நடப்பு
புத்தக விமர்சனம்
Published:Updated:

செகண்ட்ஹேண்ட் பொருட்கள்: இணையதளங்களில் எளிதாக விற்கலாம்!

ச.ஸ்ரீராம்

ஏற்கெனவே பயன்படுத்திய பொருட்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு குறிப்பிட்ட பகுதி இருக்கும். அல்லது வாரச் சந்தைகளில் ஒருபகுதி இதுமாதிரியான பொருட்களுக்கென்றே ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும். இங்கு போனால் நன்கு செயல்படும் நிலையில் உள்ள சைக்கிள், டிவி, அயர்ன்பாக்ஸ் என பல பொருட்களை வாங்கி வந்துவிடலாம்.

ஆனால், இது இணையதள யுகம். சந்தைகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு இணையதளங்கள் அந்த இடத்தை வேகமாகப் பிடித்து வருகின்றன. சமீபத்தில் வந்திருக்கும் குய்க்கர் இணையதளம், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்குமான ஒரு களமாக ஆகியிருக்கிறது. இதுகுறித்து குய்க்கர் டாட் காம் நிறுவனத்தின் சென்னை மாவட்ட மேலாளர் கௌதம் ஜெயினிடம் கேட்டோம்.

''நீங்கள் ஏற்கெனவே பயன்படுத்திய பொருளையும், பயன்படுத்தாத புதிய பொருளையும் நேரடியாக ஆன்லைன் இணையதளம் மூலம் எளிதாக விற்பனை செய்ய முடியும். தவிர, உங்கள் பொருட்களை நேரடியாக விற்பதற்கும் இந்த இணையதளத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி, ஓர் இலவச கணக்கைத் துவங்கி, அதன்மூலம் நீங்கள் விற்க நினைக்கும் பொருட்கள் பற்றி விலை உள்பட அனைத்து விவரங்களையும் பதிவு செய்துவிடலாம். நீங்கள் விற்க நினைக்கும் பொருளின் புகைப்படத்தையும் இதனுடன் வெளியிடலாம்.

செகண்ட்ஹேண்ட் பொருட்கள்: இணையதளங்களில் எளிதாக விற்கலாம்!

இந்தப் புகைப்படத்தையும் விவரங்களையும் பார்ப்பவர்கள் அந்தப் பொருளை வாங்க விரும்பினால், உங்கள் போன் நம்பருக்கு தொடர்பு கொள்வார்கள். பொருட்களை வாங்க விரும்புவர்கள் தரத் தயாராக இருக்கும் விலை என்ன என்று முடிவானபின், அவரிடமே அந்தப் பொருளை விற்கலாம்.

செகண்ட்ஹேண்ட் பொருட்கள்: இணையதளங்களில் எளிதாக விற்கலாம்!

இணையதளத்தில் பொருளை விற்பவர்கள் தந்துள்ள முகவரி, செல்போன் எண்கள் சரிதானா என்பது குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், எங்களிடம் ஒரு பொருளை விற்க பதிவேற்றம் செய்யப்படும்போது, அவரது தொலைபேசிக்கு ஒருமுறை பாஸ்வேர்டு அனுப்பிவிட்டு, அதனை அவர் பதிவு செய்தபின்புதான் அவரது பதிவை நாங்கள் வெளியிடுவோம்'' என இந்த நிறுவனம் பின்பற்றும் நடைமுறைகள் பற்றி விளக்கினார்.

இந்த நிறுவனம் பொருட்களை விற்பதில் இரண்டு முறைகளைப் பின்பற்றுகிறது. ஒன்று, கட்டணத்துடன் கூடியது. மற்றொன்று இலவசமானது. கட்டணத்துடன் கூடிய பிரிவில் நீங்கள் விற்க நினைக்கும் பொருளுக்கு முன்னுரிமை தரப்படும். இதனால் இந்த விளம்பரங்கள் எப்போதும் முதலில் இருக்கும். ஆனால், இலவச விளம்பரங்களுக்கு இதுமாதிரியான முன்னுரிமை எதுவும் கிடைக்காது. இதனால் இந்த விளம்பரங்களுக்குப் பொருளை வாங்க விரும்புபவர்களின் கவனம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். கட்டணப் பிரிவில், நீங்கள் விற்க விரும்பும் பொருளை பொறுத்து 50 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவசமாகப் பொருளை விற்க நினைத்தவர்கள் பிற்பாடு கட்டணப் பிரிவுக்கு மாறும் வசதியும் உண்டு.

செகண்ட்ஹேண்ட் பொருட்கள்: இணையதளங்களில் எளிதாக விற்கலாம்!

''நாங்கள் பொருட்களை விற்பவருக்கும், வாங்குபவருக்கும் இடையே ஓர் இணைப்பாகச் செயல்படு கிறோமே தவிர, அவர்கள்தான் விற்பதையோ வாங்குவதையோ முடிவு செய்கின்றனர்'' என்றார் கௌதம் ஜெயின்.

இந்த இணையதளத்தில் நாய்க்குட்டிகள், செல்போன், ஃப்ளாட் மற்றும் வீடு என பல விஷயங்களை விற்கிறார்கள். இந்த இணையதளத்தின் மூலம் அதிகம் அலைச்சல் இல்லாமல், நாமே நேரடியாகச் சென்று பார்த்து ஒருபொருளை வாங்க முடியும் என்றாலும், பொருளின் தரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் வாங்குபவரையே சேரும். தவிர, சிலர் பொருளைப் பார்த்தவுடன் ஆன்லைனில் பணம் அனுப்பி விடுகிறேன். பொருளை பார்சல் செய்துவிடுங்கள் என்றோ, பொருளை அனுப்பிவிடுகிறேன், பிறகு பணம் அனுப்புங்கள் என்றோ அவசரப்பட்டு முடிவு எடுத்துவிடுகிறார்கள். இந்த விஷயத்தில் யாராவது ஒருவர் தவறு செய்தாலும், பாதிப்பு ஏற்படவே செய்யும்.

செகண்ட்ஹேண்ட் பொருட்கள்: இணையதளங்களில் எளிதாக விற்கலாம்!

கவனமாகச் செயல்பட்டால் இந்த இணையதளங்களைப் பயன்படுத்தி, நீங்கள் சந்தையில் விற்கும் விலையை விட கூடுதல் விலைக்கு உங்கள் பொருட்களை விற்கலாம் அல்லது நன்கு பேரம் பேசி குறைந்த விலைக்குப் பொருட்களை வாங்கலாம். எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது!