Published:Updated:

`கொரோனா தாக்கம்' - எப்படி இருக்கிறது திருப்பூர் தொழில்துறை? #MyVikatan

Representational Image
Representational Image

`வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும், மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புதான்' என்பார் வைரமுத்து.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனாவின் கோரப்பசி உலகெங்கும் தாண்டவமாடியதில், அது தொழில் நகரமான திருப்பூரிலும் பல இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

வந்தாரை வாழவைப்பது தமிழகம் என்றால்... அவர்களை வளப்படுத்தி அனுப்புவது திருப்பூர்தான். `படித்தவர்களுக்கு பெங்களூரு; படிக்காதவர்களுக்கு திருப்பூர்' என்று இளைஞர்கள் பலரின் உழைப்புக்கு ரத்தினக் கம்பளம் விரித்தது திருப்பூரே.

ஏற்றுமதி வர்த்தகம் மாதத்திற்கு 2000-2500 கோடி வரையிலும் உள்நாட்டு வர்த்தகம் 1000 கோடி வரையிலும் வருமானம் ஈட்டுகிறது. ஓடிய கைகளும் ஆடிய கால்களும் சும்மா இருக்காது என்பது போலத்தான் திருப்பூரின் அசுரத்தனமான உழைப்பும் இன்று ஓய்வில் இருக்கிறது.

Representational Image
Representational Image

#திருப்பூர்

ஒரு காலத்தில் எல்லா ஊர்களையும் போல விவசாய பூமியாகவே இருந்துவந்தது திருப்பூர். கோவையில் பஞ்சாலைகள் வரவினால் திருப்பூரிலும் ஆலைகள் வந்தன. கொல்கத்தாவில் சினிமா தயாரிக்கும் எண்ணத்தில் சென்ற குலாம் காதர் சாகிப், அங்கிருந்த பின்னலாடை தைக்கும் இயந்திரத்தை வாங்கி வந்ததுடன், மேலை நாட்டு இயந்திரங்களையும் பயன்படுத்தி, திருப்பூர் காதர் பேட்டையில் பேபி நிட்டிங் இண்டஸ்ட்ரீஸ் தொடங்கி பின்னலாடைத் தொழில் வளர்ச்சிக்கு விதை போட்டார்.

#ஒரு பனியன் எவ்வாறு உருவாகிறது

ஒரு பனியன் உருவாவது சாதாரணமல்ல. ஏற்றுமதி செய்யும் நிறுவனத்துக்கு வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள், தங்கள் நாட்டின் சீதோஷ்ன நிலைக்குத் தகுந்தவாறு ஆடைகளை வடிவமைத்துத் தர Chart அனுப்புவார்கள்.

அதன் அடிப்படையில், அதில் உள்ளவாறே ஆடை வடிவமைப்பு தரத்தில் மாதிரி ஆடைகள் (Model sample) தைத்து அனுப்ப வேண்டும். அதற்கு ஒப்புதல் அளித்த பின்பு, முதலில் அந்த ஆடைக்கு ஏற்ற நூல் எடுக்க வேண்டும். பின்பு, அந்த நூலைப் பின்னலாடையாக (knitting) மாற்றுவார்கள். பின்பு, அதை சாயமேற்றும் ஆலைக்கு (dying&bleaching) அனுப்பி, விரும்பிய வண்ணத்தில் பெறுவார்கள்.

அடுத்து, ஆடையை கெட்டித்தல் (Compacting) செய்து ஆலைக்கு அனுப்புவார்கள். இதனால் ஆடை சுருங்காது. துணியின் இறுதித்தன்மை உறுதிப்படும்.

இறுதியாக, துணியில் முன் தயாரிப்பு (pre production) முறையில் மீண்டும் வாங்கும் நிறுவனத்துக்கு, குறிப்பிட்ட ஆடைகளைத் தைத்து, மீண்டும் அவர்களின் அனுமதிபெற்று, துணி ஆயத்த ஆடைகள் வெட்டித் தைக்கப்படும். இடையில், அந்த ஆடையில் Design print, Embroidary, Emboss போன்றவை சேர்க்கப்படும். முடிவாக உறையிடப்பட்டு, வாங்குபவரால் இறுதியாய் பரிசோதிக்கப்பட்ட பின் கப்பல் அல்லது வான்வழியில் ஏற்றுமதியாகும்.

#ஆட்கள் தேவை

ஜப்பானில்தான் ஆட்கள் தேவை எனப் பலகை அதிகம் இருக்குமாம்.

அதற்கடுத்து திருப்பூரில் இருப்பதால், இதை மினி ஜப்பான் என்கிறார்கள். எல்லோருக்கும் ஏற்ற வேலை கொடுப்பதுதான் இந்நகரின் சிறப்பு. நூல் ஓட்டுவது, சாய ஆலைப் பணி, துணியை வெட்டுபவர்கள், தைப்பவர்கள், இஸ்திரி இட்டு அதனைக் கட்டுதல் என அனைத்து வகையினருக்கும் வேலை. இதுதவிர, இதைச் சார்ந்து பிரின்டிங், அட்டை தயாரித்தல், பாலித்தீன் கவர் எனப் பல தொழில்கள் உள்ளன. வட மாநிலத் தொழிலாளர்கள் பலரும் வேலையில் இருந்தாலும், இன்னும் ஆட்கள் பற்றாக்குறை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இவர்கள் அனைவரும் வாராந்திர சம்பளம் வாங்குபவர்கள் என்பதால் பெரிதாக சேமிப்பு போன்றவை எதுவும் இருக்காது. இன்றைய தொழில்துறையில் தொழிலாளர் பற்றாக்குறை மிகுந்துள்ளது. முன்பு ஷிஃப்ட் அடிப்படையில் செய்தனர். தற்போது, பீஸ் ரேட் அடிப்படையில் செய்யும்போது நாள்கள் அதிகமாகும். ஆட்கள் கிடைப்பதில்லை. இவர்கள் அனைவரும் அடுத்து என்ன செய்வது என அறியா நிலையில் இருக்கின்றனர். காலம் மாறும் எனக் காத்திருக்கின்றனர்.

Representational Image
Representational Image

#ஏற்றுமதியாளர்கள் நிலை

கொரோனா தடையினால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகியிருப்பது ஏற்றுமதியாளர்களே. ஒரு பனியனின் சாம்பிள் அனுப்பியது முதல் சரக்கு லாரியில் ஏற்றிப் பணம் பெறுவது வரை இவர்கள் பணி பிரதானம். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் சரக்குகளைத் தைத்து முடிக்கவில்லையெனில், ஏற்றுமதியாளர்கள் தம் சொந்தச் செலவில்தான் வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும்

இவர்கள் ஏற்றுமதி செய்யும் வெளிநாடுகளில் தற்போது தடை உள்ளது. சீனாவினால் வருட ஆரம்பித்திலிருந்தே ஆர்டர் குறைவு.

இத்தாலி, கடந்த ஒரு மாதம் முன்பே பனியன் தயாரிப்பை நிறுத்தி வைக்குமாறு கூறிவிட்டனர். அமெரிக்காவோ, 20 நாள்களுக்கு முன்பு அனைத்து ஆர்டர்களையும் முற்றிலும் (Cancel) நிராகரித்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் சீதோஷ்ன நிலை இனி மாற இருப்பதால், குளிர்கால ஆடைகளை கோடைகாலத்தில் வாங்க மாட்டார்கள். இனி, அது திருப்பூரிலேயே தேங்கும் நிலை ஏற்படும்.

உள்நாட்டு வர்த்தகத்தில் தீபாவளி மற்றும் கோடைகாலத்தில்தான் விற்பனை சூடுபிடிக்கும். தற்போது, கோடைகால ஆடைகள் அப்படியே ஸ்தம்பித்துள்ளன.

#சுழற்சியில் லாபம்

மற்ற தொழில்களைப் போல் திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் உடனடி லாபம் பார்ப்பதில்லை. ஒரு சிப்மென்ட்டை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தால், அதற்கான தொகை டி.டி, டி.பி பேசில் 60 நாளும் எல்.சி பேசில் 30 நாளிலும் பணம் அனுப்புவார்கள். அதாவது, ஒன்றாம் நாளில் ஏற்றுமதி செய்தால் 60-ம் நாளில் பணம் வரும்.

அடுத்த ஆர்டருக்கு இரண்டாம் நாள் அனுப்பினால், 61-ம் நாள் பணம் வரும். இவ்வாறு சுழற்சி முறையில் பணத்தை நிறுவனத்திலேயே முடக்குகின்றனர். இத்தகைய அடிப்படையில்தான் வாடகை, தொழிலாளர் கூலி மற்றும் முதலீடு செய்கின்றனர். தற்போது இந்தச் சுழற்சி நின்றுவிட்டதால், நிலைகுலைந்து போயுள்ளனர் ஏற்றுமதியாளர்கள்.

Representational Image
Representational Image

#பாதிப்புகள்

* ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின், ஏற்றுமதியாளர்களுக்கான சலுகை குறைக்கப்பட்டது. டியூட்டி டிராபேக் 7.25-7.70% இருந்து 1.7-2.1% குறைக்கப்பட்டது.

இதனால் லாப சதவிகிதம் குறைந்துள்ளது.

* சிறு, குறு நிறுவனங்கள் பல மூடப்பட்டு, அதன் முதலாளிகளே பிற நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்கின்றனர்.

* இந்தியத் தயாரிப்பு பின்னலாடைகளைக் காட்டிலும் வங்கதேசம் 25% வரை குறைந்த விலையில் மற்ற நாட்டினர் ஆடைகளை வாங்குகின்றனர். ஸ்ரீலங்கா மற்றும் வங்கதேசம் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதால், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாட்டினருக்கு பெருமளவு ஏற்றுமதிசெய்கின்றனர்.

* ஆயத்த ஆடை ஏற்றுமதியில், வங்கதேசம், வியட்நாம், பாகிஸ்தான் வளர்ச்சி அடைந்துள்ளது. அவர்களுடன் போட்டி போடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நம்மைவிட குறைந்த விலைக்குத் தர தயாராக உள்ளனர்.

* முன்பு வங்கிக்கடன், அந்த வங்கி மேலாளரே 3 முதல் 5 கோடி வரை சொத்து மதிப்பை வைத்து நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்தார். தற்போது, இவர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு இவரின் மேலதிகாரி கடன் வழங்குவதால், கடன்தொகை பெற நடைமுறைகள் அதிகமாகியுள்ளன.

*ஏற்றுமதிக்கு வழங்கக்கூடிய GST Return சலுகைகள் அரசிடமிருந்து வர மாதக்கணக்கில் காலதாமதமாகிறது.

* பருத்தி ஆடை வடிவமைப்பில் முன்னணியில் இருந்தாலும் பாலியஸ்டர் ஆயத்த ஆடையில் சீனா முன்னணியில் உள்ளது. மேலும், குறைந்த விலையில் Accessories அளிக்கும் சீனா தற்போது நிறுத்தியுள்ளதால், அதிக விலை கொடுத்து அயல் நாடுகளிலிருந்து வாங்குகின்றனர்.

Representational Image
Representational Image

#எதிர்காலம்

ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் பெருமந்தம் ஏற்பட்டுள்ள சூழலில்...

எதிர்காலம் கேள்விக்குறியாகவும், நிகழ்காலம் ஆச்சர்யக்குறியாகவும் இருக்கிறது. நம் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், உலக நாடுகள் சகஜ நிலைக்கு மாறினால் மட்டுமே திருப்பூர் தொழில்துறை வளம்பெறும்.

நம்பிக்கை மேல் நம்பிக்கை இழக்காமல் உள்ளனர் திருப்பூர் மக்கள். மீண்டும் தங்கள் உழைப்பின் மூலம் திருப்பூரை மீட்டெடுக்கக் காத்திருக்கின்றனர்.

மானிய உதவி, கடன் சலுகைகள் பின்னலாடைத் தொழிலுக்கு அளித்தால்தான் திருப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பும்.

`எங்கள் துயர் நிறை உழைப்பு வீண் போகாது எழும்

சிறுபொறி மிகப் பெருந் தீயாய்' எனும் அதோயெவ்ஸ்கி வார்த்தைக்கேற்ப மீண்டெழும் என நம்புவோம்.

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு