Published:Updated:

தலைமை மாற்றம்... இனி என்ன ஆகும் இன்ஃபோசிஸ்?

ச.ஸ்ரீராம்

தலைமை மாற்றம்... இனி என்ன ஆகும் இன்ஃபோசிஸ்?

ச.ஸ்ரீராம்

Published:Updated:

ஒரே ஆண்டில் இன்ஃபோசிஸ் தலைமை மீண்டும் மாறியிருக்கிறது. ஓராண்டுக்குமுன் அந்த நிறுவனத்தின் தலைமையை ஏற்றுக்கொண்ட நாராயணமூர்த்தி, விஷால் சிக்காவை புதிய சிஇஓ-வாக ஆக்கிவிட்டு, ஒதுங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தில் நடந்திருக்கும் தலைமை மாற்றத்தினால் இன்ஃபோசிஸ் இனி என்னவாகும், இதனால் நிறுவனத்துக்கு சாதகமா, பாதகமா என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

1981-ல் தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட சில ஆண்டு களிலேயே முதலீட்டாளர்கள் எப்போதும் விரும்பும் 'டார்லிங்’ பங்காக மாறியது. இந்த நிறுவனம் ஐபிஓ வந்தபோது அதில் 100 ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அது பல லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும். இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்தான் நாராயணமூர்த்தி. இவர் 2002-ல் தனது சிஇஓ பதவியை நந்தன் நிலகேனியிடம் ஒப்படைத்தார். நிலகேனிக்குப்பின் கிருஷ் கோபாலகிருஷ்ணன், சிபுலால் ஆகியோர் சிஇஓ-க்களாக ஆகி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்த தங்களால் முடிந்ததையெல்லாம் செய்தனர்.

இதுநாள்வரை நிறுவனத்தைத் தொடங்கியவர்கள்தான் சிஇஓ-வாக இருந்து வந்துள்ளனர். இனி நிறுவனத்தோடு தொடர்பில்லாத ஒருவர் வெளியிலிருந்து வந்து சிஇஓ பதவியை ஏற்றுக்கொண்டு இந்த நிறுவனத்தை நடத்தட்டும் என்கிற கருத்து உருவாகவே, விஷால் சிக்கா சிஇஓ-வாக ஆகியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிக்காவின் வருகை பல விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. சிக்காவை இன்ஃபோசிஸின் சிஇஓ-வாக ஆக்கியிருப்பது, 'விமானத்தின் இன்ஜினை நடுவானில் மாற்றுவதற்குச் சமம்’ என்று விமர்சித்திருக்கிறார் இன்ஃபோசிஸின் முன்னாள் சிஇஓ-வும், அதன் நிறுவனர்களில் ஒருவருமான நந்தன் நிலகேனி.

தலைமை மாற்றம்... இனி என்ன ஆகும் இன்ஃபோசிஸ்?

சிக்காவின் வருகையினால் இனி இன்ஃபோசிஸ் நிறுவனம் மீண்டும் பழைய இடத்தை அடையுமா என்பது முக்கியமான கேள்வி. நந்தன் நிலகேனி விலகியபோதே, நிறுவனம் தன்னைச் சரிபடுத்தியிருக்க வேண்டும். அதை அப்போது செய்யத் தவறிவிட்டது. ஆனால், இன்ஃபோசிஸ் தனக்குரிய கொள்கையிலிருந்து மாறாமல்தான் இருந்துவந்தது. ஆனால், இந்தக் காலத்தில்தான் இன்ஃபோசிஸின் சரிவு பாதை ஆரம்பித்தது என்றே பலரும் சொல்கிறார்கள்.

இந்த நிறுவனத்தின் வருமானமானது, மற்ற போட்டி நிறுவனங்களின் வருமானத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்த நிலையில் இருந்து மாறி, தற்போது குறைந்துள்ளது. மேலும், நிறுவனத்தைவிட்டு ஊழியர்கள் செல்லும் போக்கு (அட்ரீஷன் ரேட்) 2013-ல் 13 சதவிகிதத்திலிருந்து தற்போது 18.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை கவலை தரும் இன்னொரு விஷயம், குறைந்துவரும்  வருவாய். இந்தத் துறையில் உள்ள மற்ற நிறுவனங்கள் வருவாய் வளர்ச்சி ஏறுமுகத்தில் உள்ளது. ஆனால், இன்ஃபோசிஸ் மட்டும் வருவாயைப் பெருக்க முடியாமல் திணறி வருகிறது. புதிய திட்டங்களுக்குச் செலவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் அடுத்த காலாண்டில் இதன் வருவாய் வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் ஆகியவற்றின் காலாண்டு வருவாய் வளர்ச்சி 2-4 சதவிகிதமாக இருந்திருக்கிறது.

தலைமை மாற்றம்... இனி என்ன ஆகும் இன்ஃபோசிஸ்?

இன்ஃபோசிஸின் செயல்பாட்டு லாப விகிதம் சென்ற நிதியாண்டில் 28.6% என்கிற அளவில் இருந்து தற்போது 26.8 சதவிகிதமாக குறைந் துள்ளது. இதே துறையில் உள்ள முன்னணி நிறுவனமான டிசிஎஸ் இந்த நிதியாண்டில் சென்ற நிதியாண்டைவிட 2% செயல்பாட்டு லாபத்தை அதிகரித்துள்ளது. ஐ.டி துறையில் பெரிய பிரச்னை எதுவும் இல்லை என்றாலும் இன்ஃபோசிஸில் பிரச்னைகளுக்கு பஞ்சமே இல்லை.

இன்ஃபோசிஸில் தற்போது ஏற்பட்டுள்ள தலைமை மாற்றத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் செயல் இயக்குநர் ஸ்ரீராமிடம் கேட்டோம். ''இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நிறுவனர் குழுவைச் சேராத ஒருவர் முதல்முறையாக சிஇஓ-வாகப் பதிவியேற்பது வரவேற்கதக்க விஷயம்தான். நாராயணமூர்த்தியின் இந்த முடிவு  அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல. அவர் பதவியேற்கும்போதே இன்னும் ஒரு வருடத்துக்குள் நான் புதிய சிஇஓ-வை நியமிப்பேன் என்று சொல்லிவிட்டுத்தான் பதவி ஏற்றார். தவிர, அவராக விருப்பப்பட்டு அந்தப் பதவிக்கு மீண்டும் வரவில்லை. நிர்வாகத்தை சரிசெய்ய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதனால்தான் அவர் மீண்டும் இன்ஃபோசிஸுக்கு வந்தார். மேலும், இன்ஃபோசிஸுக்கு வெளியிலிருந்து ஒருவர் சிஇஓ-ஆவதை விரும்பாதவர் நாராயணமூர்த்தி என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால், நிறுவனத்தின் நலனுக்காக அவர் தனது கருத்திலிருந்து மாறுபட்டிருக்கிறார்.

தலைமை மாற்றம்... இனி என்ன ஆகும் இன்ஃபோசிஸ்?

சிலர் இந்த தலைமை மாறுதலை ஆப்பிள் நிறுவனத்தோடு ஒப்பிடு கிறார்கள். அது பொருந்தாத ஒப்பீடு. ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் சிஇஓ பதிவியிலிருந்து விலக்கப்பட்டார். ஆனால், இங்கோ நாராயணமூர்த்தி தானாகவே முன்வந்து பதவி விலகியிருக் கிறார். ஆப்பிள் நஷ்டத்தை நோக்கி சென்றபோது தன்னை நிரூபிக்க ஜாப்ஸ் மீண்டும் போராடி வந்தார். ஆனால், நாராயணமூர்த்தியோ  நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் பெயரில்தான் மீண்டும் வந்தார். அது மட்டுமின்றி, அவர் ஏற்கெனவே சொன்னபடி, தன் மகன் உள்பட தன் குழுவோடு வெளியேறியும் இருக்கிறார். அதனால் இந்த முடிவில் இன்று பல விமர்சனங்கள் எழுந்தாலும், இன்னும் இரண்டு, மூன்று வருடங்கள் கழித்து, இன்ஃபோசிஸ் நல்ல நிலையில் உள்ளபோது இன்று நாராயணமூர்த்தி எடுத்த முடிவு சரியெனத் தோன்றும்'' என்றார்.

தலைமை மாற்றம்... இனி என்ன ஆகும் இன்ஃபோசிஸ்?

இன்ஃபோசிஸ் தலைமை மாற்றத்தால் அந்தப் பங்கின் விலையில் என்ன விளைவுகள் ஏற்படும் என ஈக்வினாமிக்ஸ் ரிசர்ச் அண்ட் அட்வைஸரி நிறுவனத்தின் நிறுவனர் சொக்கலிங்கத்திடம் கேட்டோம். 'ஐ.டி துறை ஆரம்பத்தில் 30-50 சதவிகித வளர்ச்சி கண்டது. தற்போது அந்தத் துறையின் வளர்ச்சி 12-14% என்கிற அளவிலேயே உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்தப் பங்கு மீது சிலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.  அதுபோன்ற சந்தேகங்களுக்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அதுமட்டுமின்றி இன்ஃபோசிஸ் நிறுவனர்களிடம் குறைந்த அளவு பங்குகளே உள்ளன. மற்ற பங்குகள் வெளியில் உள்ளவர்களிடம் இருப்பதால் வெளியில் இருந்து ஒருவர் சிஇஓ ஆகியிருப்பதும் ஆரோக்கியமான விஷயம்தான். அதனால் இந்தப் பங்கு, இந்தத் துறையில் வளர்ச்சி விகிதத்தையட்டி இருப்பதால், இந்த முதலீட்டை நம்பிக்கையோடு தொடரலாம்'' என்றார்.

இன்ஃபோசிஸின் சிஇஓ-வாக பதவியேற்றிருக்கும் விஷால் சிக்கா தயாரிப்பு நிறுவனத்திலிருந்து வந்தவர். அவரால் ஒரு சேவை நிறுவனத்தை திறமையாக நடத்த முடியுமா, இதுவரை நிறுவனர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்த இந்த நிறுவனத்தை இனி நிறுவனர் அல்லாத ஒருவர் வழிநடத்தும்போது எப்படி இருக்குமோ என்கிற கேள்விகள் எழவே செய்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism