Published:Updated:

சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்!

செ.கார்த்திகேயன் படங்கள்: இரா.யோகேஷ்வரன்

சேமிப்புதான் ஒரு மனிதனையும், அவனைச் சார்ந்திருப்பவர்களையும் நிம்மதியாக வாழவைக்கும். ஆனால், இன்றைய நிலையில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில், சேமிப்பு என்பது இல்லாமலேயே போகிறது. இதனால் அவர்களின் எதிர்காலம் என்பது பெரிய கேள்விக்குறியாக மாறி வருகிறது.  சேமிப்பை செம்மையாகச் செய்யவும், இன்னும் அதிகமான பணத்தைச் சேமிக்கவும் என்ன வழி? இதோ இந்த ஐந்து வழிமுறைகளைக் கடைப்பிடித்துப் பாருங்களேன்...

1 சேமிப்புக்கென தனியாக வங்கிக் கணக்கு!

சம்பளதாரர், சுயதொழில் செய்வோர் யாராக இருந்தாலும் முதலில் சேமிப்புக்கு என தனியாக வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது அவசியம். வங்கிக் கணக்கை பணிபுரியும் அலுவலகத்துக்கு அருகிலோ, உங்களின் இருப்பிடத்துக்கு அருகிலோ ஆரம்பிப்பது நல்லது. காரணம், கணக்கு இருக்கும் வங்கியானது  தொலைவில் இருக்கும்போது அங்குச் செல்வதற்கான நேரத்தை ஒதுக்கமுடியாது. இதனால் சேமிப்பை தொடர்ந்து செய்ய முடியாத நிலை உருவாகும். தவிர, ஆன்லைன் பேங்கிங் மூலம் சம்பளத்திலிருந்து ஒருபகுதியை சேமிப்புக் கணக்கில் சேர்க்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்!

2 தொடர் மற்றும் தானியங்கி டெபாசிட் வசதி!

தனி சேமிப்புக் கணக்கை ஆரம்பிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அதில் தொடர்ச்சியாகப் பணத்தைச் சேமிக்க வேண்டியதும் அவசியமாகும். மாதம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ என்கிற கணக்கீட்டின் அடிப்படையில் பணத்தைச் சேமித்து வருவது அவசியம். பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்கில் சேமிக்கப்படும் தொகைக்கு இரண்டு வகையில் லாபத்தை ஏற்படுத்தித் தரும் வசதியை வைத்திருக் கின்றன. அதாவது, சேமிப்புக் கணக்கில் போடப்படும் தொகை, குறிப்பிட்ட தொகைக்குமேல் சென்றால் அது ஃபிக்ஸட் டெபாசிட் ஆக எடுத்துக்கொள்ளப்பட்டு, அதிக வட்டி தரப்படும்.

3 எக்ஸ்ட்ரா வருமானத்தையும் சேமிக்கணும்!

சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்!

மாத சம்பளம் தவிர, அல்லது தொழிலில் கிடைக்கும் லாபம் தவிர, வேறு வேலைகள் மூலமாகவோ அல்லது அலுவலகத்திலிருந்து கிடைக்கும் இன்சென்டிவ் / போனஸ் போன்ற உபரி பணத்தைச் சேமிப்புக் கணக்கில் சேமிப்பது எதிர்காலத்துக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும். குடும்பத் தேவைகளுக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளத்திலிருந்து சீராக ஒதுக்கிவைக்கும் போதுதான் அவ்வப்போது கிடைக்கும் எக்ஸ்ட்ரா பணத்தை சீராகச் சேமிக்க முடியும். உதாரணத்துக்கு, ஓராண்டுக்கு கிடைக்கும் போனஸ் 25,000 ரூபாயை 15% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மொத்த முதலீடாக 20 வருடம் வரை முதலீடு செய்வதாக கொண்டால், கிடைக்கும் வருமானம் சுமார் 4.09 லட்சம் ரூபாய்!

4 சேமிப்பு தொகையை உயர்த்த வேண்டும்!

இன்றைய நிலையில் விலைவாசி உயர்வாகட்டும், வீட்டு வாடகையாகட்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். அதுபோல ஒருவருக்கு சம்பளம் உயரும்போதெல்லாம் சேமிப்பு தொகையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் விலைவாசி உயர்வை சமாளிக்கும் விதமாக சேமிப்பு இருக்கும்.

5 செலவுகளைச் சரிபார்க்கவும்!

பொதுவாக, அதிகம் சேமித்து, குறைவாக செலவு செய்வதே வாழ்க்கையை மேம்படுத்தும் என்பார்கள். அதனால் சேமிப்பை தொடர்ச்சியாக்குவதுபோல, செலவு செய்வதையும் தொடர்ச்சியாக சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும். நாம் செய்யும் செலவு அவசியமானதா, அநாவசியமானதா என தொடர்ந்து ஆராய வேண்டும். அப்படி ஆராயும்போது அநாவசிய செலவுகளைத் தானாகவே நிறுத்திக் கொள்வோம். சேமிப்பை ஆரம்பிக்க சம்பளம் உயர வேண்டும் என்பதில்லை, தேவையில்லா செலவுகளைக் குறைத்தாலே போதும். உதாரணத்துக்கு, ஒருவர் தனது குடும்பத்துடன் ஒரு மாதத்துக்கு பொழுதுபோக்குக்கு ரூ.2,000  செலவு செய்கிறார். அவரே பின்னர் அதை அநாவசிய செலவாக நினைத்து, மாதம் 1,000 ரூபாயாக குறைத்து, மீதமிருக்கும் ரூ.1,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் 20 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால் முதிர்வின்போது கிடைக்கும் தொகை சுமார் ரூ.14.97 லட்சம்’’.

வயதுக்குத் தக்கபடி நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் மேற்கொள்வதுபோல வங்கி சேமிப்புக் கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை என வயதுக்குத் தக்கபடி முதலீடுகளை வகைப்படுத்திக் கொள்வதும் அவசியம்.