Published:Updated:

அப்ரைஸல்... திறமையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி!

செ.கார்த்திகேயன்

அப்ரைஸல் என்பதைப் பெரும்பாலான வர்கள் சம்பள உயர்வுக்கான விஷயமாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. அப்ரைஸல் என்பது எதற்காக செய்யப்படுகிறது, ஒரு  பணியிடத்தில் ஒருவருடைய வளர்ச்சியை அப்ரைஸல் என்பது எப்படித் தீர்மானிக்கிறது என்பதைப் பற்றி பொலாரீஸ் ஃபைனான்ஷியல் டெக்னாலஜி நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவின் மேலாளர் பி.பாலமுருகனிடம் கேட்டோம். அவர் விளக்கமான பதிலை கொடுத்தார்.

திறமையைக் கணிக்கக்கூடிய விஷயம்!

“அப்ரைஸல் என்பது ஒருவரின் அனுபவத்தை, அவரது திறமையைக் கணிக்கக்கூடிய விஷயமாகும். ஒருநபர் வேலைக்குச் சேர்ந்த நாள்முதலே அவரின் நடவடிக்கைகள் மனிதவள மேலாண்மைத் துறையால் கவனிக்கப் படும். அதுமட்டுமல்லாமல் அவர் வேலை செய்யும் பிரிவின் குழுத் தலைவரும் கண்காணித்துக் கொண்டேதான் இருப்பார்.

இப்படி கண்காணிக்கப்படும் விஷயங்களில் அவர் மீதான பிழைகள் இருக்கும்பட்சத்தில் அதைச் சுட்டிக்காட்டி, அந்தப் பணியாளரை முன்னேற்றப் பாதையில் பயணிக்க வைப்பதற்கான விஷயம்தான் அப்ரைஸல்.

அப்ரைஸல்... திறமையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி!

வளர்ச்சியின் அடிப்படை!

ஒரு பணியாளரின் செயல்பாடுகள், அவரது வேலை தொடர்பான விஷயங்கள், தகவல் தொடர்பு போன்ற கேள்விகள் அடங்கிய அப்ரைஸல் படிவம் இன்றைய நிலையில் பெரும்பாலான ஊழியர்களின் கண்களுக்கு வெறும் காகிதமாகத்தான் தெரிந்து வருகிறது. ஆனால், அதுதான் அவர்களின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை மறக்கக் கூடாது.

ஒரு பணியாளர், அவரது அலுவலக நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறாரா, வேலைக்குச் சரியான நேரத்துக்கு வருகிறாரா, அவரது நடவடிக்கைகள் சரியானதாக இருக்கிறதா, நிறுவனத்தின் விதிமுறை களைக் கடைப்பிடிக்கிறாரா என்பது போன்ற எல்லா விஷயங்களும் நிறுவனத்தாரால் அப்ரைஸல் படிவம் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு பணியாளரின் இந்த நடவடிக்கை கள் சரியாக இருக்கும்பட்சத்தில், அவர் அடுத்தக்கட்ட வளர்ச்சியை அடைய முடியும். முதல் அப்ரைஸல் சமயத்தில் தங்களிடம் இருக்கும் தவறுகளையும், வேலைகளில் காட்டும் கவனக்குறைவை யும் நிறுவனம் சுட்டிக்காட்டும்போது திருத்திக் கொண்டால்தான் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும்.

அப்ரைஸல்... திறமையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி!

நிறுவனம் தெரிந்துகொள்வது!

ஓர் ஊழியர் கொடுத்த வேலைகளை மட்டும் செய்கிறாரா, தானாக முன்வந்து அதிக வேலைகளை எடுத்துச் செய்கிறாரா, அவர் செய்யும் வேலையில் காட்டும் வேகம் எப்படி இருக்கிறது போன்ற விஷயங்களை அப்ரைஸலில் பார்க்கப்படும். தவிர, சக பணியாளர் களுடன் எப்படி பழகுகிறார், அவர் களுக்கு அவர் எந்த வகையில் உதவியாக இருக்கிறார் என்பதையும் பார்ப்பார்கள்.

அப்ரைஸல் ரேட்டிங்!

இன்றைய நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் பணியாளர்களுக்காக அப்ரைஸல் ரேட்டிங் வழங்குகின்றன.  அப்ரைஸல் நேரங்களில் எதிர்பார்ப்பைவிடக் குறைவாக வேலை செய்கிறவர்கள், எதிர்பார்ப்பதைச் செய்கிறவர்கள், எதிர்பார்த்ததைவிட அதிகம் செய்கிறவர்கள் என ரேட்டிங்ஸ் வழங்குகிறார்கள். இதைப் பணியாளர்கள் பாசிட்டிவ்-ஆக எடுத்துக் கொண்டால்தான் பணியிடத்து வளர்ச்சியை வசப்படுத்திக்கொள்ள முடியும்.

அப்ரைஸல் மதிப்பீடு!

அப்ரைஸல் மதிப்பீட்டில் மூன்று, நான்கு வகைகள் இருக்கின்றன. ஒன்று, தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்வது; ஒரு பணியாளர் பற்றி அவரது குழுத் தலைவரிடம் நிர்வாகம் கேட்டுத் தெரிந்துகொள்வது; ஒருவருடன் பணியாற்றும் சக பணியாளர்களிடம் அவரைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்வது; தமது கண்காணிப்பால் அவரைப் பற்றித் தீர்மானிப்பது. இந்த மதிப்பீடு எல்லாமே ஒரு பணியாளரின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிக்கக்கூடியதாக இருக்கும்'' என்றார் தெளிவாக.

அப்ரைஸல் என்பது பணியிடத்து வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை புரிந்து, ஆரம்பத்தில் இருந்தே வேலையில் திறமையாகச் செயல்பட்டால், பதவி உயர்வு நிச்சயம் தேடி வரும்!

அடுத்த கட்டுரைக்கு