நடப்பு
புத்தக விமர்சனம்
Published:Updated:

மத்திய பட்ஜெட்... மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

செ.கார்த்திகேயன்

மத்திய பட்ஜெட்... மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்!

சென்னையைச் சேர்ந்த சண்முக பிரியனிடம் கேட்டோம். ''படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் என்னைப் போன்ற ஏராளமான மாணவர் களுக்கு நன்மை செய்யும் பட்ஜெட் இது. அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, இந்த அரசு நடவடிக்கைகளைக் கையாண்டு இருக்கிறது. கிராமப்புறங்களில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தொழில் மூலதனத்துக்கு ரூ.100 கோடியை  ஒதுக்கியிருக்கிறது'' என்று புகழ்ந்து தள்ளினார்.  

திண்டுக்கல்லில் வசிக்கும் ஆனந்தியிடம் கேட்டோம். ''காங்கிரஸ் அரசின் பட்ஜெட் திட்டங்கள் போலவே, பெரும்பாலான திட்டங்கள் அமைந்திருந்தது ஏமாற்றத்தைத் தந்துள்ளது. அந்நிய முதலீட்டை அதிகப்படுத்த முடிவு செய்திருப்பது அபாயகரமானது'' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தேனியைச் சேர்ந்த மோகன் குமாரமங்கலம், ''தொடக்கக் கல்வி வளர்ச்சிக்கு ஒவ்வொரு பட்ஜெட்டி லும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவதைப் போலத்தான் இந்த அரசும் ஒதுக்கியுள்ளது. சிறந்த திட்டம் எதுவுமில்லை. தொழிற்கல்விக்காக நாட்டின் ஐந்து இடங்களில் ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகள் கொண்டுவருவது நல்ல திட்டமே. சென்னையில் தொடங்கவுள்ள பல் மருத்துவம், காசநோய்க்கான ஆராய்ச்சியும் நல்லதொரு ஆரம்பம்'' என்றார்.

மத்திய பட்ஜெட்... மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

பழனியைச் சேர்ந்த ஜெயக்குமார், ''சிகரெட், குட்கா, பான்மசாலா போன்றவற்றுக்கான வரியை உயர்த்தியிருப்பது சரியானதே. வரிச் சலுகையை உயர்த்தியிருப்பது நடுத்தர மக்களுக்கு நன்மை அளிக்கும். அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தும் விதமாக இந்த பட்ஜெட் அமைக்கப்பட்டதால் வரவேற் கிறேன்'' என்றார்.  

ஈரோட்டைச் சேர்ந்த மோகன், ''தனிநபர் வருமான வரிச் சலுகை ரூ.3  லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. மூத்த குடிமக்களுக்கான வருமான வரி வரம்பை உயர்த்தியது நல்ல விஷயமே.  தாழ்த்தப்பட்டோருக்கு சுமார் 50,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது'' என்றார்.

வேலூரைச் சேர்ந்த அமலா, ''24 மணி நேர மின்சாரம் வழங்குவதாக மோடி அரசு தெரிவித்துள்ளது. இப்படி சொல்லி மக்களை ஏமாற்றிவிடக்கூடாது. விலைவாசி உயர்வுப் பிரச்னையை சரிசெய்ய எந்தவொரு திட்டமும் வகுக்கப்படவில்லை. பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி இருப்பது மகிழ்ச்சி'' என்றார்.

மத்திய பட்ஜெட்... மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

பயத்தை உண்டாக்கும் பட்ஜெட்!    

  திருப்பூரைச் சேர்ந்த சதீஸ்குமார்,  ''வளர்ச்சி என்கிற பெயரில் பன்னாட்டு முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையிலும் அந்நிய முதலீடு அச்சுறுத்தலை ஏற்படுத்து கிறது. திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்குச் சாதகமாக தமிழகத்தில் ஜவுளித்தொழில் பூங்கா, தொழில் துறையுடன் ஆலோசனை நடத்த தனிக்குழு, பருத்தி சேமிப்புக் கிடங்கு மற்றும் போக்குவரத்துக்கு

மத்திய பட்ஜெட்... மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

சேவை வரி விலக்கு போன்றவை மகிழ்ச்சிதரும் விஷயங்கள்'' என்றார்.

மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அலுவலர் சுப்பிரமணியன், ''ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இரண்டு வங்கிக் கணக்கு என்கிற அறிவிப்பில் முறையான வழிகாட்டுதல் இல்லை. இதனால், வங்கிகளுக்குப் பணிச்சுமைதான் அதிகரிக்கும். விவசாயக் கடன்களுக்கு நிதி ஒதுக்கி யிருப்பது நல்ல விஷயமே. அதுபோல, சிறுதொழில் முனைவோர்களுக்கும் நிதியை ஒதுக்கி யிருப்பது இந்தியாவில் தொழில் செய்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும்'' என்றார்.

  பழைய திட்டங்கள் என்னாச்சு?

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தொல்காப்பியனிடம் கேட்டோம்.  ''நடுத்தர மக்களுக்கு ஏமாற்றத்தைத் தரும் பட்ஜெட். விலைவாசி உயர்வை கண்டுகொள்ளாத பட்ஜெட். தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரமான கோவைக்கு, தேவைக்குக் குறைவான ரயில் வசதிகளே இருக்கின்றன. இதுமட்டுமின்றி நிலுவையில் இருக்கும் பழைய திட்டங்களும் அவற்றை நிறைவேற்ற புதிய செயல் திட்டங்களும் இல்லையே'' என்றார்.

- மாணவப் பத்திரிகையாளர் குழு.
படங்கள். தி.விஜய், வீ.சக்தி அருணகிரி,
வீ.சிவகுமார், பா.காளிமுத்து, தி.குமரகுருபரன்.