Published:Updated:

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 11: வாழைப் பொருள்களை மதிப்புக்கூட்டி சாதித்த சிவகுமார் - சசிரேகா!

சிவகுமார் - சசிரேகா
News
சிவகுமார் - சசிரேகா

எவரும் யோசிக்காத, சமூகத்துக்குப் பயனளிக்கும் ஒன்றைச் செய்து தனித்தன்மை பெறவேண்டும் என்பதே நோக்கம். அப்படி அவர்கள் உருவாக்கியதுதான் ஸ்ரீபூர்ணா என்ற உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம்.

Published:Updated:

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 11: வாழைப் பொருள்களை மதிப்புக்கூட்டி சாதித்த சிவகுமார் - சசிரேகா!

எவரும் யோசிக்காத, சமூகத்துக்குப் பயனளிக்கும் ஒன்றைச் செய்து தனித்தன்மை பெறவேண்டும் என்பதே நோக்கம். அப்படி அவர்கள் உருவாக்கியதுதான் ஸ்ரீபூர்ணா என்ற உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம்.

சிவகுமார் - சசிரேகா
News
சிவகுமார் - சசிரேகா

கண்ணுக்கெதிரே ஒரு பரந்துவிரிந்த பாதை இருக்கிறது. அது மிகவும் பாதுகாப்பான பாதை. மற்றவர்கள் எப்படி நடக்கிறார்களோ அப்படிப் பார்த்து நடக்க அங்கே வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் எல்லோரும் அந்தப் பாதையைத்தான் தேர்வு செய்வார்கள். பத்தோடு பதினொன்றாக பயணத்தை நிறைவு செய்வார்கள். எவர் ஒருவர், தனக்கென்று புதிதாக ஒரு பரப்பைத் தேர்வு செய்து கரடு, முரடு பாறைகளையும் காட்டுச்செடிகளை களைந்து சமன்செய்து செப்பனிட்டு புதிய பாதையைப் போடுகிறாரோ அவர்தான் தனித்தன்மை மிக்கவராக, முன்னோடியாக போற்றப்படுவார். வணிகத்தின் பாலபாடம் இது.

வணிகம்
வணிகம்
DIXITH
வெற்றி பெற்று சமூகத்தில் மதிக்கத்தக்கவராக இருக்கும் எல்லோரும் இப்படிப் புதிய பாதை போட்டவர்கள்தான். திருச்சியைச் சேர்ந்த சிவகுமார் - சசிரேகா தம்பதியை அந்த வரிசையில் வைத்துப் பார்க்கலாம். சிவகுமார் வேளாண்மை பட்டதாரி. சசிரேகா முதுகலை பொறியியல் பட்டதாரி. ஒரு நிறுவனத்தில் சேர்ந்திருந்தால் இன்று இருவருமே லட்சங்களில் சம்பாதித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் அதுவல்ல அவர்களின் இலக்கு... எவரும் யோசிக்காத, சமூகத்துக்குப் பயனளிக்கும் ஒன்றை செய்து தனித்தன்மை பெறவேண்டும் என்பதே நோக்கம். அப்படி அவர்கள் உருவாக்கியதுதான் ஸ்ரீபூர்ணா என்ற உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம்.

உலக அளவில் வாழை உற்பத்தியில் இந்தியாதான் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் 19,780 மெட்ரிக் டன் வாழை உற்பத்தியாகிறது. உலகில் உற்பத்தியாகும் வாழையில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம். இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகம்தான் வாழை உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. இந்திய உற்பத்தியில் சுமார் 30 சதவிகிதம் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. தமிழகத்தில் திருச்சியே முதன்மையான வாழை உற்பத்தி மண்டலம். இந்தளவுக்கு வாழை உற்பத்தியில் முன்னிற்கும் இந்தியா, ஏற்றுமதியில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு 0.5 சதவிகிதம் மட்டுமே.

வாழை மட்டையை நாராக மாற்றுகிற எந்திரம்
வாழை மட்டையை நாராக மாற்றுகிற எந்திரம்
DIXITH
வாழையைப் பொறுத்தவரை இலை, பூ, காய், பழம், தண்டு என எல்லாமும் பயன்படுகின்றன. ஆனால் இவற்றை நாம் மதிப்புக்கூட்டி விற்பதில்லை. மிகுந்த ஊட்டச்சத்தும் மருத்துவ குணமும் சுவையும் மிகுந்த வாழைப் பொருள்களை மதிப்புக்கூட்டி உரிய தரத்தோடு வழங்கினால் மிகப்பெரும் சந்தையை எட்டிப்பிடிக்க முடியும் என்ற எண்ணம்தான் சிவகுமார்- சசிரேகா தம்பதியை தனித்தன்மை மிக்கவர்களாக மாற்றியிருக்கிறது.

வாழை ஹெல்த் மிக்ஸ், வாழைப்பூ ஊறுகாய், வாழைத்தண்டு ஊறுகாய், வாழைப்பழ சாக்லேட், பதப்படுத்தப்பட்ட வாழைப்பழம் (வாழைப்பழ அத்தி), வாழை மாவு என வாழையின் எல்லாப் பாகங்களையும் மேம்படுத்தப்பட்ட உணவுப்பொருளாக மாற்றிச் சந்தைப்படுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி, மருத்துவகுணமிக்க, தூய இயற்கை துரித உணவுகளான பிரண்டைத் தொக்கு, மணத்தக்காளி தொக்கு, வல்லாரைத் தொக்கு, தூதுவளைத் தொக்கு. புளிச்சக்கீரை தொக்கு, பொன்னாங்கண்ணித் தொக்கு, கறிவேப்பிலைத் தொக்கு, புதினா தொக்கு, மாங்காய் இஞ்சித் தொக்கு, மிளகுத் தொக்கு, நெல்லிப்பொடி, தூதுவளைப் பொடி போன்றவற்றையும் தயாரித்து சந்தைப்படுத்துகிறார்கள்.

வாழையில் தாரை வெட்டிவிட்டால் தாய்க்கன்று பட்டுப்போகும். மேல் மட்டையைகத் கீறி உள்ளே இருக்கும் தண்டை சமைக்கப் பயன்படுத்துவார்கள். மேல்மட்டை மக்கி வீணாகிவிடும். அந்த மட்டையை என்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள் சிவகுமாரும் சசிரேகாவும். அந்த மட்டையிலிருந்து நார் எடுத்து அதன்மூலம் கலைப்பொருள்கள் செய்கிறார்கள். பயிற்சி, விற்பனை என அந்தக்களம் பெரிதாக விரிந்து கிடக்கிறது. இந்தியாவெங்கும் இருந்து வாழைநார் கலைப்பொருள்கள் செய்யும் பயிற்சியைப் பெற இளைஞர்கள் வந்து குவிகிறார்கள்.

கலைப்பொருள்கள்
கலைப்பொருள்கள்
DIXITH

"அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஆசிரியர்கள்... எனக்கு சின்ன வயசுலயே வேளாண்மை படிக்கணுங்கிறதுதான் கனவா இருந்துச்சு. படிப்பு முடிச்சதும் நோவால்ஜின் மாத்திரை தயாரிக்கிற நிறுவனத்தில் அக்ரி டிவிஷன்ல வேலைக்குச் சேர்ந்தேன். புதுசா ஒரு தயாரிப்பை அறிமுகம் செஞ்சு பெரிய அளவுல அதை விவசாயிகள் கையில கொண்டுபோய் சேர்த்தோம். நல்ல சம்பளம்... சிறப்பான எதிர்காலம்ன்னு எல்லாம் இருந்தும் அந்த வேலை திருப்தியாயில்லை. இயற்கைக்கு எதிரா நிக்குறோம்ன்னு வருத்தமா இருந்துச்சு. துரித உணவுகள் அப்பத்தான் படிப்படியா மார்க்கெட்ல வளர்ந்துக்கிட்டிருந்த நேரம். அதுல ஏதாவது செய்யனும்... மக்களுக்கு தீங்கு விளைவிக்காத, நம் பாரம்பரிய உணவுகளை மீட்டுருவாக்கம் செய்ற மாதிரி புதுசா ஏதாவது செய்யலாம்னு தோணுச்சு.

எங்க பகுதியிலதான் வாழை சாகுபடி அதிகம். அதையே கையிலெடுத்துச் செய்யலாம்ன்னு யோசிச்சேன். தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தோட தொடர்பு கிடைச்சது என் பார்வையை விசாலாமாக்குச்சு. வாழையோட எல்லாப் பாகங்களும் பயன்படுது... பெரிய அளவுல வீணாகி அழியிறது வாழை மட்டைதான். அதை வச்சு ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிச்சேன். எங்க பகுதியில பட்டுப்போன வாழை மட்டையை தண்ணீரில் நனைச்சுப் பதப்படுத்தி கயிறுக்கு மாற்றா பயன்படுத்துவோம். அவ்வளவு உறுதியா இருக்கும். அதேமாதிரி பச்சை மட்டையில நார் எடுக்கலாமேன்னு தோணுச்சு. அதுபத்தி நிறைய ஆராய்ச்சி செஞ்சேன். என் அனுபவங்கள், தேடல்களை வச்சு, மட்டையை நாரா மாத்துற ஒரு எந்திரத்தை வடிவமைச்சேன். வாழை மட்டையை அதுக்குள்ள தந்தா அது நூல் நூலா மாத்தித் தந்திடும். அந்த நூல் பிளாஸ்டிக் நூல் மாதிரி அவ்வளவு வலிமையா இருக்கும்.

வாழை
வாழை
DIXITH

இந்த எந்திரத்தை பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு இப்போ சந்தைக்குக் கொண்டு வந்திருக்கோம். அரசும் இந்த எந்திரத்துக்கு மானியம் தருது. தேசிய அளவுல சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதையும் இந்த எந்திரம் வாங்கித் தந்திருக்கு" என்கிறார் சிவகுமார்.

வாழை மட்டையை நாராக மாற்றுகிற எந்திரம்
வாழை மட்டையை நாராக மாற்றுகிற எந்திரம்
DIXITH
வாழைப்பூ உணவுகளுக்கான சந்தை வாய்ப்பு, அதை எட்டிபிடித்த விதம் என இன்னும் சிவகுமாரிடமும் சசிரேகாவிடமும் பேச நிறைய இருக்கிறது. அடுத்த வாரம் பார்ப்போம்!