Published:Updated:

பட்ஜெட் 2014-15 முழு அலசல் மீட்டிங்

ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸாகாத பட்ஜெட்! ச.ஸ்ரீராம்

நாணயம் விகடனும் குட்வில் கமாடிட்டி நிறுவனமும் இணைந்து  நடத்திய 'பட்ஜெட் 2014’ சிறப்புக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் ஆபீசர்ஸ் அசோசியேஷன் ஹாலில் விமரிசையாக நடந்தது. இந்தக் கூட்டத்தில் சர்வதேச பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன், கோயம்புத்தூர் கேப்பிட்டல் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மன்

டி.பாலசுந்தரம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் எக்கனாமெட்ரிக்ஸ் துறை பேராசிரியர் இராம.சீனுவாசன் ஆகியோர் பட்ஜெட் பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் சொன்ன கருத்துக்களை வாசகர்களுக்கு இங்கே தொகுத்துத் தருகிறோம்.

பட்ஜெட் 2014-15 முழு அலசல் மீட்டிங்

''அரசிடம் புதிய ஐடியாக்கள் இல்லை!''

பேராசிரியர் இராம.சீனுவாசன்  

''மானியங்களுக்கான தொகை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதால், அது நமது வருவாயைப் பாதிக்கிறது. ஆனால், இந்த மானியம் உரிய மக்களுக்கு சரியாகப்போய்ச் சேருகிறதா என்பது கேள்விக்குறிதான்.  

அடுத்து முக்கியமான விஷயம், வரிச் சலுகை. இதனால் அரசு வருமானம்  பெரிய அளவில் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு நமது நிதிப் பற்றாக்குறை சுமார் ரூ.5.72 லட்சம் கோடி இருந்தது. அதேசமயம் வரிவிலக்கு என்பது சுமார் ரூ.5.25 லட்சம் கோடியாக இருந்தது.

அதாவது, எந்த ஒரு வரிச் சலுகையும் நாம் தராமலே இருந்திருந்தால், நாம் வளர்ந்த நாடுகளைப்போல பற்றாக்குறையே இல்லாமல் இருந்திருப்போம். ஆனால், உணவுப்பொருட்கள், பெட்ரோலிய பொருட்களுக்கு நம் அரசாங்கம் தந்திருக்கும் மானியத்தையும்  வரிச் சலுகையையும் பார்த்தால், அந்தப் பொருட்களின் விலை குறைந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.  மானியமும் வரிச் சலுகைகளும் பொருளாதாரத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்து கிறது என்பதை நாம் ஆராய வேண்டும். ஒவ்வொரு துறையிலும் இதை ஆராய்ந்து பார்ப்பதினால் மட்டுமே இனிவரும் காலத்திலாவது முக்கியமான மாற்றங்களை நம்மால் கொண்டுவர முடியும்.  

பட்ஜெட் 2014-15 முழு அலசல் மீட்டிங்

இந்த பட்ஜெட் காங்கிரஸ் ஆட்சியில் போட்ட  பட்ஜெட்டின் தொடர்ச்சிதான்.  அதோடு ஆட்சிக்கு வந்து ஆறு வாரங்களே ஆகியுள்ளதால், இந்தப் புதிய அரசிடம் புதிய ஐடியாக்கள் எதுவும் இல்லை; புதிய சிந்தனைகள் எதுவும் இல்லை. இது மாற வேண்டும்.

இந்த பட்ஜெட் தாக்கலின் ஆரம்பத்திலேயே, பொது செலவுகள் மேலாண்மை ஆணையம் அமைத்து நாட்டின் செலவுகள் கட்டுப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார். இந்த விஷயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தினால் எதிர்காலத்தில் பெரிய மாற்றங்கள் வரும்.

ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதியைவிட அந்தத் திட்டத்தினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறையில் உற்பத்தித் திறன் உயர்த்தப்பட வேண்டும். மாநிலங்கள் தற்போது உள்ள நிலையைவிட பத்து மடங்கு அதிகமாகச் செயல்பட்டால்தான், இந்தப் பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியும். அவசரமாகப் போடப்பட்ட பட்ஜெட் இது. வரும் காலங்களில் சரியான பாதையில் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.''

''முதலீட்டாளர்களுக்கு பாதிப்பில்லை!''

டி.பாலசுந்தரம்

'' இந்த பட்ஜெட்டினால் கேப்பிட்டல் மார்க்கெட்டில் எந்த அளவுக்கு தாக்கம் இருக்கும் என்று பார்க்க வேண்டும். மூன்று விஷயங்களில் அதன் தாக்கம் இருக்கும். முதலாவது,  நேரடியாக கேப்பிட்டல் மார்க்கெட்டில் ஏற்படும் தாக்கம். இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை, பெருமளவில் எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை. 115 ளி , மற்றும் 115 ஸி  சட்டத் திருத்தங்களின்படி கம்பெனிகளுக்கு டிவிடெண்ட் டிஸ்ட்ரிப்யூஷன் டாக்ஸை அதிகரித்துள்ளனர். மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு இணையாக கம்பெனி களுக்கும் டிவிடெண்ட் டிஸ்ட்ரிப்யூஷன் டாக்ஸை அதிகரித்துள்ளனர். இதனால் முதலீட்டாளர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை.

தற்போது கமாடிட்டி ட்ரான்ஸாக்‌ஷன் டாக்ஸ் கட்டுபவர்களுக்கு அவர்களது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் அதனை ஸ்பெகுலேட்டிவ் நஷ்டமாக தான் கருதி வந்தார்கள் தற்போது அது தொழிலில் ஏற்பட்டுள்ள நஷ்டமாக கருதப்படும் என அறிவித்துள்ளனர். இது கமாடிட்டி டிரேடிங் செய்பவர் களுக்கு பயனளிக்கும் விதமாக அமையும்.

பட்ஜெட் 2014-15 முழு அலசல் மீட்டிங்

2017ம் ஆண்டுக்குள் மின் உற்பத்தியை துவங்கும் நிறுவனங்களுக்கு 10 ஆண்டு களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இது சாத்தியமற்றது. ஒரு பவர் பிளான்ட்டை நிறுவவே 5  6  ஆண்டுகள் ஆகும். அதற்கு அனுமதி வழங்க இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். இப்படியிருக்கையில்,  இன்னும்  மூன்று ஆண்டுகளுக்குள் மின் உற்பத்தியைத் துவங்க வேண்டும் என்றால் எப்படி முடியும்?

அடுத்ததாக, கடன் ஃபண்டுகளுக்கான வரி விகிதம் அதிகமாகியுள்ளது. ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்த இருப்பதாகக் கூறியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான்.   புதிதாக ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் கொண்டு வந்துள்ளனர். இது நல்ல விஷயம் என்றாலும், எத்தனை வருடம் கழித்து இது அமலுக்கு வரும் என்று தெரிய வில்லை. பட்டியலிடப்பட்ட நிறுவனங்க ளுக்கான புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.

மூன்றாவதாக, உள்கட்டமைப்புத் துறைகள் வளர்ச்சியடையும் என்பதால் அதில் கவனம் செலுத்தலாம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. விவசாயம் சார்ந்த தொழில் முன்னேற்றத்துக்கு என 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள். இந்தத் தொகை தமிழ்நாட்டுக்கு அல்ல, எங்கள் ஊரான கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு கூட போதாது.  ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டாகவே இதைச் சொல்ல வேண்டும்.

ஏறக்குறைய 27 திட்டங்களுக்கு 100 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது. இதுதவிர, 30 கோடி ரூபாய் என்கிற அளவிலெல்லாம் இந்த பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித் திருக்கிறார் நிதி அமைச்சர். இது அரசின் திட்டமிடாதச் செயலையே காட்டுகிறது.''

''ஒழுங்காகத் திட்டமிடாத பட்ஜெட்!''

டாக்டர் அனந்த நாகேஸ்வரன்.

''இந்த பட்ஜெட்டின் மூலம் மிகப் பெரிய மாற்றத்தை நான் எதிர்பார்த்தேன். காங்கிரஸ் கலாசாரம் இல்லாத ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் முன்பே சொன்னார். காங்கிரஸ் கலாசாரம் என்றால் என்ன? ஐந்து விஷயங்களைச் சொல்லலாம்.  

முதலாவது, உரிமைகளைப் பற்றி மட்டும் பேசுவோம்; கடமைகளைப் பற்றி பேச மாட்டோம். இரண்டாவது, உழைக்க மாட்டோம்; ஆனால், எல்லா நன்மைகளையும் அனுபவிப்போம். மூன்றாவது, உற்பத்தி பெருக்கத்துக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம். ஆனால், உற்பத்தியாவதை விநியோகம் மட்டும் செய்வோம். நான்காவதாக, உண்மை பற்றி கவலைபடாமல், கொள்கை பற்றி மட்டும் கவலைப்படு வோம். ஐந்தாவதாக, நிறைய  உறுதிமொழி தருவோம்; அதைக் குறைந்த அளவி லேயே நிறைவேற்றுவோம்.

இதற்கொரு உதாரணம் சொல்கிறேன். 1994ல் கனடாவின் நிதி அமைச்சராக இருந்தார் பால் மார்ட்டின். இவர் பதவியேற்றபோது கனடா வாங்கும் கடனுக்கு 9% வட்டி தரவேண்டி  இருந்தது. ஆனால், அமெரிக்கா வாங்கும் கடனுக்கு 6% வட்டி தந்தால் போதும் என்று இருந்தது. இந்த நிலையை மாற்றி, அமெரிக்காவுக்கு சமமாக கனடாவின் வட்டியையும் குறைக்க அவர் முடிவு செய்தார். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த நாடு அடையும் வளர்ச்சி இலக்கை குறைந்த அளவிலேயே நிர்ணயம் செய்வார். ஆனால், நிர்ணயம் செய்த இலக்கைவிட அதிக அளவில் வளர்ச்சியைக் காண்பிப்பார். இதனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே கனடாவின் பொருளாதார வளர்ச்சி பெருகி, அமெரிக்கா தருகிற அதே வட்டி விகிதத்தை கனடாவிலும் தருகிற அளவுக்கு உயர்த்திக் காட்டினார். ஆனால், நம் நிதி அமைச்சர்கள் எட்ட முடியாத இலக்கை எட்டுவோம் என்பார்கள். பிற்பாடு அதை எட்ட முடியாதபோது எண்களின் விளையாட்டில் இறங்கி, ஏதாவது ஜாலத்தைக் காட்டி, எல்லோரையும் ஏமாற்றப் பார்ப்பார்கள்.

பட்ஜெட் 2014-15 முழு அலசல் மீட்டிங்

மத்திய நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்முன், ஒரு விஷயத்தைச் செய்திருக்க வேண்டும். முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் விட்டுச்சென்ற நிதிப் பற்றாக்குறை 4.6% அல்ல. அது 5லிருந்து 6% வரை இருக்கலாம். இதிலிருந்துதான் நாம் அடைய வாய்ப்பி ருப்பதற்கான இலக்கு என்ன என்பதைச் சொல்லியிருந்தால், யதார்த்தமான நிலையை உணர்ந்து போட்ட பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருந்திருக்கும். ஆனால், நிதி அமைச்சரோ அப்படி செய்யாமல், 4.6லிருந்து 4.1ஆக குறைப்பேன் என்று சொல்லியிருக்கிறார். இந்த இலக்கை அவர் எப்படி அடைவார் என்று தெரியவில்லை.

அரசுப் பங்குகளை விற்பது தொடர்பான விஷயத்திலும் இதேதான். ஏறக்குறைய 68,000 கோடி ரூபாய்க்கு அரசுப் பங்குகளை விற்க முடிவு செய்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் நம்மால் ஓராண்டு காலத்தில் அதிகபட்சமாக விற்க முடிந்தது 38,000 கோடி ரூபாய்க்கு மட்டுமே. அப்போது உலகப் பொருளாதாரம் மிகச் சிறந்த நிலையில் இருந்தது. ஆனால், இன்றைக்கு உலகம் முழுக்க பல பிரச்னைகள். இந்த நிலையில் நம்மால் 68,000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுப் பங்குகளை விற்க முடியுமா என்பதே கேள்விக்குறிதான்.

பருவமழை பொய்த்திருக்கும் இன்றைய நிலையில் வரி மூலமான வருவாய் 27% அதிகரிக்கும் என மத்திய நிதி அமைச்சர் சொல்வது எப்படி என்று தெரியவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிடைத்த சராசரியை வைத்தே இதை கணக்கிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது.  ஆக, இந்த பட்ஜெட்டுக்கு நான் 5க்கு 2.8 என்ற மதிப்பெண்தான் அளிப்பேன். அடுத்த வருடம் பிப்ரவரியில் புதிய பாதைகளை, இலக்குகளை நிர்ணயிக்காமல் இதேபோல் இருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.''

கூட்டம் முடிந்தபின் வாசகர்களின் கேள்விகளுக்கு சிறப்புரையாளர்கள் தெளிவான விளக்கம் தந்தனர்.

படங்கள்: எம்.உசேன்