நடப்பு
Published:Updated:

ஷேர்லக் - ஆர்பிஐ வட்டியைக் குறைக்குமா?

ஷேர்லக் - ஆர்பிஐ வட்டியைக் குறைக்குமா?

‘‘வருகிற 16-ம் தேதி கோவையில் சிறப்புக் கூட்டம் நடத்தப் போகிறீராமே! ஒருபக்கம் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம். இன்னொரு பக்கம் அதிக லாபம் தரும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி இன்னொரு கூட்டம்! பலே, தொடரட்டும் நாணயத்தின் சேவை!’’ என்று வந்து உட்கார்ந்ததும் நம்மைப் பற்றி புகழ, ‘‘நவம்பர் பனியே அதிகமாக இருக்கிறது. நீங்கள் வேறு ஐஸ் வைக்க வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டு, முதல் கேள்வியைக் கேட்டோம்.

‘‘கடந்த புதன்கிழமை அன்று பங்குச் சந்தை இதுவரைக்கும் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டதே?’’

‘‘அன்றைய தினத்தில் வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 28000 புள்ளிகளைத் தொட்டது. அதாவது, 28010.39 புள்ளிகளுக்கு உயர்ந்தது. கடந்த இரு வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 1917 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அன்றைய வர்த்தக முடிவில் பிராஃபிட் புக்கிங் நடந்தது மற்றும் மெட்டல், பவர் பங்குகள் விலை குறைந்ததால், வர்த்தக முடிவில் 27915.88-ஆக நிலை பெற்றது. நிஃப்டி புள்ளிகள் 8338 புள்ளிகளுக்கு உயர்ந்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எஸ்ஐபி மூலம் மாதந்தோறும் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை, ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, செப்டம்பரில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் புதிதாக 1.51 லட்சம் எஸ்ஐபி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் செப்டம்பரில் 2.48 லட்சம் எஸ்ஐபிகள் அதிகமாக ஆரம்பிக்கப்பட் டுள்ளன. வெளிநாட்டு வெஞ்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள், இந்திய நிதிச் சேவை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான அனுமதி அளிப்பது குறித்து செபி அமைப்பு ஆராய்ந்து வருகிறது. அது அமலுக்கு வந்தால் சந்தை வேகமாக மேலே செல்லும்.

ஷேர்லக் -  ஆர்பிஐ வட்டியைக் குறைக்குமா?

ஒருகாலத்தில் பங்குகளை விற்றுக்கொண்டே வந்த இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், தொடர்ந்து ஆறாவது மாதமாக அக்டோபரிலும் நிகர முதலீட்டை மேற்கொண்டுள்ளது. இந்த மாதத்தில் அது சுமார் 100 கோடி டாலரை (சுமார் ரூ.6,100 கோடி) முதலீடு செய்திருக்கின்றன. இதுபோன்ற பல பாசிட்டிவ் அம்சங்கள் சந்தைக்கு சாதகமாக இருக்கின்றன. நடுத்தர காலத்தில் சென்செக்ஸ் 29000 புள்ளிகளைத் தாண்டும் என மார்கன் ஸ்டான்லி சொல்லி இருக்கிறது. எனவே, முதலீட்டாளர்கள் நம்பிக்கை யுடன் இருக்கலாம்’’ என்றார் உற்சாகமாக.

‘‘ஓஎன்ஜிசி பங்கு விற்பனை எப்போது?’’ என்று கேட்டோம்.

‘‘டிசம்பர் முதல் வாரத்தில் இந்த நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது’’ என்று விளக்கம் தந்தார்.  

‘‘விசேஷமாக சொல்கிற அளவுக்கு காலாண்டு முடிவுகள் ஏதாவது?’’ என்று இழுத்தோம்.

‘‘இரண்டாவது காலாண்டில் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ஐந்து மடங்கு அதிகரித்து ரூ.90 கோடியாக அதிகரித்துள்ளது. செலவு குறைப்பு மற்றும் விற்பனை அதிகரித்ததே இதற்கு மூல காரணம்.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்) ரூ.233.14 கோடியை இழப்பீடாகச் சந்தித்துள்ளது. சுத்திகரிப்பு மொத்த லாப வரம்பு குறைந்ததால், இந்த இழப்பு.  அதாவது, சுத்திகரிப்பு மார்ஜின் 7.07 டாலரிருந்து 2.37 டாலராக குறைந்துள்ளது’’ என சில நிறுவனங்களின் பட்டியலை வாசித்தார்.

ஷேர்லக் -  ஆர்பிஐ வட்டியைக் குறைக்குமா?

அவருக்கு டீ தந்தபடி, ‘‘ஆர்பிஐ வட்டியைக் குறைக்குமா?’’ என்று கேட்டோம்.

‘‘டிசம்பர் 2-ம் தேதி ஆர்பிஐ-ன் கடன் மற்றும் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. பணவீக்க விகிதம் குறைந்து வருகிறது என்பதால், பல தரப்பில் இருந்தும் வட்டி விகிதத்தைக் குறைக்க ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனுக்கு நெருக்கடி வந்து கொண்டிருக் கிறது. ஆனால், அவர் அதனை பற்றியெல்லாம் கண்டுக்கொள்வது போல் தெரியவில்லை. பொருள்களின் தேவை குறைவால் பணவீக்கம் குறைவதை ரகுராம் ராஜன் விரும்ப வில்லை. கமாடிட்டி பொருள்களின் விலை குறைந்து பணவீக்கம் குறைவதைத்தான் அவர் உண்மையில் விரும்புகிறார்.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஏறக்குறைய நின்றுவிட்டது. செப்டம்பர் மாதத்தில் விலை இறக்கத்தைக் கண்ட உணவுப் பொருள்களின் விலை அதன்பின் குறையவில்லை. அமெரிக்காவில் வட்டி விகித உயர்வுப் பிரச்னை போன்றவற்றின் அடிப்படையில் இப்போதைக்கு வட்டியைக் குறைக்கமாட்டார்கள் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஆக, வட்டி விகிதம் குறைப்பு 2015-ல் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இக்ரா நிறுவனமும் நடப்பு நிதியாண்டில் வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளது’’ என்று ஆதாரப்பூர்வமாகப் பேசினார்.  
‘‘ஐபிசிஏ லேப்ஸ் பங்கின் விலை ஒரேநாளில் 10.55% வீழ்ச்சி கண்டுள்ளதே, என்ன காரணம்?’’ என்று கேட்டோம்.

ஷேர்லக் -  ஆர்பிஐ வட்டியைக் குறைக்குமா?

‘‘மருந்துத் தயாரிப்பு நிறுவனமான இதன் ஒரு தொழிற்சாலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது. இதனையடுத்து இந்த நிறுவனத்துக்கான தரக்குறியீட்டை கிரெடிட் சூஸ் குறைத்துள்ளது. இதனால் பங்கின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது’’ என்றார். 

‘‘ஆன்மொபைல் பங்கின் விலை மூன்று நாளில் 57% அதிகரித்திருக்கிறதே?’’ என்று ஆச்சர்யம் காட்டினோம்.

‘‘இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவு எதிர்பார்க்கப்பட்டதைவிட சிறப்பாக வந்ததே காரணம். இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.23.9 கோடி யிலிருந்து ரூ.1.2 கோடியாக குறைந்துள்ளது.

வரும் காலாண்டில் நிகர லாபத்துக்கு திரும்பிவிடும் என்கிற எதிர்பார்ப்பில் பங்கு முதலீடு உயர்ந்ததால் விலை அதிகரித்துள்ளது’’ என்றவர், சற்று நிறுத்தி, ‘‘சந்தை உச்சத்தில் இருப்பதால் ஷேர் டிப்ஸ் எதுவும் வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டு, தலையில் மப்ளரை மாட்டிக்கொண்டு வெளியே போனார்.