Published:Updated:

மார்க்கெட் ஏறத்தான் வாய்ப்பு அதிகம்!

மார்க்கெட் ஏறத்தான் வாய்ப்பு அதிகம்!

பட்ஜெட் முடிந்தவுடனேயே ஷேருச்சாமியைப் பார்க்கலாம் என்று நானும் செல்வமும் கிளம்பி அவர் பங்களாவுக்குப் போனோம். வழக்கம்போல அவரது யு.எஸ். ரிட்டர்ன் செகரட்டரி தனது ஐபேடை பார்த்தபடி நம்மை வரவேற்றார்.

‘நிதி அமைச்சர் பட்ஜெட் வாசிச்சு முடிக்கிற வரைக்கும் இருந்தார். திடீருன்னு கிளம்பி பாம்பே போயிட்டாரு. சனிக்கிழமை வந்துடுவாரு’ன்னு சொன்னார்.

சனிக்கிழமை சாயங்காலம் நாணயத்தோட பட்ஜெட் மீட்டிங் கேட்டுவிட்டு, சாமிக்கு ஒரு போன் அடித்தோம்.

‘‘தம்பிகளா, இன்னைக்கிதான் வந்தேன். நாளைக்கு காலையில பங்களாவுக்கு வந்துடுங்க. சண்டே அன்னைக்கி ரிலாக்ஸ்டா பேசுவோம்’’ என்றார். ஓகே சாமி என்று சொல்லிவிட்டு, மறுநாள் காலை சாமியின் முன்பு ஆஜரானோம்.

‘‘சொல்லுங்க பசங்களா... நாளு கிழமைன்னா கோயிலுக்குப் போறமாதிரி பட்ஜெட் போட்டா, என்னையப் பார்க்க வந்துடறீங்க! மத்த நேரத்துல கண்டுக்கிறதில்லை’’ என்று கலாய்த்தார். ‘உங்களை அடிக்கடி தொல்லை பண்ணவேண்டாமேன்னு பார்த்தோம் சாமி’ என்றோம் கோரஸாய். ‘அட, சும்மா ஒரு கிண்டலுக்குச் சொன்னேம்பா. கோவிச்சுக்காதீங்கப்பா. என்ன செல்லு, இந்த மார்க்கெட் அப்ட்ரெண்டுல எவ்வளவு லாபம் பார்த்தே’ என்று சப்ஜெக்டை மாற்றினார்.

‘ஏதோ ஏறுகிற சந்தையில் அப்பப்ப கொஞ்சம் சம்பாதிச்சேன் சாமி. பெரிசா ஒண்ணும் சம்பாதிக்கலே’ என்று வழிந்தான் செல்.

‘சாமி, பட்ஜெட் எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க?’ என்றேன் ஆவலாய். ‘‘பட்ஜெட் பட்ஜெட் மாதிரி தான் இருந்துச்சு. பட்ஜெட்டுங்கிறது ஒரு எஸ்டிமேட். அதே வார்த்தையை செலவு குறைவான (எக்கனாமிக்கலா இருக்கற) விஷயங்களைக் குறிப்பிடறதுக்கும் ஆங்கிலத்துல உபயோகிக்கிறாங்க. பட்ஜெட் ஹோட்டல், பட்ஜெட் கார் அப்படீன்னு சொல்றதில்லையா? அந்த ரீதியில பார்த்தா பட்ஜெட் பட்ஜெட்தான்’’ என்று சொல்லிவிட்டு, ஹாஹாஹா என்று தனது டிரேட் மார்க்கான வெடிச்சிரிப்பை உதிர்த்தார் சாமி.

மார்க்கெட் ஏறத்தான் வாய்ப்பு அதிகம்!

‘பொதுவா தனிமனுஷனா நாம ஒரு விஷயத்துக்கு பட்ஜெட் போடறப்ப இவ்வளவு குறைவா வரவு இருக்கே? பெரிய தொகையை ஒதுக்க முடியலையேன்னு கவலைப்படுவோம். செலவெல்லாம் பண்ணி முடிச்சப்புறம், அய்யோ பட்ஜெட்டைத் தாண்டி இவ்வளவு செலவாயிடுச்சேன்னு கவலைப்படுவோம். வீடு எப்படியோ அப்படித்தானே நாடும் இருக்கும்’ என்றார் சாமி.

‘கரெக்ட்டா சொன்னீங்க சாமி’ என்றான் செல்.

‘நீங்க பட்ஜெட்டுல முக்கியமுன்னு நினைக்கிறது எதை சாமி?’ என்றேன் நான்.

‘பிஸ்கல் டெஃபிசிட் டார்கெட்டை ரொம்பவுமே சேலஞ்சிங்கா பிக்ஸ் பண்ணியிருக்காங்க. அதை மீட் அவுட் பண்ண முடியுமாங்கிறதுலேதான் என்னுடைய டவுட்டும் இருக்கு. ஆனா, அதுதான் முக்கியமுங்கிறது என்னோட கருத்து’’ என்றார் சாமி.

‘‘என்ன சாமி சொல்றீங்க. 6000-த்துல இருந்த நிஃப்டி 7800-ல இருக்குது. டெபிசிட் டார்கெட்டையெல்லாம் சுலபமா மீட்-அவுட் பண்ணிட முடியாதா என்ன?’’ என்றான் செல். ‘‘பார்றா இவனோட லாஜிக்கை. பட்ஜெட்டால மார்க்கெட் ஏறுதா? இல்லை மார்க்கெட்டால பட்ஜெட் நடக்குதான்னே இவனுக்குத் தெரியல பாரு’’ என்று சிரித்தார்.

‘‘அது இல்லீங்க சாமி. மார்க்கெட் ஏறிடுச்சுன்னாலே சுபிட்சம் வரப்போகுதுன்னுதானே அர்த்தம்’’ என்றான் செல்.

‘‘திர்பார்ப்புதான் வாழ்க்கையே. பட்ஜெட்டுமே ஓர் எதிர்பார்ப்புதானே. இவ்வளவு வருமானம் வரும். இவ்வளவு செலவு பண்ணுவோமுன்னு ஓர் எதிர்பார்ப்போடதானே பட்ஜெட் போடப்படுது. இந்த பட்ஜெட்டுலேயும் அது இருக்கத்தான் செய்யுது. பிஸ்கல் கன்சாலிடேஷன் டார்கெட்டை அடைய முடியுமா, முடியாதா? வருமுன்னு நினைக்கிற வருமானம் வருமா, வராதா? செலவு செய்யப்போறோமுன்னு சொன்ன பணத்தை செலவு செய்ய முடியுமா, முடியாதா? அப்படீங்கறதையெல்லாம் ஒரு யூகம் பண்ணித்தான் அரசாங்கம் களத்துல குதிக்குது. இதுல பிஸ்கல் டெஃபிசிட் இந்த வருஷம் 4.1 சதவிகிதம், அடுத்த வருஷம் 3.6 சதவிகிதமுன்னு கணக்குப் போடறாங்க. ருஷ ஆரம்பத்துல நாங்க உங்களை வந்து பார்த்தப்ப 6300 பாயின்ட்ல நிஃப்டி இருந்துச்சு. வருஷக் கடைசியில நிஃப்டி என்னவா இருக்க வாய்ப்பிருக்குன்னு கேட்டப்ப, எலெக்‌ஷனை மனசுல வச்சுக்கிட்டு கன்ஸர்வேட்டிவ்வா மதிப்பீடு செஞ்சா 6800 வரைக்கும் நிஃப்டி இந்த வருஷக் கடைசில இருக்குமுன்னு சொன்னீங்க.

அதேமாதிரி ஜிடிபி வளர்ச்சி விகிதத்தையும் இந்த வருஷம் 5.5 சதவிகிதமா இருக்குமுன்னும், அடுத்த வருஷம் 6.5 சதவிகிதமுமா இருக்குமுன்னும் எதிர்பார்ப்பு இருக்குது. இதையெல்லாம்விட முக்கியமா இன்ஃப்ளேஷன் குறையும். அதையொட்டி ரிசர்வ் பேங்க் வட்டி விகிதத்தைக் குறைக்கும். அதனால தொழில்கள் பலனடைஞ்சு லாபம் பார்க்கும். லாபத்தை டாக்ஸா கட்டும். அதுபோய் அரசாங்கத்தோட கையில சேர்ந்து பிஸ்கல் டெஃபிசிட் டார்கெட்டை அரசாங்கம் நினைச்ச அளவிலேயே மெயின்டெயின் பண்ண உதவணும்" என்றார் ஒரே மூச்சாய்.

‘‘இவ்வளவு விஷயம் இருக்கா சாமி இதுல’’ என்றேன் நான். ‘‘என்ன புதுசாய் தெரிஞ்சுக்கிற மாதிரி கேட்கிற?’’ என்று ஆச்சர்யப்பட்டார் சாமி.

‘‘சாமி, நீங்க எப்பவுமே சொல்றதைப் போல எல்லாம் நல்லபடியா நடக்குமுன்னே வைச்சுக்கிட்டு யோசிச்சா இந்த பட்ஜெட் எந்தெந்த செக்டாருக்கு நல்லது செய்யும்" என்றான் செல்.

மார்க்கெட் ஏறத்தான் வாய்ப்பு அதிகம்!

‘‘படவா, நைஸா போட்டு வாங்குறான் பாரு. சொல்றேன் கேட்டுக்கோ. ஆட்டோமொபைல், கேப்பிட்டல் கூட்ஸ், சிமென்ட், ஃபைனான்ஷியல், மெட்டல், ஆயில் மற்றும் காஸ், ரியல் எஸ்டேட் துறைக்கு பாஸிட்டிவ்வா இருக்குது. கன்ஸ்யூமர் கூட்ஸ் துறைக்கு கொஞ்சம் நெகட்டிவ்வாத்தான் இருக்குது. ஹெல்த்கேர், மீடியா, டெலிகாம், டெக்னாலஜி துறைகளுக்கு பெரிய அளவுல சாதக/பாதகங்கள் ஏதும் இல்லாமல் இருக்குது’’ என்றார் சாமி.

‘‘என்ன சாமி, இப்படி சட்டுன்னு முடிச்சிட்டீங்க? கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க சாமி’’ என்று கோரிக்கை வைத்தோம்.

‘‘நீங்க முதல்ல விவரமா கேப்பீங்க. விவரங்கள் தந்ததும் என்ன சொல்வே. எந்த ஷேரை வாங்கலாமுன்னு கேட்பே! இதுதானே உன் வாடிக்கை’’ என்று செல்லமாகக் கடிந்துகொண்டார்.

‘‘சுதந்திர இந்தியாவுல போடப்பட்ட மத்த பட்ஜெட்டுகளுக்கும் இந்த பட்ஜெட்டுக்கும் ஒரு வித்தியாசம் இருக்குது. 1990-களில ஒருமுறை நாடு ரொம்ப கஷ்டத்துல இருந்தப்ப போடப்பட்ட பட்ஜெட் ஒண்ணு இதேபோல எதிர்பார்ப்புல போடப்பட்டது. அப்ப பெரிய அளவுல பொருளாதார வளர்ச்சியை நம்ம நாடு கண்டிருக்கல. ஆனா, இப்ப பெரிய அளவுல ஒன்பது சதவிகித அளவுக்கெல்லாம் வளர்ந்த பின்னாடி கொஞ்சகாலத்துக்கு திசை தெரியாம நின்னதுக்கப்புறம் போடப்படுற பட்ஜெட்ங்கறதால இது ரொம்பவுமே எதிர்பார்ப்பைக் கொடுத்துடுச்சுங்கலாம்.

நிறைய மாறுதல்களுக்கு ஆப்ஷன் இருந்தாலும் அரசாங்கம் கொஞ்சம் சேஃப்பாகவே  இருந்துக்க முயற்சி பண்ணிடுச்சு. அரசியல்ல இது ரொம்பவுமே முக்கியமான ஒண்ணு. சும்மா எடுத்தேன் கவிழ்த்தேன்னு எதையும் செஞ்சா புரிஞ்சுக்க வேண்டிய மக்களே புரிஞ்சுக்கமாட்டாங்க.

உதாரணத்துக்கு மானியத்தோட கெட்ட பலன்களெல்லாம் தெரிஞ்சு புரிஞ்சவங்க, மானியம் தேவைப் படாதவங்ககூட டீசல்/காஸ் விலையை ஏத்தினா கொதிச்சுப்போய் பேசுவாங்க. ஏன்னா மானியம் எடுத்தா அவங்க போற எஸ்யூவிக்கு போடற டீசலுக்கும் அதிக காசுல்ல கொடுக்கணும். இதைப் புரிஞ்சுக்கிட்டாத்தான் அரசியல்ல இருக்க முடியும்.

கிரிக்கெட்டுல ரொம்ப சேலஞ்சிங்கா ஆஸ்க்கிங் ரன் ரேட் போற சூழல்ல சேஃப் கேம் ஆடுனா ஆடியன்ஸுக்கு எரிச்சல் வரத்தானே செய்யும். ஆனா அதேசமயம் ரிஸ்க் எடுத்து ஆடி அவுட் ஆனா கோபம் வரும் இல்லியா? அதேதான் நிலைமை. என்னைக்கு அரசாங்கம் சேஃப் கேம் ஆடுதுன்னு தெரிஞ்சுதோ, அன்னைக்கே நாம சுதாரிச்சுக்கணும்’’ என்றார் சாமி.

‘‘என்னவிதமான சுதாரிப்பு சாமி’’ என்றேன்.

‘‘ஸ்டாக் மார்க்கெட்டில் விலைங்கிறது நாளைக்கு நடக்கப்போறதை வச்சு வர்ற ஒரு விஷயம். நாளைக்கு நடக்கப்போறதோ யூகம். யூகம் பண்ணத் தெரிஞ்சா ஜெயிக்கலாம். புரியலையா? கசப்பு மருந்து தருவோமுன்னு சொன்னாங்க. ஆனா, முழுக் கசப்பைக் கொடுக்கலே. மருந்தை பொடி பண்ணி தேனுல குழைச்சு கொடுத்திருக்காங்க. பொருளாதாரம் (ஹெல்த்) முன்னேறலேன்னா, அடுத்து வரப்போறது கடுமையான கசப்பு மருந்துதான்னு புரிஞ்சுகணும். அப்படி கசப்பு மருந்து கொடுத்தா மார்க்கெட் ஏறத்தான் வாய்ப்பு அதிகம்’’ என்றார் சாமி.

‘‘புரிஞ்சுடுச்சு சாமி புரிஞ்சுடுச்சு’’ன்னு குதித்தான் செல். ‘‘என்ன புரிஞ்சுடுச்சு. எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லேன், பார்ப்போம்’’ என்றார்.

 ஆனா, ஆறு மாசக் கடைசியிலேயே 7800 வரைக்கும் போச்சு. இப்ப ஜனங்க இந்த அரசாங்கத்துக்கு தனிமெஜாரிட்டி தந்திருக்காங்க. தனி மெஜாரிட்டி கிடைச்சதால இந்த அரசு தைரியமா கசப்பு மருந்தைக் கொடுக்க வாய்ப்பிருக்குங்கிறதால இந்த 1000 பாயின்ட் அதிகரிப்பு நடந்திருக்குங்கிறது புரிஞ்சுடுச்சு’’ என்றான் செல்.

மார்க்கெட் ஏறத்தான் வாய்ப்பு அதிகம்!

‘‘அடேய், நீ ரொம்பவுமே டெவலப் ஆயிட்ட’’ என்ற சாமி, ‘‘கசப்பு மருந்து கொடுக்குறதுக்கு ஒரு தைரியம் வேணும். சும்மா எப்பப் பார்த்தாலும் கசப்பு மருந்துன்னு நீ வேற வைத்தியரிடம் போயிடக்கூடாது இல்லியா? அதையும் மனசுல வச்சு செயல்படணும். ஆனா தனி மெஜாரிட்டையை மக்கள் கொடுத்ததால, மக்கள் வைத்தியரிடம் எங்க நோயைத் தீர்த்துவையுங்கன்னு ஒப்படைச்சிட்டாங்கன்னு அர்த்தம்.

அதாவது, இன்பேஷன்டா அட்மிட் ஆகிறமாதிரி. இப்ப தைரியமா கசப்பு மருந்தைக் கொடுக்கலாம். ஊசி போடலாம். சர்ஜரி பண்ணலாம். இல்லியா? அதேதான் அரசியல் நிலைமையும். நடவடிக்கைகள் சாத்தியப்படும்போல் இருப்பதாலேயே 7800. எடுக்கப்பட்டுவிட்டால் எவ்வளவு போகும் அப்படீங்கிறதைப் பொறுத்திருந்துதான் பார்க்கணும்’’ என்றார் சாமி.

‘‘சாமி, செக்டார்’’ என்று மீண்டும் நினைவு கூர்ந்தேன்.

‘‘ஆட்டோமொபைல் துறையில எக்ஸைஸ் டூட்டி கன்செஷன் டிசம்பர் 2014 வரை நீட்டிக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல விஷயம்.

மின்சார டிஸ்ட்ரிப்யூஷன் கட்டுமானத்துக்்கு அரசாங்கம் செலவுபண்ணும் அப்படீங்கிறது கேப்பிட்டல் கூட்ஸ் துறைக்கு ஒரு நல்ல விஷயம்.

இன்ப்ராஸ்ட்ரக்சருக்கு பணம் கிடைக்க வழி பண்ணியது, அரசாங்கமே இன்ஃப்ராஸ்ட்சருக்கு கணிசமா செலவு பண்ணும் அப்படீங்கிறது சிமென்ட் துறைக்கு ஒரு நல்ல விஷயம். இனஃ்ப்ராஸ்ட்ரக்சர் பாண்டின் மூலம் திரட்டப்படும் தொகைக்கு சிஆர்ஆர், எஸ்எல்ஆர், பிரையாரிட்டி செக்டார் லெண்டிங் சட்டம் கிடையாதுங்கிறது ஃபைனான்ஷியல் துறைக்கும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறைக்கும் நல்ல விஷயம்.

மானியத்தைத் தருகிறோமுன்னும், காஸ் பைப் லைன் இன்ஃப்ராஸ்ட்ரக்சரை இரட்டிப்பாக்கப் போறோமுன்னு சொன்னதும் ஆயில் மற்றும் எரிவாயுத் துறைக்கு நல்ல விஷயம். ஆர்இஐடி வரப்போறது ரியல் எஸ்டேட் துறைக்கு நல்ல விஷயம். இப்படி பல நல்ல விஷயங்களை பட்ஜெட் கொண்டிருக்குதே’’ என்றார்.

‘என்ன வந்து என்ன சாமி, நான் நிறைய லிக்விட் பண்டிலேயே பணம் போட்டிருந்தேன். இப்ப நிலைமை தலைகீழா மாறிடுச்சே’’ என்று புலம்பினேன்.

‘‘அடேய், அரசாங்க விஷயத்துல இப்படி ஆர்பிட்ரேஜ் பண்ண நினைக்கிறப்பவே இந்தமாதிரியான சிக்கலும் வந்துடுமுங்கிறதை மனசுல வச்சுகிட்டுதான் செயல்படணும்’’ என்றார் சாமி.

‘‘சரி சாமி, என்ன பங்குகளை ட்ராக் செய்யலாமுன்னு சொல்லுங்க’’ என்றான் செல்லு.

‘‘ரொம்பத்தான் முழிச்சுக்கிட்டேடா நீ. டிப்ஸ் சொல்லுங்கன்னு நேரடியா கேட்காமே ட்ராக் பண்ண வேண்டிய பங்குகளுன்னு டீசன்டா கேட்க ஆரம்பிச்சிட்டியே’’ என்றார் சாமி. ‘‘ஃபைனான்ஷியல் செக்டாருல ஐடிஎஃப்சி, மேக்ஸ் இந்தியா, ரிலையன்ஸ ்கேப்பிட்டல், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்ற ஸ்டாக்குகளை ட்ராக் பண்ணலாம்.

இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கு உதவுர பிஹெச்இஎல், எல் அண்ட் டி போன்ற ஸ்டாக்குகளையும், ஹவுஸிங் செக்டாருல பிரஸ்டீஜ், டிஎல்எஃப், பிரிகேட், போனிக்ஸ் போன்ற ஸ்டாக்குகளையும் ஃபாலோ பண்ணலாம்’’ என்றார் சாமி.

‘‘சாமி என்னை மாதிரி பயந்தவங்களுக்குன்னு நாலு பங்குகளைச் சொல்லுங்க’’ என்றேன் நான். ‘‘பயந்தா பங்குச் சந்தைப் பக்கமே இனிமே வர முடியாது. பயத்துக்கு மருந்து சொல்றேன். நாலு வருஷ கால முதலீட்டுக்கு சன் பார்மா, லூபின், டாக்டர் ரெட்டீஸ் போன்ற மருந்து கம்பெனிகளை ட்ராக் பண்ணி விலை கணிசமா குறையும்போது கொஞ்சமா முதலீடு பண்ணு. பயத்துக்கு மருந்து கிடைக்குதோ இல்லையோ, நீண்ட காலத்து அடிப்படையில கொஞ்சம் லாபமாவது பார்ப்பே’’ என்று முடித்தார் சாமி.

வாட்சைப் பார்த்தால் மதியம் மணி 1.30 ஆகியிருந்தது. ‘‘பசங்களா, உங்களுக்காக பிரியாணி பண்ணச் சொல்லியிருக்கிறேன். வாங்க ஒரு கைபார்ப்போம்’’ என்று நம்மை சாப்பிட அழைத்துக்கொண்டு போனார் சாமி.