Published:Updated:

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 3: | கல்யாணி கவரிங் - விளம்பரங்கள் மூலம் சாதித்த கதை!

கல்யாணி கவரிங்
News
கல்யாணி கவரிங்

மக்கள் பெரும் நம்பிக்கையோடு வந்து குவிய மற்றவர்களிடம் வாங்கி விற்பது சரியா என்ற எண்ணம் வந்தது. நாமே தயாரித்தால் என்ன என்ற கேள்வியும் உதித்தது. உடனடியாகச் செயலில் இறங்கினார்கள்.

இக்கட்டுரையின் முந்தைய பகுதியை வாசிக்க...

கோபாலகிருஷ்ணன் கவரிங் தொழிலை ஆரம்பிக்கும்போது இந்தியாவில் எந்தப்பகுதியிலும் அது தொழிலாக இல்லை. தைரியமாக ஆரம்பித்துவிட்டார். தங்கம் வாங்க வசதியில்லாத எளிய மக்கள் மெல்ல மெல்ல பளபளக்கும் கவரிங் பக்கம் திரும்பினார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆபரணங்கள் ஆரோக்கியத்தோடு தொடர்புடையவை. சிலருக்கு சில உலோகங்கள் ஒத்துக்கொள்ளாது. அலர்ஜியாகிவிடும். குறிப்பாக கவரிங்... பெரும்பாலும் கவரிங் என்றால் மூலப்பொருளாக நிக்கலைத்தான் பயன்படுத்துவார்கள். இப்போதும் பயன்படுத்துகிறார்கள். நிக்கல் சீக்கிரமே கறுத்துவிடும். உடலுக்கும் அலர்ஜி ஏற்படுத்தும். பலருக்கு ஒத்துக்கொள்ளாது. ஆனால் கோபாலகிருஷ்ணன் காலம்தொட்டே, கல்யாணி கவரிங்கில் பித்தளை அல்லது செம்புதான் மூலப்பொருள்களாகப் பயன்படுத்துகிறார்கள். இது தங்கத்தை முழுமையாக உள்வாங்கி நீண்டகாலம் உழைக்கும் என்பது ஒருபுறம், கழுத்துக்கோ, காதுக்கோ, கரத்துக்கோ தொந்தரவு செய்யாது.

கல்யாணி கவரிங்
கல்யாணி கவரிங்
DIXITH

தரமான பொருள், சரி... இதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டுமே? பொருளை மட்டுமல்ல... கவரிங் கான்செப்டையே கொண்டு போய் சேர்க்க வேண்டிய சவால் திருமூர்த்தி அன்ட் கோவுக்கு இருந்தது. மக்கள் தைரியமாகக் கவரிங் வாங்க வரவேண்டும். கவரிங் வறுமையின் அடையாளமல்ல... இளம் தலைமுறையின் ரசனைக்கேற்ற அத்தனை ஆபரணங்களும் அதைக்கொண்டு செய்யமுடியும் என்ற எதார்த்தத்தைக் கொண்டு சேர்க்கவேண்டும். அதற்கு விளம்பரம் செய்ய வேண்டும்.

திருமூர்த்தி களத்தில் இறங்கினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

"அப்பா ஓரளவுக்குத் தொழிலை ஸ்திரப்படுத்திட்டார். அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகணும். அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சோம். மத்தவங்களோட படிப்பினையும் அனுபவமும் பல நேரங்கள்ல நமக்கு பளீர்ன்னு ஒரு வெளிச்சம் கொடுக்கும். அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துச்சு. திருச்சியில பூர்வீக சென்னியப்பா ஜவுளிக்கடைன்னு ஒரு கடை உண்டு. அவங்க மூணு துணி வாங்கினா ஒரு துணி இலவசம்ன்னு ஒரு ஸ்கீம் போட்டு ரேடியோவுல விளம்பரம் கொடுத்தாங்க. வியாபாரம் பிச்சுக்கிட்டுப் போச்சு. அப்போ பொழுதுபோக்குன்னு பாத்தா ரேடியோ மட்டும்தான். ஆல் இந்திய ரேடியோ, இலங்கை வானொலி ஆசிய சேவை ரெண்டும் மக்களை பெரிய அளவுல வசீகரிச்சு வச்சிருந்துச்சு.

பூர்வீக சென்னியப்பா ஜவுளிக்கடை எங்களுக்கு முன்மாதிரியா இருந்துச்சு. அந்தக் கடையோட உரிமையாளர் எங்க நண்பர். அவர்கி்ட்ட நாங்களும் விளம்பரம் கொடுக்கணும்ன்னு சொன்னோம். வி.ஆர். கோபாலகிருஷ்ணன்னு ஒருத்தரை அவர்தான் அறிமுகம் செஞ்சார். வி.ஆர்.ஜி. விளம்பர நிறுவனம்ன்னு ஒரு நிறுவனத்தை கோபாலகிருஷ்ணன் நடத்திக்கிட்டிருந்தார். அவர்கிட்ட பட்ஜெட் கேட்டோம். மாசம் மூவாயிரம் ரூபாய்ன்னு சொன்னார். "என்னாது... மூவாயிரமா"ன்னு நாங்க அதிர்ச்சியாயிட்டோம். அப்போ அது அவ்ளோ பெரிய பணம். அவர், "நீங்க விளம்பரம் செய்யுங்க... அதனால வியாபாரம் அதிகமானா எனக்குப் பணம் கொடுங்க, இல்லேன்னா அது என் செலவா இருக்கட்டும்"ன்னு சொல்லிட்டுப் போயி்ட்டார். "இவ்வளவு நம்பிக்கையா சொல்றாரே... ஒரு மாசம் கொடுத்துப் பாப்போம்"ன்னு ஆரம்பிச்சோம்.

திருமூர்த்தி
திருமூர்த்தி
DIXITH
ரேடியோவுல விளம்பரம் வர ஆரம்பிச்சு பத்து நாள்... "கவரிங் கடைக்கெல்லாம் விளம்பரம்..."ன்னு சிலபேர் நின்னு நக்கலா பேசிட்டுப் போனாங்க... அதுக்கப்புறம் படிப்படியா மக்கள் கடைக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க. ரேடியோவுல விளம்பரம் கேட்டோம்ன்னு சொல்லியே நகை வாங்கிட்டுப் போனாங்க. ஒரு மாசத்துக்குள்ளயே பெரிய அளவுல ரீச்சாகிடுச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னையில மெலட்டூர் விஸ்வநாதன்னு ஒருத்தர் வங்கியில வேலை செஞ்சுக்கிட்டிருந்தார். நாடக ஆசிரியர். அவர்கிட்டதான் நாங்க பாடல்கள், வசனங்கள்லாம் எழுதி வாங்குவோம், ஒரே ஒரு ஜிங்கிள்ல எல்லாத்தையும் முடிச்சுடுவார். அவர் எழுதின முதல் விளம்பரப் பாட்டு இப்பவும் நினைவிருக்கு.

"நெத்திக்குச் சுட்டி

பதக்கம் கட்டி

ஒட்டியாணம் மாட்டி - மின்னும்

சரடு சங்கிலி மூக்குத்தி மோதிரம் போட்டு

நீ மின்னுறதெப்படி ஜொலிக்கிறதெப்படி

புன்னகையைக் காட்டி"ன்னு ஒரு ஆண் பாடுவார்.

பெண் வாய்ஸ்ல, "கண்ணைக் கவரும் வண்ண வண்ண வண்ண கல்யாணி கவரிங்... எண்ணப்படி வாங்கிடலாம் உத்தரவாதத்துடன்... நீடித்த உழைப்பு நம்பிக்கையெல்லாம் கல்யாணி கவரிங்..."

“இது பயங்கர பேமஸாகிடுச்சு. சாப்பிட நேரமில்லாத அளவுக்கு வணிகம் பெரிசாகிடுச்சு. கடையைத் திறந்து கூட்டக்கூட முடியாது. மக்கள் உள்ளே வந்திடுவாங்க... அப்பறம் அப்பறம்ன்னு சொல்லி கூட்டாமலே கடையைத் திறந்து மூடியிருக்கோம். ரேடியோ விளம்பரம் வணிகத்தை வேற லெவலுக்குக் கொண்டு போயிடுச்சு..." என்கிறார் திருமூர்த்தி.

தொடக்கத்தில் விற்பனையில் மட்டுமே கல்யாணி கவரிங் கவனம் செலுத்தியது. உற்பத்தியைப் பற்றி யோசிக்கவில்லை. வெளியில் வாங்கி கடையில் விற்பார்கள். மக்கள் பெரும் நம்பிக்கையோடு வந்து குவிய மற்றவர்களிடம் வாங்கி விற்பது சரியா என்ற எண்ணம் வந்தது. நாமே தயாரித்தால் என்ன என்ற கேள்வியும் உதித்தது. உடனடியாகச் செயலில் இறங்கினார்கள். ஆட்களை வைத்து ஆபரணங்களைச் சொந்தமாகத் தயாரிக்க ஆரம்பித்தார்கள். அதனால் தரம் மேலும் கூடியது. நம்பிக்கை விரிவடைந்தது. "எப்போது நகையை கொண்டு வந்தாலும் பாதிவிலை கொடுத்து நாங்களே வாங்கிக்கொள்வோம்" என்று அறிவித்தார்கள். அதுவும் வாடிக்கையாளரை வசீகரித்தது. இன்றுவரை அதை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள்.

கல்யாணி கவரிங்
கல்யாணி கவரிங்
DIXITH

"அண்மையில ஒரு அம்மா தோடு வாங்க வந்தாங்க. அவங்க சொல்ற டிசைன் எனக்குப் புரியலே. நீங்க காதுல போட்டிருக்கீங்களே, தங்கத்தோடு... அதுமாதிரியான்னு கேட்டேன். அந்த அம்மா கலகலன்னு சிரிச்சிட்டாங்க... 'அஞ்சு வருஷத்துக்கு முன்னால உங்க கடையில வாங்கினதுதான்யா அது'ன்னு சொன்னாங்க. எங்களையே ஏமாத்திடுச்சேன்னு நாங்கள்லாம் சந்தோஷப்பட்டோம். பெருமையாவும் இருந்துச்சு.

1962ல ஒரு அம்மா செயின் வாங்கியிருக்காங்க. 2000த்துல அதை பில்லோட கொண்டு வந்து கொடுத்தாங்க. 30 வருஷம் தாண்டியும் அந்த நகை மங்காம இருந்துச்சு. எங்களுக்கே ஆச்சர்யமா இருந்துச்சு. அந்த பில்லுக்காக அவங்களுக்கு புது செயினை அன்பளிப்பா கொடுத்தோம். அந்த பில்லை லேமினேஷன் செஞ்சு வச்சிருக்கோம்..." என்கிறார் திருமூர்த்தியின் தம்பி உமாநாத்.

உமாநாத்
உமாநாத்
DIXITH

கடையில் வணிகம் பெரிதானதும் மலைக்கோட்டை அருகே இரண்டாவது கடை திறந்தார்கள். அடுத்தடுத்து திருச்சியிலேயே 5 கடைகளானது. அடுத்து கரூர், சேலம், மதுரை எனக் கடைகள் விரிந்தன. தஞ்சாவூரிலிருந்து ஒரு இஸ்லாமியக் குடும்பம் வந்தது. "அடிக்கடி வந்து போறது கஸ்டமா இருக்கு... எங்கள் ஊரில் வந்து கடையை திறங்கய்யா" என்று சொல்ல அதையும் பரிசீலனை செய்தார்கள். இப்படி நேரடி ஷோரூம் மட்டும் 30 இருக்கிறது. பிறகு பிராஞ்சைஸிகளும் தரத் தொடங்கினார்கள். தற்போது தமிழகம் முழுவதும் 105 கிளைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் கவரிங் வாங்குவதே கௌரவக் குறைச்சல் என்று கருதிய நிலை மாறிவிட்டது. காரணம், கல்யாணி கவரிங் கொடுத்த விளம்பரங்கள்... தொழில்நுட்பம் வளர்ந்தபிறகு, டிசைனிங் நகைகளுக்கான தேவை விரிந்தது. குறைந்த விலை, நினைத்த டிசைனை செய்ய முடிந்தது என கவரிங் நகைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து விட்டன.

திருட்டு பயம் அதிகரித்துவிட்டதால் பெரும்பாலான மக்கள் வெளியில் செல்லும்போது கவரிங் நகைகளையே அணிகிறார்கள். களத்தில் கவரிங் நகைகளுக்கு போட்டியாக யாருமில்லாததால் நின்று விளையாடுகிறது கல்யாணி கவரிங். தொழில்நுட்ப ரீதியாகவும் பெரும் எல்லையைத் தொட்டிருக்கிறது இந்த நிறுவனம்.

கல்யாணி கவரிங்
கல்யாணி கவரிங்
DIXITH

வணிகத்துக்குள் வந்த மூன்றாம் தலைமுறை, தொழிலை இன்னும் நவீனப்படுத்தியது. புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. தாத்தாவைப் போல தங்க வணிகத்தில் ஈடுபட வேண்டும் என்ற கனவும் நிறைவேறியது. சினிமா, சீரியல் என கல்யாணி கவரிங் கடந்து வந்திருக்கிற பாதை வியக்கத்தக்கது.

அதுபற்றி அடுத்தவாரம் பார்க்கலாம்.