Published:Updated:

டைமண்ட் இ.டி.எஃப்.: இப்போது சாத்தியமா?

இரா.ரூபாவதி. படங்கள்: ப.சரவணக்குமார்.

பிரீமியம் ஸ்டோரி

தங்கத்தின் மீதான மோகம்தான் இந்திய மக்களிடையே அதிகமாக உள்ளது. ஆனால், வைரத்தை வாங்க வேண்டும் என்கிற எண்ணம் மிகக் குறைவாகவே உள்ளது. வைரத்தின் விலை அதிகம். அதை வாங்க ராசி வேண்டும் என பலரும் நம்புவதே இதற்கு காரணம்.  

இந்த நிலையில், கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (இ.டி.எஃப்.) போல, டயமண்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டை அறிமுகம் செய்ய அமெரிக்க செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் யோசித்து வருகிறது.

டயமண்ட் இ.டி.எஃப் திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா என்பதைப் பார்க்கும்முன், வைரம் குறித்த அடிப்படை விவரங்களை நம்மிடம் எடுத்துச் சொன்னார் தி ஜெம் அண்ட் ஜுவல்லரி எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சிலின் தென் மண்டல தலைவரும், பிரின்ஸ் ஜுவல்லரியின் உரிமையாளருமான பிரின்ஸன் ஜோஸ்.

''தங்கத்தை வாங்குவதுபோல, அதிக அளவிலான மக்கள் வைரத்தை வாங்குவதில்லை. விலை அதிகம், பார்ப்பதற்கு தங்கத்தைப் போலப் பெரிய அளவில் இல்லை என்பதால்  வைரத்தை வாங்க மக்கள் யோசிக்கிறார்கள்.

ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. வைரத்தையும் சிறந்த முதலீடாகப் பார்க்க தொடங்கியிருக்கிறார்கள் மக்கள். தங்கத்தைப்போல, வைர நகைகளில் அதிகக் கழிவு இருக்காது. பயன்பாட்டின் மூலமாகத் தேய்மானம் என்பதும் இருக்காது.

டைமண்ட் இ.டி.எஃப்.: இப்போது சாத்தியமா?

வைரம் என்பது ஒருவகையான கார்பன். நிலக்கரியிலிருந்து எடுக்கும் போது வைரத்தின் நடுவில் கறுப்பு நிறம் இருந்தால் அதன் விலை குறைவாகவே இருக்கும். இந்தக் கறுப்பு நிறம் வைரத்தில் எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது, வைரத்தின் நடுவில் கறுப்பு நிறம் அதிகம் இருந்தால் அதில் அதிக அளவு சேதாரம் இருக்கும். அதேநேரத்தில், ஓரங்களில் கறுப்பு இருந்தால் சேதாரம் குறைவாக இருக்கும். அதிக கறுப்பு நிறம் உள்ள வைரங்களை தொழிற்சாலைகளில் பயன்படுத்துவார்கள்.

வைரம் வாங்கும்போது, அதற்கான சான்றிதழை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். ஏனெனில், அந்தச் சான்றிதழை வைத்திருந்தால் எளிதாக மறுவிற்பனை செய்ய முடியும். ஒவ்வொரு வைரத்திலும் அதன் தரம் குறித்த விவரங்கள் பதிக்கப்பட்டிருக்கும். மேலும், சான்றிதழில் நீங்கள்

வைத்திருக்கும் வைரம் எந்தவகையில் கட் செய்யப்பட்டது, என்ன கலர்,  எத்தனை காரட் என்ற விவரம் இருக்கும்.

டைமண்ட் இ.டி.எஃப்.: இப்போது சாத்தியமா?

வைரத்தை மறுவிற்பனை செய்யும்போது, அன்றைய விலையின் அடிப்படையில் எடுத்துக் கொள்வார்கள். தேய்மானம் இருக்காது. நகையில் பதிக்கப்பட்ட வைரக்கற்கள் ஏதாவது உராய்வின்போது உடைந்துவிட்டால், அந்தச் சிறிய பகுதிக்கான விலையை மட்டும் குறைத்துக்கொள்வார்கள். வைரத்தை வாங்கும்போது கட், காரட், கலர், கிளாரிட்டி ஆகியவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டும்'' என பல விஷயங்களை எடுத்துச் சொன்னார்.

இந்தியாவில் டயமண்ட் இ.டி.எஃப் திட்டம் சாத்தியமாகுமா என ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீகாந்த் மீனாட்சியிடம் கேட்டோம்.

''டயமண்ட் இ.டி.எஃப் திட்டத்தைக் கொண்டுவருவது சற்று சிக்கலான விஷயம்தான். ஏனெனில், வைரம் என்பது பலவிதமான தரத்தில்  கிடைக்கிறது. தங்கத்தைப்போல, ஒரே தரத்தில் வைரம் கிடைப்பதில்லை. இதனால் வைரத்தை இ.டி.எஃப்-ஆக வாங்கும்போது எந்த தரத்தில் வாங்க வேண்டும் என்பதில் மக்களுக்குக் குழப்பம் ஏற்படும்.

அடுத்து, இதில் முதலீடு செய்தபிறகு, அந்த வைரத்தை பிசிக்கலாக டெலிவரி எடுக்கவேண்டுமானால், இ.டி.எஃப் நிறுவனம் எந்த தரத்தினாலான வைரத்தை டெலிவரி தரும் என்பது தெரியாது. தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்ய சர்வதேச அளவில் அமைப்புகள் இருப்பதுபோல, வைரத்தின் விலையை நிர்ணயம் செய்ய  அமைப்புகள் இல்லை. இதனால் என்ன விலையில் வைரம் வர்த்தகமாகிறது என்பதை மக்களால் கண்காணிக்க முடியாது. இந்தப் பிரச்னைகள் எல்லாம் சரிசெய்யப்பட்டால்தான் டயமண்ட் இ.டி.எஃப் என்பது சாத்தியம்'' என்றார் ஸ்ரீகாந்த்.

வெள்ளி இ.டி.எஃப் திட்டமே இந்தியாவில் இன்னும் வரவில்லை. இந்த டயமண்ட் இ.டி.எஃப் திட்டம் வர இன்னும் பல ஆண்டு காலமாகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு