Published:Updated:

மும்பை: முதல்முறையாக ₹100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை; அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும் அபாயம்!

Representational Image
Representational Image ( Photo: Pixabay )

மும்பையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது. இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

நாட்டில் கொரோனா பரவலுக்கு நிகராக, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரித்து வருகிறது. இடையில் ஒரு சில நாள்கள் மட்டும் விலை அதிகரிக்கவில்லை. அதுவும் ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல் காரணமாகத்தான். கடந்த மே மாதத்தில் ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்தபின், அந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 15 நாள்கள் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்கெனவே பர்பானி போன்ற மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்ட நிலையில், தற்போது மும்பையிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியிருக்கிறது.

Rupee
Rupee
Image by Free stock photos from www.rupixen.com

இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பை அருகில் உள்ள தானேயில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிய நிலையில் தற்போது மும்பையிலும் தாண்டியிருக்கிறது. நாட்டிலேயே மெட்ரோ பாலிடன் நகரங்களில் மும்பையில்தான் முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியிருக்கிறது. மும்பையில் மே 1-ம் தேதி ரூ.96.83 ஆக இருந்தது.

அது படிப்படியாக அதிகரித்து இப்போது ரூ.100.19-க்கு வந்து நிற்கிறது. டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.93.94, கொல்கத்தாவில் ரூ.93.97, சென்னையில் ரூ.95.51 ஆக இருக்கிறது.

பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்

டீசல் விலையும் மும்பையில் ரூ.92.17 ஆக அதிகரித்து இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்துக்குள் டீசல் விலையும் மும்பையில் ரூ.100 தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. பெட்ரோலுக்கு நிகராக டீசல் விலையும் அதிகரித்து வருவது அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு