நடப்பு
Published:Updated:

ஹோம் பட்ஜெட்: வீட்டு உபயோகப் பொருள்கள்...

Appliances
பிரீமியம் ஸ்டோரி
News
Appliances

ஆண்டுப் பராமரிப்புத் திட்டம் லாபமா? படங்கள்: ப.சரவணகுமார்

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

வீ ட்டு உபயோகப் பொருள்களின் தேவையை எப்போதுமே தவிர்க்க முடியாது. அதாவது, காய்கறிகள் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வைப்பதற்கு ஃபிரிட்ஜ், துணிகளைத் துவைப்பதற்கு வாஷிங்மெஷின், வாட்டர் பியூரிஃபயர், வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஏசி என பல்வேறு பொருள்களை நாம் பயன்படுத்துகிறோம். சிறுகச் சிறுக பணத்தைச் சேர்த்து இந்தப் பொருள்களை வாங்குகிறோம்.

அதிக விலை கொடுத்து வாங்கும் இந்தப் பொருள்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு வாரன்டி, கேரன்டி போன்றவை இருக்கும். இந்தச் சமயத்தில் பொருளின் பாகம் ஏதாவது பழுதடைந் தால் அதைப் பொருள் தயாரித்த நிறுவனமே சரிசெய்து தந்துவிடும். ஆனால், அதன்பிறகு..? அதிக விலை தந்து வாங்கிய இந்தப் பொருள்களைப் பராமரிக்க என்னதான் வழி?

பல வழிகள் உண்டு என்றாலும் ஏஎம்சி என்று சொல்லப்படுகிற ஆண்டுப் பராமரிப்புத் திட்டத்தில் இப்போது பலரும் சேருகிறார்கள். இது உண்மையிலேயே பயனுள்ள திட்டமா என்று பார்ப்போம்.

 ஏஎம்சி என்றால்..?

ஆண்டுப் பராமரிப்புத் திட்டம் என்பது வீட்டு உபயோகப் பொருள்களின் பராமரிப்புக்கான ஒரு திட்டம். பொருளைத் தயாரித்த நிறுவனமே இந்த வசதியைச் செய்து தருகிறது.

ஹோம் பட்ஜெட்: வீட்டு உபயோகப் பொருள்கள்...

ஒவ்வொரு ஆண்டுக்கும் குறிப்பிட்ட அளவு கட்டணத்தைச் செலுத்தி இந்தத் திட்டத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். சில நிறுவனங்கள் 2, 3, 5 ஆண்டுகளுக்குச் சேர்த்துக் கட்டணம் வசூலித்து இந்தச் சேவையை வழங்குகின்றன.

 எதற்கெல்லாம் சர்வீஸ்?

ஏஎம்சி எடுத்துவிட்டால், ஒரு பொருளில் ஏற்படும் எல்லாப் பிரச்னை களுக்கும் சர்வீஸ் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதாவது, அந்தப் பொருளின் செயல்பாட்டுப் பாகங் களுக்கு மட்டும்தான் சர்வீஸ் கிடைக்கும். அது என்னென்ன பாகங்கள் என்பதைப் பொருளைத் தயாரித்த நிறுவனமே பட்டியல்போட்டு வைத்திருக்கும்.

இந்தப் பட்டியல் நிறுவனத்துக்கு நிறுவனம் வித்தியாசப்படும். வாஷிங்மெஷினைப் பொறுத்தவரை, அதில் உள்ள முக்கிய பாகங்கள் பழுதடைந்தால், ஏஎம்சி மூலம் சர்வீஸ் பெறப்படும். ஆனால், வாஷிங்மெஷினின் மேல்பகுதி உடைந்துவிட்டால், அதை மாற்றித்தரமாட்டார்கள். இதை உங்களது பணத்தில்தான் சரிசெய்து கொள்ள வேண்டும்.

தவிர, கட்டணத்துக்கு ஏற்றபடியும் ஏஎம்சி மூலம் கிடைக்கும் சர்வீஸ் வேறுபடும். ஒரு முக்கிய நிறுவனத்தின் வாஷிங்மெஷினுக்கு ஏஎம்சி எடுத்தால், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருள் களுடன் ஒரு கட்டணம், அது இல்லாவிட் டால் வேறு ஒரு கட்டணம், கமர்ஷியல் லேபருக்கு ஒரு கட்டணம், பொருள்களை நாம் வாங்கித்தந்தால், அதைப் பொருத்தித் தருவதற்கு ஒரு கட்டணம் என பலவகையான திட்டங்களை வைத்திருக்கிறார்கள். இதில் நமக்கேற்றதை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஏஎம்சியைப் பொறுத்தவரை, பெரும்பாலும் வாஷிங்மெஷின் மற்றும் ஏசி, வாட்டர் பியூரிஃபயர் போன்ற பொருள்களுக்குத்தான் அதிகமாக எடுக்கப்படுகிறது. வாஷிங்மெஷினில் சில பொருள்களுடன் சர்வீஸ் கிடைக்கும். ஆனால், ஏசிக்கு சர்வீஸ் ஏஎம்சி மட்டுமே கிடைக்கும். ஏனென்றால், ஏசி கம்ப்ரஸரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதை மாற்றுவதற்கு அதிகம் செலவாகும். இதனால் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஏஎம்சியை சில நிறுவனங்கள் தர மறுத்துவிடுகின்றன. ஏசியைப் பொறுத்தவரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்து தருவதற்காக மட்டுமே ஏஎம்சி வசதியைத் தருகின்றன சில நிறுவனங்கள். ஃப்ரிட்ஜிலும் ஏறக்குறைய இதே பிரச்னை என்பதால், அதற்கும் ஏஎம்சி போடுவதை நிறுவனங்கள் தவிர்த்து விடுகின்றன.

ஹோம் பட்ஜெட்: வீட்டு உபயோகப் பொருள்கள்...

 கவனிக்க வேண்டியது!

வீட்டு உபயோகப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், குறிப்பிட்ட வருடத்துக்கு மட்டும்தான் ஏஎம்சி போட வேண்டும் என கட்டுப்பாடு வைத்துள்ளன. தவிர, ஏஎம்சி சேவையை நிறுவனங்கள் நேரடியாக வழங்குவதில்லை. அந்த சேவையைச் செய்வதற்கு ஃப்ரான்சைஸ் தந்துவிடுகின்றன.

ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு ஃப்ரான்சைஸ் நிறுவனம் இருக்கும். இந்த நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் டார்கெட் இருக்கும். அதாவது, குறிப்பிட்ட எண்ணிக்கையில் புதிய ஏஎம்சி போட வேண்டும் என இலக்கு வைத்திருப்பார்கள். இதன் விளைவாக அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் சிலர், விதிமுறைகளுக்கு புறம்பான வேலைகளைச் செய்வார்கள்.

அதாவது, அதிகபட்சம் 7 வருடத்துக்குத்தான் ஏஎம்சி போட வேண்டும் என நிபந்தனை இருக்கும் போது, 10 ஆண்டுகளுக்குமுன் வாங்கிய பொருள்களுக்கு ஏஎம்சி தருவார்கள். தனது டார்கெட் நிறைவேற வேண்டும் என்பதற்காக தயாரிப்பு தேதி, மாடல் எண் ஆகியவற்றை மாற்றி எழுதி தந்துவிடுவார் ஏஎம்சி ஊழியர். இப்படி செய்வது கூடவே கூடாது.

காரணம், இந்த விஷயம் நிறுவனத்துக்குத் தெரியாது. பிற்பாடு அந்த ஃப்ரான்சைஸ் நிறுவனம் மாறும்போது, இந்த ஏமாற்று வேலை தெரியவந்தால், அதனால் பாதிக்கப்படப் போவது ஏஎம்சியை காசு கொடுத்து வாங்கும் மக்களே ஒழிய, ஏஎம்சி போடும் ஊழியர்கள் அல்ல.
இந்தப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் வருடத்துக்கு ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்துகிறது. இதனால் ஏற்கெனவே உள்ள பொருள்களின் பாகங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை.

மேலும், சந்தையிலும் அதற்கான உதிரிபாகங்கள் கிடைக்காது என்பதால் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்தான் ஏஎம்சி கொடுக்கிறது. மேலும், ஏஎம்சி எடுப்பதற்கு, நீங்கள் வைத்திருக்கும் மாடலுக்கு நிறுவனம் ஏஎம்சி தருகிறதா, இல்லையா என்பதைத் தெரிந்துகொண்டு எடுப்பது நல்லது.

 உதிரிபாகம் மாற்றும்போது!

பொதுவாக, வாரன்டி இருக்கும் பொருள்களின் உதிரிபாகத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதற்கான ஒரிஜினல் உதிரிபாகம் பொருத்தி விடுவார்கள். ஆனால், ஏஎம்சியில் இருக்கும் பொருள்களில் ஏதாவது சிக்கல் வரும்போது பழைய பாகத்தைச் சரிசெய்து பொருத்திவிட்டு புதியது என்று கூறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், வேறு மெஷினில் இருந்து கழற்றப்பட்ட பாகத்தைச் சரிசெய்து உங்களுடைய பொருளில் பொருத்துவதற்கும் வாய்ப்புள்ளது. இதுபோன்று உதிரிபாகங்களை மாற்றும்போது அதற்கான பில்லை கேட்டுப் பெறலாம் அல்லது மாற்றப்பட்ட பாகத்தின் வரிசை எண்ணை கேட்டுப் பெறலாம்.

சில பொருள்களுக்கு சர்வீஸ் ஏஎம்சி மட்டும்தான் இருக்கும். அதாவது, ஏஎம்சி ஊழியர் குறிப்பிட்ட கால இடைவெளியில் வந்து சர்வீஸ் செய்து கொடுக்க வேண்டும் என இருக்கும். அந்தச் சமயத்தில் ஏதாவது பிரச்னை இருந்தால், அதைச் சரிசெய்து கொடுத்துவிட்டு அதற்கான கட்டணத்தை மட்டும் பெறுவார்கள்.இதைப் பெரும்பாலான நிறுவனங்கள் தானாக முன்வந்து செய்வதில்லை. வாடிக்கையாளர் ஒன்றுக்கு பலமுறை போன் செய்து அழைத்தபின்பே வந்து சர்வீஸ் செய்து தருகிறார்கள்.

 ஏஎம்சி எடுக்கும்முன்!

ஏஎம்சி போடுவதற்குமுன் வாங்கும் பொருளை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா, இல்லையா என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, பொருளை வாங்கும்போதே அடுத்த ஐந்து வருடத்துக்கு ஏஎம்சி போடுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இடையில் அந்தப் பொருளை வேறு யாருக்காவது அன்பளிப்பாக அல்லது விற்பனை செய்தால், அவர்கள் ஏஎம்சி பயன்களைப் பெற முடியாது.

ஆக மொத்தத்தில், ஏஎம்சி என்பது கேட்பதற்கு அருமையான திட்டம்போல இருந்தாலும், இதனால் பெரிய நன்மை ஏதும் கிடைத்துவிடாது என்பதே அனுபவஸ்தர்களின் கருத்து. எனவே, பொருள் வாங்கும்போது கடையில் இருப்பவர் கொடுக்கும் அழுத்தத்தினால் ஏஎம்சி எடுக்காமல் உண்மையிலேஇது உங்களுக்குப் பயன் அளிக்குமா என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு  எடுப்பது நல்லது.

‘‘பலமுறை போன் செய்து அழைக்க வேண்டும்!’’

கீதா, சென்னை.

“எங்கள் வீட்டில் வாஷிங்மெஷின், ஏசி, வாட்டர் பியூரிஃபயருக்கு ஏஎம்சி எடுத்து வைத்திருக்கிறேன். இதில் ஏசிக்கு ஏஎம்சி சர்வீஸ் செய்ய ஒவ்வொரு முறையும் போன் செய்து கூப்பிட வேண்டும். இந்த வேலையை முடிப்பதற்கு எப்படியும் ஒரு வாரம் அவர்களைத் தொடர்ந்து நச்சரிக்க வேண்டும். ஆனால், வாட்டர் பியூரிஃபயர் ஏஎம்சியில் இந்தப் பிரச்னை இல்லை. சரியான சமயத்தில் வந்து சரிசெய்து கொடுத்துவிடுகிறார்கள். இதனால் பிரச்னை ஏற்படும்போது வெளியில் மெக்கானிக்கை தேடி அலைய தேவையில்லை என்பதுதான் இதில் கூடுதல் சிறப்பு.”

உயர்ந்தது ஓஎன்ஜிசி!
சறுக்கியது ரிலையன்ஸ்!

எக்ஸான் மொபில் கார்ப்பரேஷன் (Exxon Mobil Corp) வெளியிட்டுள்ள பிளாட்ஸ் குளோபல் 250 தரவரிசைப் பட்டியலில் இருக்கும் இந்தியாவின் எனர்ஜி துறை சார்ந்த நிறுவனங்களில் ஓஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் முன்னிலை வகிக்கின்றன. 2013-ல் 22-வது தரவரிசையில் இருந்த ஓஎன்ஜிசி நிறுவனம், இந்த ஆண்டில் 21-வது இடத்தைப் பெற்றிருக்கிறது. நிறுவனங்களின் சொத்து மதிப்பு, வருமானம், லாபம், நிறுவனம் மேற்கொண்டிருக்கும் முதலீட்டின் மீதான வருமானம் ஆகிய காரணிகளைக் கொண்டு அளவிடப்பட்டிருக்கிறது. ஆனால், 2013-ல் 19-வது இடத்தில் இருந்த ரிலையன்ஸ், இந்த ஆண்டு 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது.