Published:Updated:

மோடி அரசு... தொழில் துறையின் எதிர்பார்ப்பு என்ன?

ச.ஸ்ரீராம்

இந்தியாவில் பல புதிய நகரங்களை உருவாக்குவேன்; இந்தியாவின் நான்கு பகுதிகளையும் புல்லட் ரயில் மூலம் இணைப்பேன்; தொழில் துறை இரட்டை இலக்க வளர்ச்சியைக் காண வைப்பேன் என  தேர்தல் பிரசாரத்தில் கூறியிருந்த மோடியின் தலைமையிலான புதிய அரசாங்கம் இப்போது மத்தியில் அமைந்திருக்கிறது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அந்நிய முதலீடு குறைவாகவே இருந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 2012-ல் ஐந்து வருடங்களுக்குள் 100 பில்லியன் டாலர் முதலீடு என்ற இலக்கை நிர்ணயித்தார். ஆனால், இதுவரை வந்ததோ வெறும் 13 பில்லியன் டாலர்தான். இதனால் தொழில் துறையும் உள்கட்டமைப்புத் துறையும் எந்தவொரு பெரிய வளர்ச்சியும் காண முடியாமல் இருந்தது. பணவீக்கம் அதிகமாக இருந்ததால், தொழில் கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகமாகவே இருந்தது. இதனால் நம் நாட்டின் ஜி.டி.பி தொடர்ந்து குறைந்து வந்தது.

ஆனால், பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம் பெரும்பாலும் தொழில் துறையின் வளர்ச்சியைச் சார்ந்தே இருந்தது. மோடியின் இலக்கு 2020-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் முதலீடு என்று தொழில் துறை வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மோடி அரசு... தொழில் துறையின் எதிர்பார்ப்பு என்ன?

தற்போது அமைந்திருக்கும் மோடி அரசிடம் ஒவ்வொரு தொழில் துறையும் என்ன எதிர்பார்க்கிறது என்பதை அறிய சில தொழில் துறை தலைவர் களுடன் நாம் பேசினோம். நாம் முதலில் சந்தித்தது இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் (கோவை) தலைவரான ஆர்.ஆர்.பாலசுந்தரத்தை. அவர் தனது அமைப்பின் எதிர்பார்ப்புகளைச் சொன்னார்.  

புதிய மின்திட்டங்கள் தேவை!

''தொழில்முனைவோர்களது வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். நேரடி சேவை வரி மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட வரிகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். எஸ்.எம்.இ-களுக்கு நிதி வழங்குவதிலும், தொழில் குறித்த அவர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதிலும் புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

மோடி அரசு... தொழில் துறையின் எதிர்பார்ப்பு என்ன?

உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தால் மட்டுமே வர்த்தக வசதிகள் பெருகும் வாய்ப்பு உள்ளது. அரசு நடவடிக்கைகளில் ஒற்றைச்சாளரமுறை பின்பற்றப்பட வேண்டும். மிகவும் வெளிப்படையான, ஊழலுக்கு இடம் தராததாக அரசின் வர்த்தக ஒப்பந்தங்கள் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் தொழில் துறை வளர்ச்சிக்கு இப்போது மிக முக்கியமான தேவையாக இருப்பது  மின்சாரம்தான். அதற்குப் பல புதிய திட்டங்களை அரசு தீட்டி தேவையான மின்சாரத்தை வழங்க வேண்டும். இந்த விஷயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாலே போதும், தொழில் துறை நல்ல வளர்ச்சி கண்டுவிடும் என்பதில் சந்தேகமே இல்லை'' என்று சொன்னார் அவர்.

''வர்த்தக நகரங்களை இணைக்க வேண்டும்''

திருப்பூரைச் சார்ந்த பாப்பீஸ் குழுமத்தின் தலைவர் சக்திவேலின் எதிர்பார்ப்பை இனி பார்ப்போம்.

''எங்கள் துறையைப் பொறுத்தவரை யில், ஐரோப்பிய நாடுகளுக்கு ஃப்ரீ டிரேட் ஒப்பந்தம் மூலம் வர்த்தகத்தை விரிவுபடுத்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் தொழில் வளர்ச்சி இன்னும் நன்றாக இருக்கும். இதன் மூலம் ஏற்கெனவே நன்றாக இருக்கும் ஏற்றுமதியை இன்னும் அதிகப்படுத்த முடியும். தவிர, ஏற்றுமதி மீதான வரி சற்று அதிகமாக உள்ளது. அதனை நெறிமுறைப்படுத்திக் குறைத்தால் அது ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் தரும் விதமாக அமையும்.

மேலும் துறைமுகங்கள், ரயில் வழித்தடங்கள் மற்றும் சாலைகள் போன்றவற்றைக்கொண்டு வர்த்தக நகரங்களை இணைக்க வேண்டும். இப்படி இணைத்தால் எங்கள் வர்த்தகம் வளரவும், பொருட்களை ஒரு இடத்திலிருந்து அனுப்பவும் பெறவும் எளிதாக இருக்கும்.

இவற்றையெல்லாம் புதிய அரசு முதன்மையாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு'' என்றார் சக்திவேல்.

ஐ.டி துறை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்!

கடந்த 15 ஆண்டுகளில் ஐ.டி துறையின் பங்களிப்பு நம்முடைய வளர்ச்சிக்கு பெரிதும் பக்கபலமாக இருந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்தத் துறையைச் சார்ந்த மிக வேகமாக வளர்ந்து வரும் மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் சீஃப் டெக்னாலஜி ஆபீஸரான ஜானகிராமன் நம்மிடம் பேசியதைப் பார்ப்போம்.  

''இந்தியாதான் தற்போது ஐ.டி துறையில் சிறந்த வல்லுநர்களையும், சிறந்த தொழில்நுட்பங்களையும் கொண்ட நாடாக உள்ளது.

மோடி அரசு... தொழில் துறையின் எதிர்பார்ப்பு என்ன?

முதலாவதாக, புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு களுக்கும், புதிய சேவைகளுக்கும் சரியான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும். அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலி போல அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒரே இடத்தில் இருக்கும்படியான வழிவகைகளை உருவாக்க வேண்டும். அரசின் சட்டதிட்டங்களில் ஐ.டி துறைக்கான சட்டங்கள் நெறிமுறைப் படுத்தப்பட வேண்டும்.

நாங்கள் ஆரம்பத்தில் நிறுவனத்தை ஆரம்பிக்கும்போது புதிய கம்பெனிகளுக்கு எஸ்.டி.பி.ஏ வசதி இருந்தது. தற்போது அது இல்லாததால் புதிய கம்பெனிகளைத் தொடங்குபவர்கள் குறிப்பிட்ட இடத்தில்தான் தொடங்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதால் பெரிய கம்பெனிகளோடு போட்டிபோட்டு ஜெயிக்க முடியாத சூழல் உருவாகிறது. இதுவும் நெறிமுறைப்படுத்தப்பட்டு குறைந்தபட்சம் ஐந்து வருடங்களாவது சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தவிர்த்து, வேறு இடங்களில் தொழிலை ஆரம்பிக்க அனுமதி வழங்க முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு நாடும் ஒரு சிறப்புத் தன்மைக்கான இடமாக விளங்குகிறது. உதாரணமாக, சீனா எப்படி அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளதோ, அதேபோல் தற்போது இந்தியா சாஃப்ட்வேர் துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது.

அதற்கான ஆராய்ச்சி ஏற்பாடுகளையும், கல்வி வாய்ப்புகளையும் அரசு ஊக்குவிக்கும்போது நாம் சாஃப்ட்வேர் துறையில் உலகத்துக்கே தலைமை தாங்கலாம். ஐ.டி துறையின் வளர்ச்சியை அரசு சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இந்தியா அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டத் தவறக் கூடாது'' என்றார்.