Published:Updated:

``வேலை நடக்கலை; ஆனாலும் சம்பளம் கொடுக்கிறோம்!'' - கைகொடுக்கும் பெண் தொழில்முனைவோர்!


தேங்காய் மதிப்புக்கூட்டல்
தேங்காய் மதிப்புக்கூட்டல்

தற்போதைய கொரோனா ஊரடங்கு காலம் உற்பத்தி சார்ந்த தொழில்துறையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து, பிசினஸ் பாதையில் வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கும் பெண் தொழில்முனைவோர்கள் சிலரிடம் பேசினோம்.

கொரோனா ஊரடங்கால், மக்களின் இயல்பு வாழ்க்கையுடன் நாட்டின் ஒட்டுமொத்த வணிக உற்பத்தியும் முடங்கியிருக்கிறது. தொழிற்சாலைகள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருக்கின்றன. ஆனாலும், வேலை செய்யும் நிறுவனங்களையே நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் தரவேண்டிய கடமை ஒருபுறம். எப்போது நிலைமை சரியாகும், சரியானாலும் பழையபடி உள்நாட்டு, வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைக்குமா, கிடைத்தாலும், மக்களின் வாங்கும் திறன் முன்புபோல இருக்குமா, எதிர்கால பிசினஸ் கனவுகள் சாத்தியமாகுமா? போன்ற கவலைகள் மறுபுறம்!

உதவிக்கு கை கொடுப்போம்
உதவிக்கு கை கொடுப்போம்

தொழில்முனைவோர்களுக்கு, `நாளைய விடியலாவது நம்பிக்கையைத் தருமா?’ என்ற ஆவலுடன் லாக்டெளன் பொழுதுகள் நகர்கின்றன. தற்போதைய கொரோனா ஊரடங்கு காலம் உற்பத்தி சார்ந்த தொழில்துறையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது குறித்து, பிசினஸ் பாதையில் வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கும் பெண் தொழில்முனைவோர்கள் சிலரிடம் பேசினோம்.

கோயம்புத்தூர் `அவணீதா டெக்ஸ்டைல்’ நிறுவன உரிமையாளர் உமா சேகர், உற்பத்தி நடக்காவிட்டாலும் தனது நிறுவனத்தையே நம்பியிருக்கும் பலநூறு பெண் தொழிலாளர்களுக்குத் தங்குமிடம், உணவு, ஊதியம் ஆகிய தேவைகளையும் தவறாமல் நிறைவேற்றுகிறார்.
உமா சேகர்
உமா சேகர்

``திருப்பூரிலுள்ள பின்னலாடை நிறுவனங்கள் பலவும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் தங்கள் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்கின்றன. அந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமா இருப்பதால், அங்கு கடுமையான பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருக்கு. அதனால, அந்த நாடுகள் திருப்பூரிலுள்ள நிறுவனங்களிடம் முந்தைய ஆர்டர்களையும், புதிய ஆர்டர்களையும் கணிசமா குறைச்சுகிட்டாங்க. அந்த நாடுகளில் பொருளாதார நிலைமை சரியாகும் காலத்தைப் பொறுத்துத்தான் திருப்பூர்லயும் உற்பத்தி வேகமெடுக்கும். அதைப் பொறுத்துத்தான் எங்க நிறுவனத்திலும் உற்பத்தி நிலை சீராகும்.

மீண்டும் உற்பத்தி தொடங்கினாலும் நிறைய சவால்களை எதிர்கொள்ளணும். கையிருப்பு குறைஞ்சுட்டதால, பணப்புழக்கம் ரொம்பவே பாதிக்கப்படும். எனவே, எங்க உற்பத்திப் பொருள்களை உடனடியா கொடுத்தாலும், நாங்க சார்ந்திருக்கும் உள்நாடு மற்றும் வெளிநாடு நிறுவனங்கள் உடனடியாக எங்களுக்கான பணத்தைக் கொடுப்பாங்களா என்பதும் சந்தேகம்தான். சீன நிறுவனங்கள் சிலவற்றிடம் புதிய ஆர்டர்களுக்கான பேச்சுவார்த்தை செய்துகிட்டிருக்கோம். ஆனா, கட்டுப்படியாகும் விலை கொடுக்க அவங்க முன்வருவதில்லை. அதனால, இப்போதைக்கு பேச்சுவார்த்தையில் மட்டுமே புதிய ஆர்டர்களுக்கான நிலவரங்கள் இருக்கு.

ஸ்பின்னிங் மில்
ஸ்பின்னிங் மில்

எங்க நிறுவனத்துல ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்றாங்க. அதில், பெரும்பாலானோர் பெண்கள். அவங்க எல்லோருமே ஏழைத் தொழிலாளர்கள்தாம். `விருப்பம் இருந்தால் ஊருக்குப் போங்க’ன்னு சொன்னோம். நிலவரம் சீக்கிரமே சரியாகிடும் என்ற நம்பிக்கையில 700 பெண்கள் நிறுவனத்தின் ஹாஸ்டல்லயே தங்கிட்டாங்க. இந்தப் பெண்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவத் தேவைகளைத் தினந்தோறும் செய்துகொடுக்கிறேன். தவிர, கொஞ்சம் ஆண்களும் வெளியில் ரூம் எடுத்துத் தங்கியிருக்காங்க. அவங்களுக்கு மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்திருக்கேன்.

ஸ்பின்னிங் மில்
ஸ்பின்னிங் மில்

என் நிறுவனத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டியது என்னுடைய கடமை. அதன்படி தேவையான உதவிகளுடன், போன மாசம் உற்பத்தி நடக்காத நாள்களுக்கும் சேர்த்தே சம்பளம் கொடுத்தாச்சு. இந்த மாசத்துக்குக் குறிப்பிட்ட தொகையாவது அவங்களுக்கு நிச்சயம் கொடுக்கணும்.

லாக்டெளன் தளர்வு செய்யப்பட்டு, உற்பத்தி மீண்டும் தொடர்ந்தாலும்கூட ஒரு வருஷத்துக்குப் பெரிசா லாபத்தை எதிர்பார்க்க முடியாது. மூலப்பொருள்கள் வாங்க, ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க, பொருளாதாரச் சரிவுகளையெல்லாம் எதிர்கொள்ள, கையிருப்பில் போதிய பணம் இருந்தால்தான் வருங்கால நிலைமைகூட சமாளிக்க முடியும். இதற்கு வங்கிகளின் உதவியைத்தான் எல்லா தொழில்முனைவோர்களுமே எதிர்பார்க்கிறோம்.

புதிய தொழில்கடன்கள், கடன் சலுகைகளை கொடுத்தால்தான் எங்களால இயல்புநிலைக்கு விரைவில் திரும்ப முடியும். அப்போதுதான் உண்மையான பாதிப்புகள் தெரிய ஆரம்பிக்கும். பெரிய சிக்கல்கள் காத்திருக்கிறதா என்பதெல்லாம் இனி வரும் காலங்கள்லதான் தெரியும். நிலைமை எப்படி இருந்தாலும், ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் வளர்ச்சி நிலைக்கு உயர்வோம்” என்கிறார் நம்பிக்கையுடன்.

விழுப்புரம் `சபானா ஆர்ட் பாட்டரீஸ்’ நிறுவன உரிமையாளர் சகீலா ஃபரூக், மண்பாண்டப் பொருள்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். கொரோனா பாதிப்பால், பல டன் மண்பாண்டப் பொருள்கள் கன்டெய்னரிலேயே அடைபட்டுக்கிடக்கின்றன.
சகீலா ஃபரூக்
சகீலா ஃபரூக்

``ஒரு மாசத்துக்கும் மேலாகவே உற்பத்தி நடக்கலை. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்குப் போக வேண்டிய ஏற்றுமதி ஆர்டர்களும் கன்டெய்னர்லயே தேங்கி நிக்குது. ஏற்றுமதி செய்த ஆர்டர்களுக்கும் எனக்கு வரவேண்டிய பல லட்சம் ரூபாய் பணமும் கைக்கு வராம முடங்கியிருக்கு. என் நிறுவனத்தின் 120 தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இல்லாம சிக்கலில் இருக்காங்க. அவங்களுக்குப் பண உதவி செய்திருக்கோம். மளிகைப் பொருள்கள் வாங்கிக்கொடுக்கவும் முடிவு செய்திருக்கோம்.

கொரோனா பாதிப்பு தொடரும்வரை, எதிர்காலம் குறித்த அச்சமும் பயமும் அதிகமாகிட்டே இருக்கு. நிலைமை சரியானாலும், மண்பாண்ட சமையல் பாத்திரங்களின் விற்பனை முன்புபோல நல்ல நிலையில்தான் இருக்கும். ஆனா, இனிவரும் காலங்கள்லயும் ஆடம்பர நிகழ்ச்சிகள் அதிகம் நடக்குமா என்ற கேள்வி எழுது. அதனாலயும் வாங்கும் திறன் குறைந்திருப்பதாலும், மண்பாண்ட அலங்காரப் பொருள்கள் மற்றும் பரிசுப் பொருள்களை மக்கள் முன்புபோல வாங்க ஆர்வம் செலுத்துவாங்களானு தெரியலை. அமெரிக்காவுக்குத்தான் அதிகளவில் ஏற்றுமதி செய்துவந்தேன்.

மண்பாண்டப் பொருள்கள் ஷோரூம்
மண்பாண்டப் பொருள்கள் ஷோரூம்

அந்த நாடு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால புதிய ஆர்டர்கள் வருவது எப்படி இருக்கும்னு தெரியலை. அதனால ஊழியர்களைக் குறைச்சுக்கலாமான்னு யோசிச்சோம். அவங்கள்ல பலரும் பெண்கள். இவ்வளவு நாளா எங்களை நம்பி இருந்தவங்களை வேலையிலிருந்து நீக்கவும் மனசு வரலை.

கொரோனா பரவல் முதலில் தொடங்கிய சீனாவின் மீது மற்ற நாடுகளுக்கு அதிருப்தி இருக்கு. அதனால பிற நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது திரும்ப அதிக வாய்ப்பிருக்கு. லாக்டெளன் நிலைமை சரியானால் இந்திய நிறுவனங்களுக்குப் புதிய ஆர்டர்கள் அதிகம் வருவதற்கும் வாய்ப்பிருக்கு.
சகீலா ஃபரூக்

நிலைமை சரியானதும் பழையபடி மண்பாண்டப் பொருள்களைத் தயாரிக்கலாம். ஒருவேளை ஆர்டர் குறைஞ்சா என்ன பண்ணலாம்? எப்போதும் வரவேற்பு இருக்கும் உணவுப் பொருள் தயாரிப்பிலும் கூடுதலாக கவனம் செலுத்தலாம்னு முடிவெடுத்திருக்கேன்.

கொரோனா பரவல் முதலில் தொடங்கிய சீனாவின் மீது மற்ற நாடுகளுக்கு அதிருப்தி இருக்கு. அதனால பிற நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது திரும்ப அதிக வாய்ப்பிருக்கு. லாக்டெளன் நிலைமை சரியானால் இந்திய நிறுவனங்களுக்குப் புதிய ஆர்டர்கள் அதிகம் வருவதற்கும் வாய்ப்பிருக்கு. அதன்படி பலதுறைகளுடன், எங்க துறைக்கும் எதிர்காலத்துல நிறைய தொழில் வாய்ப்புகள் வரும். ஆனா, அதுவரைக்குமான காலகட்டங்களைச் சமாளிப்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது” என்கிறார் கவலையுடன்.

பாரதி
பாரதி
பெரும் சரிவிலிருந்து மெதுவாக வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிக்கொண்டிருந்த ஆட்டோமொபைல் துறைக்கு தற்போது ஏற்பட்டிருப்பது மீள முடியாத சறுக்கல். அதுகுறித்து ஆதங்கத்துடன் பேசுகிறார், கோவை `ஜெய்நிதி ஆட்டோமேஷன்ஸ்’ நிறுவன உரிமையாளர் பாரதி. கனரக வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறார்.

``கொரோனா பாதிப்புக்கு முன்னாடியே, ஆட்டோமொபைல் துறை பெரிய சரிவை எதிர்கொண்டது. கூடவே, BS - 4 -லிருந்து BS - 6 தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டிய தேவை ஏற்பட்டது. அதுக்குக் கூடுதல் செலவானாலும், அந்தச் சிக்கல்களிலிருந்து மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை அதிகம் இருந்துச்சு. அதன்படி மீண்டு வந்தோம். ஆனா, இப்போ இருக்கிற நிலைமை வரலாற்றில் இதுவரை சந்திக்காத இழப்பு.

பாரதி
பாரதி

கொரோனா பாதிப்பால் மக்களின் வாங்கும் திறன் ரொம்பவே குறைஞ்சுடுச்சு. அதனால நிலைமை சரியான பிறகும், முதலில் அத்தியாவசியத் தேவைகளுக்குத்தான் மக்கள் முக்கியத்துவம் கொடுப்பாங்க. அதில், உணவு மற்றும் மருந்துப் பொருள்களுக்குத்தான் முதல் இடம். அடுத்து கல்வி, ஜவுளி துறைகளுக்குப் பிறகுதான், ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி பெறும். கொரோனா பாதிப்பு முழுமையா சரியாக வருஷக் கணக்கில் ஆகும்னு சொல்றாங்க. அதுவரை மக்கள் பொதுப்போக்குவரத்து, சாலைப் பயணம், வெளியூர் பயணங்களை அதிகம் தவிர்ப்பாங்க. ஜூலை 31-ம் தேதி வரைக்கும் ஐ.டி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யப்போறாங்க.

இதேபோலதான் மற்ற துறை ஊழியர்களும் வேலை செய்ய வாய்ப்பிருக்கு. ஆனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தங்களோட ஊழியர்களை அடுத்த வருஷம் வரைகூட `வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் வேலை செய்ய சொல்லவும் வாய்ப்பிருக்கு. அப்போ வாகனப் பயன்பாடு என்பதே கணிசமாகக் குறைஞ்சுடும். இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு என்றாலும், நம் நாட்டிலுள்ள பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அமெரிக்காவைச் சார்ந்தே இயங்குகின்றன. என் நிறுவனத் தயாரிப்புப் பொருள்கள் கணிசமாக அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகுது. அதனால, கொரோனா பாதிப்பிலிருந்து அமெரிக்கா மீண்டால்தான் ஆட்டோமொபைல் துறையும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். தற்போதைய அமெரிக்காவின் நிலைதான் கூடுதல் அச்சத்தை தருது.

கொரோனா பாதிப்பு முழுமையா சரியாக வருஷக் கணக்கில் ஆகும்னு சொல்றாங்க. அதுவரை மக்கள் பொதுப் போக்குவரத்து, சாலைப் பயணம், வெளியூர் பயணங்களை அதிகம் தவிர்ப்பாங்க.
பாரதி

எங்க துறை வருங்காலத்தில் எப்படி இருக்கும்னு கணிக்கவே முடியலை. இப்ப மாசத்துக்குப் பல கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்த நிலையில், அதுல பாதியாவது இனி டர்ன் ஓவர் செய்ய முடியுமா? உற்பத்தி சீராக இருக்குமா என்பதெல்லாம் பெரிய சந்தேகம்தான். பெரும்பாலான ஊழியர்கள் சொந்த ஊருக்குப் போயிட்டாங்க. உயிர்தான் எல்லாவற்றையும்விட முக்கியமானதுனு கொரோனா மக்களை ஆழமா உணரவெச்சிருக்கு. அதனால நிலைமை சீரானாலும், ஊழியர்கள் பயமில்லாம உடனே வேலைக்கு வருவாங்களா என்பதற்கும் உறுதியான பதில் இல்லை.

கனரக உதிரிபாகத் தொழிற்சாலை
கனரக உதிரிபாகத் தொழிற்சாலை

என் நிறுவனத்தில் வேலை செய்யும் 200 ஊழியர்களில், 30 பேர் நிறுவனத்திலேயே தங்கியிருக்காங்க. அவங்களுக்கு உணவு கொடுக்கறேன். மேலும், உற்பத்தி நடக்காட்டியும் ஊழியர்களுக்குக் குறிப்பிட்ட ஊதியத்தை வாழ்வாதாரத் தேவைக்குக் கொடுக்கறேன். உற்பத்தியை ஆரம்பிச்சாலும்கூட, நிலைமை இயல்பு நிலைக்கும் வளர்ச்சிப் பாதைக்கும் திரும்ப ரெண்டு வருஷம் ஆகலாம். எது நடந்தாலும் நம்பிக்கையோடு மாற்றங்களை எதிர்கொள்ள ஆயத்தமாகணும்” என்கிறார் உத்வேகத்துடன்.

பொள்ளாச்சி `இந்தியன் கோகனெட் புராடக்ட்’ நிறுவன உரிமையாளர் அருண்யா, இளம் தொழில்முனைவோர். தேங்காய் பவுடர் மற்றும் தேங்காய் துருவல் என மதிப்புக்கூட்டல் தொழில் செய்துவருகிறார். இந்த ஆண்டில் தனது வெளிநாட்டு ஏற்றுமதி ஆர்டர் கனவுடன் இருந்தவருக்குக் கொரோனா பெரும் சவாலாக மாறியிருக்கிறது.
அருண்யா
அருண்யா

``இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் என்னுடைய நிறுவன உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்துட்டிருக்கேன். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என் நீண்டகால இலக்கு. அதற்கான பல்வேறு சவால்களைக் கடந்து, இந்த வருஷம் அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்தேன். அதற்கேற்ப என்னோட எதிர்கால பிசினஸ் வளர்ச்சிக்கு நிறைய திட்டமிடல் செய்திருந்தேன். அதில் இப்போ நிறைய சறுக்கல்கள் ஏற்பட்டிருக்கு. இனி வரும் காலங்கள் எப்படி இருக்கும்னு கணிக்கவே முடியலை.

எங்க நிறுவனத்தை நம்பி நிறைய விவசாயிகள் இருக்காங்க. தினந்தோறும் டன் கணக்கில் தேங்காய்களை எங்களுக்கு விற்பனை செய்வாங்க. இந்த நிலையில இப்போ சுத்தமா உற்பத்தி நடக்கலை. ஆனாலும், என் நிறுவனத்தை நம்பியிருக்கும் அவங்களைக் கைவிடவும் முடியாது. அதனால அந்த விவசாயிகளிடமிருந்து குறிப்பிட்ட அளவு தேங்காய்களை நானே தினந்தோறும் வாங்கி, அதைக் கொப்பரை தேங்காய் வடிவில் மதிப்புக்கூட்டல் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்றேன்.

அருண்யா
அருண்யா

நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்றாங்க. அவர்களில் 90 சதவிகிதம் பேர் வடமாநிலத்தவர்கள். கொரோனா லாக்டெளனால் அவங்கள்ல பலராலும் சொந்த ஊருக்குப் போக முடியலை. அவங்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்துகொடுத்திருக்கேன். உற்பத்தி நடக்காட்டியும், எல்லா ஊழியர்களுக்கும் 50 சதவிகித சம்பளம் கொடுக்கறேன். இப்போ சிறு குறு, பெரிய நிறுவனங்கள் எல்லோருக்கும் பெரிய பாதிப்புதான்.

என் நிறுவனத்தை நம்பியிருக்கும் விவசாயிகளிடமிருந்து குறிப்பிட்ட அளவு தேங்காய்களை நானே தினந்தோறும் வாங்கி, அதைக் கொப்பரை தேங்காய் வடிவில் மதிப்புக்கூட்டல் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்றேன்.
அருண்யா

பொருளாதாரப் பலத்துடன் இருக்கும் தொழில்முனைவோர்கள் எளிதில் மீண்டு வந்துவிடலாம். ஆனா, எந்தச் சேமிப்பும் இல்லாம அடிப்படைக் கட்டத்துல இருக்கும் சிறு, குறு தொழில்முனைவோர்கள் இந்தச் சூழலை கடந்துவருவது பெரிய சிரமம்தான். உழைப்பால் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவோம்” என்கிறார் நம்பிக்கையோடு

அடுத்த கட்டுரைக்கு