நடப்பு
புத்தக விமர்சனம்
Published:Updated:

கூடுதல் வீட்டுக் கடன் பெற: இணை கடன்தாரரை சேர்த்துக் கொள்ளுங்கள்!

இரா.ரூபாவதி

அதிகமான வீட்டுக் கடன் பெற ஓர் எளிய வழி, வேறு ஒருவரை நம்மோடு சேர்த்துக்கொண்டு வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது. இவர்களுக்கு இணை கடன்தாரர் (கோ- அப்ளிகேன்ட்) என்று பெயர். இணை கடன்தாரராக யாரையெல்லாம் நியமித்துக்கொள்ள முடியும், இணை கடன்தாரரின் பணி என்ன என்பது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஓய்வுபெற்ற உதவி பொதுமேலாளர் ஆர்.கணேசனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

''வீட்டுக் கடன் வாங்குபவருக்கான தகுதி குறைவாக இருக்கும்போது இணை கடன்தாரரைச் சேர்த்துக்கொள்ளலாம். இணை கடன்தாரரின் வருமானத்தையும் கணக்கில்கொண்டு வீட்டுக் கடன் வழங்கப்படும். இதனால் ஒருவருக்குக் கூடுதல் கடன் கிடைக்கும். மேலும், வீட்டுக் கடன் வாங்கும்போது, கேரன்டர் கையெழுத்துத் தேவைப்படும். சிலருக்கு கேரன்டர் கையெழுத்துப் போடுவதில் சிக்கல் வரும். அதாவது, கேரன்டர் கையெழுத்துப் போடுவதற்கு எனக்கு யாரும் இல்லை என்பார்கள்.  கேரன்டர் கையெழுத்து வாங்க முடியாதவர்கள், ரத்த உறவுகளாக இருப்பவர்களை இணை கடன்தாரர்களாக நியமித்து, கடன் வாங்கிக்கொள்ளும் வசதியை வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் உருவாக்கி வைத்துள்ளன.

பொதுவாக, கடன் வாங்குபவரின் மனைவி, மகன், மகள் ஆகியோரை இணை கடன்தாரர்களாக நியமித்துக் கொள்ள முடியும். இணை கடன்தாரரின் பெயரில் பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வீட்டுக் கடன் வாங்குபவரின் பெயரில் மட்டும் வீட்டை பதிவு செய்துகொள்ளலாம். அதாவது, அப்பா வாங்கும் கடனுக்கு மகன் இணை கடன்தாரராக இருக்கலாம். அதேபோல மகன் வாங்கும் கடன் தொகைக்கு அப்பா கையெழுத்திட முடியும்.

கூடுதல் வீட்டுக் கடன் பெற: இணை கடன்தாரரை சேர்த்துக் கொள்ளுங்கள்!

அதேசமயம், அப்பாவின் பெயரில் சொத்து இருந்து வருமானம் இல்லை என்றாலும், அவரை இணை கடன்தாரராக நியமித்துக்கொள்ள முடியும். இணை கடன்தாரராக இருப்பவர்கள் இஎம்ஐ செலுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால், சிபில் ரிப்போர்ட்டைப் பார்க்கும்போது இணை கடன்தாரர் பெயரும் இருக்கும். அதாவது அவரின் பெயரிலும் கடன் இருப்பதாகவே காண்பிக்கும். எனவே, இணை கடன்தாரர் தனியாக வேறு கடனுக்கு விண்ணப்பிக்கும்போது கிடைக்கும் கடன் தொகையின் அளவு குறைய வாய்ப்புள்ளது.  

இணை கடன்தாரர் தனியாக வீட்டுக் கடன் அல்லது வேறு ஏதாவது கடனுக்காக விண்ணப்பிக்கும்போது ஏற்கெனவே இருக்கும் கடன் தொகை இருவருடைய பெயரிலும்

கூடுதல் வீட்டுக் கடன் பெற: இணை கடன்தாரரை சேர்த்துக் கொள்ளுங்கள்!

இருப்பதாகவே காட்டும். அந்தச் சமயம், என் அப்பாவின் பெயரில்தான் வீடு உள்ளது. இஎம்ஐயும் அவரே செலுத்துகிறார்; நான் வெறும் இணை கடன்தாரர்தான் என்பதை நிரூபிக்க தேவையான ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். இதனுடன் அப்பா, வீட்டுக் கடன் வாங்கியதற்கான கடன் ஒப்புகை கடிதத் தையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

இணை கடன்தாரர் இஎம்ஐ செலுத்தினால் அந்தத் தொகைக்கான வரிச் சலுகை பெறலாம். அதேசமயம்,  முதல் கடன்தாரர் கடன் தொகையைச் செலுத்தவில்லை எனில் இணை கடன்தாரர்தான் அந்தக் கடனுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். மீதமுள்ள கடன் தொகையை இணை கடன்தாரர் செலுத்த வேண்டியிருக்கும். இதைச் செய்யத் தவறினால் கடன் தந்த வங்கியானது இணை கடன்தாரர் மீது நடவடிக்கை எடுக்கும்.

அண்ணனுக்கு தங்கையை இணை கடன்தாரராக நியமிப்பதில் சிக்கல் வரும். அதாவது, திருமணமான தங்கையாக இருந்தால் சிக்கல் வர வாய்ப்புள்ளது. இந்தச் சமயம், தங்கையை கேரன்டராக வங்கி மாற்றிவிடும். எனவே, வங்கிக்கு வங்கி இணை கடன்தாரரை நியமிப்பது வித்தியாசப்படும்.

கடன் வாங்குவதற்கு முன்பே இணை கடன்தாரராக யாரை நியமிக்கப் போகிறோம் என்பதைக் கடன் வாங்குபவர் திட்டமிட்டுக்கொள்வது நல்லது'' என்றார் கணேசன்.

வீட்டுக் கடன் வாங்குகிறவர்கள் இதைக் கவனிக்கலாமே!