Published:Updated:

தொழில்முனைவோரின் வெற்றிக்கு மென்டார் அவசியம்! - ஆலோசகர் விளக்கம்

Representational Image
Representational Image

தொழில்முனைவோர்களுக்குத் தேவையான ஒன்று தன்னம்பிக்கை. தன்னால் திறம்பட செயல்பட முடியும், லாபம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். மென்டார்களிடம் ஆலோசனை பெறும்போது அதுகுறித்த தெளிவை அவர்கள் வழங்குவார்கள்.

இந்தியாவிலுள்ள தொழில்முனைவோர்கள் சந்திக்கும் பெரிய சிக்கலே, தங்களுடைய புத்தாக்க சிந்தனையை, கண்டுபிடிப்பை எப்படி வெற்றிகரமான தொழிலாக மாற்றுவது என்பதுதான். வெற்றிகரமான தொழிலாக மாற்றுவதற்கு, அடிப்படையில் அதற்கான நிறுவனத்தை உருவாக்க வேண்டும். அதற்கான நிதி வசதி வேண்டும். மூலதனங்களை வாங்க வேண்டும். தயாரிப்புகளைச் சந்தைப்படுத்த வேண்டும்.

Representational Image
Representational Image

இத்தனை விஷயங்களையும் தொழில்முனைவோரால் தனி ஒருவராகச் செய்துமுடிக்க முடியாது. அத்தகைய சூழலில்தான் மென்டார் எனப்படும் வழிகாட்டி தேவைப்படுகிறார். அவர், தொழில்துறையில் பல்லாண்டுகள் அனுபவமிக்கவராகவும், கல்வித்தகுதி கொண்டவராகவும் இருப்பார். அவரது துணையை நாடுவதென்பது, ஒரு மருத்துவரிடம் உடல்நலப் பரிசோதனை செய்துகொள்வது போன்றது. ஒரு மருத்துவர் எப்படி பரிசோதனை செய்த பிறகு, தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவாரோ அதேபோல, தொழில் தொடர்பான ஆலோசனைகளை இந்த மென்டார்களிடம் பெறலாம்.

முதலில், தொழில்முனைவோர்களுக்குத் தேவையான ஒன்று தன்னம்பிக்கை. தன்னால் திறம்பட செயல்பட முடியும், லாபம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். மென்டார்களிடம் ஆலோசனை பெறும்போது, அதுகுறித்த தெளிவை அவர்கள் வழங்குவார்கள். தொழில்முனைவோர்கள், எடுத்த எடுப்பிலேயே வங்கிக்கடனுக்குச் செல்வது சரியான முறையாக இருக்காது. கூடுமானவரை, தங்கள் வசமுள்ள நிதியைக்கொண்டு தொழிலைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் பொறுப்பாகவும் அதிக பதற்றமில்லாமலும் செயல்பட முடியும். தொடக்கத்திலேயே கடன் வாங்கி செயல்பட்டால், தொழிலில் காலூன்றி லாபமீட்டத் தொடங்கும்வரை கடனுக்கான வட்டி, பதற்றத்தை ஏற்படுத்தும். அது, மன உறுதியைச் சிதைக்கவும் கூடும். எனவே, சொந்த நிதியில் தொடங்கி சிறிதுகாலம் நடத்திய பிறகு, அந்த நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக வங்கிக்கடன் பெற முயற்சி செய்ய வேண்டும்.

Representational Image
Representational Image

தொழில்முனைவோர்கள், வங்கிக்கடன் பெறுவதற்காக வங்கிகளை அணுகினால், உடனே வங்கிக்கடன் கிடைத்துவிடாது. அதற்கு முன்னதாக, தனது தொழில் குறித்த திட்ட வரையறை தயாரிக்க வேண்டும். வங்கிக்கடன் பெறுவதற்கேற்ப தனது தொழில்முறையை முறையானதாக மாற்றியமைக்க வேண்டும். அதாவது, முறையான பில்லிங், வரவு செலவுக்கணக்கு, ஜிஎஸ்டி பதிவு, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்ட அனைத்தையும் செயல்படுத்தியிருக்க வேண்டும். தனது தொழிலையும் முறையாகப் பதிவுசெய்ய வேண்டும். அதன் பிறகே ஈடுபடும் தொழிலுக்கேற்ற வங்கிக்கடனுக்கு முயற்சி செய்ய வேண்டும். இந்தக் கட்டத்தில் மென்டார்களின் தேவை, தொழில்முனைவோர்களின் செயல்பாட்டை மிகவும் எளிதாக்கும்.

அடுத்து, தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்று. அந்தத் தயாரிப்புக்கான வாடிக்கையாளர்கள் யார், அவர்களை எப்படி அணுகுவது, எப்படி ஈர்ப்பது என்பது குறித்த அனைத்து விவரங்களையும் மென்டார்கள் அளிப்பார்கள். அதற்கேற்ப வெற்றிகரமாக வாடிக்கையாளர்களை உருவாக்க முடியும். வாடிக்கையாளர்கள் உருவாகிவிட்டாலே நமது தொழிலின் வெற்றி தவிர்க்க முடியாததாக, தடுக்க முடியாததாக ஆகிவிடும். இத்தகைய மென்டார்களை நமக்கு அறிமுகம் செய்பவர்கள்தான் தொழில் ஆலோசகர்கள். அவர்களிடம் நமது தொழில்முனைவு எண்ணங்களைத் தெரிவிக்கும்போது, நமக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதோடு, சரியான மென்டார்களின் தொடர்பையும் ஏற்படுத்தித்தருவார்கள்.

தொழில் முனைவோர் ஆலோசகர் எஸ்.சிவகுமார்
தொழில் முனைவோர் ஆலோசகர் எஸ்.சிவகுமார்

``ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம்பெற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களைத்தான் மென்டார்கள் என்கிறோம். ஒரு கிரிக்கெட்டருக்கு பயிற்சியாளர் இருப்பதுபோல, நீச்சல் வீரருக்கு பயிற்சியாளர் இருப்பதுபோல, வாழ்நாள் முழுக்க அர்ப்பணிப்போடு ஈடுபடக்கூடிய தொழிலுக்கு, கண்டிப்பாக மென்டார்கள் தேவை. மென்டார்கள் இருந்தால் மட்டுமே தொழில்முனைவோர்களால் சரியான முறையில் தொழிலை நடத்திச்சென்று, அடுத்தடுத்த மைல்கற்களை அடைய முடியும்.

இந்த மென்டார்களைக் கண்டறிவதற்கு, முதலில் தொழில் ஆலோசகர்களை அணுக வேண்டும். அவர்களிடம் தங்களது தொழில்முனைவு பற்றி விளக்கும்போது, அத்தொழிலில் அனுபவமும் திறமையும், சந்தையை நன்றாக ஆய்வுசெய்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் மென்டார்களை அறிமுகப்படுத்துவார்கள். தொழில்முனைவோர்களுக்கு நல்ல மென்டார் கிடைப்பது வரம் போன்றது. அந்த மென்டார், தொழில்முனைவோர்கள் உடன் பயணித்து வழிநடத்துவார். தொழில்நுட்பரீதியாக, நிதி மேலாண்மையில், தொழில் நிர்வாகத்தில், சந்தைப்படுத்துவதில் எனத் தொழிலின் ஒவ்வொரு பகுதியிலும் ஆலோசனைகூறி, வழிநடத்தும் பொறுப்பை மென்டார்கள் ஏற்பார்கள். தொழில்முனைவோர்களின் பல கட்ட வளர்ச்சியிலும் மென்டார்களின் பங்களிப்பு அவசியம்" என்கிறார், தொழில்முனைவோர் ஆலோசகர் எஸ்.சிவகுமார்.

Representational Image
Representational Image
தொழில் விரிவாக்கம்... முத்ரா கடன் எவ்வளவு கிடைக்கும்?

எனவே, தொழில்முனைவோர்கள் தங்களது சிந்தனையை, கண்டுபிடிப்பை, அடுத்த கட்டத்துக்கு எப்படி நகர்த்துவது என்ற வழி தெரியாமல் தயங்குவதை விடவேண்டும். தங்களது எண்ணங்களைச் செயல்படுத்துவதற்கான வழிகளை, வழிமுறைகளை விளக்கி, உறுதுணையாக இருக்கும் மென்டார்களை அணுக வேண்டும். அவர்களின் மூலமாக தொழில்துறையில் தனி முத்திரை பதிக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு