Published:Updated:

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 5 | `சில்வர்லைன்’ மருத்துவமனை என்னும் தென் தமிழகத்தின் நம்பிக்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை
சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை

மன்னார்குடியின் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த செந்தில்குமார், மருத்துவத்தை ஒரு தவம் மாதிரி செய்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மருத்துவம் ஒரு மகத்தான சேவை. நோயுற்று விளிம்பில் தவிக்கும் மனிதன், மருத்துவரைத்தான் கடவுளின் உருவாகக் காண்கிறான். அர்ப்பணியும் பொறுப்பும் அக்கறையும் மனிதநேயமுமே மருத்துவருக்கான அடிப்படைத் தகுதிகள்.

இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகம் மருத்துவத்தில் பெரும் எல்லைகளைத் தொட்டிருக்கிறது. உலகுக்கே வழிகாட்டக்கூடிய பல அபூர்வ மருத்துவர்கள் தமிழக மண்ணில் உதித்திருக்கிறார்கள். 'மக்கள் மருத்துவர்' என்று அவர்களைக் கொண்டாடி தங்கள் பூஜையறையில் வைத்து வழிபடுகிறார்கள் மக்கள்.

சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை
சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை
DIXITH

கோவிட் உலகத்தைப் புரட்டிப் போட்ட தருணம் இது. மக்கள் எல்லோரும் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்க, மருத்துவர்கள் களத்துக்குச் சென்று கோவிட்டோடு போராடினார்கள். இப்போதும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்.

உலகமயமாக்கலுக்குப் பிறகு எல்லாமும் வணிகமாகிவிட்டது. மருத்துவமும் தப்பவில்லை. ஆனாலும் மருத்துவர்களின் இயல்பென்பது அடுத்தவர்களின் உயிர்காக்கப் போராடுவது. மனித குலத்தை வஞ்சிக்கும், கண்ணுக்குத்தெரியாத வைரஸ்களோடும் பாக்டீரியாக்களோடும் பூஞ்சைகளோடும் முன்களத்தில் நின்று யுத்தம் செய்வதே அவர்கள் வாழ்நாள் பணியாக இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு மருத்துவருமே மைல்ஸ்டோன் மனிதர்தான்.

திருச்சி சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ஜி.செந்தில்குமாரை 'மைல்ஸ்டோன் மனிதர்' என்று குறிப்பிட்டு அடையாளப்படுத்துவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. மன்னார்குடியின் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த செந்தில்குமார், மருத்துவத்தை ஒரு தவம் மாதிரி செய்கிறார்.
டாக்டர் ஜி.செந்தில்குமார்
டாக்டர் ஜி.செந்தில்குமார்
DIXITH

இன்று மனிதர்களை அதிகம் வதைக்கும் நோய்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது புற்றுநோய். ஒரு காலத்தில் மாவட்டத்திற்கு பத்து பேருக்கு புற்றுநோய் வந்தால் பெரிது. இன்று ஜலதோஷம் மாதிரி பீடிக்கிறது புற்றுநோய். ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால் பெருவகையான புற்றுநோய்களைக் குணப்படுத்திவிட முடியும். ஆனால் அதற்குரிய விழிப்புணர்வும் வசதிகளும் இங்கு இல்லை. மூன்றாம் அல்லது நான்காம் நிலையில்தான் பெரும்பாலானோரின் நோய்த்தன்மை கண்டறியப்படுகிறது. புற்றுநோய் உறுதியானால் நேராக சென்னைக்குத்தான் வரவேண்டும். தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்கள் எதிலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க போதிய வசதியில்லை.

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 4: | திருச்சியைத் தாண்டி ஒளிர்ந்த கல்யாணி கவரிங்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இந்தத் துயரச் சூழலை உணர்ந்த செந்தில்குமார், புற்றுநோய் அறுவை சிகிச்சைத்துறையைத் தேர்வு செய்தார். அதேபோல மருத்துவமனை அமைக்க திருச்சியைத் தேர்வு செய்தார். இன்று, தமிழகத்தின் கிழக்கு மற்றும் தென் மாவட்ட மக்களின் நம்பிக்கையாக வளர்ந்து நிற்கிறது சில்வர்லைன் மருத்துவமனை.

சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை
சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை
DIXITH

செந்தில்குமாரின் சொந்த ஊர் மன்னார்குடி. அப்பா கணேசன் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் துணைப் பொறியாளராக இருந்தார். அதனால் நெய்வேலி ஜவகர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் வாய்ப்பு செந்திலுக்குக் கிடைத்தது. இந்தப் பள்ளியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் முப்பது பேராவது மருத்துவப் படிப்புக்குச் செல்வார்கள். அப்படியொரு பள்ளி அது.

செந்தில் மருத்துவம் படித்தது, தஞ்சை மருத்துவக் கல்லூரியில். எம்.எஸ், மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்தார். புற்றுநோய் சிறப்பு அறுவை சிகிச்சையை சென்னை அடையாறில் உள்ள கேன்சர் இன்ஸ்டியூட்டில் படித்தார். படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் பத்தாண்டுகள் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணிபுரிந்த செந்தில், 3 ஆண்டுகளுக்கு முன் சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனையைத் தொடங்கினார்.

சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை
சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனை
DIXITH

"மன்னார்குடியில் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட குடும்பம் எங்களோடது. அப்பாதான் முதல் தலைமுறை பட்டதாரி. அவருக்கு நெய்வேலியில வேலை கிடைச்சதால எங்களுக்கு நல்ல கல்வி கிடைச்சுச்சு. என் உடன்பிறந்தவங்க, ஒரு அக்கா, ஒரு தங்கை. அக்கா ஆசிரியை. கல்பாக்கம் பக்கத்துல ஒரு அரசுப்பள்ளியில் வேலை செய்றாங்க. தங்கை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துல வேலை செய்றாங்க. இதுதான் எங்க குடும்ப பின்புலம்.

டாக்டர் ஜி.செந்தில்குமார் குடும்பம்
டாக்டர் ஜி.செந்தில்குமார் குடும்பம்
DIXITH

மருத்துவம் படிப்பது பள்ளிக்கால கனவு. பள்ளியில நாங்க அஞ்சு பேர் செட். அஞ்சு பேருமே மருத்துவராகனுங்கிற கனவோடதான் படிச்சோம். துரதிஷ்டவசமா, அதுல எனக்கு மட்டும்தான் மருத்துவப்படிப்பு வாய்ச்சது. மற்றவர்கள் வேறு வேறு துறைகளுக்குப் போயிட்டாங்க.

அப்போ நான் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில ஹவுஸ் சர்ஜன் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்பா சர்வீஸ்லதான் இருந்தார். திடீர்ன்னு அவருக்கு ஹார்ட் அட்டாக். புகைபிடிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. சர்க்கரையும் இருந்துச்சு. ஹார்ட் அட்டாக் சிவியரா இருந்ததால அவரைக் காப்பாத்த முடியலே. அந்தக் காலக்கட்டத்துலேயே அப்பாவை இழந்துட்டேன். எம்.பி.பி.எஸ் முடிக்கிறதுக்கு முன்னாலயே குடும்பத்தை தாங்க வேண்டிய சூழல். அடுத்து என்ன செய்றதுன்னு புரியாத காலக்கட்டம் அது. எம்பிபிஎஸோட முடிச்சுட்டு பிராக்டீஸை ஆரம்பிச்சிடலாமா, இல்லை மேற்கொண்டு படிக்கலாமான்னு குழப்பம். அந்தத் தருணத்துல அப்பா பாத்த வேலையை தங்கைக்குக் கொடுக்க முன்வந்துச்சு என்எல்சி நிர்வாகம். தங்கை பொறுப்புக்கு வந்தபிறகு மேற்கொண்டு படிக்கிற சூழல் அமைஞ்சது.

நாங்க எம்.பி.பி.எஸ் படிக்கிறப்போ அடிப்படையான சில சிறப்பு பிரிவுகள் இருக்கும். கார்டியாலஜி, யூராலஜி, நெப்ராலஜியெல்லாம் இருந்துச்சு. புற்றுநோய்க்கான சிறப்பு பிரிவு அபூர்வமாத்தான் இருக்கும். அதனால சிறப்பு மருத்துவர்கள் குறைவா இருப்பாங்க. நோயோட தன்மை அதிகரிக்கிற அளவுக்கு மருத்துவர்கள் இல்லை. அதனால அந்தப் பிரிவை எடுத்துப் படிக்கனும்ன்னு எனக்கு ஆர்வம். அதனால அடையாறு கேன்சர் இன்ஸ்டியூட்ல மேற்படிப்புக்குப் போனேன்.

பொதுவா, அடையாறு இன்ஸ்டிடியூட் ஒரு மனுஷனை புரட்டிப்போட்டுடும். அங்கே படித்த மருத்துவர்களைப் பட்டியல் போட்டு ஆய்வுசெஞ்சா பிற மருத்துவர்களைவிட தனித்துவம் வாய்ந்தவர்களாத்தான் இருப்பாங்க. ஏன்னா, அந்த இன்ஸ்டிடியோட வரலாறு அப்படி. அது கத்துக்கொடுக்கிற கல்வி அப்படி. நான் படிக்கும்போது சாந்தா மேடம் தான் நிர்வாகம். அவங்க மிகப்பெரிய தாக்கத்தை எங்களுக்குள்ள உருவாக்கினாங்க.

திருச்சி - ஊறும் வரலாறு - 3: தமிழர்களின் பெருமிதம் சோழன் கரிகாலன்!

அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு ஒருத்தர் சிகிச்சைக்காக வந்தா, அவங்க ஏழையா, பணக்காரரான்னு பார்க்கமாட்டாங்க. தேவையில்லாத சோதனைகள், தேவையில்லாத மருந்துகள் எதுவும் இருக்காது. அதேநேரம் சிகிச்சையில காம்ப்ரமைஸ் இருக்காது. அந்த நோயாளிக்கு அந்தச்சூழல்ல என்ன சிறப்பு சிகிச்சை தேவையோ அதைத் தருவாங்க... மூணு வருடத்துல வாழ்நாளுக்குத்தேவையான கல்வியை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் எங்களுக்குத் தந்திருக்கு. இன்னைக்கு வரைக்கும் நாங்க அங்க கத்துக்கிட்ட விஷயங்களைத்தான் செஞ்சுக்கிட்டிருக்கோம்..."- உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறார் டாக்டர் செந்தில்குமார்.

டாக்டர் ஜி.செந்தில்குமார்
டாக்டர் ஜி.செந்தில்குமார்
DIXITH

வாழ்க்கை வேறு, மருத்துவ சேவை வேறென்றில்லாமல் வாழ்கிறார் செந்தில். இந்தியப் பெரு நகரங்களில் கிடைக்கும் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் அவரது மருத்துவமனையில் கிடைக்கிறது. நோயாளிகளை மனிதர்களாகக் கருதும் மனம் செந்தில்குமாருக்கு வாய்த்த வரம். அவர் படித்த கல்வி நிறுவனங்கள் அவருக்குப் போதித்த பாடம்..!

ஒரு மருத்துவரின் பணியென்பது, நோய் வந்தபிறகு சிகிச்சையளிப்பது மட்டுமல்ல... நோய் வராமல் இருக்க விழிப்புணர்வு ஊட்டுவது. செந்தில்குமார், அதற்கான பல முன்னெடுப்புகளை எடுக்கிறார். அடுத்தவாரம் பார்க்கலாம், அதுபற்றியெல்லாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு