Published:Updated:

`300 ரூபாய் சம்பளம் டு ஜெட் ஏர்வேஸ் ஓனர்!’- எப்படி வீழ்ந்தார் நரேஷ் கோயல்?

Jet airways Naresh goyal
Jet airways Naresh goyal

உள்நாட்டு விமானப் போக்குவரத்து தனது ஜெட் ஏர் நிறுவனத்தைப் பயன்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளைத் தொடங்கினார் நரேஷ் கோயல்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நரேஷ் கோயல் 300 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கியவர். பஞ்சாப்பில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்தவர். 11 வயதில் தந்தையை இழந்ததால் குடும்பத்தில் வறுமை அழையா விருந்தாளியாக நுழைந்தது. தாய்மாமாவின் உதவியால் தான் இவரது குடும்பம் இயங்கியது. கோயலுக்கு பட்டயக்கணக்காளர் ஆக வேண்டும் என்பது விருப்பம். குடும்ப சூழல் பி.காம் படிப்புடன் நிறுத்திவிட்டது. 1967-ல் கல்லூரி வாழ்க்கை நிறைவடைந்தது. டிராவல் ஏஜென்சியில் 300 ரூபாய் சம்பளத்தில் வேலை. 7 வருடங்கள் டிராவல் ஏஜென்சி, விமான போக்குவரத்தின் நிறுவனங்களில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றார். டிராவல் ஏஜென்சியில் 3 வருடங்கள் பணியாற்றினார். அந்த நாள்களில் இரவுப் பொழுதுகளை ஏஜென்சியிலே கழித்து வந்தார். கோயல் பல்வேறு வெளிநாட்டுப் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றியதால் இந்தத் துறை ரீதியிலான பல்வேறு பயிற்சிகளையும் பெற்றார்.

jet airways
jet airways

1967 - 1973 இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சர்வதேச விமான நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். 1969-ம் Iraqi Airways-ல் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். 1971-ல் Royal Jordanian Airlines பிராந்திய மேலாளர் பணி. அதன் பின்னர் Middle Eastern Airline நிறுவனத்தில் விற்பனைப் பிரிவு, டிக்கெட் புக்கிங் எனப் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்துவந்தார். இந்த 7 வருடத்தில் தான் பெற்ற அனுபவத்தைக் கொண்டு 1974-ம் ஆண்டு சொந்தமாக ஜெட் ஏர் என்ற ஏஜென்சியைத் தொடங்கினார். இதன் மூலம் தேசிய விமான முகவாரானார். இந்த நிறுவனத்தின் நோக்கமே வெளிநாட்டு விமான நிறுவனங்களை இந்தியாவில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் பணியைச் செய்து வந்தது. ஏர் பிரான்ஸ், ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனத்துக்காகப் பணி செய்து வந்தது.

இதற்கு அடுத்த வருடமே `பிலிப்பைன் ஏர்லைன்ஸ்’ இந்தியாவின் பிராந்திய மேலாளராக இவரை நியமித்தது. இந்தியாவில் அந்த நிறுவனத்தின் வணிக செயல்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில்தான் இந்திய பொருளாதாரத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது. 1991-களில் தாராளமயமாக்கள், உலகமயமாக்கள் மற்றும் தனியார்மயமாக்கள் கொள்கை கொண்டுவரப்பட்டது. இதை நரேஷ் கோயல் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். உள்நாட்டு விமான போக்குவரத்து தனது ஜெட் ஏர் நிறுவனத்தைப் பயன்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளைத் தொடங்கினார். ஜெட் ஏர்வேஸ் தனது விமான போக்குவரத்தை 1993 மே 5-ம் தேதி தொடங்கியது. கல்ப் ஏர் மற்றும் குவைத் ஏர் உள்ளிட்ட மத்திய கிழக்கு முதலீட்டாளர்கள் குழுவின் ஆதரவோடு இந்த விமான நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் தனியார் விமான நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் தான்.

jet airways
jet airways

வளைகுடா நாடுகளில் இந்தியாவின் பல்வேறு மாநில மக்கள் பணியாற்றி வருகின்றனர். இந்திய நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் வளைகுடா நாடுகளுக்குப் பயணம் செய்து வந்தனர். இதுதான் அவரை உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்குவதற்காக யோசனையைக் கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில் பெரு நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு மட்டுமே சர்வதேச விமானங்கள் சென்று வந்தது. சிறிய நகரங்களுக்கு பெரிய அளவில் விமான போக்குவரத்து இன்றி காணப்பட்டது. இதன்காரணமாகவே சிறிய நகரங்களை ஜெட் ஏர்வேஸ் மூலம் இணைக்கும் யோசனை இவருக்கு உதித்தது. இவரது யோசனைகளை வளைகுடா நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டு நிதியுதவி செய்தது. 4 போயிங் ரக விமானங்களை லீஸ்க்கு எடுத்து தனது நிறுவனத்தை தொடங்கினார். தனது முதல் சேவையை மும்பை - அஹமதாபாத் இடையே தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் ஆண்டுகள் மிகவும் பரபரப்பாக இயங்கியது. முதல் வருடத்தில் ஜெட் ஏர்வேஸ் 7,30,000 பயணிகளை வெற்றிகரமாக சுமந்து சென்றது. 2001-ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ்க்குச் சொந்தமாக 30 விமானங்கள் இருந்தன. 37 இடங்களுக்குத் தினசரி 195 விமான சேவையை வழங்கி வந்தது. 2004-ல் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. மும்பையில் இருந்து லண்டனுக்குத் தனது முதல் சேவையை ஜெட் ஏர்வேஸ் வழங்கியது. 2005-ம் ஆண்டு டெல்லி - லண்டன் சேவையை நீட்டித்தது. 2007-ம் ஆண்டு ‘ஏர் சகாரா’ நிறுவனத்தை வாங்கியது. அதை ‘ஜெட் லைட்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது.

jet airways
jet airways

மோசமான செயல்பாடுகள் காரணமாக 2002-ல் முதல் முறையாக நட்டத்தை சந்தித்தது. அதில் இருந்து மீண்டு வர பல்வேறு யுத்திகளை கையாண்டார். அவை பலனும் கொடுத்தது. இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் அரசின் கொள்கைகளும் கோயலுக்குச் சாதகமாக இருந்தது. 2010-ல் இந்தியாவின் மிகப்பெரிய விமானப்போக்குவரத்து நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் உருவானது. 2013-ம் அண்டு Ethihad Airway, ஜெட் ஏர்வேஸ் 24 சதவிகித பங்குகளை வாங்கியது. 2006-ல் ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள் உச்சத்தில் இருந்தது. இதற்கடுத்த ஆண்டுகள் அந்த நிறுவனத்தின் பங்குகள் குறையத்தொடங்கியது. நிறைய விமான நிறுவனங்கள் உள்நாட்டுப் போக்குவரத்தில் அடியெடுத்து வைத்தது இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது. போட்டி நிறுவனங்கள் குறைந்த விலையில் விமான போக்குவரத்தை சாத்தியப்படுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குத் தலைவலியாக இருந்தது. இதன் விளைவாக 2014-ல் மிகப் பெரிய சிக்கல்களைச் சந்திந்தது. 2013 - 14 நிதியாண்டில் 3,667 கோடி நட்ட கணக்கைக் காட்டியது.

வாடிக்கையாளர்களுக்கு மற்ற நிறுவனங்கள் ஏராளமான சலுகைகள வழங்கியது. போட்டியைச் சமாளிப்பதற்கு பல்வேறு யுத்திகளை நரேஷ் கோயல் கையாண்டார். ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் அவ்வப்போது சிறுசிறு விபத்துக்குள்ளானதால் வாடிக்கையாளரின் நன்மதிப்பை இழந்தது. அதனுடன் சேர்ந்து எண்ணெய் விலை உயர்வும் ஒரு பிரச்னையாகப் பார்க்கப்பட்டது. 8 வருடங்களாக நட்ட கணக்கை காட்டி வந்த ஜெட் ஏர்வேஸ் 2015-ல் ரூ. 461.11 கோடி லாபக்கணக்குக் காட்டியது. நிர்வாகத்தில் கொண்டு வந்த மாற்றங்கள்.. சர்வதேச அளவில் எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்த லாபத்துக்குக் காரணமாக அமைந்தது.

jet airways
jet airways

2018-ல் மீண்டும் நிலைமை மோசமானது. தனது நிறுவன பங்குகளை விற்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். விமான நிறுவனத்தைத் தொடர்ந்து இயக்குவதற்காகப் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றார். 2019-ல் பொருளாதார சூழல் மேலும் சிக்கலானது. ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். ஏப்ரல் 15-ம் தேதி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எண்ணெய் சப்ளை செய்வதை நிறுவனங்கள் நிறுத்தியது. நிலுவைத் தொகை செலுத்தினால் மட்டுமே எண்ணெய் வழங்கப்படும் எனத் தெரிவித்தது. வேறுவழியின்றி அந்த நிறுவனம் அனைத்துச் சேவைகளையும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தியது. வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்திருந்தால் அந்தத் தொகையை ஏஜென்சியைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுங்கள் எனத் தனது ட்விட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி பரிமாற்றத்தில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு தற்போது 8,500 கோடிக்கு மேல் கடன் உள்ளது. இப்போது அந்த நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்நிய செலவாணி சட்டத்தை மீறியதாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கப்பரிவு சோதனை மேற்கொண்டது.

Jet airways Naresh goyal
Jet airways Naresh goyal

இந்நிலையில் கடந்த மே மாதம் கோயல் தன் மனைவியுடன் லண்டன் செல்ல மும்பை விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டார். விமானம் ரன்வேயில் சென்றுகொண்டிருந்தபோது பாதியில் நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏறிய அதிகாரிகள் கோயல் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கீழே இறக்கிவிட்டனர். 300 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கியவரின் பொருளாதாரம் விமானம்போல உயரே பறந்துகொண்டிருந்தது. விமானம் மூலம் வாழ்க்கையின் உயர்ந்த நிலையை அடைந்தவர் கடைசியில் விமானத்தில் பறக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் .

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு