Published:Updated:

பிஏசிஎல் ஃபிராடு... செபி அதிரடி உத்தரவு!

நீரை.மகேந்திரன் படங்கள்: வீ.நாகமணி, தே.தீட்ஷித், ம.சு.செழியன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பலநாள் திருடன் ஒருநாள் நிச்சயம் அகப்படுவான் என்கிற மாதிரி கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறது பிஏசிஎல் நிறுவனம். இந்த நிறுவனத்தில் கட்டிய பணம் திரும்பக் கிடைப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சஹாரா, சாரதா, திருப்பூரைச் சேர்ந்த பாசி போன்ற நிறுவனங்களைப்போல, மக்களிடம் போலி நம்பிக்கைகளை விதைத்து முதலீடுகளைத் திரட்டி வருகிறது பிஏசிஎல் என கடந்த மார்ச் 23 நாணயம் விகடன் இதழில் விரிவாக எழுதி, மக்களை உஷார்படுத்தி இருந்தோம்.

நாம் உஷார்படுத்தியபின்பு, முதிர்வு தொகை கேட்டு தமிழகம் முழுக்க இந்த நிறுவனத்தில் பணம் போட்டவர்கள் தங்கள் பணம் திரும்ப வேண்டும் என்று ஏஜென்ட்டுகளை நெருக்க, நம் எச்சரிக்கையைக் கொஞ்சமும் பொருட் படுத்தாமல் கர்மசிரத்தையாக தொடர்ந்து பணம் கட்டிய அப்பிராணிகளும் நிறையவே இருந்தார்கள். இனிமேற் கொண்டு பிஏசிஎல் நிறுவனம் எந்த பணத்தையும் மக்களிடமிருந்து வாங்கக் கூடாது. மக்களிடமிருந்து வாங்கிய 49 ஆயிரத்து நூறு கோடி ரூபாய் பணத்தை உடனடியாக மூன்று மாதங்களுக்குள் திருப்பித் தரவேண்டும் என செபி இப்போது உத்தரவிட்டிருப்பதைத் தொடர்ந்து, நாம் போட்ட பணம் திரும்பக் கிடைக்குமா, எப்போது, எப்படி கிடைக்கும் என பணத்தைப் போட்டவர்கள் பரிதவித்துப் போயிருக்கிறார்கள். விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருச்சி, சென்னை என பல்வேறு ஊர்களில் உள்ள பிஏசிஎல் நிறுவனத்தின் கிளைகளை முற்றுகையிட்டு பணத்தைத் திரும்ப கேட்கத்  தொடங்கியிருக்கிறார்கள்.

பிஏசிஎல் ஃபிராடு... செபி அதிரடி உத்தரவு!

இதற்கிடையில், பிஏசிஎல் நிறுவனம் பற்றி செபியானது தீர  விசாரித்து  ஆகஸ்ட் 22 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.  உச்ச நீதிமன்றத்தின் பிப்ரவரி 2013  ஆணைப்படி  முதலீட்டுச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி, பிஏசிஎல் நிறுவனம் தொடர்பான ஆதி முதல் அந்தம் வரையிலான பல விஷயங்களை அலசி ஆராய்ந்து இறுதி உத்தரவை  கடந்த வாரம்   வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை முழுக்கவே பிஏசிஎல் நிறுவனம் பற்றி அதிர்ச்சி தரும் பல தகவல்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

பிஏசிஎல் ஃபிராடு... செபி அதிரடி உத்தரவு!

பிஏசிஎல் நிறுவனத்தில் பணத்தைப் போட்ட 500 பேரை தோராயமாக தேர்வு செய்து, இவர்கள் பிஏசிஎல் நிறுவனத்தில் பணத்தைப் போட்டதன் மூலம் ஏதாவது பயனடைந்து இருக்கிறார்களா என்று ஆய்வு நடத்தியது. இதில் பிஏசிஎல் நிறுவனத்தில் பணம் கட்டினால் ஒப்பந்தங்கள் போட எட்டு மாதங்கள் ஆகிறதாம்.  சுமார் 78 வாடிக்கையாளர்களுக்கு 1-8 மாதங்களும், 422 வாடிக்கை யாளர்களுக்கு ஒரு வருடம் கழித்துதான் ஒப்பந்தங்கள் கொடுக்கப்படுகிறது. அந்த 78 வாடிக்கையாளர்களுக்கும் முழுமை பெறாத ஒப்பந்த பத்திரங்களே தரப்பட்டுள்ளது. ஒரே இடத்தை இரண்டு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.

10,000 ரூபாய் மதிப்புடைய நிலம் என்றுதான் உறுப்பினர்களின் ஒப்பந்தத்தில் இருக்கும். அந்த இடத்தை வாடிக்கையாளர் விரும்பவில்லை எனில், பணத்தை திருப்பித் தர பல ஆண்டு காலம் இழுத்தடிக்கிறார்கள். இதற்கு எந்த கடிதங்களும் அத்தாட்சிகளும் கிடையாது. நிலத்தைப் பதிவு செய்துதரும்போது உறுப்பினர்களுக்கு சம்பந்தமில்லாத பகுதி களில் பதிவு செய்து கொடுக்கிற நிகழ்ச்சிகளும் பல இடங்களில் நடந்திருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழகத்தில் இடம் ஒதுக்கித் தந்திருக்கிறார்கள். இதுமாதிரி பலருக்கும் எங்கெங்கோ இடம் ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது.
இந்த நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் சம்பாதித்த பணத்தைப் பற்றி கேட்டாலே ஆச்சர்யப்பட வைக்கிறது. 2013, பிப்ரவரி 26 முதல் 2014 ஏப்ரல் 30 வரையிலான 14 மாத காலத்தில் இந்த நிறுவனம் வசூல் செய்த தொகை 4069,60,19,306 ரூபாய்!

பிஏசிஎல் ஃபிராடு... செபி அதிரடி உத்தரவு!

2014 மே 1-ம் தேதி முதல் 2014 ஜூன் 15-ம் தேதி இந்த நிறுவனம் வசூல் செய்த தொகை 295,17,89,039 ரூபாய். இந்த நிறுவனம் இதுவரை மக்களிடமிருந்து வசூல் செய்த பணம் சுமார் 49,100 கோடி ரூபாய். இந்தியா முழுக்க 4,63,13,342 உறுப்பினர்கள் பரிபூர்ணமாக நம்பி பணத்தைப் போட்டால், இத்தனை கோடிகள் வசூலாகாதா என்ன?

இந்த அறிக்கை அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் மெகா மோசடி புரிந்த நிறுவனம் என்கிற பட்டத்தை சஹாரா நிறுவனத்திடமிருந்து தட்டிச் சென்றிருக்கிறது பிஏசிஎல் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள், புரமோட்டர்கள், அதிகாரிகள், ஏஜென்ட்டுகளுக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை மாநில அரசுகள், காவல்துறை மேற்கொள்ள செபி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக நிறுவன விவகாரத் துறைக்கும் சில பரிந்துரைகளை அளித்துள்ளது செபி. 

இதற்குமேலும் இந்த மக்களிடமிருந்து எந்த பணத்தையும் வசூலிக்கக் கூடாது. ஏற்கெனவே வசூல் செய்த பணத்தை உரிய வட்டியுடன் மூன்று மாத காலத்துக்குள் திரும்பத் தரவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

பிஏசிஎல் ஃபிராடு... செபி அதிரடி உத்தரவு!

செபியின் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பிஏசிஎல் நிறுவனம் முடிவு செய்திருந்தாலும், இனியும் இந்த நிறுவனத்தை நம்பி பணத்தைக் கட்டுபவர்களை அந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது!

பால் விற்றவர் கறந்த ரூ.49,100 கோடி! 

பால் விற்று வந்த ஒரு சாதாரண மனிதன் ஏறக்குறைய 49,000 கோடி ரூபாய் சேர்த்திருக்கிறார் என்றால் ஆச்சர்யமாக இல்லை! பிஏசிஎல் நிறுவனத்தின் ‘மூளை’யாகச் செயல்பட்ட நிர்மல்சிங் பாங்கோதான் அந்த அதிசய மனிதர். பஞ்சாபின் எல்லைப் பகுதியில் இருக்கும் அட்டாரியில் உள்ள ஒரு கிராமத்தில் பால் விற்றுக்கொண்டிருந்த விவசாயிதான் இந்த பாங்கோ. பிற்பாடு பியர்லெஸ் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அதன்பிறகு இந்த பிஏசிஎல் நிறுவனத்தைத் தொடங்கி, நிலம் இல்லாத மக்களுக்கு குறைந்த விலையில் நிலம் என்கிற கவர்ச்சிகரமான உறுதிமொழி தந்தார். இந்த உறுதிமொழியை நம்பி பணம் போட்டவர்களுக்கு நிலம் கிடைக்கவில்லை. ஆனால், பாங்கோவின் வசம் இன்றைக்கு இருக்கும் மொத்த நிலத்தின் அளவு 1.83 லட்சம் ஏக்கர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு