகள், உணவு என அனைத்தையும் விற்க ஆரம்பித்தேன்.

இலவசத் தகவல்கள்!

மற்றவர்கள் மீனை விற்பதோடு சரி. நான் அதன் சிறப்பு, எப்படி பழக வேண்டும், என்ன உணவு தரவேண்டும்,  என அனைத்து விவரங்களையும் சேர்த்தே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவேன். எனவே, வாடிக்கையாளர்கள் மீன் வளர்ப்புக்குப் புதியவர் என்றாலும்கூட தைரியமாக வாங்க வந்தனர். மேலும், கண்காட்சிகள், வாடிக்கை யாளர்கள் புதியவர்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவை மூலம் சிறிது சிறிதாகத் தொழிலை பெருக்கினேன். இந்தக் கடையை அமைக்க ஆறு லட்சம் ரூபாய் ஆனது. அதில் பாதி வங்கிக் கடன் என்பதால் எனக்கு சுலபமாக இருந்தது. இப்போது ஒவ்வொரு நொடியையும் எனது மீன்களுடனே கழிக்கிறேன். இதன்மூலம் நல்ல வருமானமும் கிடைக்கிறது'' என்றார்.

அழகு அமைதி... காசாகும் வண்ண மீன்கள்..!

அரசு வேலையை விட்டேன்!

சென்னை சிஐடி நகரில் கோல்டன் இந்தியா அக்வரிஸ்ட் என்ற பெயரில் அலங்கார மீன் கடை நடத்திவரும் சாய்ராமை சந்தித்துப் பேசினோம். ''நான் சிறுவனாக இருந்தபோது அக்கம்பக்கத்தில் இருக்கும் நண்பர்களின் வீடுகளில் மீன்கள் வளர்ப்பதைப் பார்த்து, மீன் வளர்ப்பவர்களிடம் அதுபற்றிக் கேட்டு தெரிந்துகொள்வேன். கொஞ்சமான அளவில் வீட்டிலேயே மீன்களை வளர்த்தும் வந்தேன். நாளடைவில் மீன்கள் குறித்த விஷயம் எனக்கு நிறைய தெரிகிறது என்பதைப் புரிந்துகொண்ட என் உறவினர்கள், மீன் வளர்ப்பதற்கான பொருட்களை வாங்கித் தர உதவி செய்யுமாறு கேட்டார்கள். பகுதிநேர வேலையாக இதைச் செய்தபோது நல்ல வருமானம் கிடைத்ததால், அரசு வேலையைவிட்டு, இதையே முழுநேரமாக செய்து வருகிறேன். அதன் விளைவுதான் இந்தக் கடை'' என தனது ஃப்ளாஷ்பேக்கை சுருக்கமாக எடுத்துச் சொன்னார் சாய்ராம்.

அழகு அமைதி... காசாகும் வண்ண மீன்கள்..!

''இந்தக் கடையைத் தொடங்கி 20 வருடம் ஆகிறது. நானும் என் நண்பர்கள் இரண்டுபேரும் சேர்ந்து முதலீடு போட்டு கடையைத் தொடங்கினோம். ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்பட்டது. போட்ட முதலீட்டை இரண்டு வருடத்துக்குள் எடுக்கும்படியாக நல்ல வருமானம் கிடைத்தது. இன்றைய நிலையில் சென்னையின் பெரும்பகுதியில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் மீன் வாங்க இங்கு வருகிறார்கள். நான் இதற்கு முன்பாக பார்த்த வேலையைவிட இந்தத் தொழில் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. கடை வாடகை, பொருட்கள் வாங்கும் செலவு போக மாதம் சுமார் 30 - 40 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வரும்'' என்றார் நம்பிக்கையாக.

வீட்டில் வளர்க்கும் மீன்கள்!

ரெட் கேப் கோல்டு, ஒரண்டா கோல்டு, சிங்கதலை கோல்டு, பேர்ல் ஸ்கேல் கோல்டு, ரூயிங் கோல்டு போன்ற மீன் வகைகளைப் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். வசதியானவர்கள் விரும்பும் ஏஞ்சல் மீன்கள், பார்ப்பதற்கு மதிப்புடையதாக இருந்தாலும் விலை அதிகம் இல்லை. இந்தவகை மீன்களை வாங்கி வீடுகளில் வளர்க்கலாம்.

அழகு அமைதி... காசாகும் வண்ண மீன்கள்..!

இதைத் தவிர, சீன வாஸ்து மீனான ஃப்ளோரா, அரவானா மீன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்படும் 5 இன்ச் அளவுள்ள சில்லி ரெட் அரவானா எனப்படும் வாஸ்து மீன் ஒன்றின் விலை மட்டும் சுமார் ரூ.25,000 (மீனின் அளவுக்கு ஏற்றாற்போல விலை மாறுபடும்) இத்துடன் கிரீன் ஸ்னோவொய்ட், சில்வர் பிளாக் வகை மீன்களும் உண்டு.

விருப்பமான விஷயத்தை அக்கறையோடு செய்தால் அள்ளலாம் காசு என்பதற்கு சிவராமனும், சாய்ராமும் நல்ல உதாரணங்கள்!

அடுத்த கட்டுரைக்கு