Published:Updated:

இந்த ஆண்டிலிருந்து நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய 10 நிதிப்பழக்கங்கள் இவைதாம்! #FinancialPlanning

இந்த 10 நிதிப்பழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு, இன்றிலிருந்து உங்களுடைய வரவு செலவுகளைக் குறித்து வைக்கப் பழகுங்கள். மாத இறுதியில் அதை ரிவ்யூ செய்து பார்க்கும்போது, வரவு, செலவு, சேமிப்பை நீங்கள் சரியாகச் செய்வதும், எதிர்கால தேவைகளுக்கான பணத்தை முறையாகப் பிரித்து வைப்பது புலப்படும்.

`நிதிப்பழக்கங்கள் சரியாக இருந்தால், நிதிப் பிரச்னைகள் இருக்காது' என்பதுதான் அனைத்து நிதி ஆலோசகர்களின் பொதுவான அட்வைஸ். 2020-ம் ஆண்டு, கொரோனாவுடன் போராடியதைவிட, நிதிப் பிரச்னையில் சிக்கித் திண்டாடியவர்கள்தான் அதிகம். மக்களிடம் கொரோனா பயம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்ட நிலையிலும், குடும்பத்தில் பொருளாதார சரிவு மீதான அச்சம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. 2021-ம் ஆண்டில் நிதிப் பிரச்னைகள் வராமல் தவிர்க்க என்னென்ன நிதிப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என நிதி ஆலோசகர் யு.என்.சுபாஷிடம் கேட்டோம். அவர் சொன்ன 10 நிதிப்பழக்கங்கள் இங்கே உங்களுக்காக...

ஹெல்த் இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்!

கொரோனா நோய் தொற்று நம் எல்லோருக்கும் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது என்பது உண்மை. உயிர் மீதான அச்சம் காரணமாக இன்ஷூரன்ஸ் பற்றிப் பேசாமல் இருந்தவர்கள் கூட, இப்போது காப்பீட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆயுள் (டேர்ம் பாலிசி) மற்றும் மருத்துவ காப்பீடு இல்லாதவர்கள் இந்தப் புத்தாண்டில் முதல் காரியமாக, அதை எடுத்துக் கொள்ளுங்கள். தங்களுக்கும், தங்களுடைய குடும்பத்தாருக்கும் போதுமான அளவு இன்ஷூரன்ஸ் இருந்தாலே, மருத்துவ ரீதியிலான செலவுகளைச் சமாளித்து, பெரும் செலவுகளிலிருந்து தப்பிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், இன்ஷூரன்ஸ் இருக்கிறது என்கிற தைரியத்தால், நீங்கள் மேற்கொள்ளும் நிதிச் சார்ந்த நடவடிக்கைகள் தங்கு தடையின்றி நடக்கும். ஒருவேளை உயிரிழக்கும் அளவுக்கு மோசமான நிலையை அடைந்தால், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருக்கும் பட்சத்தில் இழப்பீட்டைப் பெற்று குடும்ப உறுப்பினர்கள் பொருளாதார கஷ்டத்திலிருந்து தப்பிக்கலாம்.

இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதைப் புதிப்பிப்பது கிடையாது எனத் தரவுகள் சொல்கின்றன. தங்கத்தைப் பராமரிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிடவும் முக்கியமானது இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பராமரிப்பது. அதனால் ஏற்கெனவே டேர்ம் மற்றும் மருத்துவ காப்பீட்டை எடுத்திருப்பவர்கள் அதை ஒவ்வொரு வருடமும் புதுப்பித்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் நலம்.

சேமிப்பு

ஆட்டோமேட்டிக் சேமிப்பு!

உங்களது இன்ஷூரன்ஸ் பிரீமியம், எஸ்.ஐ.பி முறையிலான மியூச்சுவல் ஃபண்டு முதலீடு, வங்கி சேமிப்பு, திருமணம், பிள்ளைகளின் படிப்பு போன்ற முதலீடுகளுக்கு உங்களது வங்கிக் கணக்கிலிருந்து மாதம்தோறும் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட தொகை, (ECS போன்று) குறிப்பிட்ட கணக்குக்குத் தானாகவே பணம் செல்லுமாறு ஆட்டோமேஷன் செய்துவிடுங்கள். இதுவரை அப்படிச் செய்யாமல் இருந்தால் கண்டிப்பாக அதைச் செய்து விடுங்கள்.

மாதம்தோறும் குறிப்பிட்ட தேதியில், அவ்வாறு பணப் பிடித்தம் செய்யும்போது உங்களுக்கும் அந்த முதலீடு அல்லது சேமிப்பு மீது அக்கறை இருக்கும். தாமதத்துக்காக வங்கியில் அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவேனும் போதுமான பணத்தை உங்கள் கணக்கில் விட்டு வைக்கும் பழக்கம் வந்துவிடும். மேலும், இதனால் உங்களுக்கு நேரமும் மிச்சமாகும்.

நிதிப் பழக்கங்கள்

ஆன்லைன் பண நிர்வாகம் அவசியம்!

பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியம் என்பதால், ஆன்லைன் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இதுநாள் வரை ரொக்கமாகவே பணம் செலுத்திவந்த உங்களுக்கு ஆன்லைன் பண நிர்வாகம் என்பது கொஞ்சம் புதிதாகவே இருக்கும். கொஞ்சம் சிரமப்பட்டாவது இந்த முறையில் நீங்கள் செலவு செய்யப் பழகி விட்டால், நீங்கள் செய்யும் செலவுக் கணக்குகளை எழுதி வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில்லறை சில்லறையாகச் செலவு செய்து, உங்கள் பணம் எப்படிச் செலவாகிறது என்று தெரியாமல் குழம்ப வேண்டியிருக்காது. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கான பணத்தை உரிய நேரத்தில் செலுத்துவதாக இருந்தாலும் சரி, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதாக இருந்தாலும் சரி, பஸ், ரயில் டிக்கெட்டுகளை வாங்குவதாக இருந்தாலும் சரி, ஆன்லைன் பண நிர்வாகம் மிகச் சிறப்பாக இருக்கும்.

வரவு - செலவு கணக்கு!

செலவுகளைக் கண்காணியுங்கள்!

`உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும்' எனச் சொல்லுவார்கள். அப்படித்தான், சேமிப்பதில் அக்கறை காட்டாவிட்டாலும் பரவாயில்லை, வீண்செலவுகளைக் குறைத்துக் கொள்வதில் கண்டிப்பாக அக்கறை காட்டுங்கள். செலவுகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொண்டாலே சேமிப்புக்கான பணம் உங்களிடம் மிஞ்சும். நிறைய பேர் எப்போதும் வங்கிக்கணக்கு புத்தகத்தை மாதம் தவறாமல் அப்டேட் செய்துகொண்டே இருப்பார்கள். கவனித்திருக்கிறீர்களா..? ஏனெனில், தற்போதைய டிஜிட்டல் உலகத்தில், கையிலிருந்து பணத்தைக் கொடுத்து செலவழிப்பதை சரிபார்ப்பதற்கான முறைதான் இது. வங்கிக்குத்தான் செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நெட் பேங்கிங் ஆப்ஷன் மூலமும், உங்களுடைய மாத வங்கி பரிவர்த்தனையை சரிபார்த்துக் கொள்ளலாம்.

Emergency Fund

அவசரகால நிதியை உருவாக்குங்கள்!

திடீர் தேவைகளுக்கு நிதிக்காகத் திண்டாடுவது இந்திய மக்களின் பொதுவான பழக்கமாகவே மாறிவிட்டது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி அவசரத் தேவைகளை சமாளித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம்தான் இதற்கு மிக முக்கிய காரணம். சின்னச் சின்ன உதவிகளுக்காக மற்றவர்களைச் சார்ந்து இருக்கலாமே தவிர, நிதி சார்ந்த உதவிக்கு எப்போதும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. அப்படியான ஒரு நிலையை இந்த வருடத்திலிருந்தாவது ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு அவசரகால நிதி சேமிப்பு (Emergency fund creation) நிச்சயம் உதவும்.

தனிநபரோ, நிறுவனமோ யாராக இருந்தாலும் 6-9 மாதங்கள் வரையிலான வழக்கமான செலவுகளுக்குத் தேவையான பணத்தை வங்கி இருப்பில் வைத்திருப்பது அவசியம். தினக்கூலி வேலை செய்பவர்கள் முதல் கோடிக் கணக்கில் பிசினஸ் செய்யும் தொழிலதிபர்கள் வரை இதைக் கட்டாயம் செய்தாக வேண்டும். மிகக் குறைந்தபட்சமாக மூன்று மாதங்களுக்குத் தேவையான பணத்தையாவது சேமித்து வையுங்கள்.

சேமிப்பு

எக்ஸ்ட்ரா பணம்; எக்ஸ்ட்ரா சேமிப்பு!

பிறந்த நாள் பரிசு, சம்பள போனஸ், அரியர்ஸ், பரம்பரைச் சொத்து விற்பது அல்லது பாகப்பிரிவினை மூலமாகக் கிடைக்கும் பணம் போன்று எதிர்பாராதவிதமாகக் கிடைக்கும் பணத்தைச் செலவழித்துவிடாதீர்கள். அது எத்தனை சிறிய தொகையாக இருந்தாலும் எதிர்பாராத செலவினங்களுக்காகவோ, மருத்துவச் செலவுக்காகவோ ஒதுக்கி வையுங்கள். அல்லது ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். ஒருவேளை கிரெடிட் கார்டு அல்லது பர்சனல் லோன் போன்ற வட்டிச் செலுத்தக்கூடிய கடன் ஏதேனும் இருந்தால், குறைந்தபட்சம் அதை அடைக்கவாவது அந்தத் தொகையைப் பயன்படுத்துங்கள்.

கடன்

கடன் நிர்வாகம்!

வங்கிக்கடன் விண்ணப்பங்கள்... கடன் தகவல் அறிக்கை ஏன் முக்கியமாகிறது? #LoanVenumaSir - 9

அனைத்து வகையான கடன்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு கடனும் ஒவ்வொரு வட்டி விகிதம் கொண்டவையாக அல்லது வட்டியே இல்லாததாகவும் இருக்கும். எனவே, அதிக வட்டிகொண்ட கடன் ஏதேனும் இருந்தால், அதை விரைவாகக் கட்டி முடிக்க முன்னுரிமை கொடுங்கள். பின்னர், படிப்படியாக அனைத்துக் கடன்களையும் முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். கடன் இருக்கும் வரை முதலீடோ, சேமிப்போ செய்ய முடியாது. எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடனை ஒழித்துக் கட்டுங்கள்.

உங்கள் தேவைகளை நிறைவேற்றும் இலக்கு நோக்கிய முதலீடு!

இலக்கை உருவாக்குங்கள்!

தறிகெட்டு தாறுமாறாக ஓடும் குதிரைகளைவிட, இலக்கை நோக்கி ஒரே திசையில் பயணிக்கும் குதிரைகளே வேகமாக முன்னேறும். அப்படித்தான் முதலீட்டுத் திட்டங்களில் இலக்கு என்ன என்பதைத் தீர்மானித்து முன்னேறுங்கள். எந்த தேவைக்காக முதலீடு செய்கிறோம், எத்தனை ஆண்டுகள் வரை முதலீட்டைத் தொடர வேண்டும், முதலீட்டுக்குக் கிடைக்கும் வட்டி விகிதம் எவ்வளவு, பணவீக்க அடிப்படையில் எதிர்கால பயன்பாட்டுக்குத் தேவைப்படும் தொகை எவ்வளவு என்பதையெல்லாம் ஒரு நிதி ஆலோசகரை அணுகி, முறையான திட்டமிடலுடன் முதலீட்டை மேற்கொள்ளுங்கள். முடிந்தவரை இளம் வயதில் இருப்பவர்கள் இப்போதே முதலீட்டை ஆரம்பித்துவிடுவது நல்லது. அப்போதுதான் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்கான பணத்தைக் குறைவான முதலீட்டில் பெற முடியும்.

முதலீடு

இடைநிறுத்தமில்லா முதலீடு!

சேமிப்பு மற்றும் முதலீடுகளை ஆரம்பித்த பிறகு, அதை இடையில் நிறுத்தம் செய்யும் பழக்கம் அல்லது ஒரு தேவைக்கு மேற்கொண்ட முதலீட்டிலிருந்து பணத்தை எடுத்து இன்னொரு தேவைக்குப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இது முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்கால இலக்குகளை அடைவதற்கான காலகட்டத்தை அதிகப்படுத்திவிடும். மேலும், முதலீட்டை மேற்கொள்ளும்போது அனைத்து முதலீடுகளிலும் பிரித்து முதலீடு செய்வதை வழக்கமாக வைத்திருங்கள். உங்களுடைய முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் தங்கம், மியூச்சுவல் ஃபண்ட், வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பு, பங்குச்சந்தை என அனைத்து வகையான முதலீடுகளும் இருக்கட்டும். அப்போதுதான் ஒன்றின் இழப்பை மற்றொன்று ஈடுசெய்யும்.

Money ( Photo by Disha Sheta from Pexels )

பட்ஜெட் போடுங்கள்!

நாம் செய்ய மறந்த பல்வேறு விஷயங்களில் மிகவும் முக்கியமானது பட்ஜெட் போடுவது. நம் முன்னோர்களின் செயல்களை நன்கு கவனித்திருந்தால் தெரிந்திருக்கும், 10 ரூபாயை செலவு செய்தாலும், அதை உடனே ஒரு சின்ன டைரியில் எதற்காக செலவு செய்தோம், எப்போது செலவு செய்தோம் என்பதைக் குறித்து வைப்பார்கள். ஆனால், இன்று நாம் அதைச் செய்வதேயில்லை.

மேலே சொன்ன 10 நிதிப்பழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு, இன்றிலிருந்து, இந்த நிமிடத்திலிருந்து உங்களுடைய வரவு செலவுகளைக் குறித்து வைக்கப் பழகுங்கள். மாத இறுதியில் இந்தக் குறிப்புகளை ரிவ்யூ செய்து பார்க்கும்போது, வரவு, செலவு, சேமிப்பை நீங்கள் சரியாகச் செய்வதும், எதிர்கால தேவைகளுக்கான பணத்தை முறையாகப் பிரித்து வைப்பது புலப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு