நடப்பு
Published:Updated:

ரியல் எஸ்டேட் சதுரங்க வேட்டை...

உஷாரான முதலீட்டாளர்கள்!சி.சரவணன் நீரை.மகேந்திரன்

நாணயம் விகடன் ஆகஸ்ட் 24, 2014 இதழில் வெளியான ‘ரியல் எஸ்டேட் சதுரங்க வேட்டை’ என்ற அட்டைப்பட கட்டுரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ரியல் எஸ்டேட் மோசடியை அம்பலமாக்கி இருந்தோம். 100 மனைகளைப் போட்டுவிட்டு, அதை 1000 பேரிடம் காட்டி பணம் வாங்கி மோசடி செய்திருப்பதை விலாவாரியாக விவரித்து சொல்லியிருந்தோம்.

 இந்த நூதன மோசடியால் ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் மற்றும் பொதுமக்கள் எப்படி ஏமாந்திருக் கிறார்கள் என்பதை விளக்கமாகச் சொல்லியிருந்தோம். தவணைமுறையில் மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களையும் டிப்ஸ் களாகத் தந்திருந்தோம்.

இந்த கவர் ஸ்டோரி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் மக்களை மிகவும் உஷார்படுத்தி இருக்கிறது. நாணயம் விகடன் வெளியான அன்றே வாங்கிப் படித்த பலரும், நம்மூரில் நமக்குத் தெரியாமலே இத்தனை பெரிய மோசடி நடந்திருக்கிறதா என்று ஆச்சர்யப்பட்டார்கள்.

ரியல் எஸ்டேட் சதுரங்க வேட்டை...

‘காஞ்சிபுரத்தில் நடக்கும் பித்தலாட் டத்தைத் தோலுரித்து காட்டிய நாணயம் விகடனுக்கு நன்றி’ என்று மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி காஞ்சிபுரம் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறது. நாணயம் விகடனில் வந்த கட்டுரையைப் படித்துப்பார்த்து வெலவெலத்துப் போயிருந்த மோசடிப் பேர்வழிகளும் ஏஜென்ட்டுகளும், இந்த போஸ்டரைப் பார்த்துவிட்டு மேலும் கலங்கிப்போயிருக்கிறார்கள்.

என்றாலும், இந்த மோசடியைச் செய்த சதீஷை கண்டுபிடிக்கும் வேலை யில் எந்த முன்னேற்றமும் இல்லை. மக்கள் கட்டிய பணம் திரும்பக் கிடைக்குமா என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரையைப் படித்த கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களின் புறநகர் களில் தவணைத் திட்டத்தில் பணம் கட்டிவருபவர்கள் எச்சரிக்கையாகச் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும் நாணயம் விகடனுக்கு கடிதம், போன், இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்து வருகிறார்கள்.

மோசடிப் பேர்வழிகள் மீது தமிழக அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் இதுபோன்ற ஏமாற்றுத் திட்டங்களிலிருந்து சற்று விலகியே இருக்க வேண்டும் என்பதே நாணயம் விகடனின் வேண்டுகோள்!

தொடரும் பிஏசிஎல் மோசடி...

கலக்கத்தில் கிருஷ்ணகிரி!

ஃபாலோ-அப்


கடந்த மார்ச் 23-ம் தேதியிட்ட இதழில் பிஏசிஎல் நிறுவனம் குறித்து எழுதியிருந்தோம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது எந்த அளவுக்கு ரிஸ்க்கானது என்பதையும், முதலீட்டாளர்களின் பணத்தைத் திரும்ப வாங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்தும் எழுதியிருந்தோம்.

ஆனால், அந்த இதழ் வெளியான அன்றே ஈரோடு, பழனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, சேலம், கிருஷ்ணகிரி என பல ஊர்களில் மொத்தமாக வாங்கி, செய்தியை வெளியே தெரியாமல் இருட்டடிப்பு செய்தனர் சிலர்.

 இதன்மூலம் தமிழகம் முழுக்க தாங்கள் தொடர்ந்து இயங்கும் சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டனர். 

ரியல் எஸ்டேட் சதுரங்க வேட்டை...

ஆனால், உண்மையை எத்தனை நாளைக்குத்தான் மூடி மறைக்க முடியும்? கடந்த 18-ம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள பிஏசிஎல் கிளையில் பணம் கட்டி யிருந்த மக்கள் ஒன்று திரண்டு தாங்கள் கட்டிய பணத்தைத் திரும்பக் கேட்க, அங்கு பெரும் கலவரம் உருவானது.

‘‘என் மூலம் பணம் கட்டிய 15 பேருக்குமான முதிர்வுத் தொகையை கடந்த ஒரு வருட காலமாக தராமலே இழுத்தடிக்கிறார்கள். வாடிக்கை யாளர்கள் தினசரி என் வீட்டுவாசலில் வந்து காத்திருக்கிறார்கள். போலீஸில் புகார் தரலாம் என்றால் பணம் திரும்பக் கிடைப்பதில் காலதாமதம் ஆகும்.

 அலுவலகம் சென்று கேட்டால் அங்குள்ளவர்கள் ஏஜென்ட்டுகளை மதிப்பதே இல்லை. எங்களை எப்படியாவது ஏமாற்றப் பார்க்கிறார்கள். அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு இந்த நிறுவனத்தினரிடமிருந்து பணத்தைப் பெற்றுத்தர வேண்டும்’’ என்று நொந்துபோய் சொன்னார் இந்த நிறுவனத்தில் ஏஜென்ட்டாக பணியாற்றிய பாரதி.

மக்களின் குமுறலுக்கு என்ன பதில் என்பதை அறிய கிருஷ்ணகிரி பிஏசிஎல் கிளை மேலாளரைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். ‘‘என்ன சொல்லச் சொல்றீங்க... எந்த பதிலும் இப்போ சொல்ல முடியாது’’ என்று எரிந்து விழுந்தார். 

இந்த மோசடி வெளிச்சத்துக்கு  வந்து ஐந்து மாதங்களாகியும் காவல் துறையோ, பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவோ இந்த நிறுவனத்தை முடக்கி, மக்களின் பணத்தைத் திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?