Published:Updated:

பாபநாசம்: 23 ஆண்டுகளாக காந்தி ஜெயந்திக்குத் திறக்கப்படும் ஆளில்லா கடை - எப்படிச் செயல்படுகிறது?

பாபநாசம் ஆளில்லா கடை
News
பாபநாசம் ஆளில்லா கடை

பாபநாசத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் நடத்தப்படும் ஆளில்லா கடை மூலம் வசூலாகும் பணம் மருத்துவ உதவி, கல்வி உதவி போன்ற சேவைத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Published:Updated:

பாபநாசம்: 23 ஆண்டுகளாக காந்தி ஜெயந்திக்குத் திறக்கப்படும் ஆளில்லா கடை - எப்படிச் செயல்படுகிறது?

பாபநாசத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் நடத்தப்படும் ஆளில்லா கடை மூலம் வசூலாகும் பணம் மருத்துவ உதவி, கல்வி உதவி போன்ற சேவைத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பாபநாசம் ஆளில்லா கடை
News
பாபநாசம் ஆளில்லா கடை
கும்பகோணம் அருகே, காந்தி ஜெயந்தி நாளில் மக்கள் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளில்லா கடை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 23 ஆண்டுகளாக ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் இந்த ஆளில்லா கடையில் வைக்கிற பொருள்களுக்கான பணம் ஒரு ஆண்டு கூட குறையாமல் சரியாக இருந்துள்ளது என்பதை கடை நடத்துபவர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.
காந்தி ஜெயந்தி தினத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா கடை
காந்தி ஜெயந்தி தினத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா கடை

கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் பேருந்து நிறுத்தத்தில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளான காந்தி ஜெயந்தி தினத்தில் ஆளில்லா கடை திறக்கப்படுகிறது. ரோட்டரி சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகளால் கடந்த 23 ஆண்டுகளாக ஆளில்லா கடை ஒரு நாள் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியா நேர்மை மிகுந்த நாடாகத் திகழ வேண்டும் என காந்தி விரும்பினார். அதனை வலியுறுத்தும் விதமாக நேர்மை, உண்மை, நாணயம், நம்பிக்கை போன்றவற்றை மக்கள் மனதில் விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆளில்லா கடை நடத்தப்படுகிறது.

ரூ 8,000 மதிப்புடைய பொருள்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு ரூபாய் கூட அதிகமாகவும், குறைவாகவும் இல்லாமல் பொருளுக்குறிய பணம் சரியாக இருந்தது தங்களை பெருமிதத்தில் ஆழ்த்தியிருப்பதாக ரோட்டரி சங்கத்தை சேர்ந்தவர்கள் நெகிழ்கின்றனர்.
ஆளில்லா கடை
ஆளில்லா கடை

இது குறித்து ரோட்டரி சங்கத் தலைவர் கே.எஸ்.அறிவழகன் என்பவரிடம் பேசினோம். "மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் மட்டும் பாபநாசத்தில் ஆளில்லா கடை நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் எதைச் செய்தாலும் உள்ளத்திற்கும், உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ள வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பிளக்ஸ் வைத்திருந்தோம்.

பொருள்கள் வைப்பதற்கான ஸ்டாண்டில், வீட்டு உபயோகப் பொருள்கள், குழந்தைகளுக்கான எழுதுப் பொருள்கள், சாக்லேட், பிஸ்கட் போன்ற திண்பண்டங்கள் ஆகியவற்றை அடுக்கி வைத்திருந்தோம். அதில் அந்தந்த பொருளுக்கான விலையையும் குறிப்பிட்டிருந்தோம். அத்துடன் பொருள்களுக்கு நடுவே பணம் வைக்கும் இடம் எனக் குறிப்பிட்டு சிறிய கல்லா பெட்டி ஒன்றையும் வைத்திருந்தோம்.

ஆளில்லா கடை
ஆளில்லா கடை

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொண்டு அதற்குறிய பணத்தை டப்பாவில் வைத்து விட்டு மீதி சில்லறையும் எடுத்து செல்லும் வகையில் கடை அமைக்கப்பட்டிருந்தது. கடையினை பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி திறந்து வைத்தார். ஒரு நாள் முழுவதும் நடத்தப்பட்ட இந்தக் கடையில் மக்கள் நேர்மையுடன் நடந்து கொண்ட விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

ரூ 8,000 மதிப்பில் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. கடையைத் திறந்து விட்டு நாங்கள் சென்று விட்டோம். மீண்டும் இரவு வந்து கடையைப் பார்த்தபோது அனைத்து பொருள்களும் விற்பனையாகியிருந்தன. பணத்தை எண்ணி பார்த்தோம் சரியாக ரூ.8,000 இருந்தது. அதிகமாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை என்பது இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம்.

அறிவழகன்
அறிவழகன்

இந்தியா நேர்மை மிகுந்த நாடாகத் திகழ வேண்டும் என காந்தி கனவு கண்டார். அவரது கனவை நனவாக்கும் விதமாக 23 ஆண்டுகளாக ஆளில்லா கடை நடத்தப்பட்டு வருகிறது. கடைக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொள்ளும் விதம் காந்தி கண்ட கனவு நிறைவேறி விட்டதாகவே உணர வைக்கிறது.

ஆளில்லா கடை மூலம் வசூலாகும் பணம் மருத்துவ உதவி, கல்வி உதவி போன்ற சேவைத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாபநாசத்தில் நடத்தப்படும் ஆளில்லா கடையினை தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம்" என்றார்.