Published:Updated:

``ஆயிரம் பேருக்கெல்லாம் சமைச்சோம்... இப்போ..?'' - நலியும் கேட்டரிங் தொழில்

''கரண்டியை விட்டுட்டு கிடைக்கிற வேலையை செய்ய ஆரம்பிச்சிட்டோம்.’’ - ருசியிழக்கும் கேட்டரிங் தொழில்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பல பேருடைய வாழ்வாதாரத்தின் வேரை ஆட்டம்காண வைத்திருக்கிறது. இதில் கேட்டரிங் தொழிலில் இருப்பவர்களும் அடக்கம். லாக்டெளன் காரணமாக மக்களில் பலரும் தங்கள் வீட்டுக் கல்யாணங்களை வீடுகளிலும் கோயில்களிலும் சிம்பிளாக நடத்த ஆரம்பிக்க, நம் வீடுகளின் விழாக்களை ருசிக்க வைத்துக்கொண்டிருந்தவர்களில் பலரும் அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வது என்ற நிலைமையில்தான் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதுமட்டுமா, கோயில்களும் மூடிக்கிடக்க, அங்கு விழாக்களுக்கு சமைத்துக்கொண்டிருப்பவர்களும் வீடடங்கிக் கிடக்கிறார்கள். சின்னத்திரை, பெரிய திரை ஷூட்டிங் என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த கேட்டரிங் தொழிலாளர்களும் வேலையில்லாமல் முடங்கிக்கிடக்கிறார்கள்.

இளங்கோவன்
இளங்கோவன்

சென்னையில் கடந்த 10 வருடங்களாக கேட்டரிங் பிசினஸ் செய்துகொண்டிருக்கிற இளங்கோவன், ‘’எங்களுக்கெல்லாம் சுத்தமா வேலையே இல்ல. கேட்டரிங் ஆர்டர் வந்து நாலு மாசமாச்சு. கோயில்ல கல்யாணத்தைப் பண்ணிட்டு பக்கத்துல இருக்கிற ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்துட்டுப் போயிடுறாங்க. ஒரு கல்யாண ஆர்டர் எடுத்தா சமையல் மாஸ்டர், பந்தி பரிமாறுகிறவங்க, காற்கறி நறுக்குற கட்டிங் மாஸ்டர், சர்வீஸ் சூப்பர்வைசர், ஐஸ்க்ரீம் ஸ்டால், பஞ்சு மிட்டாய் ஸ்டால், பாப்கார்ன் ஸ்டால், பீடா ஸ்டால்னு குறைஞ்சது 100 பேருக்கு நான் வேலைகொடுப்பேன். என்னோடு தொடர்பிலிருக்கிற போட்டோகிராபர், வீடியோகிராபர், பூ அலங்காரம் பண்றவங்களுக்கும் வேலை கொடுப்பேன். இன்னிக்கு பல கல்யாணங்கள்ல வெஜிடேரியன் சாப்பாடு, நான்வெஜ் பிரியாணி ரெண்டும் போடுறாங்க. இந்த மாதிரி கல்யாண ஆர்டர் கிடைச்சா இன்னும் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்.

இப்படி மாசத்துக்கு அதிகபட்சமா 10 கல்யாண ஆர்டர் கிடைச்சாலும் அந்த மாசம் எங்க வாழ்க்கை நல்லபடியா ஓடிடிடும். மிச்ச நாள்கள்ல நிச்சயத்தார்த்தம், பர்த்டே ஃபங்ஷன்னு சின்னச் சின்னதா விசேஷ ஆர்டர் கிடைச்சிட்டே இருக்கும். இப்ப எதுவுமே இல்லாம உட்கார்ந்துட்டு இருக்கோம். சின்னச் சின்னதா இருக்கிற ஹால்களோட டை அப் வெச்சிக்கிட்டா 100 சாப்பாட்டுக்காவது ஆர்டர் கிடைக்கலாம். அதைப்பத்திதான் யோசிக்கிட்டிருக்கேன். ஆனா, முன்னாடி மாதிரி நிறைய பேருக்கு வேலைகொடுக்க முடியாது’’ என்கிறார் வருத்தமாக.

நாகேந்திரன்
நாகேந்திரன்

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நாகேந்திரன், ``கிராமங்கள்ல இருக்கிற கேட்டரிங்காரங்களுக்கு அவங்க சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாண ஆர்டர் கண்டிப்பா கிடைச்சிடும். இதைத் தவிர்த்து சுத்துப்பட்டு கிராமங்கள்ல இருக்கிற கோயில்கள்ல ஏதாவது ஒரு விசேஷம் நடந்துட்டே இருக்கும். அதனால, மாசத்துக்கு `20 நாள் வேலை இருக்கும். இப்போ கல்யாணத்தைக் கோயில்ல வெச்சுட்டு 20 பேருக்கு சாப்பாடு செஞ்சு தரமுடியுமான்னு கேட்கிறாங்க. அது ஒரு ஆளு வேலைங்க. நாங்க ஒரு குரூப்பா இருக்கிறப்போ ஒரு ஆளு மட்டும் எப்படி இந்த வேலைக்கு ஒத்துக்க முடியும் சொல்லுங்க...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வழக்கமா ஆடி மாசம்னா எல்லா ஊர் கோயில்லேயும் விசேஷம் களைகட்டும். எங்களுக்கும் சமையல் வேலை இருந்துகிட்டே இருக்கும். இப்போ அதுலயும் மண்ணு விழுந்திடுச்சு. எல்லாம் கரண்டியை விட்டுட்டு கிடைக்கிற வேலையைச் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க’’ என்கிறார் வருத்தத்துடன்.

முருகேசன்
முருகேசன்

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு கேட்டரிங் செய்கிற முருகேசனிடம் பேசினோம். "கொரோனாவுக்கு முன்னாடி குறைஞ்சது 1,000 பேருக்கு சமைச்சு அனுப்புவோம். இப்போ 150 பேருக்கு ஆர்டர் வந்தாலே பெரிய விஷயமா இருக்கு. சமைக்கிற ஆர்டர் வந்தாதான் வாழ்க்கைன்னு இருக்கிறதால எங்க மக்கள்கிட்ட பெரியளவுல சேமிப்பெல்லாம் ஒண்ணும் இருக்காது. கஷ்ட ஜீவனத்துலதான் இருக்கோம்’’ என்கிறார்.

சினிமாத்துறையினருக்கு உணவு அனுப்பிக்கொண்டிருந்த நளபாகம் மெஸ்ஸின் உரிமையாளர் சின்ராசு, ''ஷூட்டிங் நடந்திட்டு இருந்தப்போ தினமும் குறைஞ்சது 1,000 பேருக்கு சாப்பாடு அனுப்பிக்கிட்டுருந்தேன். இந்த நாலு மாசமா சும்மாதான் இருக்கேன். அடுக்கி வெச்ச சமையல் பாத்திரமெல்லாம் தூசுபடிஞ்சு கிடக்கு. ஊரடங்கு ஆரம்பிச்சவுடனே, என்கிட்ட வேலைபார்த்த எல்லாருக்கும் கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அவங்கவங்க ஊருக்கு அனுப்பி வெச்சுட்டேன். ஊரடங்கு முடிஞ்சு, சினிமா ஷூட்டிங் ஆரம்பிச்ச பிறகுதான், அவங்களையெல்லாம் கூப்பிடணும். அதுவரைக்கும் எந்த வேலையுமில்லாம இப்படி ஒத்தையிலதான் உட்கார்ந்திருக்கணும்'' என்கிறார்.

சினிமாவில் புரொடக்‌ஷன் மேனேஜராக இருக்கிற சேரை ராஜூ, ‘’சின்னச் சின்னதா அங்கங்கே ஷூட்டிங் நடத்துறவங்க ஹோட்டல்கள்ல பார்சல் சாப்பாடு வாங்கிடறாங்க. ஆயிரக்கணக்குல சாப்பாடு ரெடி பண்ற கேட்டரர்ஸ்தான் சொந்தமா பாத்திரங்கள் வெச்சிருப்பாங்க. அப்பப்போ ஆர்டர் கிடைச்சு சமைக்கிற கேட்டரர்ஸ் சமையல் பாத்திரங்களை வாடகைக்குதான் எடுப்பாங்க.

சேரை ராஜூ
சேரை ராஜூ

அப்படி எடுத்த பாத்திரங்களுக்கு வாடகை கொடுத்துக்கிட்டு, இதோ இன்னிக்கு ஷூட்டிங் ஆரம்பிச்சிடும், நாளைக்கு ஷூட்டிங் ஆரம்பிச்சிடும்னு நம்பிட்டு இருக்காங்க. கேட்டரிங்ல வேலைபார்க்கிறவங்களுக்கு மாசத்துல 20 நாள் வேலை கிடைச்சிடும். அந்தந்த நாளுக்கான கூலியை வாங்கிட்டுப் போயிடுவாங்க. இதை வெச்சுதான் முழு மாசத்தை ஓட்டுவாங்க. இப்போ வேலையும் இல்லாம ரொம்ப கொடுமைங்க’’ என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு