நடப்பு
Published:Updated:

வங்கிகளில் அதிகரிக்கும்

வாராக்கடன்... என்ன காரணம், என்ன தீர்வு?

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அந்தக் கடனை சரியாகத் திருப்பிக் கட்டவில்லை எனில், வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி, பணத்தைக் கட்டச் சொல்வது வங்கிகளின் வழக்கம். கடன் வாங்கிய நபர் தனிமனிதனாக இருந்தால் அதட்டி மிரட்டி அந்தக் கடனை வங்கிகளால் வசூலித்துவிட முடியும். அதுவே, பல நூறு கோடிகளை கடன் வாங்கிய மிகப் பெரிய தொழில் நிறுவனமாக இருந்தால், எந்த வகையிலும்  மிரட்டாமல் கடனைத் திருப்பிக்கட்டும் படி கெஞ்சிக்கேட்கும் நிலையை இன்றைக்கு பல வங்கிகளில் பார்க்க முடிகிறது.

சில நிறுவனங்கள் கடனைக் கட்ட எந்த முயற்சியும் எடுக்காத பட்சத்தில், வேண்டுமென்றே கடனை திரும்ப அளிக்காத நிறுவனங்களாக (Wilful defaulter) வங்கிகள் அறிவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வங்கிகள் தந்த பல ஆயிரம் கோடி ரூபாய்  கடன்களை   அவை எப்படி வசூலிக்கப் போகின்றன, இந்தக் கடன்களை வங்கிகள் வசூலிக்க முடியாமல் தவிக்க என்ன காரணம், இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்கிற கேள்விகளுக்கான விடைகளை இனி பார்ப்போம்.

வங்கிகளில் அதிகரிக்கும்

 பல ஆயிரம் கோடிகள்!

இந்திய நிதி அமைச்சகம் தரும் தகவல்படி, கடந்த மார்ச் 2014 வரை வங்கிகளுக்கு வரவேண்டிய நிலுவை யிலுள்ள வாராக்கடன் மதிப்பு என்பது ரூ.2.45 லட்சம் கோடியாக உள்ளது. இது 2012-13ல் ரூ.1.83 லட்சம் கோடியாகவும், 2011-12ல் ரூ.1.37 லட்சம் கோடியாகவும் இருந்தது. இதுதவிர, நிறுவனங்களின் மறுசீரமைப்புக்குத் தேவைப்படும் கடன் களையும் சேர்க்கும்போது மொத்த கடனின் மதிப்பு ரூ.6.3 லட்சம் கோடியைத் தாண்டுகிறது. டாலர் மதிப்பில் சுமார் 100 பில்லியன் டாலராக உள்ளது.

ஒரு நிறுவனம் தனது தொழில் வளர்ச்சிக்காக வாங்கிய கடனை ஒவ்வொரு மாதமும் வட்டியோடு சேர்த்து திரும்பக் கட்டவேண்டும். ஒரு மாதம் தவறினால் அடுத்த மாதம் சேர்த்துக் கட்டலாம். ஆனால், தொடர்ந்து 90 நாட்கள் கடன் பணத்தைக் கட்டவில்லை எனில், அந்தக் கடனை வாராக்கடனாக (Non performing Asset) வங்கிகள் அறிவிப்பது வழக்கம்.

வங்கிகளில் அதிகரிக்கும்

 முதலிடத்தில் கிங்ஃபிஷர்!

வங்கிகள் சொல்லும் எல்லா  நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு கடன் வாங்கும் நிறுவனங்கள், பிற்பாடு அதைக் கண்டுகொள்ள மறுக்கின்றன.  இந்த வரிசையில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ரூ2,673 கோடியையும், வின்சம் டைமண்ட்ஸ் ரூ.2,660 கோடியையும், எலெக்ட்ரோதெர்ம் இந்தியா ரூ.2,221 கோடியையும் திருப்பித் தர வேண்டியிருக்கிறது. இதுபோன்று பல நிறுவனங்கள் பல வங்கிகளில் கடனைத் திரும்பச் செலுத்தாமல் நிலுவையில் வைத்து, வங்கிகளுக்குத் தலைவலியை ஏற்படுத்துகின்றன.

 முதல் மூன்று வங்கிகள்!

இந்தியாவில் இதுபோன்று நிலுவை யில் வாராக்கடன்கள் அதிகமாகக் கொண்ட வங்கிகளின் பட்டியலில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முதலிடம் வகிக்கிறது. மார்ச் 2014-ம் ஆண்டு நிலவரப்படி, 61,605 கோடி என்பிஏவைக் கொண்டு முதலிடத்தில் இருக்கிறது. இதற்கடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியும், பேங்க் ஆஃப் பரோடாவும் உள்ளன.

வங்கியின் தலைமை நிர்வாகிகளின் நடவடிக்கைகளும் இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சமீபத்தில் சிண்டிகேட் வங்கியின் சேர்மன் எஸ்.கே. ஜெயின், பூசன் ஸ்டீல் என்கிற நிறுவனத்துக்கு கடன் வரம்பை உயர்த்த லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டது போன்ற நடவடிக்கைகள் வங்கிகளின் நிர்வாகத்தின் மீது கேள்வியை எழுப்பும் விதமாக உள்ளன. இதேபோன்ற குற்றச்சாட்டில் 2000-க்கு முன்பு இந்தியன் வங்கி சிக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வங்கிகளில் அதிகரிக்கும்

 யார் காரணம்?

இப்படி அதிகரித்துக்கொண்டே போகும் வாராக்கடன்களுக்கு யார் காரணம்? வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகிய மூன்று பேரால் மட்டுமே வங்கிகளின் வாராக் கடன் அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வங்கிகள் சில நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயல்படுவதால், கடனை வசூலிக்க முடியாமல் தவிக்கின்றன. சில நிறுவனங் கள் தங்கள் செயல்பாட்டு செலவுகளுக்கே நிதியின்றி இருப்பதால், வேண்டுமென்றே கடனை திரும்பச் செலுத்தாத நிறுவனங் களாக உருவெடுத்து வருகின்றன. வங்கிகள் இதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றன. சில நிறுவனங்களுக்கு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளின் ஆதரவு இருப்ப தால், அவர்களிடமிருந்து கறாராக பணம் வசூலிக்க முடிவதில்லை.

இதுதவிர, வேறு சில காரணங்களும் வாராக்கடனின் மதிப்பை அதிகரிக் கின்றன. 2010-11ம் ஆண்டுகளில் விவசாயக் கடன்களுக்கு அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் விலக்கு அளித்தது. இதன்மூலம் ரூ.50,000 கோடிக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது இரண்டாக ஆந்திரா பிரிக்கப்பட்டபோது, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள 90,000 கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய அந்த மாநில அரசுகள் முயற்சி எடுத்து வருகின்றன.

வங்கிகள் கடனை வழங்கிவிட்டு அதனை வசூலிக்க முடியாமல் தவிப்பதில் எந்தெந்த துறைகள் ரிஸ்க் நிறைந்ததாகக் கருதப்படுகின்றன எனில், முதலில் உள்கட்டமைப்புத் துறை. இதில் தான் வங்கிகள் அதிகத் தொகையை ஒதுக்கியும், திட்ட கால அளவு சரியாகத் தீர்மானிக்கப்படாததால்  அதிக ரிஸ்க் உள்ள துறையாக இது கருதப்படுகிறது. இதற்கடுத்து மெட்டல், டெக்ஸ்டைல், கெமிக்கல் துறைகளில் வாராக்கடன் அதிகமாக உள்ளது.

வங்கிகளில் அதிகரிக்கும்

 ஜிடிபியைவிட வேகமாக..!

இந்த வாராக்கடன்கள் வங்கிகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கேபிஎம்ஜி அட்வைஸரி சர்வீசஸின் மேலாளர் நாராயணனிடம் கேட்டோம்.


‘‘வங்கிகளில் வாராக்கடன் என்பது அவர்களது தொழில் வளர்ச்சிக்கு வாங்கிய கடனையோ அல்லது அதற்கான வட்டியையோ 90 நாட்களுக்குள் செலுத்தத் தவறினால், அவர்களது சொத்துக்கள் பயன்படாத சொத்துக்களாக (NPA) அறிவிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இந்தியாவில் கடந்த பத்து வருடங்களில் அளிக்கப்பட்ட கடன்கள் ஆண்டுக்கு 15% அதிகரித்துள்ளது.

கடன் வளர்ச்சி விகிதம் என்பது ஜிடிபியோடு ஒப்பிடுகையில், 2001-12 காலத்தில் 52 சதவிகிதத்திலிருந்து 76 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உலக அளவில் கணக்கிடப்படும் என்பிஏ விகிதத்தில் இந்தியா 2013-ம் ஆண்டில் 3.6 சதவிகிதமாக இருந்தது. இதே விகிதம் 2009-ல் 2.3 சதவிகிதமாக இருந்தது. இதே வேகம் தொடர்ந்தால் 2014-ல் 5 சதவிகிதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் என்பிஏ விகிதம் இந்தியாவைவிட அதிகமாக உள்ளது. இந்த விகிதத்தில் ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள் இந்தியாவைவிட குறைந்த என்பிஏ விகிதத்தைக் கொண்டுள்ளன.

வங்கிகளில் அதிகரிக்கும்

 ஏன் உயர்கிறது என்பிஏ?

என்பிஏ அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகப் பணவீக்கம் கொண்ட சூழல், பொருளாதார மந்தநிலை, திட்டங் களுக்குத் திட்டமிடும்போது உள்ள கடன் அளவும், செயல்படுத்தும்போது கடன் அளவு அதிகரிப்பதும், வங்கிகளின் சில கொள்கையும் என்பிஏ உயர்வுக்குக் காரணமாகின்றன.

குறிப்பாக, விவசாயம் சார்ந்த தொழிலுக்காகக் கடன் வாங்கியவர்கள் பணவீக்கத்தால் பாதிக்கப்படுவதால் அதனைத் திரும்பச் செலுத்த முடியாமல் வாங்கிய கடனுக்கு வட்டிகூட கட்ட முடியாத சூழலுக்குச் செல்வதால், அந்தக் கடன்கள் வாராக்கடன்களாக மாறி, வங்கிகளுக்குச் சிரமத்தை உருவாக்குகின்றன. வங்கிகளின் என்பிஏவில் எஸ்பிஐ மற்றும் மற்ற பொதுத்துறை வங்கிகளின் பங்கு 72 சதவிகிதமாக உள்ளது.

 என்ன செய்யலாம்?

வாராக்கடன் பிரச்னையைத் தீர்க்க என்ன செய்யலாம்?

வங்கிகள் தங்களது கடனை வசூலிக்கும் நெறிமுறைகளை வலுப்படுத்த வேண்டும். சில சமயம் மிகவும் தாமதமாகும் திரும்பத் தராத கடன்களுக்கு சர்ஃபாஸி சட்டத்தின்படி, அவர்களது சொத்துக்களின் மூலம் கடனை மீட்கும் நடவடிக்கைகளைப் பாகுபாடின்றிச் செயல்படுத்த வேண்டும்.  2011-ல் 31 சதவிகிதமாக இருந்த வாராக்கடன் விகிதம், 2013-ம் ஆண்டில் 21 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக வங்கிகள் சார்பில் சொல்லப்படுகிறது. ஆனாலும், அவை மறுசீரமைப்புக் கடன்களைக் காட்டுவதில்லை.

வங்கிகளில் அதிகரிக்கும்

இதற்காக ஆர்பிஐ புதிய நெறிமுறை களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. வங்கிகள் கடனளிக்கும்போது அந்த நிறுவனத்தின் கடனை திரும்ப அளிக்கும் திறன், அவர்களது முதலீட்டு மதிப்பு, கடன்களை மறுசீரமைப்பதற்கான நெறிமுறைகள், முந்தைய கடன் விவரங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப கடனளிக்க வேண்டும் என்ற நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதனைத் தொடரும்போது வாராக்கடன் விகிதம் குறைய வாய்ப்புள்ளது. கடன்களுக்கு வங்கிகளையே நம்பி இருக்காமல் மற்ற நிதி வாய்ப்புகளையும் பயன்படுத்தினால் வங்கிகளுக்கு ஏற்படும் வாராக்கடன் சிரமம் குறைய வாய்ப்புள்ளது’’ என்றார்.

தற்போதுள்ள நிலவரப்படி, முதலீட்டையும் கடனையும் சரியாகக் கவனித்து, கடனை திரும்பச் செலுத்தக் கூடிய திறன் உள்ளதா என ஆராய்ந்து  வங்கிகள் கடனளித்தால் மட்டுமே வங்கிகள் வாராக்கடனைக் குறைக்க முடியும்.  தவிர, அரசியல் தலையீடு  களுக்கும், பெருவணிகர்களுக்கும் வளைந்து கொடுத்தால் வாராக்கடனை குறைக்க முடியாது என்பதை வங்கிகள் உணர்ந்து செயல்பட வேண்டும். வாராக்கடன் கொள்கைகளில் ஆர்பிஐ இன்னும்  கடினமான போக்கை கடைப்பிடித்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.