Published:Updated:

மோடி 100 நாள்....ஓர் அலசல்...

ச.ஸ்ரீராம்

மோடி 100 நாள்....ஓர் அலசல்...

இவர் ஆட்சிக்கு வந்தால் இந்தியா நவீனமயமாகும்; இந்தியாவின் பொருளாதார நிலை உயரும்; இவர்தான் இந்தியாவின் டிஜிட்டல் மேன்... மோடி பிரதமராவதற்குமுன் இப்படித்தான் செய்திகள் முன்வைக்கப்பட்டன. மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும்பி மோடியை பிரதமராக்கினார்கள். பிரதமரான மோடி ஆட்சியைப் பிடித்ததும் தன் அமைச்சர்களிடம் 100 நாட்களுக்கான ப்ளூ பிரின்ட்டை தயார் செய்யச் சொன்னார்.

உடனடியாக தொடங்கப்பட வேண்டிய திட்டங்களை வரிசைப்படுத்தினார். இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு மாற்றிக் காட்டுவோம் என்று கடந்த மே 26-ம் தேதி பிரதமராகப் பதவியேற்றார்  மோடி. அவரது ஆட்சியின் 100-வது நாளான செப்டம்பர் 2-ம் தேதிக்குள் அவர் சொன்ன வாக்குறுதிகளையும், செயல்திட்டங்களையும் நிறைவேற்றினாரா? மோடி தனது முதல் 100 நாட்களில் என்ன செய்தார் என்பது பற்றி விரிவான அலசல் இதோ...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மோடி ஆட்சிக்கு வந்ததும் அவர் அறிவித்த 10 அம்ச கோரிக்கையில் மிகவும் முக்கியமானது,  ‘கல்வி, சுகாதாரம், தண்ணீர், எரிசக்தி மற்றும் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும்’ என்பதுதான்.

மோடி 100 நாள்....ஓர் அலசல்...

இதற்காக என்ன திட்டம் போடப்பட்டு இருக்கிறது என்று பார்த்தால், மோடி ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே உள்கட்டமைப்பு வசதிக்கான திட்டங்களை வகுப்பதிலும் அதற்காக வெளிநாடுகளுடன் ஒப்பந்தமிடுவதிலும் மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டிவந்தது. அதன் ஒருபகுதி தான் பிரதமரின் சமீபத்திய ஜப்பான் பயணமும், ஏறக்குறைய 35 பில்லியன் டாலர் அளவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமும். இதனால் உள்கட்டமைப்பு பணிகள் முடுக்கிவிடப்படும். நம் நாடு புதிய வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கலாம்.

மோடி அரசின் முதல் பட்ஜெட் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டதாக இருக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். வருமானவரி வரம்பு ரூ.50 ஆயிரம் உயர்த்தப்பட்டது மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருந்தது. ஜிஎஸ்டி மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வழங்கியுள்ள சிறப்புச் சலுகைகள் ஆகியவை தொழில் துறை வளர்ச்சிக்கு சிறப்பானதாக அமைந்தாலும், அவை எப்போது அமலுக்கு வரும், இதனால் தொழில் துறையினருக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்கிற கேள்விகளுக்கு இன்னமும் தெளிவான விடை கிடைக்கவில்லை.

சிறுதொழில்முனைவோருக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள தாக அறிவித்த அரசு, இன்னமும் அதனை யார் நிர்வகிக்கப் போகிறார்கள், அந்தத் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது போன்ற முக்கிய அறிவிப்புகளை இதுவரை வெளியிட வில்லை. இதனால் ஒதுக்கப்பட்ட பணம் சிறுதொழில் முனைவோர்களுக்கு சென்று சேராமலேயே இருக்கிறது.

விவசாயிகளுக்குப் பயனளிக்கும் திட்டங்களும் நடைமுறைக்கு வர நாட்கள் ஆவதும், அதுபற்றிய உடனடி அறிவிப்புகள் இல்லாததும் சற்று ஏமாற்ற மளிக்கக்கூடியதாகவே இருக்கிறது.

அரசு நிர்வாகம் வெளிப்படையாக நடக்க ஏலம், டெண்டர் போன்றவை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்கிற அறிவிப்பு முக்கிய அம்சமாக இடம் பெற்றிருந்தது. ஆனால், அது தொடர் பான நடவடிக்கை எதுவும் இல்லை.  ஊழல் ஒழிப்பு, கருப்புப் பண விவகாரம் போன்றவற்றில் அவசர முடிவுகளை எடுத்து உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்றாலும், அதுபற்றிய செயல்பாடுகள் குறைவாகவே உள்ளது.

மோடி ஆட்சிக்கு வந்தபின் பங்குச் சந்தையும் இந்திய பொருளாதாரமும் நன்கு வளர்ந்துள்ளது.  ஏனெனில், அவர் ஆட்சி செய்த 100 நாட்களில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் சுமார் 9 சதவிகிதமும், தேசிய பங்குச் சந்தை யான நிப்ஃடி சுமார் 8 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. தவிர, சென்செக்ஸ் 27000 புள்ளிகளைக் கடந்தும், நிஃப்டி 8100 புள்ளிகளைக் கடந்தும் புதிய உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாகிறது.  

மோடி 100 நாள்....ஓர் அலசல்...

நம் நாட்டின் ஜிடிபி முதல் காலாண்டில் 5.7 சதவிகிதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4.8 சதவிகிதமாக இருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1.7 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் வேகமாக சென்றுகொண்டிருப்பதையே இருப்பதைக் காட்டுகிறது.

நேபாளத்துக்கு மேற்கொண்ட பயணத்தின் மூலம் அந்த நாட்டுடன் வர்த்தகத்தை மேலும் உயர்த்திக் கொண்டது, பிரேசில் பயணத்தின் மூலம் பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கித் திட்டத்தில் இந்தியாவின் அதிகாரத்தை நிலைநாட்டியது, ஜப்பான் பயணத்தின் மூலம் உள்கட்டமைப்புத் துறையில் 35 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு ஜப்பான் ஒப்பந்தமிட்டுள்ளதும், அதனைக் கண்டு சீனா இதனைவிட சிறப்பான திட்டங்களை இந்தியாவுக்கு எங்களால் தரமுடியும் என்று சொன்ன தும் இந்தியாவின் தரத்தை சர்வதேச அரங்கில் உயர்த்த மோடி அரசின் 100 நாள் ஆட்சி பெரிதும் உதவியுள்ளது.

அந்நிய முதலீடுகளில் ஆர்வம் காட்டி வரும் அரசு, தற்போது பாதுகாப்பு மற்றும் இன்ஷூரன்ஸ் துறையில் 49 சதவிகித அந்நிய முதலீட்டையும், ரயில்வே உள்கட்டமைப்பில் 100 சதவிகித அந்நிய முதலீட்டையும் அனுமதித்துள்ளது. இந்தத் திட்டங்களை எல்லாம் 100 நாட்களில் மதிப்பிட்டு கூற முடியாது என்றாலும், இந்தத் திட்டங்கள் எவ்வளவு நாளில் அமலுக்கு வரும், வந்தபின் என்னென்ன வளர்ச்சிகளை கொண்டுவரும் என்பதைப் பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும்.

மோடி 100 நாள்....ஓர் அலசல்...

மோடி அரசாங்கத்தில் அமைச்சகங் களின் வெளிப்படைத்தன்மை அதிகரிக் கும் என்று கூறியிருந்தார். ஆனால், மோடி அரசில் எந்த அமைச்சகமும் அல்லது அமைச்சரும் சொல்லிக் கொள்ளும்படியான செயல்பாடுகளைச் செய்யவில்லை. இந்த 100 நாள் ஆட்சியில் அதிகம் பேசப்பட்டது மோடியும், அருண் ஜெட்லியும்தான். மற்றபடி பல அமைச்சர்கள் சின்னச் சின்ன அறிவிப்பு களை செய்வதுடன் நின்றுவிட்டார்கள்.

இந்தியா முழுக்க 100 ஸ்மார்ட் நகரங்கள், புதிய பொருளாதார மண்டலங்கள், அதிவேக புல்லட் ரயில்கள் என பிரமாண்ட திட்டங்களை அறிவித்தது. இந்தத் திட்டங்களை எல்லாம் 100 நாட்களில் நடைமுறைப் படுத்த முடியாது என்றாலும், இதுகுறித்து எந்த  முன்னேற்றமும் இதுவரை இல்லை.
கடந்த ஆட்சியால் உருவான நிதிப் பற்றாக்குறையால் எந்த ஒரு திட்டத்தை யும் செய்ய முடியாத நிலை இந்த ஆட்சிக்கு ஏற்பட்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதேசமயம், இனிவரும் நாட்களிலாவது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் முக்கிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வந்தால் மட்டுமே மோடி அரசின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும்.

மோடி பதவியேற்றுக்கொண்ட இந்த 100 நாட்களில் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி வேகமாக பயணிக்கத் துவங்கி யுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இந்த வேகம் போதாது; இன்னும் அதிக வேகத்தில் நடவடிக்கை கள் அமைய வேண்டும்.

முதல் காலாண்டை நல்லபடியாக ஆரம்பித்த மோடி, அடுத்தடுத்த காலாண்டுகளில் இன்னும் அதிகமான வளர்ச்சியைக் காட்டுவார் என்கிற நம்பிக்கை நம் மக்களுக்கு இருக்கவே செய்கிறது. மக்களின் நம்பிக்கையை மோடி நிறைவேற்றுவாரா?

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

‘‘மோடி அரசு இந்த 100 நாட்களில் பெரிதாக எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு துவங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜன் தன் திட்டமும் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது பயன்பாட்டுக்கு வந்த பின்புதான் தெரியும்.

மோடி 100 நாள்....ஓர் அலசல்...

புதிய திட்டங்களை அரசு விரைவாக நடைமுறைப்படுத்த மோடி அரசிடம் போதிய நிதி இல்லை என்பதுதான் உண்மையான நிலை. அதுதவிர, உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா, வங்கிகளின் வாராக் கடன்களுக்கான நெறிமுறைகள், வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் கொண்டுவரக்கூடிய சூழலை ஏற்படுத்தாதது  போன்றவற்றில் அரசின் நிலைப்பாட்டில் எந்தவித மேம்பாடும் இல்லாமல் இருக்கிறது. அதுபோல நிலக்கரி ஊழல் குறித்தும், லஞ்சம் மற்றும் கருப்புப் பணம் குறித்தும் அரசுத் தரப்பில் தெளிவான நிலை இல்லாதது போன்றவை கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

100 நாட்களில் இவற்றையெல்லாம் மதிப்பிடுவது முடியாது என்பதால் மோடி அரசின் செயல்பாட்டைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், அவர் முதல் 100 நாட்களைக் கடந்த மாதிரியே மற்ற நாட்களையும் கடந்துவிட முடியாது. செயல்பாடுகளை அதிகரித்து அதனை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே மோடி அரசை மதிப்பிட முடியும்’’.