நடப்பு
புத்தக விமர்சனம்
Published:Updated:

கார்ப்பரேட் விவசாயத்துக்கு கைதரும் பட்ஜெட்!

நீரை.மகேந்திரன்

விவசாயத்தில் 4% வளர்ச்சி என அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். இந்த பட்ஜெட் அதற்கு உதவுமா என விவசாயத் துறை நிபுணரான நெல்லிக்குப்பம் கோதண்ட ராமனிடம் கேட்டோம்.

''விவசாயத்துக்கு 8 லட்சம் கோடி ரூபாய் கடன் அளிக்கப்படும் என்கிறார் அமைச்சர். ஆனால், இந்தக் கடனுதவியை யார், எப்படி பெறப் போகிறார்கள் என்று தெரியவில்லை. பாரம்பரிய விவசாயத்துக்கு கடனுதவி தரப்படுமா அல்லது கார்ப்பரேட் விவசாயம் செய்பவர்களுக்குச் சென்று சேருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கார்ப்பரேட் விவசாயத்துக்கு கைதரும் பட்ஜெட்!

அதுபோல, விவசாயிகளுக்கு மண்பரிசோதனை செய்துகொள்ள ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு ரூ.100 கோடி, வேளாண் துறைக்கு என்று தனித் தொலைக்காட்சி, நிலமில்லாத விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கடனுதவி என பல திட்டங்களை அறிவித்துள்ளார். இந்தத் திட்டங்கள் விவசாய வளர்ச்சிக்கு எந்த அளவு பயன்படும் என்பது தெரியவில்லை.  விவசாய விளைபொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லி, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய விலையைக் கிடைக்காமல் செய்துவிடக்கூடாது. இந்த பட்ஜெட்,  கார்ப்பரேட் விவசாயம் செய்பவர் களையே ஊக்குவிக்கும்'' என்றார்.  

கார்ப்பரேட் விவசாயத்துக்கு கைதரும் பட்ஜெட்!

கட்டுரையாளர் தூரன்நம்பியிடம் பேசினோம். ''விளைபொருட்களின் விலையை நிர்ணயம் செய்து கட்டுக்குள் வைத்திருக்க ரூ.500 கோடி என்பது ஏமாற்றுவேலை. சென்ற ஆண்டு உணவு தானிய உற்பத்தி 263 மில்லியன் டன். இதற்கு வெறும் 500 கோடி ரூபாய் ஒதுக்கினால் போதுமா? கங்கை மட்டுமல்ல, அனைத்து நதிகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். பால் உற்பத்தி குறித்து ஒருவார்த்தையும் பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகளுக்கு நேரடியாகப் பயன்படாத பட்ஜெட் இது'' என்றார்.

அடுத்த பட்ஜெட்டிலாவது விவசாயிகளை மத்திய நிதி அமைச்சர் திருப்திப்படுத்த வேண்டும்!