நடப்பு
Published:Updated:

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

டாக்டர் சங்கர சரவணன்


 ரூபாய் 1

“தரவு என்பது தகவல் ஆகாது; தகவல் என்பது அறிவு ஆகாது; அறிவு என்பது புத்திசாலித்தனம் ஆகாது” (Data is not information; Information is not knowledge and knowledge is not  wisdom) என்று ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு.

இது போட்டித் தேர்வுகளில் கேள்வி களுக்கு விரிவான விடை எழுதும்போது நினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான கருத்து. ஏனென்றால்,
2013-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் சர்க்கரை ஆலைகள் பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்வியையும், அதற்கான மாதிரி விடையையும் கடந்த வாரம் தந்திருந்தோம். அதுகுறித்து எழுந்த முக்கிய ஐயம் ஒன்றை தேர்வு ஆர்வலர்கள் நம்மிடம் கேட்டார்கள். அந்தக் கேள்வியில் கொடுக்கப்பட்ட கருத்தை நாம் ஒப்புக்கொண்டுதான் விடை எழுத வேண்டுமா என்பதே அந்த ஐயம்.

இதற்கு விடை, கட்டாயமாக, அப்படியே  ஒப்புக்கொண்டுதான் விடை எழுத வேண்டும் என்பது இல்லை. ஆனால், நாம் எழுதும் விடை உண்மைக்குப் புறம்பாக இருக்கக் கூடாது. அரசாங்க அறிக்கைகளின்படி, சமீப காலங்களில் தென்மாநிலங்களில் அதிக சர்க்கரை ஆலைகள் தொடங்கப் படுவதும் அதற்குச் சாதகமான காரணி களும் விளக்கப்பட்டுள்ளன.

ஆனால், ஊடகச் செய்திகள் இதை விமர்சனப் போக்கில் அணுகுகின்றன. எனவே, ஊடகங்களில் சர்க்கரை ஆலைகள் தென்மாநிலங்களில் தொடங்கப்படுவதற்குச் சாதகமான சூழ்நிலைகளும், அதனால் கரும்பு விவசாயிகளுக்குக் கிடைத்துள்ள அல்லது கிடைக்காத பலன்களும் அலசப்பட்டிருக்கும்.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

ஒரு விஷயம் தொடர்பாக, அரசாங்க அறிக்கைகள் மற்றும் ஊடகச் செய்தி களை அடிப்படையாகக் கொண்டே நமது விடை அமைய வேண்டும். அதாவது, நமக்குக் கிடைத்த தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து வினாவுக்கு ஏற்ற மாதிரி விடையளிப்பதே புத்திசாலித்தனமாக இருக்கும்.

 ரூபாய்-2

கடந்த இதழில் பத்து கேள்விகளைக் கேட்டிருந்தேன். அதற்கான விடை களை கண்டுபிடிக்கச் சொல்லி இருந்தேன். தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி முடித்த கையோடு அதற்கான விளக்கங்களையும் தேடி வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் கண்டறிந்த விடையோடு நான் சொல்லும் விடை யானது சரியாக இருக்கிறதா என்று நீங்களே சரிபார்த்துக்கொண்டு, உங்களுக்கு நீங்களே மதிப்பெண் அளித்துக்கொள்ளுங்கள். இதோ விடைகள்...

1. 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) மாநாட்டில், அந்த அமைப்புக்கான நிரந்தரச் செயலகத்தைப் பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் ஏற்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
2. 2014-ல் இந்திய மற்றும் ஜப்பான் பிரதமர்கள் மேற்கொண்ட முதலீட்டுப் பெருக்கக் கூட்டாண்மையின்படி, ஐந்து ஆண்டுகளில் ஜப்பான், இந்தியாவில் செய்துள்ள அந்நிய நேரடி முதலீட்டை இரட்டிப்பாக்கவும், இந்தியாவில் இயங்கும் ஜப்பான் நிறுவனங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கவும் கூட்டாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3. 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கைப்படி 2011-ம் ஆண்டில் PPP (Purchase Power Parity) அடிப்படையில் இந்தியா உலகிலேயே மூன்றாவது பெரிய வாங்குதிறன் பொருளாதாரம் ஆகும்.

4. 2014-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் ஆசியா பத்திரிகை வெளியிட்டுள்ள Forbes Asia’s Fabulous 50 என்னும் பட்டியலில் இந்தியாவில் உள்ள 12 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. 2005-ம் ஆண்டு முதல் ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த Tata Motors, HDFC Bank, HCL

Technologies, Sun Pharmaceuticals, Mahindra & Mahindra உள்ளிட்ட 12 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

இந்தப் பட்டியலில் சீனாவைச் சேர்ந்த 16 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. ஆண்டுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் வருவாய் பெறும் 1,300 பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளிலிருந்து  50 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஹெச்டிஎஃப்சி வங்கி கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் இடம் பெற்றுச் சாதனை புரிந்துள்ளது.

5. உலகிலேயே அதிக யுரேனிய தாது உடைய சுரங்கமான தும்மலப்பள்ளி ஆந்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தச் சுரங்கம் குறித்து நான்கு ஆண்டுகள் ஆய்வு நடத்திய இந்திய அணுசக்தித் துறை 2011-ம் ஆண்டு தும்மலப்பள்ளி சுரங்கம் 1,50,000 டன் யுரேனிய தாதுவுடன் உலகிலேயே பெரிய யுரேனிய சுரங்கமாக இருக்குமென அறிவித்துள்ளது. அதேசமயத்தில், 49,000 டன் தாது இருப்பு தற்போது உறுதிபடுத்தப் பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

6. 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 2015 ஜனவரி 26-க்குள் வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூபாய் 30,000 ரூபாய் மதிப்பிலான ஆயுள் காப்பீடு கூடுதலாக இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தத் திட்டத்தில் 1 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் தமிழில் ‘பிரதமர் மக்கள் நிதித் திட்டம்’ எனப்படுகிறது. “எனது வங்கிக் கணக்கு எனது வாழ்க்கைக் கணக்கு” என்பது இந்தத் திட்டத்தின் கொள்கை வாசகம் ஆகும். ஆறு மாதங்களுக்கு இந்தக் கணக்கை திருப்திகரமாகப் பராமரித்தால், 5,000 ரூபாய் வரை ‘ஓவர் டிராப்ட்’ வசதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிலவும் பொருளாதாரத் தீண்டாமையை (Financial Untouchability) முடிவுக்குக் கொண்டுவரும் திட்டம் என இந்தத் திட்டத்தை இந்திய பிரதமர் வர்ணித்துள்ளார்.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

7. 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் - 2014 உலக நிலை’ அறிக்கையின்படி, இந்தியா 2013-ம் ஆண்டில் 1,700 மெகாவாட் காற்றாலை மின்சக்தி உற்பத்தி செய்து, அதிகக் காற்றாலை மின்சக்தி உற்பத்தி செய்த உலக நாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2013-ம் ஆண்டில் 16,100 மெகாவாட் காற்றாலை மின்சக்தி உற்பத்தி செய்து உலகிலேயே முதலிடம் பெற்ற நாடு சீனா. அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாடுகள் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.

நீர்மின்சார உற்பத்தியைப் பொறுத்தவரை, 2013-ம் ஆண்டில் உலகின் மொத்த நீர்மின் உற்பத்தியில் 4% சேர்க்கப்பட்டுள்ளது. இது 10 லட்சம் மெகாவாட்டுக்குச் சமம். இதில் சீனாவின் உற்பத்தி 29,000 மெகாவாட்.

இந்தியா தற்போதைய 30,000 மெகாவாட் நீர்மின் உற்பத்தி திறனை 2017-க்குள் 55,000 மெகாவாட்டாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. 8. 2013-ம் ஆண்டு இயற்றப்பட்டு, 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வந்த கம்பெனி சட்டம் உலகிலேயே முதன்முறையாக நிறுவனங்களின் சமூகப் பொறுப்பை (Corporate Social Responsibility) சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, 500 கோடி ரூபாய் சொத்து மதிப்பும், ஆண்டுக்கு 1,000  கோடி  ரூபாய் வியாபாரமும் செய்து குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனங்கள் தங்களது மூன்று ஆண்டு லாபத்தில் இரண்டு சதவிகிதத்தைச் சமூகப் பொறுப்புள்ள செயல்களுக்குச் செலவிட வேண்டும்.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

இதன்படி சுமார் 8,000 நிறுவனங்கள், 10 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான பணத்தைச் சமூகப் பொறுப்புக்காகச் செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்த சிஎஸ்ஆர் ஒதுக்கீடு செலவினமாக எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. மாறாக, நிறுவனத்தின் லாபமாகவே கணக்கிடப்பட்டு அதற்கும் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

9. 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நிலக்கரி ஒதுக்கீடு பற்றி வழங்கிய தீர்ப்பில் UMPP திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிலக்கரி, அந்தத் திட்டத்துக்காக மட்டுமே பயன் படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

UMPP என்பது Ultra Mega Power Project ஆகும். 11-ம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 2012-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் மின்சக்தி என்ற குறிக்கோளோடு ஒரு லட்சம் மெகாவாட் கூடுதல் மின்சக்தியை மின்தொகுப்பில் இணைக்க வேண்டும் என்ற இலக்கோடு அல்ட்ரா மெகா மின்சக்தி திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த மின்சக்தி திட்டத்தின் கீழ் 4,000 மெகாவாட் அல்லது அதற்கு மேற்பட்ட மின்சக்தியை உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப் படும். இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் அனல் மின் நிலையங் களில் ஒன்று தமிழ்நாட்டில் செய்யூரில் அமையவுள்ளது.

10. 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் தொழில்துறை உற்பத்தியில் காணப்பட்ட 4.5 சதவிகித வளர்ச்சி 8 மைய தொழில்களில் (Eight Core Industries) கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆகிய மூன்று தொழில்களில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக விளைந்தது.

 நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு, சிமென்ட், இரும்பு எஃகு தொழில், உரம், மின்சாரம் ஆகியவையே எட்டு மையத் தொழில்கள் ஆகும்.

(தயாராவோம்)
படங்கள்: பா.காளிமுத்து, தே.தீட்ஷித்.

இந்தியாவுக்கு மாறும் ஷியோமி!

ஷியோமி செல்போன்களில் தகவல்கள் சேமிக்கப்படுவதில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக இந்திய விமானப்படை கடந்த வாரம் அறிவித்தது. அதன் க்ளவுட் சேமிப்பு சர்வரில் உள்ள தகவல்களை சீனாவில் உள்ள நிறுவனத்துக்கு, வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு ஷியோமி நிறுவனம், ‘எங்கள் சேவையில் உள்ள குறைகளைச் சொல்லுங்கள், நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்று சொல்லியிருக்கிறது. இந்த நிலையில் தனது டேட்டா சென்டரை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.