Published:Updated:

சாமான்ய மக்களும் ஜிஎஸ்டி வரியும்! -புறநானூற்று உவமை உணர்த்தும் உண்மை #MyVikatan

Representational Image
Representational Image

தனிநபர் வருமான வரி விதிப்பு போல ஜிஎஸ்டி வரிவிதிப்பும் வருமான அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் இருந்தால் சிறப்பானதாக இருக்கும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

Tax என்ற சொல், லத்தீன் மொழி வேர்ச் சொல்லான Taxo என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள், 'நான் மதிப்பிடுகிறேன்' என்பதாகும்.

ஒரு பூவிலிருந்து வண்டு தேனை எடுக்கும்போது, பூவுக்கும் வலிக்காமல் வண்டும் கீழே விழுந்துவிடாமல் எத்தனை லாகவத்துடன் தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ளுமோ அதுபோன்று, ஓர் அரசு மக்களிடம் வரி வசூல் செய்யும்போது நடந்துகொள்ள வேண்டும்.

Representational Image
Representational Image

இன்று, நம் நாட்டில் வாழக்கூடிய ஒவ்வொரு குடிமகனும் ஏதேனும் ஒருவகையில் அரசுக்கு வரி செலுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். சாதாரணமாக ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கும்போதுகூட, நாம் அரசாங்கத்திற்கு வரி செலுத்தி விட்டுதான் அதைப் பெறுகிறோம் என்பது நிதர்சனமான உண்மை.

நமது நாட்டில், இரு வகையான வரி வசூல் முறை நடைமுறையில் உள்ளது. ஒன்று, நேரடி வரி. மற்றொன்று மறைமுக வரி.

நேரடி வரி என்பது குடிமக்களே அரசாங்கத்திற்கு செலுத்தக்கூடிய தொழில் வரி, வருமான வரி, சொத்துவரி உள்ளிட்டவை.

மறைமுக வரி என்பது குடிமக்கள் நேரடியாக அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமல், மக்கள் வாங்கும் பொருள்களுக்கும், பெரும் சேவைகளுக்கும் வர்த்தகர்களால் மக்களிடம் வரிவசூல் செய்யப்பட்டு, அதை வர்த்தகர்கள் மத்திய, மாநில அரசுகளிடம் செலுத்துவதாகும்.

ஜிஎஸ்டி :

கலால் வரி, விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி போன்றவை மறைமுக வரிகளாக இருந்தன. அவற்றுக்கு மாற்றாக ஒரே நாடு ஒரே வரி வசூல் முறை எனும் அடிப்படையில் கொண்டுவரப்பட்டதுதான் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகும்.

குடிமக்கள் வாங்கக்கூடிய பொருள்களின் மீதும், பெறக்கூடிய சேவைகள் மீதும் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு வரிகளை நீக்கி, அவற்றுக்குப் பதிலாக ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி-யின் நான்கு அடுக்குகள்:

பொருள்கள் மற்றும் சேவைகளின் தன்மை அடிப்படையில் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

Representational Image
Representational Image

ஜிஎஸ்டி-யின் வகைகள்:

* மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST)

* மாநில அரசுகளின் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜிஎஸ்டி (SGST & UTGST)

* ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST)

என மூன்று வகைகளில் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுகிறது.

மக்களின் தேவை:

மனிதர்கள் தனது அடிப்படையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே மிகுந்த சிரமப்படக்கூடிய இன்றைய கடினமான சூழலில், வரி வசூல் முறையில் சில சலுகைகளை மக்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவின் தற்போதைய பொருளாதாரச் சூழலில் வாழும் மக்களை ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1) பெரும் பணக்காரர்கள்

2) பணக்காரர்கள்

3) நடுத்தர மக்கள்

4) ஏழைகள்

5) பெரும் ஏழைகள்

ஓர் அரசு, தனது குடிமக்களிடம் எவ்வாறு சிறப்பாக வரிவசூல் செய்ய வேண்டும் என்பதற்கு பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடல் உதாரணமாகத் திகழ்கிறது.

தன் குடிமக்களிடமிருந்து அளவுக்கு அதிகமாக வரி வாங்கினான், அறிவுடைநம்பி எனும் பாண்டிய மன்னன். அவனது செயல் அறிவுடைய செயலாய் இல்லை. பிசிராந்தையார், இந்த மன்னனால் வருந்திய மக்களின் துயரக்கண்ணீரைத் தமிழ்ப்பாடல் கொண்டு துடைத்தார். ஓர் அழகிய உவமையைக்கொண்டு அறிவுடை நம்பிக்கு அறிவு புகட்டினார்.

"யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான்

உலகமும் கெடுமே"

என்கிறது புறநானூற்று உவமை.

Representational Image
Representational Image

"விளைந்த நெல்லை முறையாக அறுத்துக் கவளமாக உருட்டி யானைக்கு உணவு தருவார்கள். அப்படித் தரும்போது, ஒரு மிகச்சிறிய அளவு நிலத்தில் விளையும் நெல்லும் அந்த யானைக்குப் பலநாள் உணவு தருவதற்குப் போதும். ஆனால், நெல் விளைந்த பெரும் பரப்பளவுள்ள வயல் ஆனாலும் அதில் யானையை மேய விட்டால் என்ன ஆகும்.

அதன் வாய்க்குள் செல்வதைவிட காலில் மிதிபட்டு அழியும் நெல் அதிகமாக இருக்கும்."

"அளவுக்கு மிஞ்சி வரிவிதித்து, உன் ஆட்களால் மக்களை வருத்தி நீ பொருள் பெறுவதும் இதைப்போன்ற செயல்தான்” என்று உணர்த்தினார்.

எனவே, ஓர் அரசு காலம் அறிந்து, குடிமக்களின் நிலை அறிந்து வரிவசூல் செய்வது அவசியம்.

ஜிஎஸ்டி கவுன்சில் அவ்வப்போது கூடி சிற்சில பொருள்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்கிறது. ஜிஎஸ்டி அடுக்குகளின் கீழ்வரும் பொருள்கள் மட்டும் இவ்வாறு மாற்றி அமைக்கப்படுகின்றன.

ஆனால், தனிநபர் வருமான வரி விதிப்பு போல ஜிஎஸ்டி வரிவிதிப்பும் வருமான அடிப்படையில்,பொருளாதார அடிப்படையில் இருந்தால் சிறப்பானதாக இருக்கும். இது, பொருளாதார சமத்துவத்தின் அடிப்படைப் புள்ளியாகவும் அமையும்.

பெரும் பணக்காரர் ஒருவர் ஜிஎஸ்டி வரிகளையும் சேர்த்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டை 10 ரூபாய்க்கு கடையில் வாங்குகிறார். பெரும் ஏழையும் அதே 10 ரூபாய்க்கு வாங்குகிறார் என்பதுதான் இன்றைய நிலையாக இருக்கிறது.

உதாரணத்திற்கு, ஐந்து விதமான நபர்கள் சந்தையில் அரிசி வாங்குகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அதில் A என்பவரது மாத வருமானம் பல கோடிகள். B-க்கு ரூ. 90,000. C க்கு ரூ.30,000. D-க்கு ரூ. 5,000 மற்றும் E-க்கு ரூ 1,000 என வைத்துக்கொள்வோம்.

Representational Image
Representational Image

இவர்கள், சந்தையில் அரிசி வாங்கும்போது ஒரே மாதிரியான விலையில்தான் வாங்க வேண்டும்.

அவரவர் வருமானத்திற்கு ஏற்ற வகையில் பொருள்களின் மீதான வரி இருக்காது. அனைவரும் ஒரே மாதிரியாகத்தான் வரி செலுத்துவார்கள். ஒரு கிலோ அரிசி ரூபாய் 60 என்றால் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ரூ.62 ஆகிறது என்றால் A, B, C, D மற்றும் E என்ற பல்வேறு வருமானம் உள்ள அனைவருக்கும் அரிசி விலை ஒன்றுதான். அரிசியின் தரத்தினால் விலை வித்தியாசம் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் ஒரே விலைதான்.

நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சமமான பொருளாதார நிலையில் இல்லாதபோது, ஒரே மாதிரியான வரி என்பது ஏற்புடையதாக இராது.

இதில், பொருளாதார சமத்துவம் அடிபட்டுப்போகிறது. ஜிஎஸ்டி வரி குறைவான பொருள்கள், வாங்கும் திறன் குறைவாக உள்ள நுகர்வோருக்கு குறைந்த விலையில் கிடைக்கும் என நம்ப எந்த முகாந்திரமும் இல்லை.

வலியோர் ஒருவரின் குறைந்த அளவிலான செலவிடுதல் கூட,கோடிக்கணக்கான எளியோரின் அடிப்படைத் தேவையை பூர்த்திசெய்துவிடுகிறது என்கிறது நீதிநெறி விளக்கம்.

"வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின்

தூங்கும் களிறோ துயறுரா - ஆங்கது கொண்டு

ஊரும் எறும்பு இங்கு ஒருகோடி உய்யுமால்

ஆரும் கிளையோடு அயின்று "

அதாவது "தன் உணவில் சிறிதளவு சிதறினால் யானைக்குப் பெரிய நட்டம் எதுவும் இல்லை. ஆனால் அது, எறும்பு போன்ற எத்தனை கோடி உயிர்களுக்கு வாழ்வளிக்கும். அதுபோலவே, வசதி படைத்த பெரும் செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை மனமுவந்து சமூகத்தின் நற்காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதால், அவர்களின் பெரும் நிதிக்கு எந்தக் குறைவும் வந்துவிடாது” என்ற கருத்தை வலியுறுத்துகிறார் குமரகுருபரர்.

Representational Image
Representational Image

இது, இன்றைய ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கும் பொருந்தும். எனவே, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, பொருள்களை அடிப்படையாகக்கொண்டு மட்டுமே தொடர்ந்து விதிக்கப்படாமல், மக்களின் பொருளாதார நிலையை அடிப்படையாக வைத்து விதிக்கப்படுவது சமூகத்திற்கு நன்மை தரும்.

செல்வந்தர்களுக்கு அதிகமாகவும், ஏழைகளுக்குக் குறைவான அளவும் ஜிஎஸ்டி விதிப்பதற்கான நுட்பங்களையும், வழிமுறைகளையும் வருங்காலங்களில் அரசு கண்டறிவது சமதர்ம கொள்கைக்கு அவசியம்.

ஆயினும் அதைவிட முக்கியமான தற்காலத் தேவை ஒன்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமே இருக்கிறது. இன்றைய கடினமான கொரோனா லாக்-டவுண் சூழலிலும் மக்கள் ஜிஎஸ்டி செலுத்திய பிறகே பொருள்களைப் பெறுவது என்பது இயற்கை நீதிக்கு முரணானது. எனவே, குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஜிஎஸ்டி- யிலிருந்து வர்த்தகர்களுக்கு விலக்கு அளித்து, அதன் பயன் மக்களுக்குச் சென்றுசேரும் வகையில் அரசு செய்ய வேண்டும்.

தற்போதைய சூழல் மாறி இயல்பு நிலை திரும்பிய பிறகு, பொருளாதார சீர்திருத்தம் என அரசு ஒருவேளை ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கலாம். ஆனால், அது வர்த்தகர்களுக்கு மட்டுமே பயன்படும். இத்தகைய உதவிகளுடன் பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புகளை அரசு நிச்சயம் அறிவிக்கும்.

இவற்றை வர்த்தகர்களுக்கு அவசியம் செய்யவேண்டியது அரசின் கடமையும்கூட. ஆயினும் மக்கள் தற்போதைய கடினமான சூழலில் பொருள்களை வாங்கும்போது செலுத்திய வரி திரும்பக் கிடைக்க வாய்ப்பு இல்லை.

எனவே, தற்போதே குறைந்தபட்சம் ஆறுமாதங்களுக்கு ஜிஎஸ்டி தள்ளுபடி செய்வதால் பொருள்களின் விலை கணிசமாகக் குறையும். குடிமக்கள் மீதான அரசின் அன்பாக, அக்கறையாக இது அமையும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதனால் பயன் ஏற்படும். கடினமான சூழலில் அரசு எடுத்த பல சிறந்த முடிவுகளில் இதுவும் ஒன்றாக எதிர்காலத்தில் அமையும்!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு