நடப்பு
Published:Updated:

தடைக்கல்லும் படிக்கல்லே!

ஜோக்கர் to ஹீரோ!ச.ஸ்ரீராம்

ஹாலிவுட் என்றாலும், கோலிவுட் என்றாலும், நகைச்சுவை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமயமாகவே இருந்திருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் தாங்கள் எத்தனை துன்பங்களைச் சந்தித்தாலும் மக்களை மகிழ்விக்க இவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இப்படி தன் வாழ்நாள் முழுக்க பல துன்பங்களை அனுபவித்தாலும் தனது ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தவர்தான் ராபின் வில்லியம்ஸ்!

தடைக்கல்லும் படிக்கல்லே!

1951-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்தார் ராபின். இளம் வயதிலேயே நடிப்பில் ஆர்வத்தோடு இருந்த வில்லியம்ஸ் நாடக கிளப்பில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். பின்னர் நியூயார்க் நகரின் பிரபலமான அமெரிக்க அகாடமி ஆஃப் ஆர்ட்ஸில் கலை, நாடகம் முதலியவற்றை கற்றார். ‘ஸ்டாண்ட் அப்’ காமெடியில் கலக்கிய வில்லியம்ஸ், 1970-களில் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நிகழ்ச்சியில் காமெடியனாகவும் ஆரம்பகாலங்களில் பிரவேசித்தார்.

இவரது முதல் டிவி ஷோ ‘மார்க் அண்ட் மைண்டி’ என்ற நிகழ்ச்சி, அமெரிக்க மக்களின் மத்தியில் அவரை இனம் காணச் செய்தது. ரசிகர்களின் மனதை எளிதில் கவரும் பேச்சும், உடல்மொழியும் கொண்ட இவரது திறமையால், தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன.
 
ஆனால், திரைத் துறையில் பலரையும் ஆட்டிப்படைக்கும் குடிபோதை ராபினை ஆட்டிப்படைத்தது. அவரைத் தேடிவந்த பட வாய்ப்புகளை சிதைக்கிற அளவுக்கு அது மோசமாக, இந்த மனிதருக்கு இப்படி ஒரு பழக்கமா என எல்லோரையும் முகம்சுழிக்க வைத்தது. ஆனாலும், சினிமாவில் நடிப்பதை ராபின் நிறுத்தவில்லை. ‘டெட் போயட் சொஸைட்டி’,  ‘குட் வில் ஹன்டிங்’ ஆகிய படங்களில் நடத்ததற்காக ஆஸ்கார் விருது பெற்றார். 

இவரது ஜூமாஞ்சி படம் உலகம் முழுக்க உள்ள சிறு குழந்தைகள் ரசித்துப் பார்த்த படம். நகைச்சுவை மூலம் எல்லோரது கவலையையும் இவர் மறக்க வைத்தாலும், மன அழுத்தத்தால் படாதபாடுபட்ட ராபின், சில வாரங்களுக்கு முன் இறந்தார்.

என்றாலும், அவர் நடிப்பு மட்டும் இறக்கவில்லை. இவர் நடித்த நான்கு படங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளியாக காத்திருக்கிறது. சாதாரண காமெடியன்களும் ஹீரோ ஆகலாம் என்பதை நிரூபித்துக்காட்டிய ராபின் எல்லோருக்கும் ஒரு வழிகாட்டி!