Published:Updated:

நேர்மையின் நாயகன் !

ச.ஸ்ரீராம்

தடைக்கல்லும் படிக்கல்லே!

நாம் செல்லும் பாதை கரடுமுரடாக இருந்தால், வேறு பாதையைத் தேர்ந்தெடுக்க நொடிப்பொழுதும் தயங்கமாட்டோம். ஆனால், `நாளை எனக்குப்பின் வருகிறவர்கள் சிரமப்படக்கூடாது என்கிற நோக்கில் இந்தப் பாதையை நான் சரியாக அமைக்கிறேன்' என நேர்மையோடு செயல்படுகிறவர்கள்  ஒருசிலர்தான். அப்படிப்பட்டவர்களில் முதன்மையானவர் ஆபிரஹாம் லிங்கன். கருப்பின மக்களின் அடிமைத்தனத்தைப் போக்க அவர் சந்தித்த போராட்டங்களும், சவால்களும், எதிர்கொண்ட ஏளனங்களும் ஒன்றிரண்டல்ல.

அமெரிக்காவின் கெண்டகியில் 1809-ம் ஆண்டு பிறந்த ஆபிரஹாம் லிங்கன், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவர். தந்தை ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. வறுமையில் வாடியதால், புத்தகங்களை இரவல் வாங்கித்தான் படித்தார் லிங்கன். அவரது தந்தையிடமிருந்து நேர்மையைக் கற்றிருந்த அவர், தான் படித்த வக்கீல் படிப்பை லாபம் சம்பாதிக்கும் கருவியாக ஒருபோதும் பயன் படுத்த மாட்டேன் என்று உறுதியோடு இருந்தார்.

நேர்மையின் நாயகன் !

இதற்கிடையில் அவரது காதலியின் மரணம், மனைவியுடனான உறவில் விரிசல் என மனமுடைந்த லிங்கன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போனார். ஆனால், அவரது பதினைந்து வயதில் நியூ ஆர்லியன்ஸ் நகரில் வசித்தபோது அடிமைகள் என்ற பெயரில் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்கள் விலைக்கு விற்கப்படுவதையும், கொத்தடிமைகளாக நடத்தப்படுவதையும் கண்டிருந்தார். பிற்பாடு, அவர்களுக்கு உதவ நினைத்து லிங்கனே அரசியலில் இறங்கினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் நின்றபோது, அடிமையில்லா அமெரிக்காவை உருவாக்குவேன் என்று கூறினார். அதிபரானதும், உறுப்பினர் ஒருவர் உங்களது தந்தை தைத்து கொடுத்த செருப்புதான் என் கால்களை அலங்கரிக்கிறது என்று ஏளனம் செய்தார். அதற்கு பொறுமையாக பதிலளித்த லிங்கன், ‘‘இது என் தந்தையின் உழைப்பைக் காட்டுகிறது. பிய்ந்தால் சொல்லுங்கள், நான் தைத்துத் தருகிறேன். ஆனால், எனக்கு நாட்டை ஆளவும் தெரியும்’’ என்றார்.

மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி என கெட்டிஸ்பர்க் கூட்டத்தில் லிங்கன் பேசியதுதான் இன்றுவரை ஜனநாயகத்தின் விளக்கமாக உள்ளது. வறுமையில் இருந்தாலும் நேர்மைதான் முக்கியம்; போராட்டத்தில் வெற்றிகளைவிட நியாத்தின் பக்கம் நிற்பதுதான் அவசியம்  என்று உணர்த்திய லிங்கன் உண்மையில் நேர்மையின் நாயகன்தான்.