Published:Updated:

இன்று உலக கல்வி தினம்; நிதி அறிவின் இந்த 10 விதிமுறைகளையும் இன்றைக்கு தெரிஞ்சுப்போமா?

இந்தக் கல்வி அறிவு தினத்தில் பணத்தை பன் மடங்காக்கும் 10 தங்க விதிமுறைகள் பற்றிப் பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இன்று செப்டம்பர் 8 உலக கல்வி அறிவு தினம். இன்றைய தினத்தில் நிதி அறிவு பற்றியும் பேசுவது மிகப் பொருத்தமாக இருக்கும். காரணம், உலக இயக்கம் முழுக்க முழுக்க பொருளாதாரம் மற்றும் நிதியைச் சார்ந்தே இருக்கிறது.

ஒருவர் பணக்காரராக இருக்கிறார் அல்லது ஒருவருக்கு திடீரென பரிசுப் போட்டி அல்லது லாட்டரி மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது என்றாலும் அவர் அந்தப் பணத்தை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால், அந்தப் பணம் அவரைவிட்டு விரைவில் வெளியேறிவிடும். பணத்தை நிர்வகிக்கத் தெரியாது தோற்றவர்களின் உதாரணங்கள் பல உண்டு.

இது கொஞ்சம் பழைய புள்ளி விவரம்தான். இருந்தாலும் இன்றைக்கு ஒப்பிட்டு பார்ப்பது பொருத்தமானதுதான்.

இந்தியாவில் சராசரியாக 27% பேர்தான் நிதி அறிவு பெற்றிருக்கிறார்கள்.

தமிழகத்தில் இது 22% ஆக உள்ளது.

தமிழக ஆண்களில் 25% பேரும், பெண்களில் 20% பேரும் நிதி அறிவு பெற்றிருக்கிறார்கள்.

இந்தக் கல்வி அறிவு தினத்தில் பணத்தை பன் மடங்காக்கும் 10 தங்க விதிமுறைகள் பற்றி பார்ப்போம்.

Money
Money
Photo by Disha Sheta from Pexels

1. நிதி இலக்கு

பணத்தை பல மடங்காக அதிகரிக்க நமக்கு முதலில் நிதி இலக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அந்த இலக்கை அடையும் வரை அந்தப் பணத்தைக் கண்டதுக்கும் செலவு செய்யாமல் இருப்போம்.

நிதி இலக்கை சரியாக நிறைவேற்ற எந்தத் தேவைக்கு, எவ்வளவு நாள்கள் கழித்து எவ்வளவு தொகை தேவை என்பதைக் கணக்கிட வேண்டும். அதை அடைய இப்போதிருந்தே எவ்வளவு மாதம் முதலீடு செய்ய வேண்டும் என்பதை சரியாகக் கணக்கிட வேண்டும். அந்த முதலீட்டைத் தொடர்ந்து விடாமல் சரியாக மேற்கொண்டு வருவது கட்டாயம். அப்போதுதான் உங்கள் பணம் பன்மடங்காகப் பெருகும்.

வங்கி டெபாசிட்டில் உங்கள் பணம் தூங்குகிறதா? இவற்றை ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது? - 10

2. நிகர சொத்து மதிப்பை கணக்கிடுங்கள்..!

உங்களின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு என்பதைப் பட்டியலிடுங்கள். சொத்து என்கிறபோது வீடு, மனை, தங்கம், வெள்ளி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, பங்குச் சந்தை முதலீடு எல்லாம் சேர்ந்தது. இவற்றின் மதிப்பிலிருந்து நீங்கள் பிறருக்கு கொடுக்க வேண்டிய கடன்களை கழியுங்கள். இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், இங்கிருந்து எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பது புரியும். இந்தச் சொத்துகளின் நிகர மதிப்பு மூன்று மாதத்துக்கு முன் என்னவாக இருந்தது. இப்போது அதிகரித்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா என மதிப்பிடுங்கள். உங்கள் நிகர சொத்து மதிப்பு மிகக் குறைவாகக் கூட இருக்கலாம். ஆனால், இதை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் சரியான முதலீட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு உங்கள் பணத்தைப் பல மடங்காக அதிகரிக்க முடியும். மேலும், உங்களுக்கு திடீரென அலுவலகத்தில் ரூ.5 லட்சம் வெகுமதி கிடைக்கிறது. அதை எதில் முதலீடு செய்வது என்கிற தெளிவு இருக்க வேண்டும். இல்லையென்றால் காற்றில் கற்பூரம் கரைவது போல் உங்கள் காசு கரைந்துவிடும் அபாயம் இருக்கிறது.

3. பணத்தை மதியுங்கள்

பணத்துக்கு மதிப்பு கொடுங்கள். கன்னத்தில் பணத்தை ஒத்திக்கொள்ள சொல்லவில்லை. உங்களுக்கு பணம் தொடர்பாக வரும் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்டுகள், கிரெடிட் கார்டு ரிப்போர்ட்டுகள் போன்றவற்றை உடனுக்குடன் படியுங்கள். இல்லை என்றால் சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடும். கிரெடிட் கார்டு ரிப்போர்ட்டில் நீங்கள் வாங்காத பொருளுக்குக் கூட பில் சேர்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

இப்படி பணம் வீணாக செலவானால் உங்கள் பணம் எப்படி பன்மடங்காகும்?

சதீஷ்குமார், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், http://sathishspeaks.com/
சதீஷ்குமார், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், http://sathishspeaks.com/

4. தள்ளுபடி விற்பனையைத் தள்ளி வையுங்கள்

பிக் மில்லியன் டே உள்ளிட்ட தள்ளுபடி விற்பனையில் சிக்கி தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவிக்காதீர்கள். இப்படி தொடர்ந்து செய்தால், உலகின் முன்னணி முதலீட்டாளர் வாரன் பஃபெட் சொன்னது போல், தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவித்தால், ஒரு கட்டத்தில் செலவுக்குத் தேவையான பொருள்களை விற்க வேண்டி வரும்.

தள்ளுபடிக்காகத் தேவையில்லாமல் செலவு செய்தால், உங்கள் பணம் எப்போது பல மடங்காகும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

5. கடன் சிக்கல் சிக்கிக்கொள்ளாதீர்கள்!

நீங்கள் ரூ.25,000-க்கு ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கும் நோக்கத்துடன் கடைக்குள் நுழைந்திருப்பீர்கள். கடைவாசலிலேயே உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், ஏ.டி.எம் கார்டுகள், கிரெடிட் கார்டு விவரங்களைக் கேட்டு, உங்களுக்கு ரூ.50,000 ஃப்ரீ அப்ரூவ்ட் லோன் தகுதி இருக்கிறது என்பார்கள். விளைவு தேய்மான சொத்தான ஸ்மார்ட் போனை ரூ.50,000 கடனில் வாங்கிக் கொண்டு வந்திருப்பீர்கள். இந்த ஸ்மார்ட் போனை இன்றைக்கு வாங்கி நாளைக்கு விற்றால்கூட 25 - 30% குறைவான விலைக்குதான் போகும். அடுத்து இந்தக் கடனுக்கான வட்டி 18 - 22% ஆக இருக்கும். தேய்மானப் பொருள்களை 10 சதவிகித வட்டிக்கு மேல் கடனில் வாங்குவது அதிக இழப்பாக இருக்கும்.

இப்படி கடனில் அதிக விலை உள்ள பொருள்களை உங்கள் தகுதிக்கு மீறி வாங்கினால் உங்கள் பணம் பன்மடங்காக மாறுவது எப்போது?

இந்தச் செயல்கள் ஒருவரின் செல்வத்தை வளரவிடாமல் அழித்துவிடும். அந்தஸ்துக்காக, பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக மாதத் தவணையில் பொருள்களை வாங்குவது போன்ற தவறான நிதிப் பழக்கம் வேறு இல்லை. உங்களால் என்றைக்கு மொத்தமாக சேர்த்து அந்தப் பொருளை வாங்க முடியுமோ, அப்போது வாங்குவதுதான் சரியானதாகும்.

Rupee
Rupee
Photo by Ravi Roshan from Pexels
காம்பௌண்ட் எஃபெக்ட்: ஐன்ஸ்டீன் இதை ஏன் 8-வது அதிசயம்னு சொன்னார்? - பணம் பண்ணலாம் வாங்க - 14

6. வரம்புக்குள் வாழுங்கள்

இன்றைய இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்து சில ஆண்டுகளிலேயே மாதம் ரூ. 30,000, ரூ.40,000 சர்வ சாதாரணமாக சம்பாதிக்கிறார்கள். அதே அளவுக்கு பணத்தின் மதிப்பு தெரியாமல் கண்டபடியும் செலவு செய்கிறார்கள். காபி ஷாப்புக்கு இரண்டு பேர் சென்றால் சுமார் ரூ.500-ஐ சர்வ சாதாரணமாகச் செலவு செய்கிறார்கள். சினிமாவுக்கு ஒரு முறை சென்றால் ரூ.1,000 செலவழிக்கிறார்கள். சோசியல் மீடியா அவர்களை மிகவும் கெடுத்து வைத்திருக்கிறது. நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் செய்யும் செலவுகளை பார்த்து மன அழுத்தத்துக்கு உள்ளார்கள். அந்தஸ்துக்காக செய்யும் செலவுகளால் கடனாளி ஆகிறார்கள். ஒருவருக்கு பொழுது போக்குகள் அவசியம்தான். ஆனால், அவை அளவுடன் இருந்தால்தான் நீங்கள் செல்வந்தர் ஆக முடியும்.

7. உங்கள் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு

இப்போது இருக்கும் உங்கள் வீடு, தங்கம், முதலீடுகள் மட்டுமே உங்களின் சொத்து அல்ல. எதிர்காலத்தில் சம்பாதிக்கப் போவதும் உங்கள் சொத்துதான்.

வீட்டிலிருக்கும் பொருள்களின் இழப்பை ஈடுகட்ட காப்பீடு எடுத்திருப்பது போல், உங்கள் எதிர்கால வருமானத்தைப் பாதுகாக்க காப்பீடு எடுப்பது அவசியம்.

உதாரணத்துக்கு, 35 வயதாகும் குடும்பத் தலைவருக்கு மனைவி, இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தக் குடும்பத் தலைவர் திடீரென மறைந்துவிட்டால், அவரின் மனைவி, பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்? எனவே, குடும்பத் தலைவரின் வருமானத்தைப் பாதுகாக்க அவரின் பெயரில் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் ஆயுள் காப்பீடு எடுப்பது கட்டாயம். ஒருவரின் மாதச் சம்பளம் ரூ.50,000 என்றால் அவரின் ஆண்டு சம்பளம் ரூ.6 லட்சம். இதைப் போல் சுமார் 15 மடங்கு தொகை அதாவது ரூ.90 லட்சத்துக்கு டேர்ம் பிளான் எடுப்பது அவசியம்.

இந்தக் காப்பீடு என்பது குடும்பத்தின் சொத்து இழப்பை காப்பாற்றும் கவசமாக இருக்கிறது.

Health Insurance
Health Insurance
பாதுகாப்புக்கும் வருமானத்துக்கும் உத்தரவாதம்; பத்திரங்களில் முதலீடு செய்வது ஏன் நல்லது? - 15

8. சேமிப்பை கரைக்கும் மருத்துவமனை செலவுகள்

அடுத்து மருத்துவமனை செலவுகளை ஈடுகட்ட மருத்துவக் காப்பீடு எடுப்பது கட்டாயம். கோவிட் காரணமாக மருத்துவமனையில் சிசிக்சை பெற்றவர்கள் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் செலவு செய்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேர் இந்தத் தொகையை அவர்களின் சேமிப்பு மற்றும் முதலீடுகளை உடைப்பது மூலம்தான் ஈடுகட்டி இருக்கிறார்கள். இந்தச் செலவுகளிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு பல வருடங்களாகும். எனவே, சில பல ஆயிரங்களைச் செலவு செய்து மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ளுங்கள். இதனால், உங்கள் பணம் பல மடங்காக அதிகரிப்பையும் உறுதி செய்கிறீர்கள்.

9. அவசர கால நிதி

அனைவரும் 2020 ஏப்ரல் முதலான ஆறு மாதத்தை இப்போதும் மறந்திருக்க மாட்டார்கள். தொழில் முடக்கத்தால் பலருக்கு சம்பளம் இல்லை. பலருக்கு வேலையே இல்லை. இந்த நிலையில் அவசரக் கால செலவுக்கு என முன்னரே பணம் சேர்த்து வைத்தவர்கள்தான் தப்பித்தார்கள். எல்லோரும் பணச் சிக்கலில் இருந்ததால், ஒருவர் மற்றவரிடம் கடன் கேட்க முடியாத நிலை. எனவே, 6 முதல் 9 மாதத்துக்குத் தேவையான தொகையை அவசர கால நிதியாக சேர்த்து வைப்பது நல்லது. இந்தத் தொகையை அவசர செலவுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இந்தத் தொகையை யாராலும் ஒரே நாளில் மொத்தமாக சேர்க்க முடியாது. சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் மாதம் எவ்வளவு தொகையை சேர்க்க முடியுமோ, அவ்வளவு தொகையை சேர்த்து இந்தத் தொகுப்பு நிதியை விரைந்து உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் அவசர செலவுக்கு உங்களின் சேமிப்பு மற்றும் முதலீடுகள் இரையாகாமல், உங்களுக்கு செல்வம் சேருவதோடு, அது பல மடங்காக பெருகவும் செய்யும்.

Investment
Investment
`சொந்த வீடே வேண்டாம்' என நினைக்கும் இளம் தலைமுறையினர்; அவர்களின் எண்ணம் சரிதானா? - 16

10. இளமையில் முதலீட்டை ஆரம்பியுங்கள்

வாரன் பஃபெட் அவரின் 11-வது வயதில் முதலீட்டை ஆரம்பித்தார். அவரின் மிகப் பெரிய வருத்தம், இன்னும் சின்ன வயதில் முதலீட்டை ஆரம்பிக்கவில்லை என்பதாகும். மிகச் சிறிய வயதில் முதலீட்டை ஆரம்பித்திருந்தால் சொத்து இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கும் என அவர் இப்போதும் வருத்தப்படுகிறார். முடிந்த வரைக்கும் இளம் வயதிலேயே முதலீட்டை ஆரம்பித்து விடுங்கள். அப்போதுதான் கூட்டு வளர்ச்சி என்கிற பவர் ஆஃப் காம்பவுண்டிங்கின் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும்; உங்கள் முதலீடு பன்மடங்காகப் பெருகும்.

இந்தக் கல்வி அறிவு தினத்தில் நீங்கள் நிதி அறிவு பெறுவது மிக முக்கியம். உங்கள் பணத்தை நீங்களே நிர்வகிக்க கற்றுக்கொள்ளுங்கள். பெரும் பணக்காரர்கள், ஆலோசனை பெற ஆடிட்டர், வழக்கறிஞர், நிதி ஆலோசகர் எனப் பலரை வைத்திருக்கிறார்கள். நீங்களும் தேவைப்பட்டால் நிதி ஆலோசகர் ஒருவரின் உதவியை பெறுவது மூலம் உங்களின் பணத்தை பல மடங்கு பெருக்க முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு