Published:Updated:

கொரோனாவால் சிதைந்த தையல் தொழில்... தவிக்கும் கலைஞர்கள்... கைகொடுக்குமா அரசு?

Representational Image
Representational Image

ஏற்கெனவே தையல் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நெருக்கடி தையல் தொழிலை மேலும் பாதிப்படையச் செய்துள்ளது.

`டெய்லர்' கடைக்குப் போய் துணிக்கு அளவு கொடுத்த நாள்கள் எல்லோரின் நினைவிலும் தங்கியிருக்கும். நம் அனைவரின் நேரடியாகத் தொடர்புடையவர்களாகத் தையல் கலைஞர்கள் அப்போது இருந்தனர். என்னதான் ரெடிமேட் உடைகள் கடைகளில் குவிந்தாலும் இன்றுவரை உடைகளைத் தைத்து உடுத்தும் பழக்கம் பலருக்கும் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பல சிறு தொழில்களைப் போலவே தையல் தொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தையல் தொழிலாளர் குமார்
தையல் தொழிலாளர் குமார்

இதுகுறித்து தையல் தொழிலாளர் குமார் வருத்தத்தோடு பேசினார். ``ஏற்கெனவே தையல் தொழில் மிகவும் பாதிப்பில்தான் உள்ளது. தற்போது இந்தக் கொரொனாவால் எங்கள் வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனக்கு ஒரு நாள் தையல் கூலி 300 ரூபாய்தான். அதை வைத்துதான் என் குடும்பத்தை நடத்தி வந்தேன். வாடகை வீட்டில் இருப்பதால் கடந்த 3 மாதங்களாக வாடகையும் கொடுக்க முடியவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கடந்த 3 மாதமாக சுயஉதவிக் குழுவில் வாங்கிய கடனைக்கூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றேன். ரேஷன் கடையில் கொடுத்த 1,000 ரூபாயும் போதுமானதாக இல்லை. பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளையும் செய்ய முடியாமல் வறுமையில் தவிக்கிறேன்" என்றார் ஆதங்கத்துடன்.

தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தையல் தொழிலை நம்பி வாழ்கிறார்கள்.
சி.மணிவேல்

இதுகுறித்து தமிழ்நாடு தையல் கலைஞர்கள் நலச் சங்கத் தலைவர் சி.மணிவேல் நம்மிடம் பேசினார். ``தையல் கலைஞர்கள் வருவாய் ஈட்டும் முக்கிய மாதங்களாக ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கருதப்படுகின்றன. பள்ளிச் சீருடைகள் தைப்பது அவர்களுக்குப் பெரிதும் கைகொடுக்கும். ஆனால், தற்போதைய சூழலில் ஊரடங்கு உத்தரவாலும் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத காரணத்தாலும் தையல் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 10 லட்சத்திதுக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தையல் தொழிலை நம்பி வாழ்கிறார்கள். இந்த நிலையில் தையல் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு தையல் கலைஞர்கள் பலரும் வறுமையில் வாடும் சூழல் உருவாகியுள்ளது. எங்களுக்கென குரல் கொடுப்பதற்கு எந்த இயக்கமோ அரசியல் தலைவர்களோ இல்லை. இதனால் தையல் கலைஞர்கள் தங்கள் அடிப்படை வசதிகளைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

 சி.மணிவேல் (தமிழ்நாடு தையல் கலைஞர்கள் நலச் சங்க தலைவர்)
சி.மணிவேல் (தமிழ்நாடு தையல் கலைஞர்கள் நலச் சங்க தலைவர்)

வறுமையில் இருக்கும் சில தையல் கலைஞர்கள் கொத்தனார் வேலை, கூலி வேலை என வேறு வழியே இல்லாமல் மாற்றுத் தொழில் செய்ய தொடங்கியுள்ளனர். முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் வருவாய் சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் தற்போது, ரெடிமேட் கலாசாரத்துக்கு வாடிக்கையாளர்கள் பலரும் மாறிவிட்டதால் அதிலும் பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி தையல் கலையைக் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் மிகவும் குறைந்துள்ளர். இதனால் தையல் தொழில் வளர்ச்சியின்றி காணப்படுகிறது. நேரடியாக மக்களைத் தொட்டு அளவு எடுக்கும் பணி என்பதால் கொரோனா பீதியால் மக்கள் தையல் கலைஞர்களைத் தவிர்க்க வாய்ப்புள்ளது. தையல் கலைஞர்களுக்குத் தற்போது வேலை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பளத்துக்கு பணிபுரியும் தையல் கலைஞர்களுக்கு போதிய சம்பளம் வழங்கக்கூட கையில் பணம் இல்லாத அளவுக்கு தையலக உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே தையல் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி தையல் தொழிலை மேலும் பாதிப்படையச் செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட தையல் கலைஞர்களுக்கு தமிழக அரசு ரூபாய் 2,000 நிவாரண உதவி அறிவித்தது. இது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. அதுவும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் 30 சதவிகித தையல் கலைஞர்கள் தையல் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யவில்லை. அதனால் அவர்களுக்கான அடிப்படை உதவிகள்கூட கிடைக்கவில்லை.

தையல் கலைஞர்களுக்கென இருக்கும் நல வாரியத்தில் துணி உற்பத்தி, ஏற்றுமதி & இறக்குமதி நிறுவனங்கள் மூலம் பெறப்படும் வரிகளைக் கொண்டு நிவாரணம் வழங்கிட வேண்டும்.
 `கொரோனா அச்சம்.. அனைவருக்கும் இலவச முகக்கவசம்..!’ - அசத்தும் மதுரை தையல் கலைஞர்

இந்த இக்கட்டான சூழலிலும் தையல் கலைஞர்கள் தங்களிடம் இருக்கும் துணிகளைக்கொண்டு மாஸ்க் தயாரித்து அதைத் தொண்டு நிறுவனங்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசு நலிந்து கிடக்கும் தையல் கலைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றக் கேட்டுக்கொள்கிறோம். கட்டடத் துறைக்கு என இருக்கும் நல வாரியத்தில் கட்டுமான நிறுவனங்களின் மூலம் பெறப்படும் வரிகளைக் கொண்டு வாரியத்துக்கு நிதி திரட்டுவதுபோல், தையல் கலைஞர்களுக்கென இருக்கும் நல வாரியத்தில் துணி உற்பத்தி, ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனங்கள் மூலம் பெறப்படும் வரிகளைக் கொண்டு நிவாரணம் வழங்கிட வேண்டும். நலிந்து கிடக்கும் தையல் தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் கடைக்கு 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும். இது தையல் கலைஞர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும்" என்றார்.

நலிந்து கிடக்கும் தையல் தொழில் பொலிவுபெற அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் காத்திருப்போம்!
அடுத்த கட்டுரைக்கு