Published:Updated:

திருச்சியின் மைல்ஸ்டோன் மனிதர்கள்: சிறுவிதை டு பெருமரம்... சாதனையாளர்களின் வெற்றிக் கதைகள்!

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள்
News
திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள்

உலகத்திலேயே மிகவும் எளிமையானது, மற்றவர்களுக்கு வெற்றிக்கான ஆலோசனைகளைக் கூறுவதுதான். இந்தத் தொடர் அதைச் செய்யப்போவதில்லை. சிறு விதையில் துளிர்த்து இன்று பெருமரமாக வளர்ந்து நிற்கிற நிறுவனங்களின் கதைகளை அவர்கள் மொழியிலேயே உங்களுக்குச் சொல்லப்போகிறது.

பல்லாயிரம் துளிகளில் ஒற்றைத்துளிதான் உயிராக ஜனிக்கிறது. மனித இயல்பே போராடுவதுதான். அந்த இயல்பை மறக்கும் மனிதர்கள்தான் வாழ்க்கையில் பின்தங்கி விடுகிறார்கள்.

இந்த உலகம் எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. அவரவரின் தேடலுக்கு ஏற்றவாறு வாய்ப்புகளும் வழிகளும் திறக்கின்றன. ஒரு தருணத்தில் ஒரு தொழிலில் இறங்குற இருவரில் ஒருவர் உச்சம் தொடுகிறார். ஒருவர் தோற்கிறார். எடுக்கும் முடிவுகளும் கடக்கும் தடைகளும்தான் வெற்றி தோல்விக்கு காரணமாக இருக்கிறது. தங்கள் துறைகளில் வெற்றி பெற்ற யாரிடமேனும் உரையாடிப் பாருங்கள்... இக்கட்டான ஒரு நேரத்தில் துணிந்து ஒரு முடிவை எடுத்திருப்பார். அந்த முடிவுதான் அவர் வாழ்க்கையை மாற்றியிருக்கும்.

அவநம்பிக்கையும் அகலக்காலும்தான் பலரை சரிவுக்குக் கொண்டு சென்றிருக்கிறது. எதில் இறங்கும் முன்பும் ஒருவர், தன் திறனை சுயப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இது நமக்கான துறைதானா? இந்தத் துறையில் நம்மால் ஒன்றி இயங்கமுடியுமா? இவைதான் அடிப்படையான கேள்விகள். இன்று வெற்றி பெற்று முன்னோடிகளாக இருக்கும் அனைவரும் இந்த இரு கேள்விகளிலிருந்தே எல்லாவற்றையும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

Business
Business

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்று வாய்ப்புகளும் வசதிகளும் நிறைந்திருக்கின்றன. தொழிலுக்கான செயல்திட்டமும் புதுமையான சிந்தனையும் இருந்தால்போதும்... முதலீடு செய்ய ஏராளமான ஏஞ்சல்கள் இங்கே இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகளே நிறைய பணத்தை வைத்துக்கொண்டு இளைஞர்களை அழைத்துக்கொண்டிருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு ஒரு வடஇந்திய நண்பரைச் சந்தித்தேன். சென்னையில் அவர் ஒரு இணையவழி தொழிலைத் தொடங்கியிருந்தார். அப்போதெல்லாம் ஸ்விக்கி, ஜொமேட்டோவெல்லாம் வந்திருக்கவில்லை. அவர் தன் தொழில் திட்டத்தை விவரித்தபோது ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரயிலில் கிடைக்கும் உணவுகள் பற்றி உங்களுக்குத் தெரியும். உப்பிருந்தால் உரைப்பிருக்காது. சூடும் இருக்காது, சுவையும் இருக்காது. தமிழகம் பரவாயில்லை... ஆந்திராவைக் கடந்துவிட்டால் இன்னும் மோசமாக இருக்கும். கடனே என்று சாப்பிட்டு முடிக்க வேண்டும். அப்படியொரு பயணம் தந்த அனுபவத்தில்தான் நண்பர் தன் இணையவழித் தொழிலுக்கு அடித்தளம் போட்டுள்ளார்.

நீங்கள் ரயிலில் நீண்டதூரம் பயணம் மேற்கொள்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பயணச்சீட்டு பதிவு செய்ததும் நண்பரின் இணையதளத்துக்குச் சென்று பிஎன்ஆர் எண்ணை உள்ளீடு செய்து, உங்களுக்குப் பிடித்த உணவுகளை தேர்வுசெய்து கேட்கும் கட்டணத்தைச் செலுத்திவிட்டீர்கள் என்றால் போதும். நீங்கள் செல்லும் ரயிலை முழுமையாக ஃபாலோ செய்து ரயில் காலை டிபன் நேரத்தில் எங்கே நிற்கும், மதியம் சாப்பாடு நேரத்தில் எங்கே நிற்கும், இரவு டின்னர் சமயத்தில் எங்கே நிற்கும் என்றெல்லாம் கண்டறிந்து, அங்கே சுடச்சுட சாப்பாட்டு பார்சலை வைத்துக்கொண்டு உங்களுக்காக ஒருவர் காத்திருப்பார். ரயில் காலதாமதமானால் அதற்கேற்றவாறு அவர்களே திட்டத்தை மாற்றிக்கொள்வார்கள். ஆக, நீங்கள் மூன்று வேளையும் விரும்பிய உணவை சுடச்சுட சாப்பிடலாம். இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள நல்ல உணவகங்களை அடையாளம் கண்டு அவர்களோடு ஒப்பந்தம் போட்டு இந்த இணையத் தொழிலை தொடங்கியிருக்கிறார் அந்த நண்பர்.

ரயில் நிலையம்
ரயில் நிலையம்
யாருமே யோசிக்காத ஒரு தருணத்தில் தன் அனுபவத்தை வாய்ப்பாக மாற்றிய அந்த நண்பரின் யுத்திதான் வெற்றிக்கான நுட்பம். இன்று பல பெரு முதலீட்டு நிறுவனங்கள் அந்தத் தொழிலில் பங்களிப்பு செய்திருக்கின்றன.

மென்பொருள் நிறுவனத்தில் உயர் பொறுப்பிலிருந்த ஜெகன் - சுஜாதா தம்பதி அப்போது ஆறிலகத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார்கள். வெளிநாட்டு வாய்ப்பு, அடுத்தடுத்து பணி உயர்வு, சம்பள உயர்வு... பாதுகாப்பான வாழ்க்கை... ஆனால் சமூகத்துக்குப் பயன்படுகிறமாதிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏதேனும் செய்யவேண்டும் என்று இரண்டு பேரும் விரும்பினார்கள். மீண்டும் மீண்டும் யோசித்து ஒரு தொழிலை வடிவமைத்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பழைய பேப்பர், ஈயம், பித்தாளைக்கு பேரிச்சம்பழம் தருகிற தொழில்... ஆனால் நவீனமாக... kuppathotti.com என்ற ஒரு இணையதளம். அதில் பதிவு செய்து, உங்கள் வீட்டில் என்னென்ன கழிவுகள் இருக்கின்றன என்று குறிப்பிட்டால் போதும்... சீருடை, ஐ.டி கார்டு அணிந்த ஓர் இளைஞர் வந்து எலெக்ட்ரானிக் இயந்திரத்தில் எடைபோட்டு பொருள்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்துவிடுவார். விலைப்பட்டியல் இணையத்திலேயே இருக்கிறது. தங்கத்தின் விலையைப் போல, அவற்றையும் அன்றாடம் மாற்றுகிறார்கள். தெருவில் வந்து வாங்கும் பழைய இரும்பு வியாபாரி தரும் விலையை விட அதிகமாக இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு சுஜாதாவைச் சந்தித்தேன். "இந்தியாவில கழிவுகளை பொது இடத்துல வீசுறது பெரிய பிரச்னையா இருக்கு. ஆனா, மிகப்பெரும் லாபம் தரும் தொழிலா ரீசைக்கிள் பிசினஸ் வளர்ந்திருக்கு. நாம கழிவுன்னு தூக்கி வீசுற ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலை இருக்கு. உலகளாவிய தேவை, மறுசுழற்சி வாய்ப்பையெல்லாம் ஆய்வு பண்ணி ஒரு திட்ட அறிக்கை உருவாக்கித்தான் இந்தத் தொழிலை ஆரம்பிச்சோம். ரீசைக்கிள் நிறுவனங்களோட டை-அப் பண்ணியிருக்கோம். நிறைய இளைஞர்களுக்கு வேலை கொடுத்திருக்கோம். சென்னை தாண்டியும் தொழிலை விரிவுபடுத்தியிருக்கோம். நாங்களே ரீசைக்கிள் பண்ற பிளாண்ட் போட திட்டமிட்டிருக்கோம்" என்கிறார். சிறியதொரு கனவு, எப்படிக் கிளைவிட்டு பெருமரமாகிறது பாருங்கள்!

kuppathotti.com
kuppathotti.com

இன்று ஓகே... நினைத்ததையெல்லாம் செய்ய முடிகிறது. அந்தக் காலத்தில்..? தொழிலுக்கு முதலீடு திரட்டுவதென்றால் சாதாரணமா? இப்படியொரு தொழில் செய்யப்போகிறேன் என்று வீட்டில் சொன்னால், வீட்டிலிருப்பவர்களே நம்பமாட்டார்கள். இன்று சோசியல் மீடியா இருக்கிறது. அதில் விளம்பரம் செய்தே ஒரு தொழிலை வெற்றிகரமாகச் செய்துவிடமுடியும். அந்தக் காலத்தில் தொழிலை ஆரம்பித்து, வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று வளர்ந்து ஒரு பிராண்டட் நிறுவனமாக வளர்வதென்றால் சும்மாவா? எவ்வளவு உழைப்பும் முயற்சியும் தேவைப்பட்டிருக்கும்..? எத்தனை இழப்புகள், அவமானங்கள், சரிவுகளைச் சந்தித்திருக்கவேண்டும்..?

அதைப்பற்றியெல்லாம் பேசுவதற்காகத்தான் இந்தத் தொடர்...

எண்ணங்கள் பற்றியும் தன் முனைப்பு பற்றியும் வெற்றிக்கான சூத்திரங்கள் பற்றியும் தன்னம்பிக்கை பற்றியும் தமிழில் ஏராளமான நூல்கள் வந்துவிட்டன. உலகத்திலேயே மிகவும் எளிமையானது, மற்றவர்களுக்கு வெற்றிக்கான ஆலோசனைகளைக் கூறுவதுதான். இந்தத் தொடர் அதைச் செய்யப்போவதில்லை. சிறு விதையில் துளிர்த்து இன்று பெருமரமாக வளர்ந்து நிற்கிற நிறுவனங்களின் கதைகளை அவர்கள் மொழியிலேயே உங்களுக்குச் சொல்லப்போகிறது. முதலில் திருச்சியிலிருந்து இந்தப் பயணம் தொடங்குகிறது.

திருச்சி
திருச்சி

இடர்களையும் தடைகளையும் கடந்தே வெற்றி வசப்படுகிறது. ஒருவர் எடுக்கும் முடிவு இன்னொருவருக்குப் பொருந்தாது. ஆனால் வெற்றி பெற்றவரின் அனுபவத்திலிருக்கும் ஒரு சிறு பொறி, இன்னொருவரின் பயணத்துக்கு வெளிச்சம் தரும். நிச்சயம் அப்படியொரு ஒளியை இந்தத் தொடர் உங்களுக்கு வழங்கும்.

திருச்சி மற்றும் திருச்சியைச் சுற்றிலும் இருக்கிற முன்னணி நிறுவனங்களின் வெற்றிக்கதைகளை திங்கள்கிழமைதோறும் பார்க்கலாம்.

வாருங்கள்... கரம் கோத்துப் பயணிப்போம்!