Published:Updated:

100 நாட்களில் மோடி என்ன செய்ய வேண்டும் ?

நிபுணர்கள் கருத்து இரா.ரூபாவதி

இந்தியா வென்றது. இனி நல்ல நாட்கள் எதிர்நோக்கி உள்ளது எனத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ட்விட் செய்தார் மோடி. பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும், வட்டி விகிதத்தையும் குறைக்க வேண்டும், கடந்த ஐந்து ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பல்வேறு அரசு மற்றும் தனியார் திட்டங்களை முடுக்கிவிட வேண்டும் எனப் பல்வேறு சவால்கள் மோடியின் முன்பு உள்ளது.

இந்த நிலையில், மோடி தலைமை யிலான புதிய அரசாங்கம் அடுத்த 100 நாட்களில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம். மத்திய அரசாங்கம் உடனே செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் பட்டியல் போட்டுத் தந்தார்கள்.

நாம் முதலில், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலாளரும், சமூக அரசியல் சிந்தனையாளருமான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.எஸ்.ராகவனை சந்தித்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''பிரதமராக மோடியைத் தேர்ந்தெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஏனெனில், அவர் ஏற்கெனவே குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர். இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த மாதிரியான பிரச்னைகள் உள்ளன, அதனுடைய தன்மை என்ன என்பதை அவரால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

100 நாட்களில் மோடி என்ன செய்ய வேண்டும் ?

மோடி நினைக்கும் கொள்கைகளை அப்பழுக்கில்லாமல் நிறைவேற்றுவதற்கு அரசு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும். இதற்குத் திறமையான அரசு அதிகாரிகளை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசு அதிகாரிகள் வேலையைச் சிறப்பாகச் செய்யவில்லை எனில், வேலை பறிபோய்விடும் என்ற பயத்தை உருவாக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தில் அரசு அதிகாரிகளுக்கு அவசியத்துக்கும்  அதிகமான பாதுகாப்பு உள்ளது. இதை நீக்கிவிட்டால்கூட நல்லதுதான்.  பதவியேற்கும் மோடி அரசின் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளோடு இணைந்து போகக்கூடியவர்களை முதல் மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகளாகப் பணியமர்த்த வேண்டும். அரசு அதிகாரிகள் பணித்திறனை ஆய்வு செய்வதற்குத் தனியாகக் குழு அமைத்து, வேண்டிய அளவு உழைப்பையும், செயல்பாட்டையும், பொறுப்புணர்ச்சி, கடமை உணர்ச்சியையும், ஈடுபாட்டையும் காண்பிக்காதவர்களைக் களைந்தகற்ற வேண்டும்.

புதிதாக அமைக்கப் போகும் அமைச்சரவையில் ஊழலில் சிக்காதவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு இந்த அரசின் மீது நம்பகத்தன்மை உருவாகும். அதிக ஊழல் காரணமாகத்தான் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது என்பதை மோடி மறக்கக்கூடாது.

100 நாட்களில் மோடி என்ன செய்ய வேண்டும் ?

நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் உடனடியாகச் செய்ய வேண்டும். அரசு நிர்வாக இயந்திரத்தின் விதிமுறைகள் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தவையாகும். இன்றைய காலகட்ட தேவையின் அடிப்படையில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும். தொழில்களில் முதலீடு, வங்கி சேவை, தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் செயல்திறனை மேம்படுத்துதல் போன்ற துறைகளைச்சார்ந்த கொள்கைகளைத் துரிதமான பொருளாதார முன்னேற்றத்துக்கு  உகந்தவையாக மற்றியமைக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து அதிக முதலீடு கொண்டுவருவதற்கு ஏற்ப திட்டங்களை உருவாக்க வேண்டும்.

உலக நாடுகளில் தொழில் தொடங்குவதற்கு ஒருவார காலம் தேவையெனில், இந்தியாவில் அதற்கு ஒரு வருடமாகிறது. இதனால் அந்நிய முதலீடு குறைகிறது. குஜராத் தொழில் வளர்ச்சி மாநிலமாக மாறியதற்கு அங்கு கிடைத்த வசதிகள்தான் காரணம். எனவே, தொழில் தொடங்குவதற்கு இந்தியா முழுவதும் ஒரேமாதிரியான சூழலை உருவாக்க வேண்டும். அந்நிய முதலீட்டுக்குத் தனியாக கவுன்சில் அமைத்து அதை மோடி நேரடியாகக் கவனிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். உலக நாடுகளில் ஆங்காங்கு பதுக்கிவைத்திருக்கும் கறுப்புப் பணத்தை அந்நாடுகள் உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்கும்படியாகச் செய்ய வேண்டும்.  இல்லையெனில், அந்த நாடுகளின் அனைத்து சேவைகளும் இந்தியாவில் நிறுத்தப்படும் என அறிக்கைவிட வேண்டும். இதற்கு அமெரிக்கா வழிகாட்டியிருக்கிறது.

இந்தியா, சீனா எல்லை பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும். இந்தப் பொறுப்பை இருதரப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதில் பயனில்லை.  இந்தப் பிரச்னைக்கு இருநாட்டுப் பிரதமர்கள் நிலையில்தான் தீர்வுகாண முடியும். இந்தியா, சீனா இரண்டு நாடுகளின் உறவுகளும் சுமூகமாகி, இரண்டிற்கும் நடுவே பொருளாதாரத்திலும் ஆரோக்கியமான போட்டி நிலவி, அவை சக்திவாய்ந்த அரசுகளாகப் பரிமளிக்குமானால், இந்த ஆசிய மண்டலத்தின் வருங்காலத்தையே பொன்மயமாக்க முடியும்.

இந்தியாவில் 25 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவை யான வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது மோடியின் கடமை. இந்தியாவில் படித்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், வேலை செய்யும் திறன் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. இந்த எண்ணிக்கையை உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

100 நாட்களில் மோடி என்ன செய்ய வேண்டும் ?

பயங்கரவாதம் தலையெடுக்க விடாமலிருப்பது மோடி அரசின் தலையாய கடமையாகும். அந்தப் பொறுப்பு ஒருமுகமாக இல்லாமல் இப்போது பல அமைப்புகளிடம் சிதறிக்கிடக்கிறது. வழிமுறைகளையும் இன்னும் சீர்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இவையெல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக அலசி ஆராய்ந்து ஒருங்கிணைந்த ஒரு செயல்திட்டத்தைச் சிபாரிசு செய்வதற்கு உடனுக்குடன் ஒரு குழுவை மோடி அரசு நியமிக்கவேண்டும்' என்று முடித்தார்.

ராகவனை அடுத்து நாம் சந்தித்தது சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் டி.பி.கபாலியை. புதிய அரசாங்கம் செய்யவேண்டிய முக்கியமான விஷயங்களை அவரும் பட்டியலிட்டார்.

''நூறு நாட்களில் எதையும் செய்ய முடியாது. இது ஒருவிதமான வார்த்தை ஜாலம்தான். வளர்ச்சி என்பதை அடைவதற்கு குறைந்தபட்சம் இரண்டு, மூன்று வருடங்கள் ஆகும். இந்தியாவில் இப்போது பொருளாதாரம் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. மோடி வந்தவுடனேயே அனைத்தும் மாறிவிடும் என நினைக்கக்கூடாது. சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால்தான், வளர்ச்சியை அடைய முடியும்'' என்றவர், கடுமையான நடவடிக்கை என்றால் என்ன என்பதை யும் விளக்கினார்.

''அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவின் முன்னேற்றத்துக்கான திட்டங்களில் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு அதிக இடம் ஒதுக்க வேண்டும். இதைச் செய்தால்தான் வளர்ச்சி என்பது இருக்கும். அதாவது, இந்தியாவில் கடந்த 10 வருடமாக  மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சராசரியாக 13   - 15 லட்சம் கோடி ரூபாய் வரை செலவு ஆகும். இதில் வருடத்துக்கு சராசரியாக சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். துண்டுவிழும் 6 லட்சம் கோடி ரூபாயில் 2.5 - 3 லட்சம் கோடி ரூபாய் வரை மானியத்துக்கே போய்விடுகிறது. மானியம் வழங்குவதற்குத் தேவையான பணம் எங்கிருந்து வருகிறது என்பதை அரசாங்கத்தை நடத்துகிறவர்கள் சொல்ல வேண்டும்.

நமது அரசாங்கத்தின் வருவாய் மூன்று வழிகளில் வருகிறது. வரி வசூலிப்பு, மத்திய அரசு ஆர்.பி.ஐ.க்கு பத்திரம் எழுதித் தந்து அதன் மூலமாக தேவையான தொகையை பெற்றுக்கொள்ளும் (இது உண்மையில் நோட்டு அச்சடிப்பதற்கு சமம்), கடன் வாங்குவது ஆகிய வழிகளில்தான் வருவாய்க் கிடைக்கிறது. வரி வசூல் மூலமாக வருடத்துக்கு அதிகபட்சம் 6.5 லட்சம் கோடி ரூபாய்தான் கிடைக்கிறது. மீதமுள்ள செலவுகளுக்கு மற்ற இரண்டு வழிகளைத்தான் செய்ய வேண்டும்.

உலக நாடுகள் இந்தியாவுக்குக் கடன் தரத் தயாராக இல்லை. எனவே, மத்திய அரசு ஆர்.பி.ஐ.யிடம் கடன் வாங்குகிறது. இப்படியே தொடர்ந்து செய்தால் விலைவாசியைக் கட்டுப்படுத்தவே முடியாது. இந்த நிலை உருவானால், பொருளாதாரம் மீண்டு வருவதற்கு வழியில்லாமல் போய்விடும்.

100 நாட்களில் மோடி என்ன செய்ய வேண்டும் ?

மேலும், ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தை உயர்த்தினால் வளர்ச்சி இருக்காது என்று சிதம்பரம் கூறிவந்தார். ஆனால், அது உண்மையில்லை. வட்டி விகிதம் உயரும்போது சேமிப்பு அதிகரிக்கும். செலவு குறையும். செலவு குறைந்தால் உற்பத்தி குறையும். இதனால் வேலைவாய்ப்பின்மை உருவாகும். இது ஆரம்பத்தில் கடினமாகவே இருக்கும். நாளடைவில் விலைவாசி கட்டுக்குள் வரும். அதை அப்படியே ஒரே நிலையில் வைத்திருந்தால்  நாளடைவில் பெரிய வளர்ச்சிக்கு வழி வகுக்கும். இல்லையெனில், இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும். அதன்பின் மீண்டும் வளர்ச்சி குறையும். இது ஆரோக்கியமான பொருளாதாரம் இல்லை.

எனவே, பொதுமக்களுக்கு வழங்கும் மானியங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். மானியம் என்பது ஒருவிதத் தில் விஷம்தான். இது கொஞ்சம்

கொஞ்சமாக மக்களைக் கொன்றுவிடும். டீசல், சமையல் எரிவாயு மானிய விலையில் கிடைக்கிறது. இதனால் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் என நினைக் கலாம். ஆனால், விலைவாசியைக் கட்டுப்படுத்தவே முடியாமல் போய்விடும். காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததற்குக் காரணமே இந்த விலைவாசி உயர்வுதான் என்பதை மறந்துவிடாக் கூடாது.

மோடி குஜராத்தில் செய்ததுபோல, அனைத்துக்கும் கட்டணம் விதிக்க வேண்டும். அப்போதுதான் அதை முழுமையாகப் பயன்படுத்துவார்கள். குஜராத்தில் மானிய விலையில் மின்சாரம் தருவதில்லை.  காசு தந்து வாங்குவதால் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த நடவடிக்கைகள் எடுத்தாலே பொருளாதாரம் தானாக வளரும்'' என்றார்.

இவரைத் தொடர்ந்து பென்ச்மார்ச் அட்வைஸரி சர்வீஸ் நிறுவனத்தின் இயக்குநர் சண்முகநாதன் நாகசுந்தரத் திடம் கேட்டோம்.

''முதலில் அரசின் செலவுகளைக் குறைக்க வேண்டும். அரசின் செலவு களில் மானியம் பெரும்பங்கு வகிக்கிறது. அதாவது, பொதுமக்களுக்கு 5 ரூபாயை மானியமாக ஒதுக்கினால், அதில்

2 ரூபாய்தான் அவர்களுக்குப் போய்ச் சேருகிறது. மானியத்தைவிட அதை மக்களுக்குக் கொண்டு செல்வதற்கு அதிகமான அளவு செலவாகிறது. மக்களுக்கு அரசாங்கம் வழங்கும்

1 ரூபாய் மானியத்துக்கு 3 ரூபாய் செலவு செய்கிறது. இதை நிறுத்தினாலே நிதிச்சுமை குறையும்.

ராணுவம், காவல்துறை, நீதிமன்றம் தவிர்த்து பிற துறைகளை தனியார் மயமாக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி இருக்கும். இதன் மூலமாகத்தான் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க முடியும். மேலும், அரசாங்கம் 4.5% நிதிப் பற்றாக்குறை உள்ளதாகச் சொல்கிறது. ஆனால், இது 10 சதவிகிதத்துக்குமேல் இருக்கும்.  எனவே, முதலில் தெளிவான மற்றும் சரியான விவரத்தை வெளியிட வேண்டும்.

தனியார்மயமாக்கும்போதுதான் தரமான சேவை கிடைக்கும். கல்வியானது 40 வருடங்களுக்கு முன்  அரசிடம் இருந்தது. அப்போது தரமான கல்வி கிடைத்தது. ஆனால், இன்று அரசுப் பள்ளிகளில் அந்தத் தரத்தை எதிர்பார்க்க முடியாது. குறைந்த அளவில் சம்பளம் வாங்குபவர்கள்கூட தனியார் பள்ளியில்தான் படிக்கவைக்கிறார்கள். தனியார் பள்ளிகளை ஒரு தொழிலாகவே பார்க்க வேண்டும். அப்போதுதான் முன்னேற்றம் ஏற்படும்.  அடிப்படை தேவைகள், தொழிலாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை'' என்றார்.

அடுத்த 100 நாட்களில் என்னென்ன நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் எடுக்கிறது என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.

படம்: ப.சரவணக்குமார்.