நடப்பு
Published:Updated:

ஏறுமுகத்தில் எண்ணூர் துறைமுகம்!

ஒரு ரவுண்ட்-அப்நீரை.மகேந்திரன்படங்கள்: வீ.நாகமணி

ஒரு துறைமுகம் எப்படி இருக்கும், என்னென்ன வேலைகள் நடக்கும், சரக்கு போக்குவரத்துக்கு அதன் பங்கு என்ன, பொருளாதார முன்னேற்றத்துக்கு எந்தவகையில் உறுதுணையாக இருக்கும்? இப்படி பல கேள்விகள் நமக்கு வருவது இயல்பானதே. இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு சென்றோம்.  வேகமான வளர்ச்சியை  கண்டுவருகிறது அந்தத் துறைமுகம்.  

துறைமுகங்கள் பலவகை!

இந்தியாவின் கடற்கரை பரப்பு மொத்தம் 7,517 கிலோ மீட்டர். இதில் தமிழக கடலோர பகுதி சுமார் 900 கிலோ மீட்டர். பொதுவாக, நமது கடலோர பரப்புகளில் மீன்பிடி துறைமுகங்கள் பல இருக்கின்றன. வர்த்தக ரீதியிலான துறைமுகங்களின் எண்ணிக்கை குறைவு. குறிப்பாக, வர்த்தகரீதியிலான துறைமுகங்களுக்கு சாலை போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். அந்தவகையில் தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து தூத்துக்குடி துறைமுகம் வர்த்தகரீதியாக இயங்கி வருகிறது.

பழைமையான சென்னை துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளும் நெருக்கடி காரணமாக இன்னொரு வர்த்தக முனையம் தொடங்க வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டதே  எண்ணூர் துறைமுகம்.

ஏறுமுகத்தில் எண்ணூர் துறைமுகம்!

2,000 ஏக்கர், 67 மில்லியன் டன்..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 12-வது புதிய துறைமுகம் இது. சுமார் ரூ.1,056 கோடி முதலீட்டில் 2001-வது ஆண்டு துவங்கப்பட்ட இந்தத் துறைமுகம், 2004-ல் ரூ.1,400 கோடி முதலீட்டில் மேலும் 4 புதிய முனையங்கள் பப்ளிக் பிரைவேட் கூட்டு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன.

சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்துள்ள இந்தத் துறைமுகம், தனது 12-வது நிதியாண்டின் இறுதியில் ஓர் ஆண்டுக்கு சுமார் 67 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டது. கடந்த ஆண்டு 28 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. 

இந்த துறைமுகத்தில் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 130 பேர்தான். துறைமுகத்துக்குத் தேவை யான உள்கட்டமைப்பு வேலைகளை மேற்கொள்வது மட்டும்தான் துறைமுக நிர்வாகத்தின் பணி.

தற்சமயம் 6 சரக்கு கையாளும் முனையங்கள் உள்ளன. இவற்றில் மூன்று சரக்கு கையாளும் முனையத்தை எண்ணுர் துறைமுகம் அமைத்துள்ளது. மேலும், மூன்று முனையங்கள் குத்தகை அடிப்படையில் தனியாரிடம் விடப்பட் டுள்ளது. இதற்கு ‘லேண்ட்லார்டு சிஸ்டம்’ என்கிறார்கள்.  இந்தியாவில் இந்தவகையில் அமைந்த முதல் துறைமுகம் இதுதான்.

ஏறுமுகத்தில் எண்ணூர் துறைமுகம்!

 நிலக்கரி கையாளும் முனையம்!

எண்ணூர் துறைமுகம் பிரதானமாக தமிழ்நாட்டின் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரியைக் கையாளு கிறது. தற்போது மூன்று முனையங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி நடக்கிறது. இதில் இரண்டு முனையங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஒதுக்்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மின்சார வாரியமே நேரடியாக இறக்குமதி வேலைகளைக் கையாளுகிறது.
 
கப்பல்களிலிருந்து இறக்கப்படும் நிலக்கரி அங்கிருந்து கன்வேயர் பெல்ட் மூலம் வடசென்னை அனல்மின் நிலைய சேகரிப்பு கிடங்குக்கு சென்று அங்கிருந்து மேட்டூர் மற்றும் எண்ணூர் அனல்மின் நிலையங்களுக்கு ரயில் மூலம் சென்று சேருகிறது. மணிக்கு 2,000 டன் நிலக்கரியை கப்பலில் இருந்து  எடுக்கும் திறன் கொண்டது.

நிலக்கரியைக் கையாள இரண்டாவது கட்டமாக அமைக்கப்பட்ட மூன்றாவது பெர்த், செட்டிநாடு இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு 30 வருட  குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தற்போது நிலக்கரி கையாளும்  நான்காவது முனையத் துக்கான திட்ட வேலைகள் நடந்து வருகிறது. இதை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்காக துறைமுக நிர்வாகமே கட்டிக்கொடுக்க உள்ளது.

ஏறுமுகத்தில் எண்ணூர் துறைமுகம்!

எல்பிஜி கையாளும் முனையம்!

மங்களூரில் இருந்து சாலை வழியாக ஐஓசில் கிடங்குக்குக் கொண்டுவந்து அங்கிருந்து சில்லறை விநியோகத்துக்குச் சென்று கொண்டிருந்த லிக்விட் பெட்ரோலியம் காஸ் எண்ணூர் துறைமுகம் வந்தபிறகு நேரடியாக கப்பல் மூலம் இங்கு இறக்குமதி செய்யப் படுகிறது. இந்த முனையத்தை எண்ணூர் டேங்க் டெர்மினல் நிறுவனம் கையாளுகிறது. 2012-13-ல் 1.22 மில்லியன் டன்னும், 2013-14-ல் 2.43 மில்லியன் டன் பெட்ரோலிய பொருட்களும் கையாண் டுள்ளது. பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ராட்சத குழாய்கள் மூலம் லிக்விட் பெட்ரோலியம் காஸ் சேமிப்புக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. இன்றைக்கு சென்னை முழுக்க லிக்விட் பெட்ரோலியம் தட்டுப்பாடின்றி கிடைக்க முக்கியமான காரணம், இந்த முனையம்தான்!

மல்டி கார்கோ முனையம்!

மல்டி கார்கோ முனையம் என்பது பலவகை கப்பல்களும் வந்து நிற்பதற்கான இடம். இந்த பெர்த்தின் மூலம்தான் ஃபோர்டு, ஹூண்டாய் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென் இந்தியாவை மையமாகக் கொண்ட இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் 70 சதவிகித கார்கள் இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப் படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் இங்கிருந்து 2 லட்சம் கார்கள் ஏற்றுமதி ஆனது. ஏற்றுமதிக்கான வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஒரேசமயத்தில் பத்தாயிரம் கார்களை நிறுத்திவைக்க இடவசதி உள்ளது.

ஏறுமுகத்தில் எண்ணூர் துறைமுகம்!

சிறப்புப் பொருளாதார மண்டலம்!

இந்தத் துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டமாக நான்காவது நிலக்கரி கையாளும் முனையமும், இரண்டாவது மல்டி கார்கோ முனையமும், கன்டெய்னர் முனையமும் அமைக்க ஒப்பந்தங்கள் முடிந்துள்ளன. இந்திய துறைமுகங்களில் இந்தத் துறைமுகம் மினி ரத்னா என்கிற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. தவிர, விரிவாக்கம் செய்யப்படவுள்ள 600 ஏக்கரை சிறப்புப் பொருளாதார மண்டலமாக உருவாக்க நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது.

முதலீடுகள்!

‘‘கன்டெய்னர் முனையம் அமைக்க அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். இதன்படி ரூ.1,270 கோடி  இங்கு முதலீடு செய்யப்பட உள்ளது. ஆண்டுக்கு 1.40 மில்லியன் பெட்டகங்கள் கையாளும் வசதி கொண்ட இந்த முனையம் எண்ணூர் துறைமுகத்தின் அடுத்தகட்டம். கன்டெய்னர் துறைமுகம் அமையும்பட்சத்தில் சிறு உற்பத்தியாளர்களும் எங்களது துறைமுகத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தற்போது இதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது. 2016-17ம்  ஆண்டிலிருந்து இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார் துறைமுக பொதுமேலாளர் (தொழில் உத்திகள் மற்றும் வளர்ச்சி) ஆர்.செந்தில்குமார்.

பெருகும் வருமானம்!

‘‘கடந்த ஆண்டு மட்டும் ரூ.501.93 கோடி அளவுக்கு நிகர வருமானம் ஈட்டியுள்ளது. 2013-14 ஆண்டின் முதலீட்டு செலவு களாக ரூ.586.77 கோடி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு செலவிடப்பட்டுள்ளது. தவிர, டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள் வெளியிட வும் செய்திருக்கிறோம்’’ என்றார் துறைமுகத் திட்ட மேலாளர் நாகராஜன்.

துறைமுகங்கள் ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். அந்தவகையில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது. மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள சென்னை - பெங்களூரு தொழிற்பாதை திட்டம் எண்ணூர் துறைமுக வளர்ச்சியின் இலக்கான 150 மில்லியன் டன்களை கையாளுவதை மையமாக வைத்துதான் திட்டமிடப்பட்டுள்ளது. இந்்த இலக்கை எண்ணூர் துறைமுகம் எட்டும்பட்சத்தில் தொழில் வாய்ப்புகள் இன்னும் பெருகும். இந்த வாய்ப்பினை தமிழக அரசாங்கம் நன்றாக பயன்படுத்திக்கொள்வதன் மூலம் தமிழகத்தில் இன்னும் அதிக வேலைவாய்ப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் கொண்டுவர முடியும். செய்யுமா நம் தமிழக அரசாங்கம்?