Published:Updated:

ஷேர்லக் : பெட்ரோல் விலை உயருமா?

ஷேர்லக் : பெட்ரோல் விலை உயருமா?

பிரீமியம் ஸ்டோரி

வந்ததும் வராததுமாக, சபாஷ் சபாஷ் என்று சொன்னபடி நம் தோளைத் தட்டிக்கொடுத்ததுடன், கையைக் குலுக்கினார் ஷேர்லக். ஏன் இந்தப் பாராட்டு என்று கேட்டோம்.

‘‘உலக முதலீட்டாளர் மாநாட்டை அடுத்த மே மாதம் நடத்த தமிழக அரசாங்கம் முடிவு செய்து விட்டது. உம்மைப் போன்றவர்கள் கொடுத்த நெருக்குதல்தான்   அரசின் இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணம். ஆனால், இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.
கடந்த வியாழக்கிழமை அன்று குஜராத்தின் நிதி மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் சவ்ரப் பட்டேல், சென்னைக்கு வந்து தமிழக தொழிலதிபர்களை குஜராத்துக்கு வந்து தொழில் தொடங்கும்படி அழைப்பு விடுத்து பேசிக்கொண்டிருந்த நேரத்தில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு வெளியானது. 

இந்த மாநாட்டை நடத்த இன்னும் ஆறு மாத காலம் இருக்கிறது. இந்த காலத்துக்குள் தொழிற்சாலைகளின் அத்தியாவசியத்  தேவையான மின்சாரத்துக்கு ஏற்பாடு செய்துதர வேண்டும். தொழிற்சாலை அமையும் இடவசதி, சாலைவசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தந்தால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கே மனமுவந்து தொழில் தொடங்கு வார்கள்’’ என்று பேசிக்கொண்டே போனவருக்கு சுடச்சுட டீ தந்தோம். அதை சட்டென்று குடித்தவர், அடுத்த விஷயத்துத் தாவினார்.

‘‘கடந்த வியாழக்கிழமை அன்று ஆயில் நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டதே?’’ என்று கேட்டோம்.

‘‘மத்திய அரசு, பிராண்டட் டீசல் மற்றும் பெட்ரோலுக்கான உற்பத்தி வரியை உயர்த்தியதுதான் இதற்கு காரணம். ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (-6.11%), பாரத் பெட்ரோலியம் (-4.47%), இந்தியன் ஆயில் (-4.4%), எம்ஆர்பிஎல் (-4.11%), என பெரும்பாலான ஆயில் கம்பெனிகளின் பங்குகள் விலை குறைந்தன. இந்த வரி அதிகரிப்பு மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.13,000 கோடி வருமானம் கிடைக்கும். இது பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட உதவும் என மத்திய அரசு நினைக்கிறது.

ஷேர்லக் : பெட்ரோல் விலை உயருமா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், பெட்ரோல் விலை மீண்டும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப் பட்டது. தற்போது மத்திய அரசு வரியை உயர்த்தி உள்ளதால், எண்ணெய் நிறுவனங்கள், விலை குறைப்பதைக் கைவிட்டிருக்கின்றன. அந்தவகையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் சில்லறை விற்பனை விலையில் மாற்றமில்லை’’ என்றார்.

‘‘சந்தை ஏற்றத்தில் இருப்பதால் ஐபிஓகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போலிருக்கிறதே?’’ என்றோம்.

‘‘செப்டம்பர் மாதத்தில் 14 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.562 கோடி திரட்டி இருக்கின்றன. இன்னும் ஒரு டஜன் நிறுவனங்கள், ரூ.7,000 கோடி திரட்ட  தயாராகி வருகின்றன.

நாட்டின் மிகப் பழைமையான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் அண்மையில் அதன் 50-வது ஆண்டை கொண்டாடி யது. இந்த நிலையில் அது பங்கு வெளியீட்டில் இறங்க திட்டமிட்டு மத்திய அரசிடம் விரைவில் அனுமதி கேட்க இருக்கிறது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தால், இன்னும் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஐபிஓ வரலாம்’’ என்றார்.

‘‘கடந்த வாரத்தில் ஹெச்சிசி பங்கின் விலை  ஒரே நாளில் 12% அதிகரித்துள் ளதே?’’ என்று விசாரித்தோம்.

‘‘ஹெச்சிசி குழுமத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனமான லவசா கார்ப்பரேஷன் ஐபிஓ மூலம் ரூ.750 கோடி திரட்ட செபி அனுமதி அளித்தி ருப்பதே இதற்கு முக்கிய காரணம். புனே அருகே 10,000 ஏக்கரில் நகரியம் ஒன்றை லவசா கட்டி வருகிறது. இதற்கு இந்தத் தொகை பயன்படுத்திக்கொள்ளப்பட இருக்கிறது’’ என்று விளக்கம் தந்தார்.

‘‘வங்கிப் பங்குகளில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு அக்டோபர் மாதத்தில் ரூ.63,000 கோடியை நெருங்கி இருக்கிறதே?’’ என்றோம் சற்று ஆச்சர்யத்துடன்.

‘‘தொடர்ந்து ஏழு மாதங்களாக வங்கிப் பங்குகளில் முதலீட்டை குறைத்துவந்த மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் அக்டோபரில் திடீரென அதிகரித்துள்ளார்கள். பணவீக்க விகிதம் குறைந்து, தொழில் வளர்ச்சி கண்டு வருவதால் விரைவில் ஆர்பிஐ வட்டியைக் குறைக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. அப்போது வங்கிகளின் செயல்பாடு மேம்படும் என்கிற கணிப்பில் இப்போதே முதலீட்டை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ஃபண்ட் மேனேஜர்கள். அக்டோபர் மாத நிலவரப்படி, வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ரூ.62,718 கோடியாக உள்ளது. இது மொத்தம் நிர்வகிக்கப்படும் ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டில் 19.91% ஆகும்’’ என்றார்.

‘‘காலாண்டு முடிவுகள் எப்படி?’’ என்று விசாரித்தோம்.

‘‘பாரத் பெட்ரோலியத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 50% குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் இதன் சுத்திகரிப்பு லாபம் குறைந்து, லாபம் குறைந்துள்ளது.இதேபோல், ஆயில் இந்தியாவின் நிகர லாபமும் இரண்டாவது காலாண்டில் 33% வீழ்ச்சி கண்டுள்ளது.

ஷேர்லக் : பெட்ரோல் விலை உயருமா?

பொதுத்துறையைச் சேர்ந்த தேனா வங்கியின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 52% வீழ்ச்சிக் கண்டிருக் கிறது. மேலும், அதன் மொத்த வாராக் கடன் 96% உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம் 0.33% குறைந்துள்ளது.  வாராக்கடனுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளதால் நிகர லாபம் வீழ்ச்சி கண்டிருக்கிறது’’ என்றார்.

‘‘புரமோட்டர்கள் பங்குகளை அடமானம் வைத்திருப்பது குறைந்திருக் கிறதே?’’ என்று வினவினோம்.

‘‘கடந்த ஏழு காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் காலாண்டில் நிறுவனங்களின் நிறுவனர்கள் பங்குகளை அடமானம் வைத்திருப்பது குறைந்திருக்கிறது.

பிஎஸ்இ 500 நிறுவனங்களில் ஜூன் காலாண்டில் நிறுவனர்களின் பங்குகள் 12.01% அடமானம் வைக்கப்பட்டிருந்தது. அது செப்டம்பர் காலாண்டில் 11.76 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

இப்படி அடமானம் வைக்கப்பட்டு இருக்கும் பங்குகள் நல்ல வருமானத்தைத் தந்திருக் கின்றன. உதாரணத்துக்கு, ஹெடிஐஎல்-ன் புரமோட்டர்கள் 96% பங்குகளை ஜூன் காலாண்டில் அடமானம் வைத்தனர். அதனை செப்டம்பர் காலாண்டில் முழுமையாக மீட்டுவிட்டார்கள்.

இதனால் நடப்பு ஆண்டில் இதுவரைக்கும் பங்கின் விலை 60 சத விகிதத்துக்குமேல் அதிகரித்துள்ளது. இதேபோல், கேட்வே டிஸ்டிரிபாக்ஸ் நிறுவனர்களின் பங்குகள் அடமானம் குறைந்ததால், பங்கின் விலை 120%  உயர்ந்துள்ளது. என்சிசி (180%), அபான் ஆஃப்சோர் (65%), இந்தியாபுல்ஸ் பவர் (50%) ஆகிய பங்குகளும் நிறுவனர்களின் அடமான பங்கு அளவு குறைந்துள்ள தால், விலை ஏற்றம் கண்டிருக்கின்றன’’ என்று புறப்படத் தயாரானவரிடம் ஷேர்டிப்ஸ் ஏதாவது என்று கேட்டோம்.

``ஐசிஐசிஐ பேங்க், எல்ஐசி ஹவுஸிங், ஹெச்டிஎஃப்சி பேங்க், பேட்டா இந்தியா, டிசிபி பேங்க், பார்தி ஏர்டெல்'' என கடகடவென சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார் ஷேர்லக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு