நடப்பு
Published:Updated:

காலேஜுக்குள் சூப்பர் மார்க்கெட் !

கலக்கல் பிசினஸ் முயற்சி...ம.சுந்தர்ராஜ் படங்கள்­: தி.கௌதீஸ்

கரூர் மாவட்டம் தாந்தோன்றி மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பண்டகசாலை நடத்தி வருகிறார்கள் என்கிற செய்தி நம் காதுக்கு வர, ஆச்சர்யத்துடன் அந்தக் கல்லூரிக்கு விசிட் அடித்தோம்.

 வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், மாணவர்களுக்குத் தேவையான பொருட்கள் என எல்லாவற்றையும் வைத்து கல்லூரிக்குள்ளேயே கடையை நடத்துகிறார்கள்.
நாம் சென்றது கல்லூரி முடியும் நேரம் என்பதால், மாணவர்கள் தங்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை பரபரப்பாக வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

கல்லூரிக்குள் பண்டகசாலை!

அரசு கலைக் கல்லூரி கூட்டுறவு பண்டகசாலையின் செயலாளரும், கல்லூரி பேராசிரியருமான சுல்தான் இப்ராஹிமிடம் இந்தக் கடை செயல்படும் விதம் குறித்துப் பேசினோம்.
 
“அரசு கூட்டுறவுத் துறையின் அறிவுரையின்பேரில் தமிழகம் முழுவதும்  33 அரசு  கலைக் கல்லூரிகளில் பண்டகசாலைகள் தொடங்கப்பட்டது. அவற்றில் இந்தப் பண்டகசாலையும் ஒன்று.
கல்லூரியின் அலுவலகம் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டுக்கு தேவையான உபகரணங்கள் முதற்கொண்டு, வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வரை விற்பனை செய்வதே இந்தப் பண்டக சாலையின் நோக்கம். கல்லூரி ஆசிரியர்களே இதை நிர்வகிக்க, கல்லூரியின் ஆசிரியர்களும், அலுவலகர்களும் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

காலேஜுக்குள் சூப்பர் மார்க்கெட் !

தள்ளுபடியுடன் பொருட்கள் விற்பனை!

தற்போது 130 ஆசிரியர்கள் ஆரம்பக் கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்தி இதில் உறுப்பினராக இருக்கிறார்கள். இந்தக் கல்லூரியைச் சார்ந்தவர்களே இந்தப் பண்டகசாலையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக 3% தள்ளுபடியுடன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாணவர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு 15% வரை தள்ளுபடி தரப்படுகிறது.

ஆசிரியர்களும், அலுவலர்களும் கொள்முதல் செய்யும் தொகையை அவர்களின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடித்துக் கொள்வதால் அவர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைக்கிறது. வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதால் நல்ல ஆதரவும் அவர்கள் மத்தியிலிருந்து கிடைக்கிறது” என்றவரிடம் வெற்றிக்கான ரகசியத்தைக் கேட்டோம்.

வெற்றிக்கான ரகசியம்!

“ஆறு சதவிகிதம் தள்ளுபடியில் முகவர்களிடமிருந்து பொருட்களை வாங்கி மாணவர்களுக்கும், கல்லூரிப் பணியாளர்களுக்கும் விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் இந்தப் பண்டகசாலையின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுக் கிடைக்கும் லாபத்திலிருந்து உறுப்பினர்களுக்கு டிவிடெண்ட் தரப்படுகிறது.

காலேஜுக்குள் சூப்பர் மார்க்கெட் !

அதுமட்டுமில்லாமல் உறுப்பினர்கள் வாங்கும் பொருட்களின் அடிப்படையில் போனஸும் வழங்கப்படுகிறது. இதுபோக அவ்வப்போது அரசுக்கு தேவையான கட்டட நிதி, வெள்ள நிவாரண நிதியும் இந்தப் பண்டகசாலை மூலம் வழங்கப்படுகிறது” என்று சந்தோஷமாகச் சொன்னார் சுல்தான் இப்ராஹிம்.

ஆதரவு தரும் மாணவர்கள்!

விறுவிறுப்பான விற்பனைக்கு மத்தியில் இருந்த விற்பனையாளர் செந்தில்குமரனிடம் பேச்சு கொடுத்தோம். “இந்தக் கல்லூரியில் முதுநிலை படிப்பு படிக்கும்போதே பண்டகசாலையில் பகுதிநேரமாக வேலைக்குச் சேர்ந்தேன். தற்போதும்  பண்டகசாலையில் பணிபுரிந்து கொண்டே இதே கல்லூரியில் ஆராய்ச்சிப் படிப்பையும் மேற்கொண்டு வருகிறேன்.

 ஏறிக் கிடக்கும் விலைவாசிக்கு மத்தியில் மலிவான விலைக்கு பொருட்கள் இங்கு கிடைப்பதால் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. தினசரி சுமார் 2,000 மாணவர்கள்  இந்தப்  பண்டக சாலையைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் விற்பனை அமோகம்தான்’’ என்றார்.

காலேஜுக்குள் சூப்பர் மார்க்கெட் !

இந்தப் பண்டகசாலையின் முக்கியமான பெருமை என்னவெனில், மற்ற அரசு கலைக் கல்லூரி பணியாளர் மற்றும் மாணவர் கூட்டுறவு பண்டகசாலைகள் போதிய லாபம் ஈட்டாததாலும், நஷ்டத்தோடு செயல்பட்டதாலும் அவற்றின் செயல்பாட்டை நிறுத்திவைத்துவிட்டது தமிழக அரசாங்கம்.

 ஆனால், இந்தக் கல்லூரியில் உள்ள பண்டகசாலை மட்டும் இன்றும் நல்ல லாபத்துடன் கல்லா கட்டி வருகிறது. மூன்று முறை மாநில அளவிலும், பலமுறை மாவட்ட அளவிலும் பல விருதுகளைப் பெற்றுள்ளது இந்த பண்டகசாலை.

படிக்கும் இடத்திலும் ஒரு பிசினஸை வெற்றிகரமாக நடத்தி, சபாஷ்... இவர்களின்  பிசினஸ் முயற்சி என நம்மை புகழவைக்கும் இந்த பண்டக சாலையை ஒவ்வொரு  கல்லூரியிலும்  முனைப்புடன் அமைக்கலாமே!