Published:Updated:

தடைக்கல்லும் படிக்கல்லே!

தடைகளை அகற்றிய தாதா! ச.ஸ்ரீராம்

இந்திய கிரிக்கெட் அணியின் பெருமையை மீண்டும் உலகுக்கு ஒருமுறை உரக்க எடுத்துச் சொன்னதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பெரும்பங்கு உண்டு. ஆனால், இந்தச் சாதனையைச் செய்துமுடிக்க கங்குலி பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது!

மேற்கு வங்க மாநிலத்தில் 1972-ம் ஆண்டு பிறந்தவர் சவுரவ் சந்திதாஸ் கங்குலி. ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட கங்குலிக்கு தன் அண்ணனைப் பார்த்துதான் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது. இயல்பாக இவர் வலது கை பழக்கம் உள்ளவர். ஆனால், இடது கை ஆட்டக்காரராகத் தன் பயிற்சியைத் தொடங்கினார். 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய சீனியர் வீரர்களே தடுமாறும் ஆடுகளங்களில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்குள் இடம் பிடித்தார். முதல் போட்டியிலேயே சதமடித்து தன் தேர்வை நியாயப்படுத்தினார்.

கங்குலி என்னதான் சிறப்பாக ஆடினாலும் இந்திய அணி வெளிநாட்டு ஆடுகளங்களில் மோசமான தோல்விகளையே கண்டு வந்தது. 1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி தோற்று அரையிறுதிக்குகூட முன்னேறாமல் வெளியேறினாலும், இலங்கைக்கு எதிரான போட்டியில் கங்குலி 183 ரன்களைக் குவித்தார். இதன்பிறகு அவரது ரசிகர்களால் செல்லமாக தாதா என அழைக்கப்பட்டார் கங்குலி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தடைக்கல்லும் படிக்கல்லே!

இதற்குப்பின் இந்திய அணிக்குச் சோதனை காலம் ஆரம்பமானது. இந்திய அணியின் அப்போதைய கேப்டன் அசாருதீன் ஊழலில் சிக்கினார். அடுத்து சச்சின் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி மீண்டும் மண்ணைக் கவ்வியது. அந்த நிலையில், இந்திய அணியை மீண்டும் தூக்கி நிறுத்த அந்த அணியில் கேப்டனாக ஆக்கப்பட்டார் கங்குலி.

பழைய வீரர்களை ஓரங்கட்டிவிட்டு, புதிய வீரர்களைக் கொண்டுவந்தார் கங்குலி. விளைவு, உலகச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை அந்த நாட்டிலேயே வென்றது. எட்டாவது இடத்தில் இருந்த இந்திய அணியை இரண்டாவது இடத்துக்குக் கொண்டுவந்தார். லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தைத் தோற்கடித்து சட்டையைக் கழற்றி சுற்றியது பலரையும் புல்லரிக்க வைத்தது.

இதற்குப்பின், இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சேப்பலுக்கும் கங்குலிக்கும் கருத்துவேறுபாடு காரணமாக அணியிலிருந்தே கழட்டிவிடப்பட்டார். கங்குலி இனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவேண்டியதுதான் என்று எல்லாரும் சொன்னபோது, மீண்டும் அணியில் இடம்பிடித்து, பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதமடித்து தனது கிரிக்கெட் வாழ்க்கை முடியவில்லை என்பதை நிரூபித்தார்.

இந்திய அணியைவிட்டு வெளியேறினாலும் தற்போது ஐபிஎல் ஊழலை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அமைத்திருக்கும் முட்கல் கமிட்டி கங்குலியை அணுகியிருப்பது கங்குலிக்கு கிடைத்த மற்றொரு கௌரவம்! தடைகள் பலவற்றைத் தகர்த்த கங்குலி ஒரு நிஜமான கேப்டன்தான்!