Published:Updated:

எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்!

செ.கார்த்திகேயன் ஓவியங்கள்: ஹரன்.

நம்மில் பலர்,  வீட்டுக்குத் தேவையான பொருள் வாங்குவதாக இருந்தாலும் சரி, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதாக இருந்தாலும் சரி, ரியஸ் எஸ்டேட்டில்  முதலீடு செய்வதாக இருந்தாலும் சரி, அனைத்திலும் உணர்ச்சிவசப்பட்டு (Emotional) முடிவெடுப்பது அதிகரித்து வருகிறது. இதனால் பல பிரச்னைகள் உருவாகி, அதைத் தீர்ப்பதிலேயே பாதி வாழ்நாளை கழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம். 

உணர்ச்சிவசப்படுவது நமது அடிப்படையான உணர்ச்சிதான். இருப்பினும் உணர்ச்சிவசப்பட்டு நாம் செய்யும் முதலீட்டு முடிவுகள் நமக்கு இக்கட்டான சூழ்நிலையையே உருவாக்கும். எந்தெந்த விஷயங்களில் நாம் உணர்ச்சிவசப்பட்டு ஏமாறுகிறோம், இதில் சிக்காமல் இருப்பது எப்படி என நிதி ஆலோசகர் ஆர்.ராதா கிருஷ்ணனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

“நம்மைச் சுற்றி இருப்பவர்கள் வீடு வாங்கிவிட்டார்கள், நாம் ஏன் வாங்கக்கூடாது என்பதில் ஆரம்பித்து, நமது அலுவலக நண்பர்கள் சொல்கிறார்கள், அந்த பொருளுக்கான ஆஃபர் இன்றோடு முடிகிறது என பல விஷயங்களில் நாம் எமோஷனலாக முடிவெடுக்கிறோம். இதுமாதிரி எடுக்கப்படும் முடிவுகள் நிச்சயம் நம் காலை வாரிவிடும்'' என்றவர், முதலீட்டு விஷயத்தில் நாம் எமோஷனாக  முடிவுகளை எடுக்கிறோம் என்பதையும் சொன்னார்.

எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்!

அவசரப்பட்டு வாங்கிய வீட்டுக் கடன்!

படிக்காத பாமர மக்கள்கூட இந்தக் காலத்தில் குடும்பத்தின் நிதி நிலைமையைச் சரியாகக் கணித்துத் திட்டமிடுகிறார்கள். ஆனால், பல்வேறு பட்டப்படிப்புகளைப் படித்தவர்களால் தனது குடும்பத்துக்கான நிதித் திட்டத்தைச் சரியாக மேற்கொள்ளாமல் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகளால் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். ரமேஷ் இப்படி எமோஷனலாக எடுத்த முடிவு அவருக்கு வேதனையையே பரிசாக வழங்கியது. ரமேஷ் சென்னையில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறார். மாதம் 50,000 ரூபாய் சம்பளம். கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள கிராமத்தில் தனது தங்கையுடன் பெற்றோர்கள் வசிக்க, வேலைக்காக சென்னையில் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். தன் தங்கைக்கு திருமணத்தை முடித்தாக வேண்டும் என்கிற நிலையில், கிராமத்தில் இருக்கும் சொந்த வீட்டை பழுதுபார்த்து, அதை இரண்டு அடுக்கு மாடியாகக் கட்டினால், தங்கைக்கு நல்ல வரன் கிடைக்கும் என்று உறவினர்கள் ரமேஷிடம் சொல்ல, ரமேஷும் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி ஓராண்டுக்குள் வீட்டை கட்டி முடித்தார்.

எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்!

 நினைத்தது ஒன்று... நடந்தது வேறு!

அதற்குள் இவர்களைத் தேடி வந்த நல்ல நல்ல வரன்களும் கைமீறிப் போய்விட்டன. திடீரென்று ரமேஷின் தந்தை உடல்நலக் குறைவால் வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படவே அவரின் வருமானம் குடும்பத்துக்கு இல்லாமல் ஆகிவிட்டது. இந்த நிலையில் வாங்கிய வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ-யும் குடும்பச் செலவுகளும், தங்கைக்குத் திருமணம் செய்துவைக்கத் தேவைப்படும் பணத் தேவையும் அவரை வாட்டி வதைத்திருக் கிறது. நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் தந்தையின் பெயரில் இருந்த இன்னொரு நிலத்தை விற்று தங்கைக்குத் திருமணத்தைச் செய்துவைத்தார். 


ரமேஷைப் போலவே நம்மில் பலர்  உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவால் மாட்டிக்கொண்டு முழிக்கும் நிலைக்கு ஆளாகிறோம். குடியிருக்க வீடு என்பது அனைவருக்கும் அவசியம்தான். அது எல்லோருக்கும் எமோஷனலான விஷயமும்கூட. அதை முறையாகச் செய்யாமல், உணர்ச்சிவசப்பட்டுச் செய்வதால்தான் பிரச்னைகள் உருவாகின்றன.

எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்!

மார்க்கெட்டிங் மாயாஜாலம்!

வீட்டுக்குத் தேவையான பொருட்களை விற்கும் மார்க்கெட்டிங் நிறுவன ஊழியர்கள் வாடிக்கையாளர் களின் வீடு தேடி வந்து பொருட்களை விற்பது வழக்கம். இவர்களில் சிலர் எமோஷனலாகப் பேசி பொருட்களை விற்றுவிடுவார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது, உருகாதவர்களின் நெஞ்சம்கூட உருகிவிடும். ‘இந்தப் பொருளை நீங்க வாங்கிக்கலைனா என்னோட ஒரு மாத சம்பளமே போயிடும். அதனால என் குடும்பம் பட்டினிகிடக்க வேண்டி யிருக்கும்’ என்று அவர்களின் டார்கெட் பிரஷரை நம் மீது ஏற்றுவார்கள். பல பொருட்கள் கிடைக்கிறது. அதேநேரத்தில் ஒருவருக்கு உதவின மாதிரியும் இருக்கும் என்று நினைத்து, நீங்கள் அந்தப் பொருளை வாங்கினால், ஏமாற்றமே மிஞ்சும். காரணம், அந்தப் பொருள் சில காலத்துக்கு மட்டுமே நன்மை தருவதாக இருக்கும்.

 ஆஃபரால் வந்த சங்கடம்!

பெரும்பாலான கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் எமோஷனலான முடிவெடுக்க ‘இன்று கடைசி நாள் விற்பனை’, ‘ஒன்று வாங்கினா இரண்டு இலவசம்’ என்கிற மாதிரியான யுக்திகளைக் கையாள்வார்கள். இதைப் பார்த்து நம்மில் பெரும்பாலானவர்கள், தேவையில்லை என்றாலும் எப்போதாவது பயன்படும் என்று வாங்கிவிடுவார்கள். இப்படித்தான் தீபா செய்த காரியம் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. தன் வேலையை எளிமையாக்குவதற்காகத் துணி துவைக்கும் இயந்திரத்தை வாங்கித் தரச் சொல்லி, கணவரிடம் கேட்டிருக்கிறார். இன்னும் சில மாதங்களில் குழந்தைக்கான கல்விச் செலவு இருக்கிறது என்பது தெரிந்தும் தனது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியிலும், கடைசி நாள் ஆஃபரில் கிடைத்த துணி துவைக்கும் இயந்திரத்தை இஎம்ஐ வசதியைப் பயன்படுத்தி வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

அடுத்த சில மாதங்களில் மகேஷின் பெற்றோருக்கு மருத்துவச் செலவும், குழந்தையின் கல்விச் செலவும் சேர்ந்துவர, குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுந்துவிட்டது. இஎம்ஐ கட்டகூடக் காசு இல்லாத நிலை. வெளியில் கடன் வாங்கி இஎம்ஐயையும் கட்டிவிட்டு, இதர தேவைகளுக்கு நண்பர்களிடம் கடன் வாங்கியிருக் கிறார் மகேஷ். தனது மனைவி துணி துவைக்கும் இயந்திரத்தைக் கேட்ட போதே சட்டென அதை வாங்கித்தராமல், அவசியமான செலவுகளுக்குத் தேவையான பணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பிற்பாடு அதிகப்படியாக கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு துணி துவைக்கும் இயந்திரத்தை வாங்கி இருந்தால், சிக்கலிலிருந்து எளிதாக தப்பி இருப்பார். யோசிக்காமல் கொள்ளாமல் துணி துவைக்கும் இயந்திரத்தை வாங்கியதால், மகேஷுக்கும் சங்கடம்;  தீபாவுக்கும் சங்கடம்.

எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்!

நட்பு தந்த நஷ்டம்!

நமது அன்றாட வாழ்வில் ஏதாவது ஓர் இடத்துக்கு தினசரி செல்ல வேண்டி இருக்கும். அது பெட்ரோல் பங்க்-ஆக இருக்கலாம், வங்கியாக இருக்கலாம். இதுபோன்ற இடங்களில் புது நட்பு உருவாவது சகஜமான விஷயம்தான். அப்படித்தான் தினேஷ் தினசரி செல்லும் பெட்ரோல் பங்கில் லோகேஷ் என்கிற நபருடன் பழக்கமானார். லோகேஷ் பகுதி நேரமாக ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவர, தினேஷை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும்படி கேட்டிருக்கிறார். ஆரம்பத்தில் தினேஷ்

எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்!

மறுத்தாலும், தொடர்ச்சியாக வற்புறுத்தியதால் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து வீட்டு மனையை வாங்கினார் தினேஷ். வாங்கும்போது அந்த இடத்தின் விலை உச்சத்தில் இருக்க, சில வருடங்கள் கழித்து அந்த இடத்தை வாங்கிய விலைக்குக்கூட தினேஷினால் விற்க முடியவில்லை.  நட்புக்காக உணர்ச்சி வசப்பட்டு எடுத்த முடிவினால் நஷ்டமடைய வேண்டிய நிலை உருவானது கண்டு மிகவும் வருந்தினார் தினேஷ்.

 யோசித்து முடிவெடுங்கள்!

நிலம் வாங்க ஓர் இடத்துக்குச் செல்லும்போது, நமது உறவினர்கள் அல்லது நண்பர்களில் நிலம் வாங்குவதில் கைதேர்ந்தவர்கள் யாரோ அவர்களை உடன் அழைத்துச் செல்வது நல்லது. ஏனெனில், நிலம் வாங்க வேண்டும் என்கிற ஆசையினால் உணர்ச்சி வசப்பட்டு நாம் முடிவுகளை எடுக்க முயற்சிக்கும்போது, அதற்கு சரியானதொரு தடையாக அவர்கள் இருப்பார்கள். நிலம் அமைந்திருக்கும் பகுதியின் எதிர்கால நிலை எப்படி இருக்கும், இன்றைய நிலவரப்படி அந்த இடத்தின் விலை சரிதானா என்கிற விஷயங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். எனவே, விஷயம் தெரிந்தவர்கள் சொல்வதை நன்கு யோசித்து முடிவெடுக்கும் வேலையை நாம்தான் சரியாக செய்ய வேண்டும்.”

இனியாவது முதலீடு தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் எமோஷனலாக  முடிவெடுக்காமல், ஆரஅமர யோசித்து முடிவெடுத்தால், பிற்பாடு வருந்த வேண்டிய நிலையே வராது!   


 

தேவை 600 மில்லியன் வேலை!

2030-ம் ஆண்டுக்குள் உலகில் 600 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில், உலகம் வேலை இல்லா நெருக்கடியைச் சந்திக்கும் என்று ஜி-20 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது உலக வங்கி. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஜி-20 தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் உயர்ந்துவரும் மக்கள் தொகையைச் சுட்டிக்காட்டி 2030-க்குள் உலக அளவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என எச்சரித்திருக்கிறது.  தற்போதைய நிலவரப்படி, இந்த 20 நாடுகளிலும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனாக இருக்கிறது. 447 மில்லியன் மக்கள் ஒருநாளைக்கு 120 ரூபாய்க்கு குறைவான சம்பளத்தில் வேலைபார்த்து வருகிறார்கள் என்ற விவரத்தையும் உலக வங்கி வெளியிட்டிருக்கிறது.
 

அடுத்த கட்டுரைக்கு