Published:Updated:

ஜிடிபி @ 9% மோடி என்ன செய்ய வேண்டும்?

டாக்டர் அனந்த நாகேஸ்வரன், சர்வதேச பொருளாதார நிபுணர், சிங்கப்பூர். படங்கள்: பா.காளிமுத்து, ப.சரவணகுமார்.

ஜிடிபி @ 9% மோடி என்ன செய்ய வேண்டும்?

டாக்டர் அனந்த நாகேஸ்வரன், சர்வதேச பொருளாதார நிபுணர், சிங்கப்பூர். படங்கள்: பா.காளிமுத்து, ப.சரவணகுமார்.

Published:Updated:

காங்கிரஸ் அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுக் காலத்தில் பல பெரும் குளறுபடிகளைச் செய்துவிட்டுப் போயிருக்கிறது. இந்தக் குளறுபடிகளைச் சரிசெய்து, அதிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மோடியின் புதிய அரசாங்கம் கடுமையாகப் பாடுபட வேண்டியிருக்கும்.

என்றாலும், எளிதில் பறிக்கக்கூடிய பழங்கள் இருக்கத்தான் செய்கின்றன. கைக்கெட்டும் தூரத்தில் கீழே தொங்கும் இந்தப் பழங்களை எளிதாகப் பறிப்பதன் மூலம் மோடி அரசாங்கம் நல்ல பெயரைத் தட்டிச் செல்கிற அதேநேரத்தில், பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கும் கொண்டு செல்ல முடியும்.

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த அரசாங்கம் செய்யவேண்டிய வேலைகள் பல இருக்கின்றன. அதில் முதலில் செய்யவேண்டிய விஷயமாக நான் நினைப்பது, எரிசக்தி தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடியாக  தீர்வு காண்பதுதான். பல ஆண்டுகாலமாகவே பெரும் பிரச்னையாக இருக்கும் இந்தப் பிரச்னைக்கு அவ்வளவு எளிதாகத் தீர்வு கண்டுவிட முடியாது என்றாலும், இந்தப் பிரச்னையைச் சரிசெய்தால் மட்டுமே நம் நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல ஆரம்பிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜிடிபி @ 9% மோடி என்ன செய்ய வேண்டும்?

நம் நாட்டில் நிலக்கரி வளம் பெரிய அளவில் இருக்கிறது. ஆனால், இந்த வளத்தை வெட்டி எடுப்பதில் தொடங்கி, அதனைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது வரையில் பல பிரச்னைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு கண்டு, நிலக்கரி மூலம் இன்னும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத் தடையாக இருக்கும் மின்தட்டுப்பாட்டை ஒரு முடிவுக்குக் கொண்டுவரலாம்.

எந்த ஒரு தொழிலுக்கும் அடிப்படைத் தேவை மின்சாரம்தான். இது கிடைத்துவிட்டால், மற்ற பிரச்னைகளை சரிசெய்து, உற்பத்தியைத் தொடங்கிவிட முடியும். ஆனால், இன்றைக்கு இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் மின்தட்டுப்பாடு நிலவுவதால், உற்பத்தி பற்றி ஓரளவுக்குமேல் யோசிக்க முடியாமலே இருக்கிறது.

மின்தட்டுப்பாட்டைக் கணிசமாக குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசாங்கம் முக்கியமான முடிவுகளை எடுக்கும்பட்சத்தில், நமது ஜிடிபி 1.5-2 சதவிகிதம் கூடுதல் வளர்ச்சி காணும் என்பது நிச்சயம்.

ஜிடிபி @ 9% மோடி என்ன செய்ய வேண்டும்?

உள்கட்டமைப்புத் துறையை வளர்த்தெடுப்பதன் மூலம் நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காணுமா என என்னிடம் கேட்டால், நிச்சயம் வளரும் என்றுதான் சொல்வேன். வளர்ச்சியை உருவாக்கும் ஒரு மந்திரக்கோலாகவே இன்ஃப்ரா துறை இருக்கிறது. இதற்கு ஒரு நல்ல உதாரணம், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட தங்க நாற்கரச்சாலைத் திட்டம். இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்கிற யோசனை அப்போது யாருக்கும் இல்லை. என்றாலும், ஏதோ ஒரு காலத்தில் செய்யப்பட்ட தேசிய நெடுஞ்சாலை இணைப்புத் திட்டத்தை பா.ஜ.க.வின் செயல்திட்டத்துடன் இணைத்துவிட, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியாக வேண்டிய கட்டாயம் வாஜ்பாய் அரசாங்கத்துக்கு உருவானது. அந்தத் திட்டத்தை சிரத்தையாகச் செய்தும் முடித்தது வாஜ்பாய் அரசாங்கம்.

இந்தத் தங்க நாற்கரச்சாலை வந்தபிறகுதான், தொழில் துறையின் முன்னேற்றத்துக்கு சாலைவசதிகள் எந்த அளவுக்கு முக்கியம் என்பது நம் மக்களுக்குத் தெரிந்தது. இந்த சாலை வந்தபிறகுதான், போக்குவரத்து பெருகியது. வாகனங்கள் மூலம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எளிதாகப் பொருட்களைக் கொண்டு செல்ல முடிந்தது. வாகனங்களின் எண்ணிக்கைப் பெருகியது. சின்னச் சின்ன நகரங்களுக்கும் எளிதாகச் சென்று வருகிறமாதிரி இணைப்பு கிடைத்தது. இதனால் ஜிடிபி கூடுதலாக 1-2 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது. அதுமாதிரி இப்போதும் பல புதிய நகரங்களை உருவாக்குவது, நாட்டின் நான்கு முனைகளையும் அதிவேக ரயில்களால் இணைப்பது போன்ற வேலைகளை செய்வதன் மூலம் நமது ஜிடிபி-யைக் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு முன்னேற்றம் காணவைக்க முடியும்.

பொருளாதார வளர்ச்சிக்கு இந்த அரசாங்கம் செய்யவேண்டிய அடுத்த முக்கியமான விஷயம், அரசு ஊழியர்களிடம் பொறுப்புணர்வை (accountability) ஏற்படுத்துவது. உதாரணமாக, காலையில் அலுவலகத்துக்கு வேலை பார்க்கவரும் ஓர் அரசு அதிகாரி, ஆபீஸில் கையெழுத்துப் போட்டுவிட்டு, கோல்ஃப் விளையாடப் போகக்கூடாது என்கிற பொறுப்புணர்வு அரசு ஊழியர்களிடம் வரவேண்டும்.  ஆபீஸுக்கு மட்டம் போட்டுவிட்டு, ஊர் சுற்றினால் புகார் செய்து, நடவடிக்கை எடுத்துவிடுவார்கள் என்கிற பயம் ஊழியர்களின் மனத்தில் வந்தாலே போதும், ஒழுங்காக சீட்டில் உட்கார்ந்து வேலை பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்.

ஜிடிபி @ 9% மோடி என்ன செய்ய வேண்டும்?

இந்த விஷயத்தில் பிரதமர் மோடி கொஞ்சம் கறாராகவே இருப்பார் என்று நம்புகிறேன். தவிர, மோடிக்கென தனியாக குடும்பம் எதுவும் இல்லை. இதனால் நாட்டின் வளர்ச்சிக்கான செயல்பாட்டில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியும். மோடியின் கீழ் பணியாற்றிய அரசு அதிகாரிகள், அவரை ஒரு வொர்க்ஹாலிக் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அரசு வேலை என்று வந்துவிட்டால், அவர் எப்போதும் களைப்படைய மாட்டார் என்கிறார்கள் அவரோடு பழகிய அதிகாரிகள். அதனால்தான் ஒருநாளைக்கு 14 மணி நேரத்துக்குமேல் அவரால் உழைக்க முடிகிறது. அரசு ஊழியர்கள் காலத்தை வீணடிக்காமல் வேலை பார்த்தால் அதன் விளைவு நம் ஜிடிபி வளர்ச்சியில் நன்றாகத் தெரியவே செய்யும்.

நம் நாட்டின் உற்பத்தித் திறனை பெருக்குவதற்கு முக்கியமாகச் செய்யப்பட வேண்டிய இன்னொரு விஷயம், வேலைக்கான திறமையை வளர்த்துக்கொள்வது. வேலைக்கான பயிற்சி பெறும் ஆட்களைத் தேர்வு செய்வதில் ஏதோ ஒருகாலத்தில் இயற்றப்பட்ட சட்ட விதிகளைக் கொஞ்சம்கூட மாற்றாமல் நாம் இன்றைக்கும் பின்பற்றுகிறோம். இந்த சட்ட விதிகளை மாற்ற வேண்டும் என டீம் லீஸ் மனீஷ் போன்றோர் முன்வைத்த யோசனையை ஏற்று, பா.ஜ.க தன் தேர்தல் வாக்குறுதியிலேயே எடுத்துச் சொன்னது. இப்போது இந்த வாக்குறுதியை மோடி நிறைவேற்றும் பட்சத்தில், தொழில் வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருக்கும் மனித வளத்தை எளிதாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும்.

தேர்தலுக்கு முன்பே நான் ஒரு கோரிக்கையை பா.ஜ.க.வின் தலைமைக்கு முன்வைத்தேன். நான் சொன்ன அந்தக் கோரிக்கையை ஏற்று, அதைத் தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது பாரதிய ஜனதா கட்சி. நான் முன்வைத்த கோரிக்கை என்னவெனில், நாடாளுமன்றத் தேர்தலையும் எல்லா மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலையும் ஒரேநேரத்தில் நடத்த வேண்டும் என்பதுதான். இதனால் எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே நேரத்தில் பிரசாரம் செய்ய முடியும். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒரே நேரத்தில் செய்துமுடிக்க முடியும். மக்களும் ஒரேநேரத்தில் ஓட்டுபோடும் வேலையையும் செய்துவிட முடியும்.

ஆனால், இப்போது என்ன நடக்கிறது? நாடாளுமன்றத் தேர்தல் ஒருசமயத்திலும் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் ஒரு சமயத்திலும் நடப்பதால், ஆண்டு முழுக்க நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் எப்போதும் தேர்தல் நடந்துகொண்டே இருக்கிறது. இதனால் மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகள் தடைபடுகிறது. மத்திய அரசாங்கம் சில முடிவுகளை எடுக்க முடியாமல் போகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஆக மொத்தத்தில், நாட்டின் வளர்ச்சி இதனால் பெரிய அளவில் பாதிப்படைகிறது. ஒரே சமயத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்பட்சத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப்

ஜிடிபி @ 9% மோடி என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார வளர்ச்சியானது எந்த குறுக்கீடும் இல்லாமல் முன்னேறும்.

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு காரணமாக இருப்பது வங்கிகள். 1969-ம் ஆண்டு வங்கிகளை நாம் நாட்டுடமை ஆக்கினோம். இது நடந்து சரியாக 45 ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆனால், இன்றும் கணிசமான மக்களை வங்கியின் செயல்பாட்டுக்குள் நம்மால் கொண்டுவர முடியவில்லை. அனைவருக்கும் வங்கிச் சேவை என்று பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அதற்கான முயற்சியில் நாம் பெரிய வெற்றியைக் கண்டுவிடவில்லை.  

பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் தருவதிலேயே வங்கிகளுக்கு பல பிரச்னைகள் இருக்கின்றன. தொழில் நிறுவனங்களுக்கு கடன் தருவதில் வங்கிகளுக்குப் பெரும் தடையாக இருப்பது, வங்கியின் சில நடைமுறைகள்தான். உதாரணமாக, வங்கிகள் பின்பற்ற வேண்டிய எஸ்எல்ஆர் (அரசு வெளியிடும் பத்திரங்களில் வங்கிகள் கட்டாயம் முதலீடு செய்யவேண்டிய தொகை) 22.5 சதவிகிதமாகவும், அரசு முன்னுரிமைத் துறைகளில் 40 சதவிகித பணத்தையும் வங்கிகள் தரவேண்டி இருக்கிறது. கணிசமான பணம் இப்படி போய்விட்டால், தொழில் நிறுவனங்களுக்கு கடன் தர வங்கிகளிடம் எப்படி பணம் இருக்கும்? எனவே, தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் தரும் கடன் அளவைப் பெருக்க முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு எஸ்எல்ஆர் விகிதத்தை முதலில் 15 சதவிகிதமாகவும், காலப்போக்கில் 10 சதவிகிதமாகவும் குறைக்க வேண்டும். தவிர, அரசாங்கத்துக்கு பணம் தேவை எனில் அதை நேரடியாக மக்களிடமிருந்து திரட்டுகிற மாதிரி இருக்க வேண்டும். அரசாங்கம் வெளியிடும் பத்திரங்களில் வங்கிகள் பணத்தை முதலீடு செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது.

வங்கிகள் என்றாலே ஒரே மாதிரியான செயல்பாடுகளைக் கொண்டதாக இருக்கும் என்றில்லாமல், ஒவ்வொரு தரப்பினரின் தேவை களையும் நிறைவேற்றுகிற மாதிரி வங்கிகளின் செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும். உதாரணமாக, மக்களிடமிருந்து டெபாசிட்டை பெறுகிற வேலையை மட்டும்  செய்வதற்கான அனுமதியை சில வங்கிகளுக்குத் தரலாம். உதாரணமாக, தபால் துறை அலுவலகத்தை வங்கியாக மாற்றுவதன் மூலம் நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளிலும் உள்ள மக்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக டெபாசிட் செய்ய முடியும். தவிர, இந்த வங்கியின் மூலமே பத்தாயிரம் ரூபாய் வரையிலான குறுங்கடனை மக்களுக்குத் தர முடியும். இதன் மூலம் கிராம அளவில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். எஸ்எம்இ-க்கு மட்டுமென சில வங்கிகள், தொழில் நிறுவனங்களுக்கு கடன் தர சில வங்கிகள் என ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு நோக்கத்தை வைத்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாகவே செயல்பட முடியும்.

விவசாயத் துறையிலும் பல முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். இன்றைக்கு நம் நாட்டில் விவசாயம் சார்ந்த அமைச்சகங்கள் மூன்று, நான்காகப் பிரிந்து கிடக்கிறது. விவசாயம், நீர் மேலாண்மை, உரத் துறை, உணவுப் பதப்படுத்தல் துறை என பலவாறாகச் சிதறிக்கிடக்கும் துறைகளை ஒன்று அல்லது இரண்டு அமைச்சகங்களின் கீழ் கொண்டுவர வேண்டும்.  

ஜிடிபி @ 9% மோடி என்ன செய்ய வேண்டும்?

நீராதாரத்தைப் பெருக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒவ்வொரு பகுதியிலும் மேற்கொள்ள வேண்டும். நம் நாட்டில் நீராதாரம் என்பது வேகமாகக் குறைந்து வருகிறது. ஆனால் நாமோ, நீர்த் தேவை நிறைய  இருக்கும் அரிசியையும்  கோதுமையை யும் அதிகம் சாகுபடி செய்கிறோம். நம் தேவைபோக மீதமுள்ள அரிசி, கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். ஆக, நாம் மறைமுகமாக தண்ணீரை ஏற்றுமதி செய்கிறோம் என்கிறார் விவசாயத் துறை நிபுணரான அசோக் குலாட்டி. இதற்கு பதில், குறைந்த அளவில்  தண்ணீர் தேவைப்படும்,  அதிக புரதச் சத்து கொண்ட, அதிக வருமானம் தரும் பணப்பயிர்களை நாம் வளர்க்கலாம். அரிசியை ஏற்றுமதி செய்யாமல், தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யலாம்.

வறுமையை ஒழிப்போம் என இதுவரை உதட்டளவில் பேசிவந்த கருத்தை இனியாவது நிஜமாக்க மனப்பூர்வமாக உழைக்க வேண்டும். இதற்கு உதவுகிற சிந்தனையாளர்களை உலகில் எங்கிருந்தாலும் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தத் தயங்கக் கூடாது.  இதுமாதிரி அடிப்படையான வேலைகளைச் செய்வதன் மூலம் நம் ஜிடிபி வளர்ச்சி உடனடியாக 6 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சி காண வைத்துவிட முடியும். இந்த வளர்ச்சி வந்துவிட்டால், அடுத்து படிப்படியாக 9%  வரைகூட நம்மால் நிச்சயம் வளர முடியும். ஆனால், இந்த வளர்ச்சி வரும்பட்சத்தில் பணவீக்கம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் வராமல் இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். கடந்தமுறை நம் தகுதிக்கு மீறிய வளர்ச்சியை நாம் பார்த்ததால்தான் பணவீக்கம் போன்ற பிரச்னையால் நாம் பாதிப்படைந்தோம்.

கடந்தமுறை நாம் அடைந்த வளர்ச்சி நிலைத்து நிற்கவில்லை. இனி, நாம் காணவிருக்கும் வளர்ச்சியாவது நிலைத்து நிற்பதோடு, பணவீக்கம் போன்ற வேண்டாத விளைவுகளை உருவாக்காதபடிக்கு இருக்க வேண்டும்.                                  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism