Published:Updated:

தீப்பெட்டி விற்ற 17 வயதுச் சிறுவன் எழுதிய வெற்றி வரலாறு! - ஐக்கியாவின் சுவாரஸ்ய பின்னணி #MyVikatan

றின்னோஸா
றின்னோஸா

தீப்பெட்டி, மீன், கிறிஸ்துமஸ் பொருள்களை சைக்கிளில் சென்று கூவிக் கூவி விற்பனை செய்த சிறுவன் உருவாக்கிய ஐக்கியா-வின் சுவாரஸ்ய வெற்றி பின்னணி...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஐக்கியா ( IKEA) என்ற பெயர் தற்போது இந்தியாவிலும் பரவலாகப் பேசப்படும் ஒன்றாக மாறிவிட்டது. நான் முதன்முதலாக ஐரோப்பாவுக்கு இடம் மாறியபோது வீட்டிற்கு தளபாடங்கள் சில வாங்க உத்தேசித்த வேளைதான் முதன்முதலாக ஐக்கியா அறிமுகமானது. தளபாடங்களும் வீட்டு உபகரணப் பொருள்களும் வாங்குவதற்கு பல மைல் தூரம் பயணம் செய்ய வேண்டிய காலம் மலையேறி, தேவையான அனைத்துப் பொருள்களையும் ஒரே இடத்தில், ஒரு கூரையின் கீழ் பல நிறுவனங்கள் இதற்கு முன் நடைமுறைப்படுத்த முற்பட்டாலும் அதில் பல வெற்றிகரமான புதிய நுணுக்கங்களைப் புகுத்தி சர்வதேச ரீதியாக வெற்றிக் கொடியேற்றியது ஐக்கியா. அதன் வெற்றிப் பயணத்தைத் தேடி படித்தேன். சுவாரஸ்யமாக இருந்ததால் இங்கே பகிர்கிறேன்.

றின்னோஸா
றின்னோஸா

ஐக்கியாவுக்குள் நுழைந்ததும் ஒரு சிறிய சுற்றுலாத் தளமாகவே காட்சியளித்தது. அதே போன்றே விற்பனையகத்தினுள்ளேயே சுவையான உணவும் கிடைக்கிறது.

ஐக்கியா ரெஸ்டாரன்ட் முதன்முதலில் ஸ்வீடனின் அவர்களது முதல் கிளையில் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி, அந்தச் சமயம் ஸ்வீடனின் ஏனைய பகுதிகளிலிருந்து ஐக்கியாவிற்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள், பயணக் களைப்பின் காரணமாகப் பசி எடுக்கும்போது சாப்பாட்டிற்காக வெளியே செல்ல எத்தனிப்பர்.

சாதாரணமாக 4 முதல் 5 மணி நேரங்கள் செலவிடக்கூடிய ஐக்கியாவில், வாடிக்கையாளர்கள் பசி எடுக்கும்போது, அதற்காக வெளி இடங்களுக்குச் செல்லாமல் அங்கேயே சுவையான உணவை ருசித்துவிட்டு, தொடர்ந்து உற்சாகமாக ஷாப்பிங் செய்யும்படியான ஒரு ஏற்பாடே ஐக்கியாவின் பிரசித்திபெற்ற in-house Restaurent concept.

றின்னோஸா
றின்னோஸா

ஐக்கியாவின் கதை 1943-ம் ஆண்டு ஸ்காண்டிநேவிய தீபகற்பத்தின் ஸ்வீடன் நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடங்கியது. 17 வயது இளைஞனாக மீன் விற்கும் ஒரு சிறிய கடையொன்றினை ஆரம்பித்த Swede Ingvar Kamprad பிற்காலத்தில் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உருவாகிய வரலாறு ஒரு தன்னம்பிக்கை டானிக்.

இங்வார் ஃபியோடர் காம்ப்ராட் 1926-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி ஸ்வீடன் மாகாணமான ஸ்மேலாந்தில், அகுன்னாரிட் கிராமத்திற்கு அருகிலுள்ள எல்ம்டாரிட் என்ற சிறிய பண்ணையில் வறுமையின் பிடிக்குள் சிக்குண்டு பிறந்தார். கம்ப்ராட் தனது 6 வது வயதில் தீப்பெட்டிகளை விற்று தனது வாழ்க்கையைத் தொடங்கினார். வெறும் 10 வயதில், அவர் தனது சைக்கிளில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருள்கள், மீன் மற்றும் பென்சில்களை விற்க ஆரம்பித்தார்.

றின்னோஸா
றின்னோஸா

சிக்கனத்திற்கு பெயர்போன கம்ப்ராட்டின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் பல இன்றைய தலைமுறையினருக்கு ஓர் நல்ல முன்னுதாரணம். உலகின் தலைசிறந்த கோடீஸ்வரர்களுள் ஒருவராக இருந்தபோதிலும், காம்ப்ராட் தன் வாழ்நாளில் ஒரு தடவைகூட விமானத்தில் business / first class வகுப்புகளில் பயணித்ததில்லை. ஒரு தடவை நிருபர் ஒருவர் இது குறித்து கேட்டபோது, "business class-ல் அதிக கட்டணம் குடுத்து பயணிப்பதால், நான் செல்ல வேண்டிய இடத்திற்கு மற்றவர்களை விடவும் வேகமாக, முதலில் சென்றடைவேனாயின், அந்த பணத்தை செலவு செய்ய தயாராக இருக்கிறேன். எக்ஸ்ட்ராவாக தரும் ஒரு கிளாஸ் பியருக்காக நான் எதற்கு அவ்வளவு பணத்தை செலவு பண்ண வேண்டும்? அது முட்டாள்தனம் அல்லவா” என்று கூறினாராம். இவ்வாறு பணத்தை பொறுப்பாக, புத்திசாலித்தனமாக செலவு செய்தது கூட இவரின் பிரம்மிக்க வைக்கும் அசுர வளர்ச்சிக்கு ஒரு காரணம். அதே போல் ஊழியர்கள் மீதும், சக மனிதர்கள் மீதும் அவர் வைத்திருந்த நம்பிக்கை அவரின் மற்றொரு வியப்பான பண்பாகப் பலராலும் போற்றப்பட்டது.

17 வயதில், 1943-ம் ஆண்டில், கம்ப்ராட்டின் தந்தை அவர் பள்ளியில் சிறப்பாகச் செயற்பட்டதற்காக அவருக்கு ஒரு சிறிய தொகையை பரிசாக வழங்கினார். அந்தச் சிறு தொகையை முதலீடாக வைத்து இங்வார் ஐக்கியா என்னும் நிறுவனத்தை மிகச் சிறிய அளவில் ஆரம்பித்தார். ஐக்கியா என்ற பெயர் அதன் நிறுவனரின் முதலெழுத்துக்களிலிருந்தும் (I, K), அவர் வளர்ந்த பண்ணை Elmtaryd (E) மற்றும் கிராமமான Agunnaryd (A) பெயரின் முதல் எழுத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

றின்னோஸா
றின்னோஸா

ஐக்கியா தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கம்ப்ராட் தனது பொருள்களை வழங்க பால் லாரிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார். 1947-ம் ஆண்டில், உள்ளூர் உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட தளபாடங்களை விற்பனை செய்யத் தொடங்கினார். 1955-ல், உற்பத்தியாளர்கள் கம்ப்ராட்டின் குறைந்த விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கியாவை புறக்கணிக்கத் தொடங்கினர். இந்தப் புறக்கணிப்பே கம்ப்ராட்டை எளிமையான, ஆனால் புரட்சிகர கண்டுபிடிப்புகளுக்கு உந்துசக்தியாக இருந்தது. அவர் தனது சொந்த Warehouse-லிருந்தே தயாரிப்புகளை முன்னெடுத்தார். ஐக்கியாவின் அடிப்படை தாரக மந்திரமான- எளிய, மலிவுவிலை, பிளாட்-பேக் (flat pack) தளபாடங்கள் தயாரிப்பு இவ்வாறு முளைவிட்டது.

கம்ப்ராட்டின் வணிகம் வளர்ந்தது. விஸ்வரூபமாக வளர்ந்தது. ஐக்கியா ஸ்வீடன், நார்வே, டென்மார்க் தாண்டி, ஜெர்மனி வழியாக ஐரோப்பா முழுதும் தன் சிறகை விரிக்கத் தொடங்கி உலகின் முனைகளுக்கு விரிவடைந்தது. ஷாங்காயில் ஐக்கியா திறக்கப்பட்டபோது ​​80,000 பேர் கடைக்கு வருகை தந்தனர்.

IKEA
IKEA

ஜெர்மனி, ஐக்கியாவின் மிகப்பெரிய சந்தையாக இன்றுவரை 50 கடைகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா இதுவரை 44 கடைகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மிகப்பெரிய ஐக்கியா கடை தற்போது தென் கொரியாவின் கியோங்கியின் குவாங்மியோங்கில் இருக்கிறது. இதன் தலைமையகம் இப்போது நெதர்லாந்தின் Delftல் அமைந்துள்ளது. ஐக்கியாவின் நிறுவனர் கம்ப்ராட், ஸ்வீடனின் ஸ்மாலாண்டில் உள்ள தனது வீட்டில் 27 ஜனவரி 2018 அன்று தனது 91 வயதில் இறந்தார். தற்போது அவரின் மூன்று மகன்களும் தந்தையின் முயற்சிகளை மேலும் மெறுகூட்டி வெற்றிகரமாக இட்டுச் செல்கின்றனர்.

ஐக்கியா போன்று தனது தாய்நாட்டின் பெருமையை பறைசாற்றும் நிறுவனம் வேறு எதுவும் இல்லையெனலாம். ஐக்கியா லோகோவில் உள்ள மஞ்சள் மற்றும் நீல வண்ணங்கள் ஸ்வீடிஷ் தேசியக் கொடியின் அடிப்படை வண்ணங்களால் உருவாக்கம் பெற்றவை. உலகமெங்கும் உள்ள அனைத்து ஐக்கியா கடைகளும் Swedish நாட்டுக்கொடியின் வண்ணங்களைத் தாங்கி நிற்கிறது.

IKEA
IKEA

ஆகமொத்தத்தில் முயற்சியும் ஆர்வமும், புதிய சிந்தனையும், மாற்றி யோசிக்கும் திறமையும் இருக்கும் எவரும் வெற்றியின் உச்சம் தொடலாம் என்பதை உலகுக்கு தொடர்ந்து பறைசாற்றிக்கொண்டே இருக்கிறது ஐக்கியா.

- றின்னோஸா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு