பிரீமியம் ஸ்டோரி

மஞ்சள் (Turmeric)

வட இந்தியாவில் மஞ்சள் தேவை அதிகரிப்பின் காரணமாகக் கடந்த வாரத்தில் மஞ்சள் விலை அதிகரித்து வர்த்தகமானது. நடப்பு ஆண்டில் மஞ்சள் உற்பத்தி குறைவாக இருக்கும் என்கிற தகவலும் மஞ்சள் விலை உயர்வுக்குச் சாதகமாக இருக்கும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கிறார்கள், கடந்த வாரத்தில் மட்டும் நிஜாமாபாத் சந்தைக்கு 450 பைகள் (ஒரு பை என்பது 75 கிலோ) வரத்து இருந்தது. அதேபோல, ஈரோடு மஞ்சள் மண்டிக்கு மஞ்சள் வரத்து 3,500 - 4,000 பைகளாக இருந்தது. இந்த மண்டியில் கடந்த வியாழக்கிழமை விரலி மஞ்சள் 3,196-6,819 ரூபாய்க்கு (ஒரு குவிண்டால்) வர்த்தகமானது. 2014-15-ம் நிதி ஆண்டில் ஆந்திராவில் மஞ்சள் விதைப்பு 13,000 ஹெக்டேராக இருக்கிறது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டில் 10,000 ஹெக்டேராக இருந்தது. இந்த விதைப்பு அளவு தெலங்கானா மாநிலத்தில் 43,100 ஹெக்டேரிலிருந்து 44,600 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு காரணமாக இனிவரும் வாரங்களில் மஞ்சள் விலை அதிகரித்தே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னா (Chana)

சென்னாவின் விலை, வர்த்தகர்கள் பிராஃபிட் புக்கிங் மேற்கொண்டதால் விலை சற்று குறைந்து வர்த்தகமாகியது. அதேசமயம் சென்னா விதைப்பு மெதுவாக நடந்து வருகிறது. இதனால் சென்னாவின் விலைக்குச் சாதகமான சூழ்நிலையே காணப்படும். நவம்பர் 7, 2014- நிலவரப்படி, ராபி பருவப் பயிர்களின் விதைப்பானது 22.2% குறைந்து, 23.98 லட்சம் ஹெக்டேராக இருக்கிறது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 30.86 லட்சம் ஹெக்டேராக இருந்தது. ராபி பருவ பயிர்களில் குறிப்பாக, சென்னாவின் பயிர் விதைப்பு 32% குறைந்துள்ளது. அதேபோல, காரீஃப் பருவ பருப்பு வகைகளின் பயிர் விதைப்பும் 10.91 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 10.23 மில்லியன் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. அதிகத் தேவை, குறைவான பயிர் விதைப்பு, குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு போன்ற காரணங்களினால் சென்னாவின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அக்ரி கமாடிட்டி!

ஜீரகம் (Jeera)

தேவை அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி தேவை அதிகரிப்புக் காரணமாகக் கடந்த வாரம் ஜீரகத்தின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த வாரம் சர்வதேச சந்தைகளில் குறைந்த வரத்து காணப்பட்டதும் ஜீரகத்தின் விலை உயர்வுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது. கடந்த புதன்கிழமையில் உஞ்ஹா சந்தைக்கு ஜீரகத்தின் வரத்து 15,000 பைகளாக (ஒரு பை என்பது 55 கிலோ) இருந்தது. இது இதற்கு முந்தைய நாளைவிட அதிகம். சந்தை நிலவரப்படி, ஜீரகம் விளையும் ஏரியாக்களில் விதைப்பானது மெதுவாக நடந்து வருகிறது. ஏற்றுமதி தேவைகள் அதிகரித்து வருவதால், இனிவரும் வாரங்களில் ஜீரகத்தின் விலை அதிகரித்துக் காணப்படும்.

அக்ரி கமாடிட்டி!

கடுகு விதை (Mustard seed )

உள்நாட்டு தேவை அதிகரித்துக் காணப்பட்டதால் சென்ற வாரம் கடுகு விலை அதிகரித்து வர்த்தக மானது. செப்டம்பர், 2014-ல் கடுகு மீல் ஏற்றுமதி 1.52% குறைந்து, 58,567 டன்னாக உள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 59,472 டன்னாக இருந்தது. வேளாண்மை அமைச்சகத்தின் நான்காவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2013-14-ம் ஆண்டில் கடுகு விதை உற்பத்தியானது 0.85% குறைந்து 7.96 மில்லியன் டன்னாக இருக்கும் என தெரிகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 8.03 மில்லியன் டன்னாக இருந்தது.
தேவை அதிகரிப்பு மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்புக் காரணமாக வரும் வாரங்களில் கடுகு விலை உயர்ந்து வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு